Monday, August 16, 2010
யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் ஒன்று
யாழ்ப்பாணம் என்னை வரவேற்கிறது
மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் என் தாயகப் பயணம் இந்த மாதம் கைகூடியிருக்கின்றது. கொழும்பில் இறங்கி அடுத்த நாளே அம்பாள் எக்ஸ்பிரஸில் ஏறி சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கிறேன். இப்போதெல்லாம் கொழும்பு யாழ் விமான சேவையை ஏன் ஏது என்று கேட்பாரில்லை. தினகரன் சொகுசு பஸ் தொடங்கி, அம்பாள், ரிப்ரொப் என்று ஏகப்பட்ட பஸ் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப் பயணிக்கின்றன. ஒரு வழிக் கட்டணம் 1100 ரூபா, சாய்மானமாகப் படுக்கும் வகையான சொகுசு இருக்கைகள், இரவிரவாக டிவிடியில் ஓடும் படங்கள் என்று நேரம் போவதே தெரியாமல் இரவு 7.30 க்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை 7 மணிக்கு இணுவிலில் இறக்கி விடுகிறது அம்பாள் எக்ஸ்பிரஸ். அந்த இரவுப்பொழுதில் சிரித்து மகிழட்டுமே என்று ரஜினி நடித்த "அதியசப் பிறவி" படத்தைப் போடுகிறார் நடத்துனர். "அண்ணை இதை விடப் பழைய படம் கிடைக்கேல்லையோ"
என்று தன் மூக்கில் பாற்கடலைக் கடைந்தவாறே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய பெரிசு சொல்கிறது. பொது இடத்தில் மூக்கைத் தோண்டுபவனைத் தண்டிக்க ஒரு "அந்நியன்" வரவேணும் பாருங்கோ. அந்தப் பெருசுவின் சொற்பிரகாரம் நடத்துனர் நூற்றுச் சொச்சம் முறை போட்டுத் தேய்ந்த "உன்னை நினைத்து" படத்தைப் போடுகிறது. கொடுமையடா சாமி என்று அதைப் பார்த்துக் கொண்டே கண்களைச் செருகுகிறேன். அனுராதபுரத்தில் முஸ்லிம் கடை என்ற சாப்பாட்டுக்கடையில் நிறுத்தப்பட்டு சில நிமிடங்கள் இரவு உணவுக்காகவும் சிரமப்பரிகாரத்துக்காகவும் வசதி செய்யப்படுகின்றது.
ஓமந்தையில் இராணுவச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்படுகின்றது. இலங்கைத் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்போருக்கு இராணுவ மரியாதையாக பஸ்ஸுக்குள் வைத்தே பார்த்து விட்டு விட்டு விடுகிறார்கள். வெளிநாட்டு பாஸ்போர்ட் என்றால் இறக்கி இராணுவப் பதிவேட்டில் பாஸ்போர்ட் விபரங்களைக் குறித்து விட்டுக் கொடுக்கின்றார்கள். வெளி நாட்டுப் பாஸ்போர்டில் யாழ்ப்பாணம் பிறந்த இடம் என்றால் சிக்கல் இல்லை. வேறு இடங்கள் குறிப்பிட்டிருந்தால் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் பொலிஸ் கிளியரன்ஸ் எடுத்துத் தான் பயணிக்க வேண்டும் என்பது ஐந்து மாதக் குழந்தைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். ஒருகாலத்தில் இலங்கைத் தேசிய அடையாள அட்டையைக் கிடப்பில் போட்ட புலம்பெயர் வாழ் சிங்கங்கள் தூசு தட்டி அதை எடுத்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தொடர்ந்து ஓடும் ஓட்டம் முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் வந்து மிதக்கிறது. அந்த அதிகாலை இருட்டிலும் லவுட்ஸ்பீக்கருக்குள் இருந்து செளந்தரராஜன் பிள்ளையார் பெருமை பற்றிப் பாடுகிறார். கால் கழுவி, பிள்ளையாரை வணங்கி விட்டு, சூடான நெஸ்கபேயை வாங்கிக் குடித்துக் கொண்டே பஸ்ஸில் ஏற நடந்தால் பாலைப்பழ சீசன் ஆரம்பமாகி விட்டது என்பதைக் கட்டியம் கூறுகிறது குவித்து விட்ட பாலைப்பழ வியாபாரம் அதுவரை தனிக்காட்டு ராசாவாக இருந்த கச்சான் வியாபாரத்துக்குப் போட்டியாக..
வீட்டின் முன்னால் வந்து பஸ் இறக்குகிறது. புதுமையோடும் பெருமிதத்தோடும் என் ஊர்ப்புதினங்களை மனசுக்குள் செருகிக்கொண்டே பயணிக்கிறேன் ஊர் முழுக்க
சோடாபோத்தலைக் கண்டால் காலைத் தூக்காத நாய்கள்
முன்பு எப்போதும் பார்த்திராவண்ணம் ஒரு புதுமையையைப் பலவீடுகளின் முன் கேற்றில் கண்டேன். அது என்னவென்றால் கேற்றின் (gate) அடியில் இரண்டு பெரிய கோக் அல்லது பெப்சி வகையறா போத்தல்ககளில் கலர் நிறத்தில் கரைத்த நீரை நிரப்பி கட்டித் தூக்கிவிடப்பட்டிருக்கின்றன. என்ன காரணம் என்று நானும் யோசிச்சுக் களைச்சுப் போய் மாமி வீடு போனபோது மச்சாளிடம் கேட்டேன். "வழமையா கேற்றைக் கண்டால் நாய்கள் மூத்திரம் பெஞ்சு அசிங்கம் செய்வதோடல்லாமல் கேற்றும் கறள் பிடிச்சுடும் , எனவே யாரோ சொன்னார்களாம் உப்பிடி போத்தல்களைக் கட்டினால் நாயள் அண்டாது எண்டு, உண்மை தான் இதைக் கட்டினதுக்குப் பின்னர் நாய்கள் மூத்திரம் பெய்வதில்லை" என்று ஒரு புதுச் சூத்திரம் ஒன்றைச் சொன்னார். நாய்களுக்கு வந்த கஷ்டகாலத்தை நினைத்து மனதில் பொருமினேன்.
தயவு செய்து செருப்பைக் கழற்றி விட்டு வரவும்
நெற் கபே, ஸ்ரூடியோ உள்ளிட்ட பெரும்பாலான கடைகளின் வெளியே உள்ள படிகளில் தான் செருப்பு ஜோடிகள் இருக்கும். சில கடைகளில் பெரிய ஸ்ரிக்கரில் "தயவு செய்து செருப்பைக் கழற்றி விட்டு வரவும்" என்று ஒட்டியிருப்பார்கள். அதையும் தாண்டி உள்ளே வருவது உங்கள் சாமர்த்தியம். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் 2007 இல் நான் யாழ் சென்றபோது யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு முன்பாக இருந்த (ஏனப்பா அவ்வளவு தூரம் போனனீர் எனாறு குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது) நெற் கபேயில் இப்படித் தான் செருப்பை வெளியே கழற்றி விட்டு இணையத்தில் உலாவி விட்டு வெளியே வந்தால் யாரோ ஒரு மகராசன் என் ஞாபகமாக அவரிடமேயே இருக்கட்டுமே என்று நினைத்தோ என்னவோ என் புது செருப்பு ஜோடியைச் சுட்டு விட்டார். வெறுங்காலுடன் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் இன்னொரு ஜோடி வாங்கிப் போட்டு வந்தேன். அந்தக் கொடுமையான அனுபவம் காரணமாக ஒவ்வொரு நெற் கபேக்குள் போக முன்னர் "செருப்போட வரலாமோ" என்று கேட்டு விட்டு அதற்குச் சம்மதித்தால் தான் உள்ளே போகிறேன்.
ஏனப்பா செருப்பில இருக்கிற வைரஸ் கணினிகுள் போய்விடுமோ என்று குறுக்(கால போன )கேள்வி கேட்காதீர், தற்குக் காரணம் செய்யும் தொழிலே தெய்வமாம். அப்ப செருப்புக் கடைகாரன் காலைக் கழற்றி விட்டு வா என்பானோ?
முகம் பார்த்துக் கதைக்க 2 ரூபா
என்னதான் வீடுகளுக்கும் இன்ரநெற் தொடர்பு கிடைக்குமளவுக்கு வசதி வந்தாலும் நெற் கபேக்கள் இன்னும் கொண்டாட்டமாகத் தான் இயங்கி வருகின்றன. அதற்குப் பல காரணங்களைப் பட்டியல் போடலாம். ஒன்று என் கண்ணில் பட்டது, பிரவுசரில் முன் பார்த்த தளங்களைப் பார்த்தால் ஷகீலா ரேஞ்சுக்கு ஷொக் அடிக்குது ;-) யாரோ ஒரு மகராசன் ஈழத்துத் தமிழில் செக்ஸ் தளம் ஒன்று கூட நடத்துமளவுக்கு முன்னேற்றம். இதை விட அதிகம் ஈர்க்கும் விஷயம் வீடியோ கேம்ஸ். பக்கத்து இருக்கைகள் எல்லாமே முள்ளிவாய்க்கால் ரகத்துக்கு போர்ப்படைக்கலங்களின் சத்தம் காதைப் பிளக்க வைக்கும். முகம் பார்த்துக் கதைக்க ( அதான் பாருங்கோ video chat) ஒரு நிமிடத்துக்கு 2 ரூபா என்ற ரீதியில் நெற் கபேக்களில் விலைப்பட்டியல் இருக்கும்.
இதுதான் கண்ணு ஒறிஜினல் றேடியோஸ்பதி ;-)
உள்ள(தையு)ம் கவர் கள்வர்கள்
யாழ்ப்பாணத்தில் எந்தத் தொழிலில் பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால் பிச்சுவா பக்கிரியே முதலிடம் பெறுவார். அந்தளவுக்கு வீச்சருவாளோடு கோஷ்டி கானம் பாடிக் கிளம்பி விடுகிறார்கள் இரவில் தொழிலை ஆரம்பிக்கும் கள்வர்கள். முன்பெல்லாம் வெருட்டலோடு நின்று விடும் களவு இப்போது ரத்தம் பார்க்காமல் நகரமாட்டார்கள் என்பதற்கு யாழின் தினசரி நாளிதழ்கள் உதயன், வலம்புரி ஒவ்வொரு நாளும் சாட்சியம் பகிரும். இதைத் தவிரப் பகல் நேரத்தில் கோயில் திருவிழாக்களில் படு பயங்கரமான பிஸினெஸ் தாலிக் கொடி வகையறாக்களில் இருந்து ஆரம்பிக்கும். திருவிழாக்கால லவுட்ஸ்பீக்கர் தேவாரம் , திருவாசகத்தோடு "தயவு செய்து தாலியைப் பத்திரமாப் பார்த்துக் கொள்ளுங்கோ" என்று கெஞ்சிக் கேட்கும்.
எனது கைலாய வாகனம் லுமாலா லேடிஸ் சைக்கிளைக் கொண்டு போகும் இடமெல்லாம் பூட்டிப் பத்திரமாக வைத்து விட்டுத் தான் நகர்வேன். இருந்தாலும் பத்திரமாப் பார்த்துக் கொள்ளுங்கோ என்பினம் யாழ்வாசி நண்பர்கள். ஏன்ராப்பா பூட்டுத் தான் போட்டிருக்கே" என்றால் "டோய்! இப்பவெல்லாம் பூட்டோடையே சைக்கிளைக் களவெடுக்கிறது தான் பசன் (fashion)" என்று அடிவயித்தில் மலத்தியன் அடித்தான் ஒரு நண்பன்.
றீலோட் பண்ணித் தாங்கோ
டயலொக் தொடங்கி Mobitel வகையறா வரை ஏகப்பட்ட கைத்தொலைபேசி நிறுவனங்கள் இருந்தாலும் பெரும்பான்மை நுகர்வோர் சமூகம் prepaid card ஐயே தஞ்சமெனக் கொள்கின்றது.பாண் விற்கும் பெட்டிக்கடைகளில் இருந்து இந்த றீலோட் பண்ணும் வசதி இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டில் இருந்து போவோர் இலங்கைத் தேசிய அடையாள அட்டையைக் கையோடு கொண்டு போகாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட் உடன் டயலொக் போன்ற நிறுவனங்களின் கிளைகளில் மட்டுமே புதிதாக சிம் கார்டைக் கொள்வனவு செய்யலாம் என்பதை மறக்காதீர்.
இன்னும் கோள் மூட்டுவேன்......;-)
18 comments:
ஊரை பத்தி நல்லா தான் கோள் மூட்டி இருக்கீங்க ........ இன்னும் எழுதுங்க நாமளும் தெரிந்து கொள்ளுறோம்......
ஆஹா பாஸ் அங்கிட்டு எப்ப? ரைட்டு ! மகிழ்ச்சியோடு உலாவி வாருங்கள்!
கோரிக்கை - 1
நல்லூர் கோவில் முதல் நீர் 1980களில் சைட்டடிக்க பயன்படுத்திய சைக்கிள் & ஸ்தலங்களினையும் புடிச்சு எடுத்திட்டு வாங்க போட்டோவா!?
கோரிக்கை - 2
நம்ம தம்பி கறுப்பி அங்கிட்டுத்தான் மலைகள் சூழ்ந்த இடமா சுத்திக்கிட்டு திரியும் அதையும் பார்த்தீங்கன்னா என் சார்பா ரெண்டு அடி போட்டு வூட்டுக்கு அனுப்பி வைக்கவும் :))))))))))
அண்ணே எப்போ ஊருக்கு போனனீங்கள் நம்ம பொடியளைச் சந்தித்ததோ? பிரபல பதிவர் கானா இலங்கையில் நிற்பதால் விரைவில் இலங்கையில் பதிவர் சந்திப்பு நிகழலாம்.
தல கலக்குங்க ;-)))
அன்பின் பிரபா, ஊர்ச்சாப்பாட்டில் திளைத்துத் திரும்பிட வாழ்த்துகிறேன். கடற்கோட்டை உள்ள பக்கம் போக நேர்ந்தால் அதன் போட்டோ ஒன்றை எடுத்துவர மறக்கவேண்டாம்.
பிரபா ஊரிலேயே நிக்கிறிங்கள். குடுத்து வைத்த பிறவி நீங்கள். ஒவ்வொரு வினாடியும் வீணாக்காமல் அனுபவியுங்கோ. முக்கியமாய் அம்மாவின் கையால சாப்பாடு. முதல் படமே பாலைப்பழம் . இன்னும் நிறைய படங்களும் பதிவுகளும் பார்க்க ஆவலாய் இருக்கிறம். பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வெள்ளை வான்களுக்கு கிட்ட நிக்க வேண்டாம்.
பாலைப்பழப் பர்சல் ஒண்டு...கூடவே கொஞ்ச தேங்காய் எண்ணையும்..
வருகைக்கு நன்றி காற்றில் எந்தன் கீதம் ;)
ஆயில்ஸ்
உமக்கு ஓவர் குசும்புய்யா, இருடி வச்சுக்கிறேன்.
வந்தி
இப்படி பில்டப் கொடுத்தே பில்டிங்கை வீக் ஆக்கிடுவியள் போல ;)
தல கோபி
வருகைக்கு நன்றி
சகோதரி ஃபஹீமாஜஹான்
கடற்கோட்டைப் படத்துக்கு முயற்சி செய்கிறேன்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
சகோதரி yarl
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
பிரபா,
அருமை. மேலும் படிக்க ஆர்வமாயுள்ளேன். தொடருங்கள்.
"..மூக்கில் பாற்கடலைக் கடைந்தவாறே... நல்ல சிலேடை. ரசித்துப் படித்தேன். அண்மையில் நானும் போயிருந்ததால் மேலும் உணர்ந்து படிக்க முடிந்தது.
நன்றாயிருக்கிறது பிரபா..
ஆனால் நீங்கள்”யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு” இந்த வயசிலயும் போவதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன் (யாரும் டீச்சர் கீச்சரர சைட் அடிக்க போயிருந்தால் ஆட்சேபனையில்லை)
ரூபன்
பாலைப்பழத்தை மலேசியா அனுப்பினால் பால் தான் மிஞ்சும் பாருங்கோ ;)
வருகைக்கு நன்றி கிரி, தொடருவேன்
மிக்க நன்றி ங்கள் வருகைக்கு டொக்டர்
விசரன் அண்ணை
பதிவை நீங்கள் வடிவா வாசிக்கேல்லை போல, இந்து மகளிர் கல்லூரி கதை இப்ப நடந்ததல்ல ;)
அதுசரி இங்க அவுஸ்திரெலியாவில் நீங்கள் இந்தியாவுக்கு போய்விட்டிர்கள் என்று தானே கதைக்கிறார்கள்.
முறிகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதினால் அக்கோயிலை அகற்றிவிட்டார்கள் என்று ஊடகம் ஒன்றில் முன்பு வாசித்த ஞாபகம்.
முறிகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதினால் அக்கோயிலை அகற்றிவிட்டார்கள் என்று ஊடகம் ஒன்றில் முன்பு வாசித்த ஞாபகம்.//
புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் சொல்வதை அப்பிடியே நம்பிவிடாதீர்கள். நேரே போய் அறியுங்கள்
முறிகண்டிப்பிள்ளையார் அதே இடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்
நானும் சென்ற வாரம் யாழ்ப்பாணம் போய் இருந்தேன். லிங்கம் cool bar இல் ice cream குடித்தே ஆக வேண்டும் என்று கஸ்தூரியார்
றோட்டால வரேக்க தற்செயலாக றேடியோஸ்பதி என்ற பெயர் உள்ள கடையை கண்டேன். உங்கட blog இன் பெயர் தான் நினைவில் வந்திச்சு.
நல்லூர் எல்லாம் போய் இருப்பீங்க.
வாங்கோ வாசுகி
நீங்களும் யாழில் நின்றீங்களா, நல்லூர் எல்லாம் போனேன், பதிவுகளாக வரும்
பிரவுசரில் முன் பார்த்த தளங்களைப் பார்த்தால் ஷகீலா ரேஞ்சுக்கு ஷொக் அடிக்குது ;-)
ஒய், நீர் போனபின்பு அடுத்து வந்த பையன் அல்லது பெண் , browsing history யைப் பார்த்தால் உம் கதி கந்தல் :-)
Post a Comment