மேற் சொன்ன கருத்துக்களை தனது குமுதம் "ஓ பக்கங்களில் எழுத்தாளர் ஞாநி 09.06.2010 தேதியிட்ட இதழில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தை இன்று தான் பார்க்கக் கிட்டியது. பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
சமீப வருஷங்களாகவே ஈழத்து அரசியலில் இருந்து கலை, இலக்கியம் வரை எழுந்தமானமாக ஒரு கல்லை விட்டெறிந்து விட்டுப் போகும் போக்கு தமிழக அரசியல்வாதி எழுத்தாளர் சிலருக்கு கைவரப்பெற்றிருக்கின்றது. அந்த வகையில்இலங்கையில் நடந்த ஐபா விழாவிற்கு தமிழ்த்திரையுலகம் புறக்கணித்ததைக் கண்டிக்கும் நோக்கில் கூடவே வழக்கம் போல தி.மு.க சார்ந்த இராம நாராயணனையும் வாரிவிட்டு ஈழத்தமிழ் சினிமா குறித்த தமது "புரிதலை"யும் சொல்லிக் கல்லறிந்து போயிருக்கிறார் இவர். ஐபா விழா புறக்கணிப்பு ஏன் அவசியம் என்பதை தாமரை உட்பட பலர் ஒப்பீட்டு உதாரணங்களோடு ஞாநிக்கும் அவர் சார்ந்தோருக்கும் விளக்கிவிட்டார்கள். எனவே அந்தப் பக்கம் நான் வரவில்லை. ஈழ சினிமா குறித்து இவர் சொன்ன "விஷம்" போன்ற கருத்துக்கு எந்த வகையான ஆதாரங்களை ஞாநியால் முன் வைக்க முடியும்?
இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா? காரணம் பொன்மணி உட்பட ஒரு சில படங்களைத் தவிர தமிழகத்தில் ஈழத்துச் சினிமா எதுவும் திரையிடப்படவில்லை. 1983 இல் அழிக்கப்பட்ட படங்களின் சாம்பல் தான் மிச்சம். சிங்களவரோடு கைகோத்துக் குலாவ வேண்டும் என்று சாத்வீகம் பேசும் ஞாநி அவர்களே அதைத்தான் நாமும் செய்தோம். ஆனால் குலாவிக்கொண்டே அவர்கள் கைவத்தது யாழ் நூலகம் போன்ற அறிவுக்களஞ்சியத்தில் இருந்து இப்படியான கலைப்படைப்புக்கள் வரை. காரணம் தமிழனுக்கு என்று காணி மட்டுமல்ல வரலாறும் ஈழத்தில் இருக்கக்கூடாது என்ற அவர்களின் முனைப்புத் தான். இது அரச மட்டத்தில் இருந்து சிங்கள இனவாதிகள் வரை இன்று வரை செழுமையாகவே இருக்கின்றதை அறிவீர்களா?
1983 இற்கு முன் வெளிவந்த படங்களில் பெரும்பான்மையானவை ஹாலிவூட், கோலிவூட், பாலிவூட் என்று எந்த வகைக்குள்ளும் அடக்காதா ஈழத் தமிழரின் வாழ்வியலைப் பேசும் படங்களாக வந்திருக்கின்றன. பொன்மணி என்ற திரைப்படத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்களாக இருப்போர் இணைந்து நடித்து எடுத்து வெளிவந்த படம். தெய்வம் தந்த வீடு ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வாழ்வியலைப் பேசும் சினிமா. நெடுந்தீவு என்னும் கடலோரப் பிரதேச வாழ்வியலைக் கூறும் சினிமா வாடைக்காற்று என்ற சினிமா பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? இல்லையாயின் ஆது பர்றி நான் எழுதிய பதிவைப் படிக்கவும். ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முழு நீள சினிமா "கடமையின் எல்லை" இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் சிலதை 1983 இற்கு முன் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொடராகப் போட்டார்கள்.
1983 இற்குப் பின் பல கலைஞர்கள் ஈழத்தை விட்டுப் புகலிடம் தேடி ஓடிட, புலிகளின் காலத்தில் பிறந்தது ஈழத்து போர்ச் சூழலின் அவலம் பேசும் சினிமாக்கள். புலிகள் என்றாலே சீண்டப் பிடிக்காத உங்களுக்கு இன்னொன்றும் சொல்லி வைக்கிறேன். அந்தப் போர்க்காலச் சினிமாக்களிலும் புலிகளின் பிரச்சாரப்படங்கள் என வகைப்படுத்தி முத்திரை குத்திப் பார்க்கும் படங்களைத் தவிரவும் ஈழத்து மக்களின் போரியல் அவலங்களைக் காட்டும் படங்களும் வந்திருந்தன.
சிங்கள சினிமாவை உலகத்தரத்தோடு ஒப்ப்பிட்டுப் பார்க்கும் உங்களுக்கு ஓருண்மை சொல்வேன். 1983 இற்கு முன் வந்த 99% மான ஈழத்துப் படங்கள் எந்த வித தமிழக, பாலிவூட் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புக்களாகவோ இல்லையோ அதே போல் 1983 இற்கு முன்னும் பின்னும் வெளிவந்த 99% மான சிங்களத்திரைப்படங்கள் பிரபல ஹிந்தி, தமிழ்ப் பாடல்களை உரிமம் பெறாது காப்பி அடித்தும், கதையை அப்படியே பிரதி பண்ணியும் தான் வந்திருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எப்படி கோடம்பார்க்கத்து சினிமா பிடிக்குமோ அது போல் சிங்களவருக்கும் ஹிந்தி சினிமா தான் உயிர் என்பதை அறிய ஒரு நடை கொழும்புக்குப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.
சிங்களக் கலைத்துறை, சினிமா உட்பட இலங்கை அரசின் பேராதரவோடு இயங்கி வருகின்றது. இந்த நிலை தமிழ்க்கலைஞர்களுக்கும், படைப்புக்களுக்கும் இல்லை. யாராவது ஒரு பெரும் சிங்களக் கலைஞர் மனம் வைத்து இரங்கினால் ஒழிய.
ஆகவே ஞாநி அவர்களே, எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நீங்கள் அயலகத்து விடயங்களைப் பற்றிப் பேசும் போதோ எழுதும் போதோத நன்கு உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொண்டு கருத்தைச் சொல்ல முயலுங்கள். நாளைக்கு நீங்களே "இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தமிழ் படித்த சிங்களவர்கள்" என்றும் சொல்ல முனைவீர்கள். எமது தமிழ் எழுத்துலகின் சாபக்கேடே எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்தவன், எதற்கும் எப்படியும் கருத்துச் சொல்லலாம் என்பதே.
உங்கள் பார்வைக்கு தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை"
வாடைக்காற்று நாவல், சினிமா பற்றி நான் எழுதிய முந்திய பதிவு
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
25 comments:
ஞாநியின் இது போன்ற உளறல்களுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. அது தவிர் இது போன்ற உளறலை ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போதும் எழுதி இருக்கிறார். அதற்கு நான் எழுதிய எதிர்வினை இதோ
http://solvathellamunmai.blogspot.com/2008/11/blog-post.html
அட! இப்படி ஒரு படம் வந்த விவரம் இப்போதான் தெரியுது.
நன்றி பிரபா.
படத்தின் குறுவட்டு எங்காவது கிடைக்கச் சான்ஸ் உண்டா?
எதையாவது சொல்லி எதையாவது எழுதி எப்போதும் தன் பெயர் எதிலாவது வரவேண்டும் என்று திரிகிற ஜென்மங்களில் இந்த "சாணியும்" ஒன்று
ஞாநி எழுதியது மிகப்பெரிய தவறு!
அவரது சிங்கள விசுவாசம் மீண்டும் வெளிவந்திருக்கிறது.
ஞாநி மட்டுமல்ல. ஈழத்தமிழரின் கலை வரலாறு தெரியாமல் இழிவாகப் பேசும் சிலரை பார்த்து வேதனைப் பட்டிருக்கிறேன். இசைத்துறையிலும் ஈழ மக்கள் கலைரசனை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன். எல். சுப்ரமணியத்தின் அப்பா சும்மா டப்பாங்குத்து சொல்லித்தரப்போனார் போலிருக்கிறது.. :-(
தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வுப் பதிவுகள், ப்ரபா.
ஈழத்தமிழரின் படைப்புகளைப்பற்றி அறிந்துகொள்ள தங்களுடைய பதிவு எனக்கு உதவியது. மிகச்சிறந்த பதிவு.
தமிழீழ மக்களின் கலைப் படைப்புகளை மீள் உருவாக்கம் செய்யவும் புதியப்படைப்புகளை உருவாக்கவும் தாங்கள் முயற்சிக்க வேண்டும்.
ஞாநி தான் சுப்பிரமண்யம் சுவாமிக்கு ஈடானவர் என்று நிருபிக்க முயல்கிறார் போல இருக்கிறது.
ஞானி ஒரு கிறுக்கன்.
ஈழத்தின் வரலாறு தெரியாத பலர் இப்போ ஈழத்து வரலாறு எழுத முற்படுகின்றார்கள். ஞானி என்றால் என்ன? சாணி என்றால் என்ன? எல்லோரும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள்.
உங்கள் குரலுக்கு நன்றி.
அது confirmation bias.
இந்தக்கதையை செங்கை ஆழியான் இன்னுமொருபிரபல டைரக்டருக்கு கொடுத்ததாகவும் கதையிலிருந்து ஒரு கதாபாத்திரம் அப்படியே அவருடைய படத்தில் தோன்றிவிட்டதாகவும் படித்தேன்.
போர்ச்சூழலில் வெளிவந்த சில படங்கள் பார்த்திருக்கிறேன். எந்த மசாலாவும் அதில் இருந்ததாக
நினைவில்லை. ஆனால் அந்த படங்கள் இப்போது இருக்குமா தெரியவில்லை. கடைசி யுத்ததில் கூட பெருமளவு
ஆவணங்கள் அழிந்து விட்டன.
ஞானி எழுதிய கட்டுரையாக இருந்தால் நான் வாசிப்பதே இல்லை.
முன்பு ஒரு கட்டுரை வாசித்த போது எடுத்த முடிவு. ஈழ சினிமா ஒன்றாவது பார்த்திருப்பாரோ தெரியவில்லை.
ஆனால் எழுதும் போது எல்லாவற்றையும் பார்த்தது போல உளற மட்டும் தெரியும்.
உங்களது பதிவு சிறப்பாக உள்ளது.
ஈழதமிழருக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் 'சிங்கள' விசுவாசமா?
அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )
ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி கொலோம்போவிற்கு விமானம் விடும் கருணாநிதி குடும்பமும் சிங்கள விசுவாசியா?
நாடு நிலையோடு இருங்கள். உங்கள் பிறந்த நாட்டில் உழைத்து வாழ்ந்து - அங்கு உருப்படும் வேலை பாருங்கள்.
நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை.
என் மீது குற்றம் சுமத்தினால்... என் அண்ணன் பிரபாகரன் பார்த்துக்கொள்வார்!
பிரபா....ஏதோ எங்களின் முந்தைய உலகில் பிரவேசித்த மாதிரிப் பதிவு.
வாசிக்க வாசிக்க இப்பிடியெல்லாம் ஈழத்திலும் இருந்திருக்கிறதா என்று
பிரமிக்கிறேன்.
இழப்புக்களில் இப்படியான
கலைகளும் கூடத்தான் !
சிரமப்பட்டுத்தான் தேடியிருப்பீர்கள் பதிவின் செய்திகளும் படங்களும்.நன்றி பிரபா.
ஐயா நடு நிலைவாதி ரங்கன் கந்தசாமி அவர்களே,
இங்கே முன்வைக்கப்பட்ட கருத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு உங்கள் நடு நிலைக்கருத்தை சொல்லுங்கள், நான் ஞாநியிடம் கேட்ட கேள்விகள், ஈழத்தமிழ் சினிமா குறித்த எந்த வித புரிதலும் இன்றி கருத்துக் கந்தசாமியாக அவர் சொன்ன கருத்துக்கள் என்பதே இந்தப் பதிவின் முழு நோக்கமும். உங்களின் பரிசுத்தமான கருத்துக்களை அளிக்க முன்னர் பதிவைத் தெளிவாக வாசித்து உணருங்கள்
தமிழக அறிஞர்களில் பலருக்கு தாம் எல்லாம் அறிந்தவர்கள் எனும் மனோபாவம் இன்று நேற்றல்ல பலகாலமாகவே உண்டு. ஈழத்தமிழ் சினிமா இலக்கியங்கள் பற்றி அறிய மேலும் ஆவலாக இருக்கிறேன். ஈழத்து தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி காத்திரமான காலப்பகுதி இருந்ததாக இப்போது தான் அறிகிறேன்.
தம்பி பிரபாவுக்கும் கோவம் வருகிறதே
மகிழ்ச்சி.
தமிழகத்தின் கறுப்புகண்ணாடித் தலைவரில் இருந்து பலரும் (எல்லோருமல்ல)என்ன செய்கிறார்கள் என்று எமக்கு நன்றாகவே தெரியும் தானே..ஓரிருவர் கத்துவதால் உண்மைகள் மறைக்கபடுவதில்லையே..
விடுங்கள் கிணற்றுத் தவளைகளை,தானே கத்தி ஓய்ந்துவிடும்.
பிரபாண்ணன்..
ஈழத்தில் பிறந்து வளர்ந்த என் வயதொத்த பலருக்கு இத்தனை சினிமாக்கள் பற்றி ஒன்றுமே தெரியாது. எங்களுக்குத் தெரிந்த வரை திரைத்துறையில் ஈழத்து முன்னோடி பாலுமகேந்திரா. வெட்கமாக இருக்கிறது. எங்களூர் நாடகங்களே அவ்வளவு அற்புதமாக இருக்கும். நிறையப் பரீட்சார்த்த முயற்சிகளை ஈழத்துத் தமிழ் நாடக மேடைகளில் கண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுகிற படங்களும் அப்படியே தரமானவையாக இருந்திருக்கும் என்பது நம்பிக்கை.
ஞானி சொல்கிற சாத்வீக சமத்துவ வாழ்வு பற்றிய உபதேசங்களைக் கேட்கும்போது அறிவுமதி சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
“எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.
நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது”
வரிக்குவரி மீள்பதிகிறேன்
காற்றுள்ள போது சிங்களவரிடம் பொறுக்கித் தின்ன புறப்பட்ட சில் டமிழர்களின் வரிசையில் இந்த ஞாநியும். மண்வாசனையுடன் அழகுதமிழில் எடுக்கப்பட்ட படங்களைப் பற்றி இவர்கள் அறியமாட்டார்கள். அலட்டல்களுக்கு பதில் சொல்லப் போய் இத்தனை செய்திகளைத் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். யாழ்
ஞானி உளறியதால் நாங்கள் நிறைய விடயங்கள் உங்களிடம் இருந்து அறிந்து கொண்டோம். நன்றி பிரபா....!!!
ஞானி எந்த நிலையில் எதற்காக இதை சொன்னார் என்று எனக்கு தெரியாது.
ஆனால் அவருக்கு நன்றிகள். இல்லாவிட்டால் எங்களுக்கு நீங்கள் சொல்லும் பல தெரியாமல் போய் இருக்கும்.
நீங்கள் ஏன் தங்கள் மண்ணின் திரை படங்கள் பற்றி ஒரு ஆழமான பதிவு போடக்கூடாது ?
நீங்கள் சொன்ன எல்லாமும் எனக்கு புதிய செய்திகள். வாழ்த்துக்கள்.
இது வரைக்கும் ஞாநி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள பிறரைத் தூற்றுவதைத் தவிர பயனுள்ளதாகவோ, ரசனைமிக்கதாகவோ எந்தப் படைப்பும் எழுதியதில்லை . வீதியில் திரியும் பைத்தியக்காரன் வெற்றுச் சுவரில் கரித்துண்டால் கிறுக்குவது என்றைக்கும் கல்வெட்டுகளாக மாறப்போவதில்லை. ஆனால் நாங்கள் ஈழத்தமிழர்கள் எல்லாவிதத்திலும் வரலாற்றில் தமிழுக்காக உயிர் வரை இழந்து சுவடு பதித்தவர்கள். இவர்களைப் போல் எச்சில் மெல்லும் முட்டாள்களை புறம் தள்ளுவது தான் இவர்களுக்கு சரியான பாடமாக அமையும். சகோதரி வாசுகியின் வழி தான் என் வழியும்.
அன்புடன்
சுவாதி
பிரபா,
அவருடைய பெயருக்கும் அவர் எழுதும் எழுத்துக்கும் எந்த பொருத்தமும் இல்லை. ஞாநி என்ற பெயரை மாற்றி சாணி என்று வைத்தால் தான் மிகப்பொருந்தும். நீங்கள் எழுதிய இந்த கட்டுரை அருமை. தயவு செய்து மேல் உள்ள கட்டுரையின் லிங்கை அவருக்கு கொடுக்கவும். வாசித்தாவது தெரிந்து கொள்ளட்டும். ஞாநி சொன்ன கருத்து ஒட்டு மொத்த ஈழ மக்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எம்மவர் எடுத்த குறும்படங்களை அவர் பார்க்கவில்லை போலும்.
அன்புடன்
மங்கை
>>அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )//
Definitely yes !
மிக நல்ல பதிவு ....
மேஜர் சுந்தர்ராஜன் இந்தப்படத்தை இலங்கை வந்திருந்தபோது (பைலட் பிரேம் நாத் படப்பிடிப்பிற்காக என்று நினைக்கிறேன்) பார்த்துவிட்டு இதனைக் கிலாகித்துப் பேசியது அந்தக்காலப் பத்திரிகைகளில் வந்தது.
நான் அந்தப்படத்தை 3 தடவைகள் பார்த்தேன். ஒரு தடவை மேதினத்தன்று (எல்லா வகுப்புகளிற்கும் ஒரே 50 சத ரிக்கட்) அடிபட்டு ரிக்கட் எடுத்துப் பார்த்தேன்.
படத்தின் சில பகுதிகள் வல்லிபுரக்கோவிலடியிலும் படமாக்கப் பட்டதாக ஞாபகம்.
Googleல் எதையோ தெடிக்கொண்டு செல்லமாக மிதந்து சென்ற வேளை, பிரபா உங்களது தலைப்பு நீர்ச் சுழி போல ஈர்த்து இங்கே கொண்டு வந்து விட்டது...
வாடைக்காற்று, பொன்மணி படங்களை திரையரங்கில் பார்த்தேன். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் ஒலிச் சித்திரமாகவும் கேட்டு மகிழ்ந்தேன்.
இன்று இந்தப் பதிவைப் பார்த்ததும் என்னையறியாமல் என் மனம் அந்த நாட்களுக்கு சென்றுவிட்டது. நன்றிகள்.
அடுத்து ஒருவரைப் பற்றி நான் எதையும் எழுதுவதற்கு முன் அவரைப் பற்றி அறிந்து கொள்வது வழமை. இந்த ஞாநி யாரென்றே இன்று வரை எனக்குத் தெரியாது. மீண்டும் Googleஐ நாடினேன். Google முதலில் காட்டியது அமுதவன் என்றவருடைய பக்கத்தைத்தான்.
இந்த ஞாநி என்பவரை பல முன்னணி சஞ்சிகைகள் ஒதுக்கிவிட்டன என அறிகிறேன். இப்போது கல்கி யின் தயவை நாடி நிற்கிறாராம் இந்த ஞாநி.
மேலும் ஞாநி யைப் பற்றி அமுதவன் கூறியதை வாசிப்பதற்கு கீழே முகவரி தருகிறேன்.
http://amudhavan.blogspot.no/2010/08/blog-post.html
யாழ்பாணம் பொது நூலகம் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழையதும் சிறந்ததுமான நூல்களைக் கொண்டிருந்தது. அது நீறான போது, பல ஆசிரியர்கள், பேரசிரியர்கள், என பலரும் மன வேதனையடைந்ததை நானறிவேன். அவர்களில் ஒருவர், மறைந்த கலநிதி நாயன்மார்கட்டு சொக்கலிங்கம் அவர்கள்.
மிக்க நன்றிகள் பிரபா.
Post a Comment