உலக நாடுகள் ஓவ்வொன்றினையும் எடுத்துக்காட்ட அந்தந்த நாடுகளின் புகழ்பெற்றதொரு அடையாளச் சின்னம் பயன்படும்பாங்கில் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக அமைந்து சிறப்புப் பெறுவது சிட்னி ஒபரா ஹவுஸ். இந்த சிட்னி ஒபரா ஹவுசினை வெறுமனே பார்த்துவிட்டுப் போகவே உலகெங்கிலுமிருந்தும் யாத்திரிகர்கள் வந்து போகும் நேரத்தில் ஒபரா ஹவுசில் தமிழிசைக்காற்று அடிக்கப் போகின்றது என்றால் விடுவார்களா நம் தமிழர்கள். கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. இதை சிட்னி சிம்பனி என்ரபிறைசஸ் ஸ்தாபனம் ராம்ஸ் உணவகத்தின் அனுசரணையோடு நடாத்தியது.
சரஸ்வதி பூசைக் கடைசி வீடுப் பூசை நாளில் சிட்னிச் சனம் இரவுப் பூசையை மதியத்துக்குத் தள்ளி வைத்து (கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று)மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாலை 6 மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு முன்பே காரில் ஒபரா ஹவுசை நோக்கிப்படையெடுத்தது. 5 மணிக்கு முன் பார்க்கிங்கில் விட்டால் 39 டொலர் கட்டவேணும் என்ற ஒருமித்த சிந்தனை எல்லாக் கார்க்காரர்களிடமும் இருந்தது போலும். (ஏன் அநியாமாய் உவங்களுக்கு குடுக்கவேணும்) காரின் மணிக்கூண்டு 5 ஐக்காட்ட வெளியில் நோ பார்க்கிங்கில் (No parking) கூடத் தற்காலிகமாகத் தரித்து நின்ற கார்ச்சக்கரங்கள் ஒபரா ஹவுஸ் வாகனக் காப்பகத்துக்குள் ஊடுருவின.
இந்நிகழ்ச்சி பற்றிய என் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளைப் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது இது.
ஐந்து அரங்கங்களைக் கொண்ட இந்த ஒபரா ஹவுஸில் மிகப்பெரிய அரங்கான The Concert Hall இல் ஜேசுதாஸ் குழுவின் இந்த இசை வேள்வி நடந்தது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக முன் ஒபரா ஹவுஸ் சுற்றுலா வழிகாட்டிப் பெண்மணி இந்த மண்டபத்தில் சிறப்பைச் சொன்னது வெகு சிறப்பாக இருந்தது. மேலே அந்தத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கூடுகள் ஒலியமைப்புக்கேற்ற விதத்தில் தம்மை அடிக்கடி மாற்றிக்கொண்டு இசையின் துல்லியத்தைத் தரும் என்று சொன்னவர் இந்த அரங்கு 2670 இருக்கைகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் 2100 வாக்கில் இரசிகர்கள் வந்ததாக என்னிடம் சொன்னார். காரணம் அரங்கின் பின் புற இருக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களின் செளகரிகம் கருதி நிரப்பவில்லை.)
5.30 மணிக்கே இரசிகர்கள் தம் இருக்கைகளில் அமரத் தொடங்கி 6 மணிக்கு முன்பே அரங்கை நிரப்பியிருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டு முறைப்படி 6.15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
தொகுப்பாளராக பி.பி.சி. தமிழ்ச்சேவை புகழ் விக்னராஜா அல்ட்டல் சக ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பானதொரு அறிவிப்பைச் சிறப்பாகவே செய்திருந்தார், பாடல்கள் வெளிவந்த ஆண்டு, படத்தின் பெயர் போன்ற விபரங்களைச் சொன்னவர் அந்தப் பாடல்களின் சிறப்பையும் சொல்லியிருக்கலாம் (ஆனாலும் பரவாயில்லை). சில அறிவிப்பாளர்கள் போல் 5 நிமிடப் பாடலுக்கு 10 நிமிட அறுவைக்கச்சேரி வகையறாக்கள் எல்லாம் இவரிடம் தென்படாதது மகா ஆறுதல்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஜாதி, மதம் , மொழி எல்லாம் கடந்து நாம் இருக்கவேண்டும் என்று தனது வழக்கமான அக்மார்க் உரையுடன் கே.ஜே.ஜேசுதாஸ் மகா கணபதிம் பாடலோடு இந்த இசை வேள்வியை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் போது ஒருவித பய உணர்வுடன் தான் சென்றிருந்தேன். காரணம் கடந்த ஜனவரி 10, 2000 ஆம் ஆண்டு மெல்பனில் எஸ்.பி.பி. யோடு வந்த யேசுதாஸின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அந்த நாள் தான் ஜேசுதாசின் 60 ஆவது பிறந்த நாள் கூட. மனுசர் பாடலின் இசைக்கு இசையாமலும் வரிகளைத் தப்புத் தப்பாகவும் பாடியிருந்தார். இந்த மகா கலைஞன் இப்படிப் பாடித் தன்னிடம் ரசிகர்கள் கொண்டிருக்கும் அபிமானத்தினை இழந்துவிடக்கூடாது என்று அப்போது நினைத்திருந்தேன். ஆனால் 6 ஆண்டு கழிந்த நிலையில் "எனக்கு வயசு இருபத்தஞ்சு தான்" என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே அவர் ஆரம்பித்து வைத்த "விழியே கதையெழுது" என்று குரலினிமையோடு சொற்பிழையறப் பாடியது அவரின் இந்த வாக்குமூலத்தினை இளமையோடு மெய்ப்பித்தது.
முன் வரிசையில் இருந்த டொக்ரர் மாருக்குள்ளும் BMW கார் வச்சிருக்கும் முதலாளிமாருக்குள்ளும் (VIP seats) இருந்த ஒருவர் அடிக்கடி இருக்கையில் இருந்து எட்டிப் போய் ஜேசுதாசிடம் தபேலா இன்னபிற வாத்தியங்களின் சத்தத்தைக் குறைக்குமாறு சொல்லவும் பல்கனியில் அது இசையில் குறைச்சலையும் உண்டுபண்ணி மேல் பாகத்தில் இருந்த எம்மை எரிச்சல் கொள்ளவைத்தது. " இவர் எப்ப யேசுதாசிடம் வாங்கிக் கட்டப் போறாரோ தெரியவில்லை" என்று என் அடிமனது பேசிக்கொண்டது.
ஜேசுதாஸ் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் நிறையப் பேசினார். ரசிகர்கள் கேட்கும் பாடல்களைக் காது கொடுத்துக் கேட்டு, சரி மலையாளம், சரி தமிழ், சரி தெலுங்கு, சரி ஹிந்தி என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே பாடித் திருப்தியளித்தார். ஆனால் இவரின் இந்தப் பலவீனத்தைத் தங்கள் பலமாக நினைத்த ரசிகர்கள், தமிழ்ப் பாட்டு, மலையாளம் வேணும், தெலுகு பிளீஸ் என்று கத்தினார்கள். அப்போது முன்னர் கால்கரியில் நடந்த கச்சேரியில் ஒருவர் தன்னிடம் சீனப் பாடலைப் பாடுமாறு கேட்டதற்கு தானும் அதே சீனர்களின் பாடும் தொனியில் பாடியதாகச் சொல்லிப் பாடியும் காட்டினார். அப்போது ஆறு வயதாக இருந்த விஜய் பிறகு ஒவ்வொரு இரவிலும் " டாடி டாடி எனக்கு சீனப்பாட்டு பாடுங்க" என்று கஷடப்படுத்தியதையும் சொல்லி, மேற்கத்தேயப் பாடல், சீன இந்தியப் பாடல்களின் அடித்தளம் ஒன்று தான் என்பதை ஒரு ஸ்வர வேள்வி கொடுத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
இந்த ஒலிப்பதிவைக் கேட்க -நன்றி தமிழ் சிட்னி
மேடையில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேசிய ஜேசுதாசை ஆவென்று வாய் பிளக்கப் பார்த்த இரசிகர் இடைவேளையில் வெளியில் வந்தபோது என்னிடம் சொன்னார் இப்படி "ஆளுக்கு வயசு போட்டுது".
பொம்மை படத்தில் இடம்பெற்ற தன் முதற் தமிழ்ப் பாட்டு அனுபவத்தைச் சொல்லும் போது அந்தப்படத்தின் இசையமைப்பாளர் சக இயக்குனர் வீணை பாலச்சந்தரின் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்றபோது எந்தவொரு சக வாத்தியக்கலைஞரும் இல்லாத அந்த வெறுமையான கூடத்தில் "நான் எப்படிக் கையை ஏற்றி இறக்குகிறேனோ அப்படி நீ பாடினால் போதும்" என்று பாலச்சந்தர் சொல்ல, தான் கடனே என்று பாடியதாகவும், பிறகு அந்தப் பாடல் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலாக அவர் எடுத்திருந்தார் என்றும் இதுபோலக் காட்சியின் பொருத்தத்திற்கேற்ப பாடல் வரவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது என்று இரு தடவை பிழையாகச் சொல்லி ராமமூர்த்திக்கு அந்தப் பாடலின் பெருமையில் பங்கு கொடுத்துவிட்டார்.
இளையராஜா ஒருமுறை தன் வீட்டுப் பூஜை நிகழ்வில் " அண்ணே, நீங்க போட்ட பிச்சையில தான் நாங்க வாழுறோம்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்துச் சொன்னதாகவும்" அப்படிச் சொல்லாதே தம்பி" என்று அவர் தன்னடக்கமாக குழைந்ததையும் சொல்லி நெகிழ்ந்தார் ஜேசுதாஸ்.
பாடகி மஹதி ஆளும், பெயரும், குரலும் இணைந்து முப்பரிமாண அம்சமாக இருந்தார். தனக்கு பாடகி ஜானகி பிடிக்கும் என்றவாறே "சின்னச் சின்ன வண்ணக்குயில்" மெளனராகப் பாடலைப் பாடினார். பாடல் பாடியதில் அவர் குறை வைக்கவில்லையென்றாலும் 2000 ஆம் ஆண்டு மெல்பன் மேடையில் கேட்ட ஜானகி அம்மாவின் குரல் முன்னுக்கு வந்து நினைப்பில் வியாபித்தது. தஞ்சாவூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்து ஜேசுதாஸ் போன்ற முன்னோடிகளின் சங்கீதம் கேட்ட ஈர்ப்பில் தன் இசையை வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார். சன் மியூசிக் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லாமல் அட்சர சுத்தமாக இருந்தது அவர் தமிழ்.
மஹதிக்குப் பெரிதாக வேலையில்லை. அவரின் தனிப் பாடலான “ஐயய்யோ ஐய்யயோ புடிச்சிருக்கு” பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர், மற்றய பாடல்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் தோள் கொடுத்தார். மஹதிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பல் டாக்டரை மணம் முடிக்கப் போகிறார் என்ற தகவலை ஜேசுதாசே சொன்னார். கூடவே " எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு" என்று குறும்பாகச் சொன்னார்.
உன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்" என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.
“ஆறு வயசில ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்” என்று பேச்சு வழங்கித் (அந்த நிகழ்வில் குட்டிப் பெண் சுஜாதாவைக் கைதூக்கி மேடையில் ஏற்றியதை நினைவு கூர்ந்தார் ஜேசுதாஸ்)தன் தனிப்பாடல்களான " பூப்புக்கும் ஓசை" (மின்சாரக்கனவு), "ஒரு இனிய மனது" (ஜானி), "நேற்று இல்லாத மாற்றம்"(புதியமுகம்) பாடல்களையும் பாடிக் கூடவே ஜேசுதாசுக்கு மற்றய பாடகிகள் பின்னணிக் குரல் கொடுத்த பாடல்களை இணைந்து சிறப்பாகவே வழங்கினார். தித்திக்குதே " பாடலை இவர் பாடாமல் விட்டிருக்கலாம் என்று பின் சீட்டிலிருந்து முணுமுணுப்புக் கேட்டது. யாரோ அன்பரின் நேயர் விருப்பமாக ரோஜா படப் பாடலான " புது வெள்ளை மழை" பாடலின் ஒரு சில அடிகளை விஜய் ஜேசுதாசுடன் பாடினார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறரோ தெரியவில்லை பெங்களூர் பனர்கட்டா ரோட் I.T கம்பனியில் வேலை பார்க்கும் Fresh Graduate போல இருந்தார். ஆனால் தனக்கு 20 வயதில் மகள் ( இவர் மகள் ஸ்வேதா பாரிஜாதம் பாடல் "ஒரு நதி" பாடியிருக்கிறார்) பட்டப்படிப்பு படிப்பதாகவும்
சொல்லித் தன் இளமை ரகசியத்துக்கு ஆப்பு வைத்தார்.
1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குக் குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார், அந் நிகழ்வில் மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டபோது " எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்" என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.
மகன் தந்தைக் காற்றும் உதவி என்பது போல இந்த இசை நிழச்சிக்கு விஜய் ஜேசுதாசின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தன் " எனக்குப் பிடித்த பாடல்" (ஜூலி கணபதி) பாடலின் ஒரு சில வரிகளைப் பாடி முழுமையாகத் தந்திருக்கலாமே என்ற ரசிகர்களின் வயிற்றெரிச்சலை எடுத்துக்கொண்டாலும் "அந்த நாள் ஞாபகம்'" (அது ஒரு கனாக்காலம்), சுஜாதாவோடு "ஆசை ஆசை" (தூள்) , "தாவணி போட்ட தீபாவளி" (சண்டக்கோழி) போன்ற இனிமையான பாடல்களை அள்ளித் தெளித்தார். இவரின் பெரிய பலம் மேடைக் கூச்சமின்றி ஆடி ஆடித் தமாஷ் பண்ணிப்பாடுவது ஒன்று என்றால், இன்னொன்று மற்றைய பாடகர்களின் பாடலைப் பாடும் போது அந்தப் பாடகரின் குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிப் பாடியது. "ஒரு சிரி கண்டால்" என்ற அவரது மலையாளப் பாடல் எப்படி மொழி கடந்து அவர் குரலினிமையால் ஈர்த்ததோ அதே போன்று Bunty Aur Babli ஹிந்திப் படப்பாடல் “கஜ்ரா ரே” ரசிகர்களைத் துள்ளவைத்தது. இந்த ஹிந்திப் பாடலுக்கு எனக்கு முன் வரிசையில் பல்கனியில் இருந்த தாத்தா கையை அசைத்து உணர்ச்சிவசப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
"பூவே செம்பூவே" (சொல்லத்துடிக்குது மனசு) பாடலில் இளையராஜாவின் இசையமைப்பின் சிறப்பைச் சிலாகித்த ஜேசுதாஸ் பாடலைப் பாடும் போது இசை வேறு பக்கமாகவும் தன் பாடலை வேறுபக்கமாகவும் மாற்றிச் சலனப்படுத்தினார், பாடல் முடிவில் வர ஆரம்பித்த கைதட்டலைத் தடுத்து முழுமையாக அந்த இசைக் கலவை முடிவது வருவது வரை கேட்கவைத்து கை தட்டலைத் தொடரவைத்தார். கண்ணதாசனின் இறுதிப் பாடலான "கண்ணே கலைமானே" பாடல் தன்க்குக்கிடத்தது பாக்கியம் என்று சொல்லிப் பாடினார். சுஜாதாவுடன் "தென்றல் வந்து உன்னைத் தொடும்", "விழியே கதையெழுது", "கல்யாணத்தேனிலா" , "வெள்ளைப்புறா ஒன்று", பாடல்களையும் மஹதியுடன் கேளடி கண்மணியில் இருந்து "தென்றல் தான்" பாடும் போது மஹதியிடம் என்ன ராகம் என்று சொல்லச் சொல்லிப் பாடினார். அருமையான பாடல்.
முன் வரிசை ரசிகர்களுக்காக " மரி மரி நின்னை' பாடலின் ஒரு சில வரிகளைப் பாடியவர், கன்னடப் பாட்டுக் கேட்டவர்களுக்காகத் தன் பாணியில் " கிருஷ்ணா நீ பேகனே" பாடியது கொலோனியல் கசின்னை மறக்கடித்து மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.
"தெய்வம் தந்த வீடு" பாடலை அவர் பாடும் போது சீடியில் கேட்கும் உணர்வு ஆனால் விஜய் ஜேசுதாஸ் பின்னணியில் கை கொடுக்க அவர் பாடிய " என் இனிய பொன் நிலாவே" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு போல் வேகமாகப் பாடியது உறுத்தல்.
தன் நண்பன் அமரர் ரவீந்திரனுக்கு சமர்ப்பணம் என்றவாறே "ப்ரமதவனம் வீண்டும்" (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) பாடி வசீகரித்தவர் "பச்ச பனங்கத்தி" என்ற பிரபலமான பழைய மலையாளப் பாடலைப் புது மெருகேற்றிய ஜெயசந்திரன் என்ற மலையாள இசையமைப்பாளர் பெயர் சொல்லிப் பாடியும்(தன் மனைவிக்கு ரொம்பப் பிடித்த பாடல் என்று மைக்கில் மெதுவாகக் கிசுகிசுத்தார்), நாகூரில் இருந்து இடம் பெயர்ந்து கேரளாவில் வாழும் தமிழ் கலந்த மலையாளிகள் (இவர்களை மாப்பிளை என்று அழைப்பதாகச் சொன்னார்)பாடும் பாடல் பாடியும் சிறப்பித்தவர் தேசிய விருதை இவருக்கு கொடுத்த சிற்சோர் ஹிந்திப்படப் பாடலான "கோறித்தெரா" மற்றும் தெலுங்கில் பாடித் தேசிய விருது கிடைத்த மேக சந்தேசம் படப்பாடலான "ஆகாச தேசான" என்ற பாடலையும் பாடி மகிழ்வித்தார்.
நிறைவில் மற்றய பாடகர்களுடன் செம்மீன் படப் பாடலான "பெண்ணாலே" பாடினாலும் அவரின் இசை வாழ்வின் முத்தாய்ப்பான "கடலினக்கரை போனோரே" பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம். அலுக்கக் கூடிய பாடலா அது?
முடிவாக யாரோ ஒருவரைத் திருப்திப்படுத்தவோ என்னவோ "விஸ்வநாதன் வேலை வேணும்" என்ற பாடலை விஜயுடன் பாடினார், இதைப் பாடி நிறைவு செய்யாமல் இருந்தால் இன்னும் இனிய பல இசைஅனுபவதோடு திரும்பியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது. தன் சொந்த இசைக்குழுவான தரங்கிணி மூலம் ஜேசுதாஸ் குழு படைத்த இந்த இசைவேள்வியால் ஒபரா ஹவுஸிற்குத்தான் பெருமை. என் போன்ற எண்பதுகளின் இரசிகனுக்கு இசை நிகழ்ச்சி சக்கரைப் பந்தலில் (ஒபரா ஹவுஸ்) ஜேசுதாசின் தேன் மாரி.
நடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள..... அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர்.... கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் "கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே..."
கடந்த ஏப்ரல், 2006 யாழ்ப்பாணம் போன போது சில நினைவுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் இடங்களை என் கமராவில் சுட்டுக்கொண்டேன். ஒரு ஓட்டோவில் இருந்தவாறே ஒவ்வொரு இடங்களுக்குமாகத் தேடிப் போய்க் கமராக் கண்ணில் சுட்டவேளை வீரசிங்கம் மண்டபத்தின் நினைப்பும் வந்தது. ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். " அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ" என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.
"எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது" ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.
46 comments:
நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் பிரபா...ஒலிக்கு நன்றி..
வணக்கம் ரவி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
ம் வீரசிங்கம் மண்டபத்தை இழுத்துவிட்டிருக்கிறீர்கள் ம் அதெல்லாம் ஒரு காலம் இல்லையா நல்லா இருக்கு கானாபிரபா
அன்புடன்
த.அகிலன்
vaazgha
//த.அகிலன் said...
ம் வீரசிங்கம் மண்டபத்தை இழுத்துவிட்டிருக்கிறீர்கள் ம் அதெல்லாம் ஒரு காலம் இல்லையா//
வணக்கம் அகிலன்
எங்கிருந்தாலும்... எங்கே போனாலும்... சுற்றிச் சுற்றி ஊர் நினைப்புத் தானே
பிரபா!
மண்டபத்தைப் பார்த்தது போலவும்;பாட்டுக் கேட்டது போலவும் இருக்கு!
நான் கனக்கக் ,இதுக்குக் கதைக்கவில்லை;
யோகன் பாரிஸ்
//icarus prakash said...
vaazgha //
வணக்கம் பிரகாஷ்
யாரை வாழ்க என்று சொன்னீங்க:-)))
சரி சரி நீங்க வாழ்க நான் வாழ்க, ஜேசுதாஸ் குழு வாழ்க
//Johan-Paris said...
பிரபா!
மண்டபத்தைப் பார்த்தது போலவும்;பாட்டுக் கேட்டது போலவும் இருக்கு!
நான் கனக்கக் ,இதுக்குக் கதைக்கவில்லை;
யோகன் பாரிஸ் //
வணக்கம் யோகன் அண்ணா
நீங்கள் கனக்கக் கதைக்காட்டிலும் வந்து கையெழுத்துப் போட்டதே எனக்கு நிறைவு:-)
pirabaa
கடலினக்கறா பொனரே பாடல் எங்ஏ எடுக்கலாம்
அருமை பிரபா .
நேரில் பார்த்தது போல ஒரு வருணனை.
பிரபா!
இந்தவாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட வீரசிங்கம் மண்டபக் கச்சேரி பாடல்கள் சிலவற்றை, நண்பரின் காரினுள் கேட்டபோது என்னுள்ளும் அந்தநாள் ஞாபங்கள் மீண்டன.
ஜேசுதாஸின் அண்மைக்காலக் கச்சேரிகளில், அவர் கதைப்பது சற்று அதிகம் போல்தான் தெரிகிறது. ஆனாலும், பவுணு பவுணுதான்
ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸ் கச்சேரியை இலவசமாகக் கேட்க வைத்தமைக்கு நன்றி!
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.
எனக்கு வீரசிங்கம் மண்டபம் எல்லாம் தெரியாது. :(
நல்ல அருமையான விவரணை பிரபா. ஒவ்வொரு பாட்டைப்பற்றியும் படிக்கேக்கெ மண்டைக்குள்ள பாட்டு ஓடிச்சிது. :)
அந்த காசட் பற்றி: அதை ஒரு சிடியா மாத்துங்கோவன். மாத்தினபிறகு சொல்லுங்க. ஒரு கொப்பி கேக்கிறன். :D
நன்றி பிரபா.
-மதி
//அருண்மொழி said...
pirabaa
கடலினக்கறா பொனரே பாடல் எங்ஏ எடுக்கலாம் //
வணக்கம் அருண்மொழி
ஒரு தனி மடல் எனக்குப் போடுங்கள், பாடலை அனுப்புகின்றேன்.
நல்ல பதிவு பிரபா... ஒலி வடிவத்தை தந்திருக்கிறீர்கள்.. நன்றி. உப்படி பல அரிதாக கிடைக்ககூடிய பல ஒலி பதிவுகள் உங்களிடம் இருக்கு என்று நினைக்கிறன்.. பதிவுகளுடன் இணைத்து எதிர்காலத்தில் தரூவீர்கள் என்று நம்புகிறன்
வீரசிங்க மண்டபத்தை நினைவு படுத்தினீர்கள்... தமிழராய்ச்சி மாகாநாட்டை... உந்த மண்டபத்துக்கு உள்ளை நடத்து வெளியாலை நடத்தாதே.. என்று சிறிமா-துரையப்பா கோஸ்டி ஆடின நாட்டியமே... தமிழராய்ச்சி மகாநாட்டு கடைசி நாள்.. கலவரங்கள்...
அருமையான பதிவு( வழக்கம்போல்)
இங்கே ஆக்லாந்துக்கு இந்த சனிக்கிழமை யேசுதாஸ் பாட்டு லபிச்சிருக்கு.
எங்களுக்கு? பட்டை நாமம்(-:
பரவாயில்லை. 7 மாசம் முந்தி இவரோட கர்நாடக இசைக் கச்சேரியைக் கேக்கும்
பாக்கியம் கிடைச்சது. 'கிருஷ்ணா நீ பேகனே'க்கு நாட்டியப்பேரொளி நடனமும்
ஆடினாங்க அப்ப. ஆஹா...........
போகக் கிடைக்கேல்ல. உங்கட விபரிப்புக் கேட்டதே நிகழ்ச்சிக்குப் போன மாதிரி இருக்கு பிரபா. இடையிடையே எங்கட சனத்தின்ட மனப்பாங்குகளையும் தெளிச்சிருக்கிறீங்க. சிரிப்பாக்கிடந்தாலும் உண்மை.
//சுஜாதா ... " எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்"//
எங்கட ஊர்ப் பெடியளுக்கெல்லாம் இருக்கிற fixationதான். சொல்லுறதுக்கு ஒண்டுமில்ல. :O)
மதி - கவலைப்பட ஒண்டுமில்ல.. எனக்கும் வீரசிங்கம் மண்டபத்தைத் தெரியாது. முத்தவெளியும் வெபர் ஸ்டேடியமுந்தான் தெரியும்! ஆனா ஒரு ஒற்றுமை.. அதுக்குள்ளையும் ஆமியிட சென்றிதான்.
//கார்திக்வேலு said...
அருமை பிரபா .
நேரில் பார்த்தது போல ஒரு வருணனை. //
வணக்கம் கார்திக்
ஊரில் இருந்தும் தாங்கள் வரவில்லைப் போலிருக்கின்றது:-)
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
//மலைநாடான் said...
ஜேசுதாஸின் அண்மைக்காலக் கச்சேரிகளில், அவர் கதைப்பது சற்று அதிகம் போல்தான் தெரிகிறது. ஆனாலும், பவுணு பவுணுதான்//
வணக்கம் மலைநாடான்
வெறுமனே ஒப்புக்குச் சிலைபோல நின்று பாடிவிட்டுப் போகும் பாடகரை விட இப்படித் தன் அனுபவங்களைப் பகிர்ந்து பாடுபவரை நன்றாக நான் ரசிப்பேன். எனவே ஜேசுதாஸ் இந்த விஷயத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
அருமையான விவரணையோடு கூடிய பதிவு. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத குறையைக்குறைத்தும் - நிகழ்ச்சியை பார்க்காத ஏக்கமும் ஒருசேர வருகிறது.
மதியிடம் கடன்வாங்கி:
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.
அந்த காசட் பற்றி: அதை ஒரு சிடியா மாத்துங்கோவன். மாத்தினபிறகு சொல்லுங்க. ஒரு கொப்பி கேக்கிறன். :D
உங்கள் பதிவை வாசிக்க வாசிக்க, ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சிங்கையின் கடற்கரையோர கலையரங்கு - எஸ்ப்ளனேட்-டில் நடந்த எஸ்.பி.பி & ஜானகி குழுவினருடன் படைத்த அந்திமழை இன்னிசை நிகழ்ச்சி ஞாபகம் வந்தது!
அந்திமழையின் மேலும் சில தூறல்கள்
//மதி கந்தசாமி (Mathy) said...
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.//
வணக்கம் மதி
உங்களுக்கும் இது போன்ற நிகழ்ச்சி பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
நியூ விக்டேர்ஸ் வீடியோ உரிமையாளர் தற்போது மெல்பனில் தான் இருக்கிறார். இந்த யாழ்ப்பாண இசை நிகழ்வின் பிரதியை ஜேசுதாஸுக்கு இம்முறை கொடுத்ததாகவும் அவர் அதை மகிழ்வோடு பெற்று " விஜய் 6 வயசு பையனாக இருந்தபோது வந்திருந்தான்" என்றும் சொல்லியிருந்தாராம்.
இந்த வீடியோவில் தகப்பனின் காலைப் பிடித்தவாறே மகன் விளையாடிக்கொண்டிருக்க, ஜேசுதாஸ் அவருக்கு போக்கு காட்டியவாறே பாடிக்கொண்டிருந்தது ஒரு ஹைக்கூ.
நிச்சயம் சீடியாக வரும், மெட்ராஸ் மெயிலின் சீடி அனுப்பினது போல:-)
//சின்னக்குட்டி said...
நல்ல பதிவு பிரபா... ஒலி வடிவத்தை தந்திருக்கிறீர்கள்.. நன்றி. உப்படி பல அரிதாக கிடைக்ககூடிய பல ஒலி பதிவுகள் உங்களிடம் இருக்கு என்று நினைக்கிறன்.. பதிவுகளுடன் இணைத்து எதிர்காலத்தில் தரூவீர்கள் என்று நம்புகிறன்//
வணக்கம் சின்னக்குட்டியர்
ஒலிப்பதிவுக்கான தளம் என்பது என் நீண்ட நாட் கனவு. கனவு மெய்ப்படவேண்டும்:-)
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
வீரசிங்கம் மண்டபம் எமது ஈழவரலாற்றின் பல தடங்களைப் பதித்து நிற்கின்றது...
அருமையான விவரணம்.
மண்டபத்துள் வந்து விட்டது போன்ற பிரமை.
ஓபரா கவுஸ் பற்றியும் அறிய முடிந்தது
//துளசி கோபால் said ... (October 04, 2006 9:18 AM) :
அருமையான பதிவு( வழக்கம்போல்)
இங்கே ஆக்லாந்துக்கு இந்த சனிக்கிழமை யேசுதாஸ் பாட்டு லபிச்சிருக்கு.
எங்களுக்கு? பட்டை நாமம்(-://
வணக்கம் துளசிம்மா
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
முயற்சி செய்து ஆக்லாந்தில் ஜேசுதாஸின் தேனிசை மழையில் நீங்களும் சங்கமாயிடுங்க. கையெத்தும் தூரம் தானே:-)
ஓய்,
சுஜாதாவின்ர மகளுக்கு 20 வயசெண்டு தாய் சொல்லிறா. நீர் பதினெட்டு எண்டுறீர்.
என்ன விளையாடுறீரா?
தரவுகளைத் தந்தால் ஒழுங்காத் தரவேணும்.
;-)
//ஒலிப்பதிவுக்கான தளம் என்பது என் நீண்ட நாட் கனவு. கனவு மெய்ப்படவேண்டும்:-)
//
மெய்ப்பட வேணுமெண்டதுதான் என்ர விருப்பமும்.
//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
போகக் கிடைக்கேல்ல. உங்கட விபரிப்புக் கேட்டதே நிகழ்ச்சிக்குப் போன மாதிரி இருக்கு பிரபா. இடையிடையே எங்கட சனத்தின்ட மனப்பாங்குகளையும் தெளிச்சிருக்கிறீங்க. சிரிப்பாக்கிடந்தாலும் உண்மை.//
என்ன ஷ்ரேயா
அவல் கிளறுகிற பிராக்கில இசை நிகழ்ச்சியைத் தவறவிட்டிட்டியளே?
;-)
வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
எங்கட ஊர்ப்பெடியள் ரொம்ப விபரமானவங்கள்:-))
//அன்பு said...
அருமையான விவரணையோடு கூடிய பதிவு. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத குறையைக்குறைத்தும் - நிகழ்ச்சியை பார்க்காத ஏக்கமும் ஒருசேர வருகிறது.
மதியிடம் கடன்வாங்கி:
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.//
வணக்கம் அன்பு
தங்கள் அன்புப்பாராட்டுக்கும் வருகைக்கும் என் நன்றிகள்.
தங்களின் அந்திமழை வாசித்"தேன்". பின் விபரமாகப் பதில் போடுகின்றேன். உங்களுக்கும் ஒரு சீடியா;-))
//Chandravathanaa said...
அருமையான விவரணம்.
மண்டபத்துள் வந்து விட்டது போன்ற பிரமை.//
வணக்கம் சந்திரவதனா அக்கா
உங்களைப் போன்ற திரையிசை ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் பிடித்திருக்கும்.
ஓபரா மாளிகையை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை. நான் இந்நிகழ்ச்சியைத் தவறவிட்டு விட்டேன். எனினும்,
//கடலினக்கரை போனோரே பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம்.//
அதிகம் இழக்கவில்லை:))
//வசந்தன்(Vasanthan) said...
ஓய்,
சுஜாதாவின்ர மகளுக்கு 20 வயசெண்டு தாய் சொல்லிறா. நீர் பதினெட்டு எண்டுறீர்.//
சரி சரி மாத்தியாச்சப்பா, 2 வயசு குறைச்சால் தேஞ்சே போயிடுவீர்;-)
obera house ஐ பாக்க பழைய ஞாபகமெல்லாம் சுத்தி சுத்தி வருது..
பிரபா, ஓபெரா ஹவுசுக்குள் இப்படியொரு அழகான அரங்கமா...பார்க்கவே சுகமாக இருக்கிறது. அங்கும் என்றாவது பாட்டு கேட்க வேண்டும்.
நிழச்சியை நேரில் பார்ப்பது போன்ற வருணனை. மிகச் சிறப்பு.
அதிசய ராகம் மெல்லிசை மன்னர் இசையல்லவா. சரி. வயதில் மறந்திருக்கலாம். விழியே கதையெழுது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
விஸ்வநாதனும் இளையராஜாவும் மிகவும் நட்பும் உரிமையும் பாராட்டுகிறவர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏசுதாஸ் வாயிலும் இப்பொழுது வந்து விட்டது.
மஹதியும் நல்ல குரல்வளம் உடையவரே. சுஜாதாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! காயத்ரி படத்தில் வரும் "காலைப் பணியில் ஆடும் மலர்கள்" பாட்டொன்று போதுமே.
பெண்ணாளே பெண்ணாளே பாடலில் முதன்மைக் குரல் பி.லீலாவுடையது. அவருக்கு மாற்றாக அன்று யார் பாடினார்கள். பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே....சலீல் சௌத்ரியின் முதல் மலையாளப்படம். செம்மீன்.
அருமையான விவரணம்...
பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான்.
தேன்மழை
கானா பிரபாவால் கொட்டியிருக்கு.........
அருமை!
//Kanags said...
ஓபரா மாளிகையை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை. நான் இந்நிகழ்ச்சியைத் தவறவிட்டு விட்டேன்.//
வணக்கம் சிறீ அண்ணா
உங்களுக்கும் வீட்டுபூசை காரணமாக்கும். கருத்துக்கு நன்றிகள்.
//சயந்தன் said...
obera house ஐ பாக்க பழைய ஞாபகமெல்லாம் சுத்தி சுத்தி வருது.. //
இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை, வீட்டுக்காரியைக் கூட்டிகொண்டு கங்காரு நாட்டுக்கு வாரும் ஐசெ "-)
கானா பிரபா said...
// G.Ragavan said...
பிரபா, ஓபெரா ஹவுசுக்குள் இப்படியொரு அழகான அரங்கமா...பார்க்கவே சுகமாக இருக்கிறது. அங்கும் என்றாவது பாட்டு கேட்க வேண்டும்.//
வணக்கம் ராகவன்
ஒபரா ஹவுஸ் உண்மையில் ஒரு கனவுலகம்.
நான் எதிர்பார்த்து சுஜாதா பாடாமல் ஏமாற்றியவை "காலைப் பனியில்" மற்றும் "காதல் ஓவியம் கண்டேன்"
பெண்ணாளே பாடலை ஜேசுதாஸ், விஜய், சுஜாதா மஹதி பாடியிருந்தார்கள்.
கண்டதில் ஒரு சுகம்... !! வாசிப்பு ஒரு இனிய அனுவம்...!! கலந்து கொள்ள இயலாதூரத்தில்... இந்த விலாசம் இழந்தவனும்... இருப்பினும்... காட்சிகள் கண் முன்னே விரிகின்றது... நன்றி.. பிரபா......ஒபரா ஹவுஸில் முதலில் தமிழை ஒலிக்கச்செய்ய வழிசெய்தவர்களுக்கும் விலாசம் இழந்தவர்கள் நன்றி சொல்லவேண்டியவர்கள்...!!!
ப்ரஷாராஜ்...ஒமான்...
//shanmuhi said...
அருமையான விவரணம்...
பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான். //
தங்கள் கருத்துக்கு நன்றிகள் ஷண்முகி. உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எமது கடந்த கால நினைவுகளைத் தூண்டுவதும் நிழச்சியின் சிறப்பிற்கு ஒரு காரணம்.
Thanks...Nice site...
// AJeevan said...
தேன்மழை
கானா பிரபாவால் கொட்டியிருக்கு.........
அருமை! //
வாசித்துத் தங்கள் கருத்தளித்த அஜீவன், உங்களுக்கு என் நன்றிகள்
//கண்டதில் ஒரு சுகம்... !! வாசிப்பு ஒரு இனிய அனுவம்...!! கலந்து கொள்ள இயலாதூரத்தில்... இந்த விலாசம் இழந்தவனும்... இருப்பினும்... காட்சிகள் கண் முன்னே விரிகின்றது... நன்றி.. பிரபா......
ப்ரஷாராஜ்...ஒமான்... //
வணக்கம் ப்ரஷாராஜ்
வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி ஜேசுதாஸ் வருவார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அடுத்தமுறை அவரின் தேனிசை மழையில் நீங்களும் நனையுங்கள். தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
//VKN said ... (October 05, 2006 7:17 PM) :
Thanks...Nice site...//
வருகைக்கு நன்றிகள் VKN
ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸ் குழு படைத்த இசை நிகழ்ச்சியின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அருமையான படங்களுக்கு நன்றி பிரபா...
ஆஹா பிரபா,
ஒரு அருமயான இசை நிகழ்ச்சியத் தவற விட்டுட்டேனே. நான் அங்க இருக்கும் போது நட்ந்து இருந்தா உங்களோடு சேந்து நானும் ரசிச்சிருப்பேனே.... ஆனா உங்க பதிவு அந்தக் குறய போக்கிட்டுது.
அப்புறம் அங்க நடந்த மாண்டலின் சீனிவாசனோட கச்சேரிக்குப் போனீயளா?
வணக்கம் நெல்லைக்கிறுக்கரே
நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டீர்கள், ம் என்ன செய்வது:-)
அடுத்தவாட்டி பார்க்கலாம்.
மாண்டலின் சிறீநிவாஸ் கச்சேரிக்கு போக எனக்கு கிடைக்கவில்லை.
Post a Comment