சமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் மூழ்கியிருக்கும் போது, "இளையராஜாவின் The Music Messiah என்ற இசைத்தட்டு இருக்கிறதா" என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கடைக்காரரைக் கேட்கும் போது என் கவனத்தை அங்கே பதித்தேன். கடைக்காரர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நான் ஏற்கனவே சல்லடை போட்டுத் தேடிய அனுபவத்தால் "இல்லை" என்று சொல்லி விட்டு வேறு சில ஆல்பங்களை கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளருக்குக் காட்டினேன். தன்னை ஒரு தெலுங்குக்காரர் என்று அறிமுகப்படுத்தி விட்டு மெல்ல திரையிசை குறித்த சிலாகிப்பை ராஜாவில் இருந்து ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் அன்றிலிருந்து இன்றுவரை என் மனசில் பதியம் போட்டிருக்கிறது. அது "என்னதான் சீடி யுகம் வந்தாலும் ஒருகாலத்தில் இருந்த எல்.பி ரெக்கார்ட்ஸ் இல் பாட்டுக் கேட்பதே சுகமான அனுபவம் தான்" என்றார்.
மெல்ல என் பழைய நினைவுகளில் கரைகின்றேன். எண்பதுகளில் எங்களூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில ஓடியோ கடைகள் இருக்கும். தவிர யாழ்ப்பாண நகரப் பக்கம் போனால் நியூ விக்டேர்ஸ், விக்டர் அண்ட் சன்ஸ், றேடியோஸ்பதி போன்ற பிரபலமான பாடல் பதிவு நிலையங்களும் இருந்தன. அங்கெல்லாம் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் புதுசு புதுசாக வரும் LP Records எனப்படும் பெரிய இசைத்தட்டுக்களின் கவர்களை முகப்புக் கண்ணாடிகளில் ஒட்டியிருப்பார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படியான LP Records ஐ தருவிக்கும் இப்படியான கடைகள் பின்னர் இசைப்பிரியர்கள் ஒரு துண்டுத்தாளில் எழுதிக் கொடுக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இசைத்தட்டுக்களை எல்.பி ரெக்கார்ட்ஸ் இயங்கும் கிராமபோன் கருவியில் ஒலிக்கவிட்டு ஓடியோ கசெட்டாக அடித்துக் கொடுப்பார்கள். எனவே புதுப்படம் ஒன்று வருகின்றதென்றால் இந்த பெரும் கறுப்பு நிற இசைத்தட்டுத் தாங்கிய வெளி மட்டைதான் ஒரு விளம்பரமாகச் செயற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எதிர்ப்படும் எங்களூரில் இருந்த அந்தப் பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்கு அடிக்கடி சென்று புதிதாக வந்த இசைத்தட்டு மட்டையைப் பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம் தான் அப்போது. கடைகளில் ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான இந்த மட்டையில் குறித்த படத்தின் ஸ்டில்லும் இசையமைப்பாளர் விபரமும் இருக்கும். புதிதாக ஒரு இசைத்தட்டு வருகின்றதென்றால் சுத்துப்பட்டி கிராமங்களே கேட்கும் அளவில் அதிக டெசிபெல்லில் அந்தக் கடைக்காரர் ஒலிக்க விட்டு ஊரைக் கூட்டுவார். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்கள் மனதில் அந்தப் பாடலைப் பதிய வைத்து அவர்களைக் கடைக்கு இழுக்கும் உத்தி அது.
அப்போதெல்லாம் பாடல் இசை வெளியீடுகளிலும் இந்த எல்.பி. ரெக்கார்ட்ஸ் ஐத்தான் வருகின்ற சிறப்பு விருந்தினருக்குக் கையளிப்பார்கள். அந்த அளவுக்கு மவுசு பெற்றவர் இவர். சரஸ்வதி ஸ்டோர்ஸ் காலத்தில் இருந்து ராஜாவின் பொற்காலமாகத் திகழ்ந்த எண்பதுகளில் ECHO மற்றும் சங்கர் கணேஷ்- ராமநாராயணன் போன்ற பட்ஜெட் இசைக்கூட்டணிக்கு ஆபத்பாந்தவனாக இருந்த லகரி என்று எல்லாமே இந்த LP Records ஐ வெளியிட்டன. ஓடியோ காசெட்டுக்களை இவை வெளியிட்டாலும் அந்த ரெக்கார்ட்ஸ் கொடுக்கும் பிரமாண்டமே தனி.
LP Records எனப்படும் இந்த வகை இசைத்தட்டுக்களில் பாடல் கேட்பதே ஒரு சுவையான அனுபவம். எங்கள் அம்மம்மா வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்தக் கருவிக்குத் தீனி போடுவது போல எண்பதுகளில் வந்த ஒரு சில படங்களின் இசைத்தட்டுக்களும், ஒரு சில பழைய பாடல்கள் கொண்ட தொகுதிகளுமாக ஒரு கண்ணாடி அலமாரியை வைத்திருந்தார்கள். சின்னப்பிள்ளை எனக்கெல்லாம் அப்போது அந்த அலமாரியைத் தொட்டுத் திறக்கவோ, கிராமபோன் கருவியை இயக்கவோ எல்லாம் அனுமதி கிடையாது. அந்த ஏகபோக உரிமையை அப்போது என் சின்ன அண்ணன் தான் எடுத்திருந்தான். அவனுக்கு குஷியான மூட் வரும் போது ஏதாவது ஒரு இசைத்தட்டை எடுத்து மெதுவாக ஒலிக்க விடுவான். ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். இசைத்தட்டை அலுங்காமல் குலுங்காமல் அந்த கிராமபோனில் கிடத்தி விட்டு, அதன் ஊசியைப் பொருத்தி விடுவான். தனக்கான சக்தியைப் பெற்ற கணம் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பிக்கும் அந்த கிராமபோன், எங்கள் அம்மா நிதானமாக தோசைக்கல்லில் வளையமாக தோசைமாவைச் சுழற்றி விடுமாற்போல. அந்த நேரம் கிராமபோன் தருவிக்கும் அந்த இசைமழையை சோபா செட்டுக்குள் கூனிக்குறுகிக் கொண்டே கேட்டுக் கொண்டே பள்ளியில் படித்த அந்த நேரத்துக் காதலியோடு டூயட் பாடுவது போலக் கனவு காண்பது ஒரு சுகமாக அனுபவம். அடிக்கடி போட்டுத் தேய்ந்த சில இசைத்தட்டுக்கள் தாம் பாடும் போது அடிக்கடி "டொப்....டொப்" என்று தம் பட்ட விழுப்பூண் கீறல்களை ஒலியாக எழுப்பி மாயும். சிலவேளை கிராமபோனில் பொருத்தியிருக்கும் ஊசிக்கும் இசைத்தட்டுக்கும் ஊடல் வந்தால் ஆபத்துத்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பழங்காலத்து பாலசரஸ்வதிதேவி குரல் மாதிரி பெண் குரலாகும், எஸ்.ஜானகி குரலோ அப்போது தான் மகரக்கட்டை உடைந்து குரல் மாறிய விடலைப்பையன் குரல் போல நாரசமாக இருக்கும். இப்படித்தான் ஒருமுறை என் சின்ன அண்ணன் ஒலிக்க விட்ட பில்லா பாடல்களில் ஒன்றான "இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்" பாடல் வேகமாக மாறி ஒலித்து என்னை அப்போது கிச்சுக்கிச்சு மூட்டியதை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன். பெரியதாக இருந்த அந்த கிராமபோன் இசைத்தட்டுக்கள் தவிர ஒரு சில இப்போது வரும் சீடிக்களின் அளவுகளில் சின்னதாகவும் இருந்ததைக் கண்டிருக்கின்றேன்.
அப்போது வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலுமே இந்த கிராமபோனே தெய்வமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை வானொலியில் இருந்த அளவுக்கு வேறெங்கும் ஒரு பெரிய இசைத்தட்டுக் களஞ்சியம் உண்டா என்று தெரியவில்லை என்று அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
எனக்கு குறித்த வெறியைப் புகுத்தியது அந்த கிராமபோன் அப்போது ஏற்படுத்திய பிரமிப்பும் கொண்டு வந்து மனதில் புகுத்திய இசையும் தான். பெரியவன் ஆனாதும் எனக்கும் ஒரு இசை லைபிரரி வைத்துக் கொள்வேன், அங்கே நிறைய எல்.பி.ரெக்கார்ட்ஸைச் சேர்த்து வைப்பேன் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. இப்போதும் எங்காவது வணிக வளாகத்தில் ஏதோ ஒரு அரும்பொருள் விற்கும் கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமபோனைப் பார்த்து மனதுக்குள் அஞ்சலி செலுத்துகின்றேன். ஆசையாக ஒன்றை வாங்கிப் பக்கத்தில் வைக்கவேணும் ஒன்றை
பழையன கழிதலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னுமாற்போல இந்த கிராமபோனையும் எல்.பி.ரெக்கோர்ட்ஸையும் ஒழித்துக் கட்ட நவீன சீடிக்கள் எல்லாம் வந்து விட்டன. தொண்ணூறுகளின் மத்தியில் ஆரம்பித்த சீடிக்கள் யுகம் இன்று முழுமையாகத் தின்று தீர்த்து விட்டது. கூடவே இந்தப் புதிய யுகத்தால் பாடல்களை இலகுவாகப் பிரதியெடுக்கவும், தரம் கெட்ட ஒலி வடிவில் பெறவும் முடிகின்றது என்பது இசையுலகத்துக்குக் கிட்டிய சவால். இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.
16 comments:
என்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..
ஹம்ம்ம்ம்ம்ம் அந்த காலகட்டத்துல என்னால இப்படி ரெக்கார்ட்டு பாட்டு கேக்கமுடியலயேன்னு ஃபீலிங்க்தான் பாஸ் வருது! :(
நிறைய படத்தில பார்த்திருக்கேனாக்கும் ! சவுண்டெல்லாம் கிளாரிட்டி சூப்பரா இருக்கும்ன்னு சொல்லுவாங்களே அது நிசமா?
// Anonymous said...
என்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..//
பாஸ்! பாஸ் இது யாரோ உங்களுக்கு நொம்ப தெரிஞ்சவங்க எங்கே நீங்க எடுத்திட்டு ஓடிடுவீங்களோன்னு ரிஸ்க் எடுக்காம அனானியா வந்திருக்காங்க! :)))))
எவ்வளவு கடைகள் வந்தாலும் நியூ விக்ரேஸ் கடையை அடிக்க முடியாது. மேலும் அது அமைந்திருந்த இடம் லிங்கம் கூல் பார், ரவர் கூல் பார் போன்றவற்றுக்கு அண்மையில் என்பதும் ஒருவகையில் வசதியாக இருந்தது. அக்கடைகளில் மட்டின் ரோல், வடை & ரீ சாப்பிட்டு வந்து புதிய பாடல்கள் கேட்கலாம். நாம் ஒவ்வொருவராக வந்து அச்சந்தியில் கூடுவோம். உள்ளே கடைக்காரரும் எமது ’கிளிக்’ சேரும்வரை பொறுத்திருந்து எமது எண்னத்துக்கேற்றாற் போல புதிய பாடலை எல்.பி யில் ஓட விடுவார். அவர் ஒரு போதும் எமது நம்பிக்கை வீண்போக விடவில்லை. அப்போது நியூ விக்ரேசில் மட்டுமே ஸ்ரிரியோ போனிக் உபகரணங்கள் இருந்தன.அவர்களின் சகோதரர் ஒருவர் சுங்க அதிகாரியாகவோ அல்லது விமானியாகவோ இருந்ததனால் ‘கொண்டு வந்து சேர்க்கிறார்கள்’ என பேச்சு இருந்தது. முதன் முதலாக ஸ்ரிரியோ வில் வெளிவந்த பாடல்கள் பிரியா படத்தினதாக இருந்தது. அதனால் அக்காலப்பகுதியில் நி்யூ விக்ரேஸுக்கும் முன்னால் சனக்கூட்டம் அதிகமாக காணப்படும். இதில் என்மனதில் உடனடியாகவே பதிந்த பாடல் ‘ஹே..பாடல் ஒன்று’ இன்றும் திகட்டாடத பாடல் அது!
அதேபோல நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தில் வரும் (படமே வரவில்லை என நினைக்கிறேன்:) ) ஒருமூடன் கதை சொன்னான் என்ற பாடலை கேட்க எனது நண்பன் அங்கேயே தவம் கிடப்பான். ஒரு வேம்படி மகளிர் கல்லூரி பெட்டைக்குப்பின்னால் தவமாய் தவமிருந்த்தன் விளைவு! துணக்கு நான் அவனுடன் நிற்பேன். பாடுக்கேட்டமாதிரியும் இருக்கும் அவன் செலவில் மட்டன் ரோல் வடை சாப்பிட்டமாதிரியும் இருக்கும் என நினைத்த எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி ! நண்பனின் காதல் தோல்வி விடயம் லீக் ஆக எல்லாப்பழியும் என்தலையில் கட்டிவிட்டான் அவன். ஓசி மட்டன் ரோலுக்கு ஆசைப்பட்டு மானம் கெட்டதுதான் மிச்சம். சோசலிச/புளொட்/ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆர்வக்கோளாறில் தாடிவளர்த்திருந்த எனக்கு நன்றாக பொருந்தியும் விட்டது! தப்ப முடியவில்லை.
எனக்கும் இசைத்தட்டுகளில் பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்.
என்னுடைய இந்த பதிவை பாருங்களேன்.
http://vedivaal.blogspot.com/2007/08/78-45-33-13_10html
சகாதேவன்
நான் இந்த இசைத்தட்டுகளை வாங்கத் தொடங்கியபோது அவை தம் அந்திமக் காலத்தில் இநருந்தன. ஆனாலும் புன்னகை ம்ன்னன் உட்பட்ட சில இசைத்தட்டுகளை வாங்கி வைத்துள்ளேன்...
\
நல்ல நனவிட தோய்தல் பிரபா
Anonymous said...
என்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..//
கொடுத்து வச்சவர் ஐயா நீங்கள், அடுத்த முறை சென்னை வரும் போது தேடி வாங்க ஆசை
Blogger ஆயில்யன் said..
நிறைய படத்தில பார்த்திருக்கேனாக்கும் ! சவுண்டெல்லாம் கிளாரிட்டி சூப்பரா இருக்கும்ன்னு சொல்லுவாங்களே அது நிசமா?//
அப்படி ஒரு உணர்வு கண்டிப்பாக கிட்டும். முதலில் வந்தவர் நம்ம செட்டு தான் ;)
Anonymous said...
எவ்வளவு கடைகள் வந்தாலும் நியூ விக்ரேஸ் கடையை அடிக்க முடியாது. //
அன்பின் நண்பரே
உங்கள் பழைய நினைவுகள் எம் தாயகத்தின் பசுமையான காலத்தின் நனவிடையை மேலும் கிளறி விட்டது, உங்களுக்கு அடுத்த காலத்து இசையை ரசித்தாலும் நீங்கள் சொன்ன அதே உணர்வை நாமும் அனுபவித்தோம்
அருமையான பதிவண்ணே !!!
நமக்கு உதையொண்டும் கேட்க கொடுத்துவைக்கேல்ல.....ஆனாலும் வீட்டில நிறைய இசைத்தட்டுக்கள் இருக்கின்றன... (யார் யாரெண்டு பெயர்தெரியாத சங்கீத மேதைகளின் பாட்டுக்கள் அடங்கிய Saraswathi Stores இசைத்தட்டுக்கள்).. ஆனால் கேட்க்கத்தான் கருவி இல்லை..
ஆனாலும் இணையத்தில் இவை விற்பனைக்கு இருக்கின்றன! ஆனாலும் பழைய quality இருக்குமோ தெரியாது..
இன்னுமொன்று....
அனேகமான தட்டுக்களின் முகப்பில் கிரமபோன் கருவியை நாய்க்குட்டி ஒன்று உற்றுப்பார்பது போல ஓர் படம் இருக்கும்.. அதற்க்கான அர்த்தம் இங்கிலாந்து வந்தபின்னர் தான் தெரிந்தது...அது புகழ்பெற்ற HMV நிறுவனத்தின்.. சின்னமாம்..
தற்போது இவ்இசைத்தட்டுக்களில் இருந்து இறுவட்டு (CD)க்கு மாற்றும் கருவிகள் ஏதாவது இருக்கின்றனவா ?
நன்றிகளுடன்
மாயா
தல அருமையான பதிவு...இதுவரை அந்த LP Record பார்த்தது கூட இல்லை நான் ;))
வணக்கம் சகாதேவன்,
நீங்கள் தந்த அந்த இணைப்பு வேலை செய்யவில்லையே?
அருண்மொழிவர்மன்
எமது ஊரில் இவையெல்லாம் அழிந்து போயிருக்கும் இல்லையா
கிராம போன் பற்றிய தகவல்களையும், நினைவு மீட்டலையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பா! நான் இற்றை வரை கிராம போனில் பாடல் கேட்டதில்லை. உங்களின் பதிவினைப் படித்ததும் கிராம போனில் பாட்டுக் கேட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆர்வம் வருகிறது.
வருகைக்கும் மேலதிக பகிர்வுக்கும் நன்றி மாயா, உங்கள் பகிர்வே ஒரு குட்டிப்பதிவாக இருந்தது,
எல்பி ரெக்கோர்ட்ஸில் இருந்து சீடிக்கு பதியும் புதிய கருவிகள் வந்திருக்கின்றன.
தல கோபி, தமிழ்மதுரம்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.
நன்றி இளா ;)
Post a Comment