“M.T.வாசுதேவன் நாயரின் கதைகளில் மனித உணர்வுகளின் மெய்த்தன்மை இருக்கும்,
இந்தக் கதையைப் பொறுத்தவரை அவருடைய நிஜ வாழ்க்கையின் படிமம் ஆகவே எனக்குத்
தென்படுகிறது”
கமல்ஹாசனின் அறிமுகக் குறிப்போடு வேணுகோபால் என்ற பத்திரிகையாளன் இலங்கையின் கடுகண்ணாவை நகரம் நோக்கி பயணப்படுகிறான்.
“இலங்கைக்கு ஒருமுறை தான் பயணப்பட்டிருக்கிறேன்,
அதுவும் வெறும் நான்கு மணி நேரம் தான்”
என்று கமல்ஹாசன் தன் அறிமுகக் குறிப்பில் சொல்லியிருப்பார்.
இங்கோ வேணுகோபாலுக்கு இதுவே முதன்முறை.
ஆனால் அவனுக்கும் இலங்கைக்கும், அதுவும் குறிப்பாக கடுகண்ணாவைக்குமான பந்தம் 1942 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டு விட்டது.
கொழும்பு நகர வீதியில் அவன் கார் பயணப்பட்டாலும்,
அவனின் எண்ண அலைகளோ தன் பால்யகாலத்துக்குச்
சுழல்கிறது.
தன் சகோதரியாகப்பட்டவளான லீலாவைப் பார்க்கப் போகிறான்.
வருஷக்கணக்காக அவன் வாழ்க்கையில் ஒளிந்திருந்த ஒரு செய்தியின் மெய்த்தன்மைக்கும் விடை கிடைக்கிறது.
“காதாகாரன்” M.T.வாசுதேவன் நாயரை நாயகனாக்கி அழகு பார்த்து, மம்மூட்டியின் வெகு இயல்பானதொரு நடிப்பில், “கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு” என்ற குறுந்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தின் மகோன்னதரப் படைப்பாளி M.T.வாசுதேவன் நாயரின் சிறுகதைகள் “மனோரதங்கள்” என்ற இணையத் திரைப்படத் தொகுப்பாக வந்துள்ளது., அதில் உள்ள ஒன்பது கதைகளில் ஒன்று இது.
இந்தப் படைப்பு ஒவ்வொன்றுமே மம்மூட்டி, மோகன்லால் என்ற பெருந்திரை நட்சத்திரங்கள், ஆளுமைப்பட்ட இயக்குநர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கதையாக எடுத்துப் பண்ணியது.
கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு” இயக்குநர் ரஞ்சித் படைத்திருக்கிறார். ஏற்கனவே “பலேரி மாணிக்கம்” என்ற அற்புதமான மர்மப்படைப்பை மம்மூட்டியோடு இணைந்து படைத்தவர் இங்கே ஒரு உணர்வுபூர்வமான படைப்பிலும் இந்தக் கூட்டணியின் வெற்றியை நிரூபித்திருக்கிறார்கள்.
இந்தக் கதையை முன்னர் நண்பரும், எழுத்தாளருமான ரிஷான் ஷெரிப், “புரவி” கலை இலக்கிய இதழுக்காக “கடுகண்ணாவைக்கு ஒரு பயணம்” என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்ததையும் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.
அந்நியமற்ற காட்சிப்படுத்தல்கள் இலங்கையைப் படம்பிடித்துக் காட்டியதில் கேரளத்தவர்களின் யதார்த்த நிலை அதிசயப்பட வைக்கவில்லை என்றாலும்.
“லீலா” என்ற சிங்களச் சிறுமி பேசும் ஆங்கிலம், ஒரு சிங்களப்பெண் எப்படிக் கொஞ்சலோடு பேசுவாளோ அவ்வளவு தூரம் வெகு நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
கேரளப் பின்புலத்தில் மம்மூட்டியின் தந்தையாக நடித்த வினீத் இடமும் நேர்த்தியான நடிப்பைப் பார்க்க முடிவதோடு, 1942 ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்தில் எழும் சலசலப்பையும் இந்தச் சிறுகதையின் அச்சாணி விலகாது படமோட்டுகிறது.
அந்தச் சிறுவன், சிறுமிக்குமிடையில் பூக்கும் சகோதர நேசமும் ஒரு அழகியல் காட்சி மொழியில் கையாளப்பட்டிருக்கிறது.
“கொச்சியான்ஸ்” என்ற அடைமொழியோடு மலையாளிகள் இலங்கையில் அழைக்கப்பட்ட வரலாற்றுச் செய்தியோடு, மெலிதாகப் பயணிக்கும் இசையோடு அரை மணி நேரத்தில் ஒரு உணர்வுபூர்வமான சிறுகதையை வாசித்த அனுபவத்தைக் கொடுத்து நிற்கின்றது.
கானா பிரபா
18.08.2024
0 comments:
Post a Comment