சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.
எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.
பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுழைந்து விட்டால் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.
சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.
சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.
ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவலப்பிட்டியிலிருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் "ஈழத்துச் சித்தர்கள்" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.
சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை "விசர் செல்லப்பா" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.
கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.
யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக "எப்பவோ முடிந்த காரியம்", "ஒரு பொல்லாப்புமில்லை", "யார் அறிவார்" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
"நற்சிந்தனை" ஆக நூலுருப் பெற்றது.
உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm
சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm
கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.
தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.
செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.
செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து".
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.
26 comments:
yokarsuvamikalaip patri poona aandu oru nuul thamililee vanthathu. avarudiaya vaalkkai patri. avarudaya america seedar hawaiiyilee aachiramam vaiththirunthu sila aandukku munnaal iranthaar.
//Anonymous said...
யோகர்சுவாமிகளைப் பற்றி போன ஆண்டு ஒரு நூல் தமிழிலே வந்தது. அவருடைய வாழ்க்கை பற்றி. அவருடய அமெரிக்க சீடர் ஹவாயிலே ஆசிரமம் வைத்திருந்து சில ஆண்டுக்கு முன்னால் இறந்தார்.//
மேலதிக தகவல்களைத் தந்த அநாமோதய நண்பருக்கு என் நன்றிகள்.
பிரபா, மற்றுமொரு நட்சத்திரப் பதிவு. நீங்களும் யோகசுவாமிகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி. அன்று படித்தவற்றை நினைவில் வைத்து பதிவிட்டிருக்கிறீர்கள். அருமையான நினைவு மீட்டல்.
இலங்கையின் வெள்ளைக்கார தேசாதிபதி சோல்பரியின் மகன் யோகருடைய ஒரு சீடர். ஹவாய் ஆதீனம் இன்னமும் சுவாமிகளின் கட்டளைக்கேற்ப அருளுரைகளை உலகெங்கும் பரப்பி வருகிறது.
//மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார்.//
பாரதி குறிப்பிட்ட யாழ்ப்பாணத்துச்சாமி அல்வாயைச் சேர்ந்த அருளம்பலம் என்பவர். இவர் நாகப்பட்டினம் மௌனசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர். இவரைப்பற்றி என்னுடைய பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.
Hello Prabha
Yogar suwamikal ennakuu patta muraai I know lot of good story about him. We are from Columbuthurai.
மேலதிக தகவல்களுக்கு நன்றிகள் சிறீ அண்ணா
தங்களின் விரிவான பதிவையும் நான் எதிர்பார்க்கின்றேன்.
//Anonymous said...
Hello Prabha
Yogar suwamikal ennakuu patta muraai I know lot of good story about him. We are from Columbuthurai. //
வணக்கம் அநாமோதய நண்பரே
இதையறிந்து மிகவும் மகிழ்ச்சி.
தங்களால் முடியுமானால், யோகர் சுவாமிகளின் அற்புதம் குறித்த ஏதாவது தகவல் தரமுடியுமா?
கானா பிரபா 2 வது படத்தில் குத்து விளக்கில் இருந்து ஒளி மேலெழும்பி செல்கிறதே அது எங்கு எடுத்தது?
//குறும்பன் said...
கானா பிரபா 2 வது படத்தில் குத்து விளக்கில் இருந்து ஒளி மேலெழும்பி செல்கிறதே அது எங்கு எடுத்தது? //
வணக்கம் குறும்பன்
அது எங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் நான் எடுத்தது. படத்தில் இருப்பவர் என் தந்தையார். ஓளி மேலெழும்பிப் போவது விந்தையாக இருக்கிறது அல்லவா?
நல்ல தகவல்களைத் தந்திருக்கின்றீர்கள் பிரபா. ஈழத்தமிழர்களின் ஆன்மிகத் தேடலும் அதிலிருக்கும் செழுமையும் உங்கள் எழுத்தின் வழியாகத் தெரிகிறது. யோகர் சுவாமிகளைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி.
நட்சத்திர வாரத்தில் உங்கள் ஆணிவேரைப் பற்றி எவ்வளவு நல்லவகையில் அறிமுகம் செய்ய முடியுமோ...அவ்வளவு நல்ல வகையில் செய்திருக்கின்றீர்கள். அங்கு அமைதியும் அன்பும் அருளும் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் பதிவுகள் யாவும் அருமையாகவும் பல தகவல்களுடன் கூடியதாகவும் இருக்கின்றது.பாராட்டுக்கள்.
நல்லூர் படம் கூட சற்று வித்தியாசமான கோணத்தில் தூரப்பார்வையில் எடுத்துள்ளீர்கள்.நன்றாகவுள்ளது.
யாழ் நாவலர் வீதியில் அன்னசத்திரம் லேன் முன்பாகவும் ஒரு சித்தர் மடம் இருந்தது.பெயர் மறந்துவிட்டது.
"யார் அந்த பாரதி குறிப்பிட்ட யாழ்ப்பாணத்து சாமி" என இளம் வயதில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வாசித்திருந்தேன்.பின்னர் அதை எஙகு தேடியம் அது சம்பந்தமான விபரம் கிடைக்கவில்லை.சிறீ அவர்களின் பதிவை நானும் எதிர்பார்க்கிறேன்.
பிரபா இனுவில் மஞ்சத்தடி பற்றியும் எழுதுங்களேன்.
// G.Ragavan said...
நல்ல தகவல்களைத் தந்திருக்கின்றீர்கள் பிரபா. ஈழத்தமிழர்களின் ஆன்மிகத் தேடலும் அதிலிருக்கும் செழுமையும் உங்கள் எழுத்தின் வழியாகத் தெரிகிறது. யோகர் சுவாமிகளைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி.
நட்சத்திர வாரத்தில் உங்கள் ஆணிவேரைப் பற்றி எவ்வளவு நல்லவகையில் அறிமுகம் செய்ய முடியுமோ...அவ்வளவு நல்ல வகையில் செய்திருக்கின்றீர்கள். அங்கு அமைதியும் அன்பும் அருளும் செழிக்க இறைவனை வேண்டுகிறேன். //
வணக்கம் ராகவன்
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.
//theevu said...
உங்கள் பதிவுகள் யாவும் அருமையாகவும் பல தகவல்களுடன் கூடியதாகவும் இருக்கின்றது.பாராட்டுக்கள்.
நல்லூர் படம் கூட சற்று வித்தியாசமான கோணத்தில் தூரப்பார்வையில் எடுத்துள்ளீர்கள்.நன்றாகவுள்ளது.
பிரபா இனுவில் மஞ்சத்தடி பற்றியும் எழுதுங்களேன். //
வணக்கம் தீவு
தங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றிகள். நட்சத்திர வாரம் ஆரம்பித்த நாள் முதல் நான் எதிர்பார்த்த அன்பர்களில் நீங்களும் ஒருவர். இப்படியான இடங்களை வித்தியாசமான கோணத்தில் படம் எடுக்கவேண்டும் என்பதும் என் ஆசைகளில் ஒன்று.
இணுவில் மஞ்சத்தடி பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. படங்களோடு அவை வரும் ஆனால் நட்சத்திர வாரத்தில் அல்ல:-)
பிரபா!
மனம் நிறைந்த பதிவு. ஈழத்துச்சித்தர்கள் பற்றிய பதிவுகள் இன்னமும் முழுமையாக வரவில்லை என்றே கருதுகின்றேன்.
யோகர்சுவாமிகள் பற்றி எனக்கும் மிகுந்த ஈடுபாடு. இங்கே நீங்கள் முக்கியமான பல சித்தர்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள். பாராட்டுக்கள். என்னைப்பொறுத்தவரையில் நல்லூர் மண்ணின் மகிமையே இந்தச் சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதே.
சிறி அண்ணனன் குறிப்பிட்ட சித்தர்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. உங்களைப்போல் நானும் அறிய ஆவலாக உள்ளேன்.
யோகர் சுவாமிகளின் உறவு என அறிமுகம் செய்துள்ள நண்பர் சிரமம் பாராது தரக்கூடிய தகவல்களைத் தந்துதவினால், யோகர் சுவாமிகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கும்.
நல்லூரை தேரடிப் பற்றிய அருமையான பல தகவல்களை தந்துள்ளீர்கள். எப்படியும் ஒரு முறை போய் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
அந்த அதிர்ஸ்டம் வாய்க்கும் என்று நம்புகிறேன்.
நன்றி நண்பரே
தகவலுக்கு நன்றி பிரபா.
நான் இவை பற்றி அறியாதவன்.
படிக்கும் போது பலதை தவற விட்டு இருக்கிறோமே என்று தோன்றுகிறது.
கனடாவிலிருக்கும் என் நண்பன் பரதனோடு பேசும் போது அவன் சொன்னான்.
குறும்பட விர்சனம் பார்க்க போய்......மடத்து வாசல் பகுதி முழுக்க வாசித்தேன்.
விடிந்து விட்டது.
பலருக்கு நீங்கள் ஒரு விடியல்தான்
மகிழ்வோடு............
உங்கள்
அஜீவன்
வணக்கம் மலைநாடான்
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
//மஞ்சூர் ராசா said...
நல்லூரை தேரடிப் பற்றிய அருமையான பல தகவல்களை தந்துள்ளீர்கள். எப்படியும் ஒரு முறை போய் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
அந்த அதிர்ஸ்டம் வாய்க்கும் என்று நம்புகிறேன்.//
வணக்கம் மஞ்சூர் ராஜா
உங்கள் ஆவல் கைகூட என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
//பலருக்கு நீங்கள் ஒரு விடியல்தான்
மகிழ்வோடு............
உங்கள்
அஜீவன் //
வணக்கம் அஜீவன்
இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கின்றது.
Hi Prabha, please let me know why i am not able to view the pictures.
வணக்கம் அநாமோதய நண்பரே
என் பதிவு இருக்கும் பக்கத்தை Refresh பண்ணிப் பார்க்கிறீர்களா?
மதங்களில் நம்பிகையற்றவனாயினும்... உந்த யோகா தியானங்களில் ஈடுபாடு உண்டு. யோக சுவாமிகள் சொன்ன ;...;சும்மா இரு;;..... என்ற தத்துவம் எனக்கு பிடித்து...நல்லொதொரு பதிவு ... வாழ்த்துக்கள்
பிரபா!
என் பாட்டா ஒருவர்; இறை பக்தி நிரப்பியவர்; என்னை எல்லோரும் "யோகன்" என்று கூப்பிடும் போது அவர் மாத்திரம்"யோகர்" எனக் கூப்பிடுவார். அதன் காரணத்தை அறிய எனக்குப் பல காலம் பிடித்தது. எனினும் அதை ஆய நான் முற்படவில்லை. அப்பபோ பத்திரிகைகளில் நினைவு தினக் கட்டுரைகளில் படிப்பேன்.
பாரிசில் 10 ஆன்டுக்கு முன் "சுப்பிரமணிய சுவாமி" என ஹவாய் சுவாமி ஒருவர் வந்தார், அவர் தந்த பிரசுரத்தில்; அவர் படகோட்டி பலநாடுகளுக்கு சொந்தப் படகில் பயணஞ் செய்து கொண்டு "யாழ்ப்பாணமும்" சென்று ;அப்படியே இடங்களைப் பார்த்துக் கொண்டு சென்ற போது "யோகர் சுவாமிகளைத் " தற்செயலாகச் சந்தித்ததாகவும்; அதன் பின் தனக்கு அந்த இடத்தை விட்டுப் பிரிய மனம் வரவில்லை; எனவும் அதன் பின் துறவு பூண்டு; தன் இடம் சென்று தன் அனுபவங்களை பரப்பிக் கோவிலும் கட்டியதாகப் படித்தேன்.
யாழ் இந்துவுக்கு சமீபத்தில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்; அவன் தன் மாமியாரின் பழம் கிடவன் மொறிஸ் மைனர் ஒண்றைக் காட்டி; இதில் யோகர் சுவாமி ஒரு தடவை ஏறியதால் ,வசதி இருந்தும் கூட; புது வண்டி வாங்காமல்; அதையே பாவிப்பதாகக் கூறினான்.
யோகன் பாரிஸ்
வணக்கம் சின்னக்குட்டியர்
தங்கள் வருகைக்கும், அன்பு மடலுக்கும் என் நன்றிகள்.
வணக்கம் யோகன் அண்ணா
வழக்கமான, உங்களுக்கே தனித்துவமான உங்கள் நினைவுமீட்டலோடு பின்னூட்டம் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
வணக்கம் கானா பிரபா,
உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் வித்தியாசமானவை. மற்றும் உங்கள் எழுத்துநடையும் மிக இயல்பாயுள்ளது.
//குறும்பன் said...
கானா பிரபா 2 வது படத்தில் குத்து விளக்கில் இருந்து ஒளி மேலெழும்பி செல்கிறதே அது எங்கு எடுத்தது? //
ஃஃவணக்கம் குறும்பன்
அது எங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் நான் எடுத்தது. படத்தில் இருப்பவர் என் தந்தையார். ஓளி மேலெழும்பிப் போவது விந்தையாக இருக்கிறது அல்லவா?ஃஃ
அந்த "அற்புதத்தை" பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
அன்புடன்
தமிழ்வாணன்.
//தமிழ்வாணன் said...
வணக்கம் கானா பிரபா,
உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் வித்தியாசமானவை. மற்றும் உங்கள் எழுத்துநடையும் மிக இயல்பாயுள்ளது.//
வணக்கம் தமிழ்வாணன்
தங்களின் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் என் நன்றிகள்
//அந்த "அற்புதத்தை" பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.//
அது அற்புதமா அல்லது கமராவின் ஒளித்தெறிப்பா எனக்கும் புரியவில்லை.
Post a Comment