“கட்டின குழையெல்லாம்
அப்பிடியே கிடக்குது,
ஏன் சாப்பிடேல்லை?
இந்தா...இந்தா...!”
ஆட்டுக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் குழைக் கொத்தில் இருந்து இரண்டு நொட்டுப் பிடுங்கி நீட்டுவார் அப்பா.
அப்படியே வாய்க்குள் தள்ளி விட்டு
‘ம்ம்ம்ம் அஹ்ஹ்ஹ் ம்ம்ம்" என்று ஆட்டுக்குட்டிகள் அவரோடு கதை பேசும்.
அப்பா ஆடு வளர்த்த காலமெல்லாம் ஆடுகள் தான் வளர்ந்தன,
அவற்றிடமிருந்து ஒன்றையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
காது நீண்ட கிழவி போல அதில் ஒரு மூத்த ஆடு தன் அந்திம காலம் வரை வளர்ந்து எங்கள் வீட்டுப் பின் வளவில் தான் சமாதி கொண்டது.
“அப்பா ஆட்டை வில்லுங்கோ”
ஊருக்குப் போகும் போதெல்லாம் சொல்லுவோம்.
“நீங்கள் போனாப் பிறகு எனக்கு ஆர் துணை? “
என்ற அப்பாவின் கேள்விக்குப் பதில் இராது எங்களிடமிருந்து.
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர்.
எங்கட எண்பதுகள் காலம் மாட்டு வண்டிச் சவாரிகளோடும் மாட்டுப் பொங்கலோடும் மட்டும் நின்று விடவில்லை, ஆடு, மாடுகள் சினேகபூர்வமான வளர்ப்புப் பிள்ளைகளாக இருந்தன.
“பசுவும் பரமேஸ்வரியும்" குறும்படத்தைப் பார்த்து முடித்ததும் பழைய டயரியைப் படித்தது போல ஒரு உணர்வும் எழுந்தது.
Dr ஜெயமோகன் அவர்களின் படைப்புலம், வானொலி நாடக மரபிலிருந்து மேடை நாடகம் அதன் பின் குறும்பட முயற்சிகள் என்று பரிணமித்து “பொய் மான்”, “யாதும் யாவரும்” என்று நீளத் திரைப்படங்களை எடுத்து அடுத்த கட்டத்தில் நகர்ந்த போதும், அவர் மீண்டும் இன்னொரு குறும் படைப்போடு வந்திருக்கிறார்.
“பொய் மான்” புலம்பெயர் சூழலில் அமைந்த கதைக்களத்தில் கூட ஈழத்து வாழ்வியலின் பக்கங்கள் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தன. அந்த விதை தான் இப்படியொரு முயற்சியை ஈழத்துக் கதைக்களனையே முழுமையாக மையப்படுத்தி எடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.
அந்த வகையில் மீண்டும் தன் தொட்டிலுக்கு வந்து கொடுத்த ஒரு படைப்பாக “பசுவும் பரமேஸ்வரியும்” அமைந்திருக்கிறது.
ஈழத்து வாழ்வியலில் சீதனச் சிக்கலின் எச்சமாக இருக்கும் ஒரு முனையை எடுத்துக் கொண்டு அந்த வாழ்வியலின் பரிமாணத்தை இந்தக் குறும்படத்தில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நம் தேசத்து இளவல்களின் தொழில் நுட்பத் திறனும் நேர்த்தியும் யாருக்கும் சளைத்தவையல்ல என்பதை இப்படத்தின் ஆரம்பக் காட்சி விரியும் போதே உறுதிப்படுத்துகின்றது.
தந்தை மகள் நேசத்தோடு விரியும் தொடக்கத்திலிருந்து பரமேஸ்வரிக்கு பசு மீதான அவளின் அன்பை நான் அவளின் தந்தைக்குக் கொடுக்கும் அன்பின் பரிமாணமாகவே பார்த்தேன்.
திரைக்கதை அமைப்பில் அந்த அன்பின் ஆழத்தை இன்னமும் ஆழப்படுத்தியிருக்கலாம். அப்படி நினைக்கும் போது கதையோட்டத்தில் மீண்டும் வந்து போகிறது அந்த அன்பின் சுவடு.
பின்னணி இசையிலும் உரையாடலுக்குள் ஊடுருவும் இசைத் துணுக்கினை நம் மண்ணின் மெல்லிசை வாத்தியக் கோவையாகக் கொடுத்திருந்தால் ஆங்காங்கே எழும் நாடகத் தன்மையைத் தவிர்த்திருக்கலாம்.
உச்சத்திலிருந்து நிலமெலாம் அளந்து பரந்து விரிந்து அந்த வீட்டு வளவுக்குப் போகும் ஒளிப்பதிவும், ஒளிக்கலவையும் மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டு நம் மண்ணின் அடையாளத்தைச் சிறைப்பிடித்துக் காட்டுகின்றது.
அப்பாச்சியிலிருந்து எல்லாப் பாத்திரங்களும் தம் பங்கைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். கேசவராஜன் அண்ணரின் மனைவி கமலராணி அக்காவை மீண்டும் திரையில் கண்டது பெரு மன நிறைவு.
பசுவும் பரமேஸ்வரியும் படத்தைக் காண
https://www.youtube.com/watch?v=oKnTeXvjeP8&t=2s
“ஈழ நாட்டிலே....
ஒரு ஊரிருக்கு...
அந்த ஊரிலே
ஒரு வெள்ளைப் பசு...
காதுகளை விட்டு நீங்க மறுக்கிறது படத்தின் உணர்வோட்டமான ஆரம்ப பாடல்.
இப்படத்தின் ஆக்க கர்த்தா Dr ஜெயமோகனின் ஈழத்துக் கதை சொல்லல் இன்னும் நீள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், வாழ்த்துகளும்.
கானா பிரபா
02.09.2024
0 comments:
Post a Comment