Thursday, April 05, 2007
மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்
தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூரத்திலிருந்து எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் மீதான தடையை விதித்த காலமது. பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாழடைந்த , சந்திரமுகிக்கள் குடியிருக்கும் பங்களாக்களாக
மாறிவிடவும், சந்திக்குச் சந்தி கிடுகால் வேயப்பட்ட தற்காலிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துவிட்டன.
வெளிர் சிவப்பு கலரில் இருக்கும் பெற்றோல் போத்தல்கள் ஒப்புக்கு இரண்டு போத்தல்களாகவும் மற்றயவை நீலக்கலர் தாங்கிய மண்ணெண்ணைப் (kerosene) போத்தல்களாகவும் இருக்கும். போத்தலொன்று ஐநூறு ரூபாவுக்கு மேல் விற்கும் பெற்றோல் எல்லாம் வாங்கக் கட்டுப்படியாகாது வாகனங்கள் மரக்கறி எண்ணெய்யில் ஓடிக்கொண்டிருந்தன. வாகன இயந்திர எரிபொருள் தாங்கிக்கு மரக்கறி எண்ணையை நிரப்பி ஸ்ராட் பண்ணுவதற்கு பெற்றோலின் சில துளிகள் முகர்ந்து பார்க்க மட்டும் காட்டி அல்லது ஏமாற்றி நம்மவர்கள் வாகனமோட்டிக் கொண்டிருந்தார்கள்.
தொண்ணூறாம் ஆண்டு ஆரம்பம் வரை மின்சார வசதியோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த சனங்களுக்கு திடீர் மின்சார வசதி இழப்பும், பெற்றோலியப் பொருட்களின் கொள்ளை விலையும் படம் பார்க்கும் பொழுதுபோக்கிற்கும் ஆப்பு வைத்தது. தியேட்டர்களும் ஓய்ந்துவிட்டன. அப்போது தான் மின்சாரம் தரும் மாற்றீடுகள் மெல்ல மெல்ல நம்மவர் கண்டு பிடிப்பில் வந்தன. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு ஜெனரேற்றர்களும் வீடியோ படப்பிடிப்புக்காரர் பிழைப்பு நடத்த ஓரளவு கை கொடுத்தது.
சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷின்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள், ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. மண்ணெண்ணை பாவித்து இவற்றை இயக்கமுடியும் என்பதால் செலவும் ஒப்பீட்டளவில் குறைவானதாகப்பட்டது. இவ்வளவு முன்னுரையும் போதுமென்று நினைக்கிறேன்.
அப்போது க.பொ.த சாதாரண தர வகுப்பு படித்து ஓய்ந்த இடைவெளிக் காலங்கள். வேறு பெரிதாக வேலை என்றும் இல்லை. நண்பன் கிரி, சந்திரகுமார் போன்றவர்கள் தகப்பனுக்குத் துணையாக மண்வெட்டி பிடித்துக் தோட்டத்தில் இறங்கிவிட்டார்கள். எனக்கும் எஞ்சியிருந்த சில நண்பர்களுக்கும் டைனமோவில் சுத்திப் பாட்டுக் கேட்பதும் அரட்டை அடிப்பதுமாகக் காலம் கழிந்தது. அப்போது தான் வந்தது "சின்னத்தம்பி" படப்பாடல்கள். யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் ஒரு றேக்கோடிங் பாரில் பதிவு செய்த சின்னத்தம்பி பாடல்களை கசற்றின் ஒலிநாடாவும், டைனமோவும் தேயத் தேயக் கேட்டோம். சின்னனுகளுக்கும் " போவோமா ஊர்கோலம்" பாட்டு பாடமாக்கிவிட்டது. கோயில் திருவிழா நாதஸ்வரக்காரர்களும் தொடர்ந்து "ராசாத்தி மனசிலே" பாட்டு வாசித்து ஓய்ந்து சின்னத்தம்பி படப்பாடல்களுக்கும் தாவிவிட்டார்கள்.
சின்னத்தம்பி பாட்டுக் கேட்ட மயக்கம் படத்தையும் பார்க்கவேண்டும் என்று தூண்டியது அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேற்றரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.
எங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேற்றருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். "தம்பியவை ! நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது " என்று அவர் சொல்லவும் சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, " அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை வொச்சை வச்சிருங்கோ" என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.
ஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது.படம் போடும் இளைஞர்கள் ஏதோ பெரிய பந்தா காட்டிக்கொண்டு ஆறுதலாகக் கதை பேசி ஒவ்வொன்றாக ஆயத்தப்படுத்தினோம்.
இரவானது, ஜெனறேற்றை சுதா இயக்க, படம் போடும் முனைப்பில் சுரேஷ் இறங்கி ஒருவாறு எழுத்தோட்டம் முடிஞ்சு கதாநாயகன் பிரபு எட்டிப்பார்க்க பொக்கொன்று ஜெனறேற்றர் அணைந்தது. சுதா ஜெனறேற்றை மீண்டும் இயக்க சுரேஷ் மீண்டும் படத்தை இயக்க, தொடந்து 15 நிமிஷம் ஓடியிருக்கும், மீண்டும் குறட்டை விட ஆரம்பித்தது ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். படத்துக்கு வழமையாக ஒரு இடைவேளை தான், ஆனால் நாங்கள் போட்ட சின்னத்தம்பிக்கு இடைவேளை வரமுன்பே ஏழெட்டு இடைவேளைகள்.
வாங்கி வந்த மண்ணெண்ணையில் கலப்படம் என்று புகார் சொன்னது ஒரு சகபாடி, இன்னொன்றோ "இல்லையில்லை, உந்தக் கோதாரி மிஷின் ஒயில் ராங்கில (oil tank) தான் எதோ பிழை" என்றது. ஜெனறேற்றரும் வஞ்சகமில்லாமல் நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்த இரண்டு போத்தல் மண்ணெண்ணையையும் குடித்துவிட்டு ஓப்புக்கு ஒரு சில மணித்துளிகள் வேலைசெய்துவிட்டு வஞ்சகமில்லாமல் ஓய்ந்தது.
பாதிப் படம் தான் பார்த்திருப்போம். மீதிப் படம் பார்க்க ஜெனறேற்றருக்கு மண்ணெண்ணை இல்லை. நண்பர்கள் எல்லோரும் பக்கத்தில் நின்ற நண்பன் கிரியின் முகத்தைப் பார்த்துக் கண்களால் யாசித்தோம்.
"நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு தெரியுமடா, சும்மா விளையாடாதேங்கோ, நாளைக்கு இறைப்புக்குத் தான் ரண்டு போத்தில் மண்ணெண்ணை வீட்டில இருக்குது"
என்று முரண்டு பிடித்தான் கிரி. முடிவில் நட்பு வென்றது. இறைப்புக்கு வைத்திருந்த மண்ணெண்ணை சின்னத்தம்பி படத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து படம் பார்க்கும் ருசி பல்கிப் பெருகியது. கொழும்பிலிருந்து ஜெமினி சினிமா, பொம்மை போன்ற சினிமாப் புத்தகங்கள் தடைசெய்யப்படமுன் வரக்கூடியதாக இருந்தன. அதிலிருந்து பொறுக்கிய துணுக்குகள் மூலம் நானே என்ன படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்வேன். ராஜ்கிரண் நாயகனாக அறிமுகமான "என் ராசாவின் மனசிலே", அண்ணாமலை, தேவர் மகன், என்றும் அன்புடன், சுந்தர காண்டம் என்று படங்களைத் தெரிவு செய்து கொடுப்பேன். நண்பர்களின் கூட்டு முதலீட்டில் வாடகைக் கசற்றும் ஜெனறேற்றருமாக படம் பார்த்த காலங்கள் அவை. ராஜ்கிரனின் நடிப்பு, ராஜாவின் இசை இவைதான் படம் போடும் நேரம் தவிர்ந்த நம் பேச்சுக்கச்சேரியின் தலைப்புக்கள். சுதா நிரந்தரமாகவே ஊசிலி மெஷின் ஒன்றை ஜெனறேற்றராக மாற்றி அடிக்கடி படம்போடும் திட்டம் கொண்டுவரவும், அவர்கள் வீடு மினி சினிமா போல மாறியது.
பெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது.
என் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. சிறீராம் இயக்க "மீரா" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.
படம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மேசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர்.
தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட ஜெனறேற்றர்கள் அடிக்கடி கோளாறு பண்ணும் , மண்ணெண்ணையும் சுத்தமாக இராது, மெஷினுக்குள் கல்மண் எல்லாம் சங்கமமாகி சேடம் இழுக்கும். ஒரு இரண்டரை மணி நேரப்படம் ஐந்து மணித்தியாலத்தையும் எடுத்துப் பார்க்கக் கூடியதாக இந்த ஜெனறேற்றரின் திருவிளையாடல் இருக்கும். அந்த இரவுப் பொழுதுகளில் எல்லா அயல்வீடுகளையும் எழுப்பிவிடும் இந்த ஜெனறேற்றரின் ஒப்பாரிச் சத்தம். இடைக்கிடை அது கோளாறுபண்ணி நிற்கும் போது ஒரு ஆள் பாரமான அந்த இயந்திரத்தைப் புரட்டிக் குலுக்க இன்னொருவர் கை வலிக்குமட்டும் ஜெனறேற்றரின் கயிற்றைச் சுழற்றி இழுக்கவேண்டும். பகீரதப் பிரயத்தன முயற்சியின் பின் தான், பட படவென வெடித்து விட்டு அது இயங்கத் தொடங்கும்.
அப்பிடியும் ஜெனறேற்றர் கை கொடுத்தாலும் இன்னொரு பிரச்சனையும் வானத்தில் வட்டமிடும் ஹெலிகொப்ரர் ரூபத்தில் வரும். ஹெலிச் சத்தம் கேட்டால், " தம்பியவை, படத்தை நிப்பாட்டூங்கோடா, வெளிச்சம் தெரிஞ்சால் சுடுவாங்கள்" என்று பெருசுகள் புலம்பத் தொடங்கும். ஹெலிக்குப் பயந்து ஜெனறேற்றர் ஓயும், ஹெலி அந்தப் பக்கம் போனதும் மீண்டும் அதை இயங்க வைக்க இன்னொரு போராட்டம்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான சம்பவமும் நடந்தது எங்களூரில். ஒரு வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெனறேற்றர் பக்கத்து வீட்டை அண்டிய வேலிப்புறமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவர்களுக்கும் நீண்டகாலமாகவே பகை. அதனால் தான் விஷமத்துக்காக வேலியை அண்டிச் சத்தமாக வேலை செய்யும் ஜெனறேற்றரை வைத்திருக்கவேண்டும். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் திடீரென்று மயான அமைதி. ஜெனறேற்றர் ஓய்ந்து, ஏதோ விழுவது போல் சத்தம் கேட்கிறது. வெளியே ஒடிவந்து பார்த்தால் ஜெனறேற்றர் அவர்கள் வீட்டு கிணற்றுக்குள் நீந்தி விளையாடுகிறது. யார் செய்திருப்பினம் எண்டு நினைக்கிறியள்?
ஒரு சில மாதங்களில் திரைப்படத்தணிக்கை அமுலுக்கு வருகிறது. ஆபாசக்காட்சிகள் கொண்ட படங்கள் மீளவும் தணிக்கை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீடியோக்கடைக்காரகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அப்போது மானிப்பாய் வீதியில் உள்ள வீடியோ விமல் என்ற வீடியோக்கடையில் வைத்துத் தான் திரைப்படத்தணிக்கைக் குழு இந்தப்பணியைச் செய்து வந்தது. அப்போது பிரபு தேவா நடித்து வெளிவந்த "இந்து" படம் ஒன்றேகால் மணி நேரப்படமாகத் தான் தேறியது. ஆபாசப்பாடல்கள், காட்சிகள் நீக்கப்பட்டதால் வந்த கைங்கர்யம் அது. இப்படிச் சில படங்கள். பேசாமல் தணிக்கைக்குழுவில் இருந்தால் நல்லது என்று ஒரு சகா சப்புக்கொட்டியது.
இன்று நினைத்த நேரத்தில் செய்மதித் தொலைக்காட்சி, டீவிடி, வீ,சீடி என்று படம் பார்க்கவும் பொழுதுபோக்கவும் ஆயிரம்வசதிகள்.ஆனால் அன்று சகாக்களோடு எமது எல்லைக்குட்பட்ட ஆசைகளோடு படம்பார்த்துப் பொழுது போக்கிய நினைவுகள் சுகமானவை, அந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களை இழந்த வாலிப வயசு நினைப்புக்கள் வலி நிறைந்தவை.
ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.
படங்கள் நன்றி: தமிழ் நெட் (தாயக ஒளிப்படங்கள்)
மற்றும் பல்வேறு சினிமாத் தளங்கள்
44 comments:
என்ன பிரபாண்ணா சந்தோசமா வாசிச்சுக்கொண்டிருந்தன் கடைசில இப்பிடிப் பண்ணிட்டிங்கள்...என்ன கதை சொன்னாலும் கடைசில..........இது எங்களுக்கு விதிக்கப்பட்டது
போல.
எனக்கும் இப்பிடிப் படம் பார்த்த அனுபவங்கள் இருக்கு.எங்கட சித்தப்பாதான் படம் போடுறவர்.ரஜனிட சிவா படம்தான் முதல் போடுபட்டது.அடி வான்மதி என்று அவர் பாட நான் அன்ரின்ர மடில இருந்து துள்ளி எழும்பி கையையும் காலையும் ஆட்டி ஊரில சுவரோட சேர்த்து சோகேஸ் கட்டி வைச்சிருப்பினம் தெரியுமா? அதை உடைச்சதுதான் மிச்சம்.
எனக்கொரு டவுட்...நேற்றுத்தான் ஒராள் குப்பி விளக்கில படிக்கிறதப் பற்றி எழுதப்போறன் என்று சொன்னார்; நீங்கள் படமே காட்டிட்டிங்கிள்..எப்பிடி 2 பேரும் ஒரேமாதிரிச் சிந்திக்கிறீங்கிளோ?
வணக்கம் சினேகிதி
இவ்வளவு கஷ்ட நேரத்திலும் படம் பார்த்தீர்களோ என்று சிலர் கேட்கக்கூடும். எங்களைப் பொறுத்தவரை அப்போதய இறுக்க நிலைக்கு ஒரு தளர்வு தேவையாக இருந்தது இல்லையா?
நிறையக் கதைகளை மனசுக்குள் புதைத்துக்கொண்டு நாம் ஒவ்வொருவரும் வாழ்கிறோம், அதுதான் சிந்தனைகளில் ஒருமைப்பாடாக இருக்கிறது.
ஹிட்லர் புல்லாங்குழல் வாசிக்கலாம் நாங்கள் படம் பார்த்தா என்ன...இறுக்கமான நிலையில படம் பாட்டில்லாட்டால் மென்ரலாகிடுவம். இங்கயும் யாரும் இறந்த செய்தி வந்தால் இல்லாட்ட ஏதும் பிரச்சினை நடந்தால் வீட்ட ரீவி போடாயினம் ஏனென்றால் துயரத்தில பங்கெடுக்கினமாம்.எனக்குதில நம்பிக்கையில்லை.
பிரபா, நீங்கள் 'சின்னத்தம்பி' பார்த்த அனுபவத்திற்கு நிகராய் நான் 'உழைப்பாளி' பார்த்திருக்கின்றேன். அதுவும் அதில் ஒரு 'முக்கியமான' சீன் வருது கட்டாயம் பார்க்கவேண்டும் என்று 9ம் வகுப்பில் மற்றவர்கள் உசுப்பிவிட, ஜெனரேற்றரை உலுக்கி உலுக்கி எல்லாம் பார்த்திருக்கின்றேன்/றோம். அதேபோல் நீங்கள் 'இந்து' படம் பார்த்ததுபோல நாங்கள் அர்ஜுனின் 'ஜெய்கிந்த்' பார்த்து அட பாடல்கள் இல்லாமல் இப்படி ஒரு action படம் தமிழில் எடுத்திருக்கின்றார்களே என்று வியந்திருக்கின்றேன். பிறகு கொழும்பில் இருந்தபோது மீண்டும் அப்படத்தைப் பார்த்தபோது பாடல்கள் இல்லாமற்போனதுக்கு யாழில் வழக்கத்திலிருந்த சென்சார் என்பது புரிந்தது.
......
உங்களின் நண்பர்கள் சிலருக்கு நிகழ்ந்ததை வாசிக்கும்போது - தொடர்புகள் இல்லாது நீண்டகாலம் போய்விட்ட- எனது நண்பர்களின் நிலை குறித்த கவலையும் சூழ்கிறது.
பிரபா,
நல்ல நினைவுமீட்டல் பதிவு.
/* தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் */
இக் காலப் பகுதிகளில் நான் ஈழத்தில் வசிக்காதபடியால் இப்படியான அனுபவங்களை நேரில் அனுபவித்திருக்காவிட்டாலும், பலர் இப்படிப் பல கதைகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிங்கள அரசுகள் எம் மக்கள் மீது எத்தனையோ அழுத்தங்களைப் பிரயோகித்தும் எம் மக்களின் மனவுறுதியையும் விடுதலை வேட்கையையும் அழிக்கமுடியவில்லை என்பதற்கு இச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகள் என்றால் மிகையாகாது.
நல்ல பதிவு. போராட்ட காலங்களில் நாம் வாழ்ந்த முறைகளை எதிர்காலச் சந்ததி அறியும் வண்ணம் இப்படியான பதிவுகள் எழுதி அவற்றைச் சேமித்து வைப்பது மிகவும் அவசியம். தொடர்ந்தும் எழுதுங்கள்.
எங்கிருந்தோ வந்தான் என்று ஒரு தமிழ்ப்படம் வந்தது. அது ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கம். அந்த மலையாளத்திரைப்படம் அதிபயங்கர வெற்றி பெற்ற திரைப்படம். காரணம்? அதீத மகிழ்ச்சியும் அதீத சோகமும் மாறி மாறித் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை. தமிழில் அது முழுக்கவே காணாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட அந்த மலையாளப்படத்தின் வகையில் உங்கள் கட்டுரை. அதீத மகிழ்ச்சியுடன் படிக்கையில் அதீத சோகம். முருகா!
அருமையான பதிவு.
சதா ஒரு conflict இலும் / அலைச்சலிலும் வாழவேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள்
பொக்கிஷம் போலாகி விடுகின்றன.
//சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி //மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளா//
வணக்கம் பிரபா. மெல்லிய சோகம் கலந்த இதமான பதிவு. சைக்கிள் டைனமோவில் செய்தி றேடியோ கேட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன். இறைக்கிற மிசினில் திரைபடம் பார்த்தது எனக்கு புது தகவல் பதிவுக்கு நன்றிகள்..
//DJ said...
பிரபா, நீங்கள் 'சின்னத்தம்பி' பார்த்த அனுபவத்திற்கு நிகராய் நான் 'உழைப்பாளி' பார்த்திருக்கின்றேன். அதுவும் அதில் ஒரு 'முக்கியமான' சீன் வருது கட்டாயம் பார்க்கவேண்டும் என்று 9ம் வகுப்பில் மற்றவர்கள் உசுப்பிவிட, ஜெனரேற்றரை உலுக்கி உலுக்கி எல்லாம் பார்த்திருக்கின்றேன்/றோம்.//
டி ஜே
உழைப்பாளி படம் பார்த்த அனுபவமும் அதே காலகட்டத்தில் எனக்கும் இருந்தது. ஜெனறேற்ரறை உலுப்பு உலுப்பி உயிராக்கிப் படம் பார்க்கும் நிகழ்வும் மறக்கமுடியாது.
நண்பர்கள் நாமெல்லோறும் திக்கொன்றாய்,
சிலர் மேலேயும்...:-(
//வெற்றி said...
போராட்ட காலங்களில் நாம் வாழ்ந்த முறைகளை எதிர்காலச் சந்ததி அறியும் வண்ணம் இப்படியான பதிவுகள் எழுதி அவற்றைச் சேமித்து வைப்பது மிகவும் அவசியம். தொடர்ந்தும் எழுதுங்கள். //
வணக்கம் வெற்றி
கழிந்த நம் வாழ்வியலைப் பதிவாக்குதல், நம்மை நாமே புதுப்பிப்பது போல. எனவே இவற்றை எழுதாமல் விடுவது என்பது என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
// G.Ragavan said...
எங்கிருந்தோ வந்தான் என்று ஒரு தமிழ்ப்படம் வந்தது. அது ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கம்.//
வணக்கம் ராகவன்
நீங்கள் சொல்வது சித்ரம் என்ற மோகன்லால் நடித்த மலையாளப்படம் தான் எங்கிருந்தோ வந்தான் ஆகியது. சத்யராஜ் நடிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இதுவரை இசையமைத்த இறுதிப்படம் கூட.
நம்மவர் ஒவ்வொருவர் வாழ்வுக்குப் பின்னும் இன்னும் திறக்கப்படாத சோகத்தின் பக்கங்கள் நிறைய இருக்கின்றன. புரிதலுக்கு மிக்க நன்றிகள்
நீங்கள் சொன்னது பொலவே படங்கள் பல பார்த்து இருக்கிறேன்/ றோம். சின்னதம்பி, உழைப்பாளி உட்பட..
இழப்புக்கள், திக்கொன்றாக சிதறிய நண்பர் வட்டம், :(
சூப்பர் மச்சி; உங்கள் ஆக்கங்கள் மற்றும் இணைப்புக்கள்!
வாழ்த்துக்கள்!
நட்புடன்,
மாப்பு (யாழ்)
[உங்கள் நண்பர்களிற்கு நிகழ்ந்த அவலத்தை வாசித்து அதிர்ச்சியடைந்தேன், உங்களால் இந்த இழப்புக்களை எவ்வாறு தாங்க முடிகின்றது?]
பிரபா!
இந்த அனுபவமில்லை; ஆனால் "அண்ணன் ஒரு கோவில்" முதல் முதல் இப்படிப் பார்த்தபடம்;
கடைசிப் பந்திதான் வேதனையாக இருந்தது. இழப்புக்களும் துன்பங்களும் நமக்கு இயல்பாகிவிட்டது.
நம் சினிமா ஆர்வத்துக்கு சாட்சியான பதிவு;
//கார்திக்வேலு said...
அருமையான பதிவு.
சதா ஒரு conflict இலும் / அலைச்சலிலும் வாழவேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள்
பொக்கிஷம் போலாகி விடுகின்றன.//
கருத்துக்கு நன்றி கார்திக்.
அவலச் சூழலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இப்போதும் எம்மவர்.
சின்னக்குட்டி said...
சைக்கிள் டைனமோவில் செய்தி றேடியோ கேட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்.இறைக்கிற மிசினில் திரைபடம் பார்த்தது எனக்கு புது தகவல் பதிவுக்கு நன்றிகள்.. //
சைக்கிள் டைனமோவில் பாட்டு, இறைக்கிற மெஷினில் படம் இன்னும் பல மாற்றீடுகள் அங்கு இருக்கின்றன சின்னக்குட்டியர்.
என்னண்ணா நீங்க முடிவை வாசித்த பின் படக்கதை நினைவில் இல்லை
//ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது//
அந்த -45 பாகை பயங்கரமான ரஷ்யக் குளிரை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் நண்பருக்கு நேர்ந்த அந்தக் கோரம் யாருக்கும் இனி நிகழ்ந்துவிடக்கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்.
// வி. ஜெ. சந்திரன் said...
நீங்கள் சொன்னது பொலவே படங்கள் பல பார்த்து இருக்கிறேன்/ றோம். சின்னதம்பி, உழைப்பாளி உட்பட..
இழப்புக்கள், திக்கொன்றாக சிதறிய நண்பர் வட்டம், :( //
வி ஜே
நீங்கள் நான், டி ஜே எல்லாம் சம காலத்தில் இவற்றைப் பார்த்திருக்கிறோம் போல. இன்பமும் துன்பமும் கூட ஒற்றுமையாய் இருந்திருக்கின்றன.
//மாப்பு said...
சூப்பர் மச்சி; உங்கள் ஆக்கங்கள் மற்றும் இணைப்புக்கள்!
வாழ்த்துக்கள்!
நட்புடன்,//
ஆஹா மாப்பு, யாழிலிருந்து இங்கேயும் வந்திட்டியளா? சந்தோஷம் வாருங்கோ ;-)
வணக்கம் கானா பிரபா, அந்த நாட்களில் சின்னதம்பி படம் பார்த்தது என்பது விடயமல்ல, எத்தனை முறை பார்த்தது என்பது தான் விடயம்...... நீங்கள் , DJ, VJ சொன்ன உழைப்பாளி தவிர ஜெண்டில்மேன், படமும் தேடி பார்த்த நினைவு உண்டு. அதேபோல ஐ லவ் இந்தியா என்ற சரத் நடித்த படமும் வெட்டப்பட்டு 1 1/2 மணியாகவே வந்தது.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
இந்த அனுபவமில்லை; ஆனால் "அண்ணன் ஒரு கோவில்" முதல் முதல் இப்படிப் பார்த்தபடம்;
கடைசிப் பந்திதான் வேதனையாக இருந்தது. இழப்புக்களும் துன்பங்களும் நமக்கு இயல்பாகிவிட்டது.
நம் சினிமா ஆர்வத்துக்கு சாட்சியான பதிவு; //
வணக்கம் யோகன் அண்ணா
நம்முடைய இயல்பான விருப்பு வெறுப்புக்களை மறைத்து மேதாவித் தனமாகக் காட்டிக்கொள்வது எனக்குப் பிடிக்காத காரியம். நம் நினைவில் மிதக்கும் இப்படியான விஷயங்களைப் பகிரும் போது பாரம் குறைகிறது.
//தூயா said...
என்னண்ணா நீங்க முடிவை வாசித்த பின் படக்கதை நினைவில் இல்லை //
வணக்கம் தூயா
முழுமையான இன்பம் மட்டுமே ஒரு அங்கமாக நம் வாழ்க்கை இல்லைத்தானே. ஆனாலும் இளவயதில் பழகியவர்களை சம காலத்தில் இழப்பது கொடுமை.
//அருண்மொழி said...
வணக்கம் கானா பிரபா, அந்த நாட்களில் சின்னதம்பி படம் பார்த்தது என்பது விடயமல்ல, எத்தனை முறை பார்த்தது என்பது தான் விடயம்...... //
வணக்கம் அருண்மொழி
உண்மைதான், சின்னத்தம்பி படம் யாழ்ப்பாணத்து சின்னத்திரையிலேயே பல தடவை திரும்பத் திரும்பப் பார்த்தது. ஐ லவ் இந்தியா படம் வந்தபோதும் அங்கிருந்தேன்.
வெங்காயத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற மெசினைப் பாத்தா ஊரிலுள்ள தோட்டத்து ஞாபகங்கள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிக்குது; அடிக்கிற தென்றற் காத்தில பொலிடோலும் மூக்குக்கை நுளையுது.
நல்ல நினைவுமீட்டற் பதிவு, நன்றி, பிரபா.
We normaly hired a genarator once a month or two and watch 6 to 7 movies in a night.
I have to tell you this. We watched 1996 cricket worldcup by using cycle dynamo. We had a black and white tv and one car battery. We switched ourselves once in a 5 overs to operate the dynamo. That cannot forget those days.
Raj
//செல்லி said...
வெங்காயத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற மெசினைப் பாத்தா ஊரிலுள்ள தோட்டத்து ஞாபகங்கள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிக்குது;//
வணக்கம் செல்லி
வெங்காயத் தோட்டமும் இணுவிலாற்ற வாழ்க்க்கையும் பின்னிப்பிணைஞ்சது. அது ஒரு காலம்.
என்ன பிரபா....கடைசியில இப்படி சொல்லிட்டிங்க மிகவும் வேதனையாக உள்ளது.
//Anonymous said...
We normaly hired a genarator once a month or two and watch 6 to 7 movies in a night.
I have to tell you this. We watched 1996 cricket worldcup by using cycle dynamo. We had a black and white tv and one car battery.//
வணக்கம் ராஜ்
ஒரே நேரத்தில் 4, 5 படம் பார்க்க ஜெனறேற்றர் எடுத்த அனுபவமும் இருக்கிறது. நண்பர்கள் சிலர் உங்களைப் போல கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் உணடு. கருத்துக்கு மிக்க நன்றிகள்.
பிரபா,
பதிவு நன்றாக உள்ளது.
//ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.//
என்ற இறுதிப் பகுதி
அதுவரையும் வாசித்துக் கொண்டு
போன மனதில் பெரும் துயரத்தை ஏற்றுகிறது.
இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்?
எஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்ற எவராலும் முடியாதா?
ஃபஹீமாஜஹான்
//கோபிநாத் said...
என்ன பிரபா....கடைசியில இப்படி சொல்லிட்டிங்க மிகவும் வேதனையாக உள்ளது. //
வணக்கம் கோபி, இதுதான் நம்மவர் வாழ்வின் யதார்த்தம்
//இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்?
எஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்ற எவராலும் முடியாதா?
ஃபஹீமாஜஹான் //
வணக்கம் ஃபஹீமாஜஹான்
வாழ்வு மறுக்கப்பட்டுக் கையாலாகாத் தனத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது நம்மினம். என்ன செய்வது...
வணக்கம் பிரபா அண்ணா,
மீண்டும் ஒரு அருமையான பதிவு. என்ன இறுதியில் தான் மூட் அவுட் ஆகிப் போச்சு... ஆயுனும் ஈழத் தமிழனாய்ப் பிறந்தவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த யதார்த்த நிலைமைகள் தானே இவை...
அன்று நமக்கெல்லாம் ஒரே ஆறுதலாகவும்... பொழுது போக்காகவும் இருந்தவை... இந்த டைனமோவில் பாட்டுக் கேட்பதும், எப்போவாவது ஜெனரேற்றர்களில் படம் பார்ப்பதும் தானே...
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்
நான் பார்த்த படங்கள்
நான் பேச நினைப்பதெல்லாம்
பாட்சா
சின்னத்தம்பி
கோகுலம்
அந்தக்காலம் யாருந்த கல்யாண வீட்டு கொப்பி(vhs) ஓடினால் சந்தோசம் ஏனென்றால் முதலில் கல்யாண வீட்டு கொப்பி ஓடுவார்கள் பின் தொடர்ந்து 3 அல்லது நாலு படம் ஓடுவார்கள்
அக்காலத்தில் எங்கள் ஏதும் படம் ஓடுறது என்றால் எங்கள் வீட்டு டெக் தான் போகும் சித்தப்பாவின் லான்மாஸ்டரில் பொருத்தப்பட்ட ஜெனரேற்றர் நான் அப்பாவிடம் அழுது அடம் பிடித்து ஒவ்வொரு தடவையும் டெக்கில பிளே பண்ணி என்ர வயது பெடியளுக்கு கலர் காட்டுறது இந்நினைவுகளை மீட்ட வைத்தமைக்கு நன்றி
//Haran said ... (April 28, 2007 11:47 AM) :
அன்று நமக்கெல்லாம் ஒரே ஆறுதலாகவும்... பொழுது போக்காகவும் இருந்தவை... இந்த டைனமோவில் பாட்டுக் கேட்பதும், எப்போவாவது ஜெனரேற்றர்களில் படம் பார்ப்பதும் தானே...//
வருகைக்கு நன்றிகள் ஹரன்
நெருக்கடி நிலையிலும் கிடைத்த சின்னச் சின்ன ஆசைகள் அவை இல்லையா?
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்
//தமிழ்பித்தன் said...
அந்தக்காலம் யாருந்த கல்யாண வீட்டு கொப்பி(vhs) ஓடினால் சந்தோசம் ஏனென்றால் முதலில் கல்யாண வீட்டு கொப்பி ஓடுவார்கள் பின் தொடர்ந்து 3 அல்லது நாலு படம் ஓடுவார்கள்//
வணக்கம் தமிழ்பித்தன்
நீங்கள் குறிப்பிட்ட படங்களை அதே காலகட்டத்தில் நானும் பார்த்தேன். நான் குறிப்பிட மறந்த விடயங்களில், குறிப்பாக கல்யாண வீட்டு கசற் போட்டு படம் பார்க்கும் விளையாட்டு நமக்கும் இருந்தது, ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
vanakkam pirabanna, eppathan unkada pathiva vaasikka chance kidachchathu. suvarasjama pathivu. vaalththukkal. enakkum uppidi padam paarththa anupavam etukku. but padaththa paarkka vendum enra aarvam ella. unkala pola annamar podekka, etho poi aarvamai tv kku munnala idam pidiththu, unkala pola kastap paddu, padam thodanka late akkum thane, athukidajila naankal niththitai akkiduvam.because appa naankal sinna pillaijal.
kadasi vatikal padikka kannir than vanthuthu.
krishna
வாங்கோ கிருஷ்ணா
ஆளைக் காணவில்லையென்று தேடினேன். எங்களுக்கும் படம் பார்க்கவேண்டும் என்ற அவாவை விட அந்த நெருக்கடி நிலையில் படம் போட்டுக்காட்டவேண்டும் என்ற ஆசை தான் அதிகம் மேலோங்கியிருந்தது.
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
பிரபு அண்ணை,
நானும் உங்கலோடை வந்து படம் பார்த்து இருக்கிறன்.
சுதா அண்ணை தெரியும், சுரேஷ் அண்ணை யார்...?
பிரசாந்த்
வணக்கம் பிரசாந்த்
சுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சுரேஷ் வீடு சுதாவீட்டுக்கு சற்றுத்தள்ளி இருந்தது. சுரேஷ் றேடியோ, ரீவி திருத்துவதில் வல்லவர்.
vannakam
ippo thaan ungal side pathen, muthalil kathai anupavam nanraga irunthathu aanalum athirchi
neengal sollum suresh maanavar ariviyal kazzhakathuku aduthe lane il irunthe suresha.apidi enral enodai nanpar avar.avar veetilai than 1996 kaalam enaku kalinthathu.matathu sutha suresh in nanpare.athira pogum ollungaiyil irunthavar. avar veetu olungayal vanthal uppumadam pillayar koiyilin mun road ill kondu vanthu vidum avara avar. avarai irunthaal avar veetil than car baterry ill inraya matchum silla padamum parthom.
வணக்கம் நண்பரே
நீங்கள் சொல்லும் சுரேஷும் சுதாவும் தான் அவர்கள். இப்போது இருவரும் இல்லை. உங்களுக்கு அவர்களைத் தெரிந்திருந்தால் கட்டாயம் என்னையும் தெரிந்திருக்கும். சுதா பற்றி பின்னர் எழுதுகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சல் kanapraba@gmail.com இற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
//ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.//
ஞாபகப்பக்கங்களில் இருந்த அழகான மனதை வருடும் விடயங்களைச்சொல்லிவிட்டு....திடீரென்று
இவ்வளவு பாரத்தை சுமக்க வைத்துவிட்டீர்களே...
முடிவு தெரிவதற்கு முன்பே முடித்திருக்கலாமோ என்று கவலையாக இருந்தது..
ஆனால்..உண்மை என்றுமே கசப்பு அதிகமானதுதானே..
வணக்கம் நண்பரே
எங்களின் ஒவ்வொரு இனிப்பான நினைவுகளுக்குள்ளும் கசப்பான முடிவுகளும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. முடிவே இல்லாத தொடர்கதை இது.
கானா,
திரைப்படம் என்பது வெறும் பொழுதுப்போக்கு அதனுள் என்ன இருக்கென்று நினைப்பேன், நினைத்தால் படம் பார்க்கும் நிலையில் இருக்கும் எனக்கெல்லாம் அப்படித்தான் தெரிகிறது, ஆனால் ஒரு படம் பார்க்கவே (அது எத்தனை மொக்கை படமாக இருந்தாலும்) எத்தனை பிரயத்தணம் பட வேண்டி இருந்திருக்கிறது உங்களுக்கு என்று நினைத்தால், உலகம் ஏன் இத்தனை சிக்கலாக மாறி இருக்கு என்ற கேள்வி தான் வருகிறது!
இதே போல ஜெனரேட்டரில் படம் பார்த்த கதை சொல்லும் பதிவை ஏற்கனவே போட்டீர்களா, படித்த மாதிரியே இருக்கு.
உசிலி என்றால் என்ன? இங்கே உசிலி என்பது திண்பண்டம் ஒன்றின் பெயரை குறிக்குமே.
மலரும் நினைவுகளாக சொல்லிக்கொண்டு வந்து , ஒரு anticlimax வைத்து சோகமாக்கிவிட்டீர்களே.
வாங்க நண்பா
அந்த நெருக்கடியான வாழ்வில் சின்னச் சின்னச் சந்தோஷங்களுக்கு கொடுக்கும் விலையே அதிகம். ஜெனரேற்றலில் படம் பார்த்ததை அகிலன் என்ற நம் சக பதிவர் எழுதியதாக ஞாபகம்.
ஊசிலி மெஷின் என்பது ஒருவகை நீற் இறைக்கும் இயந்திரம். அதன் படத்தைத் தான் முதலில் இட்டிருக்கின்றேன்.
மலரும் நினைவுகளுக்குள் இப்படியான முட்கள் நிறையவே இருக்கு.
Post a Comment