தாயகத்துக்குச் செல்லும் போதெல்லாம் நமது செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களது அறப் பணிகளைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.
கடந்த தாயகப் பயணத்தில் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்துக்குப் போன போது இங்கு வாழ்ந்து மறைந்த முதியோர்களின் புகைப்படங்கள் இருந்தன. அவற்றில் தேதி வாரியாக அவர்களின் இறப்புச் செய்தியோடு ஒரு தகவல் என் கண்ணில் குத்திட்டது. இந்த முதியோர்களில் பெரும்பாலானோருக்கு திரு ஆறு திருமுகன் அவர்களே பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து இறுதிக் கிரியைகளைச் செய்து கொள்ளிக் கடன் செய்து முடித்திருக்கிறார். தீவிர இறை பக்தர், விரதங்களை அனுட்டிப்பவர் ஆனால் இப்படியான திடீர் இழப்புகள் வரும் போது துடக்கைப் புறந்தள்ளி அவர் செய்யும் இந்தப் பணியை இன்றும் நினைத்து உணர்ச்சி வசப்படுவேன்.
மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான மன வளர்ச்சிப் பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலை சிவபூமி மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் பரிபாலனம் இதில் துர்காபுரம் மகளிர் இல்லம் உள்ளடங்கல், 2018 இல் நிறுவிய திருவாசக இல்லம் இவை முழு நேரப் பணிகள் என்றால் இவற்றைத் தாண்டி தன்னுடைய ஆன்மிக, அறப்பணிகளை இன்னும் நீளத்தில் சொல்லி விட முடியும்.
தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அவரை நினைக்கும் போதெல்லாம் வியப்பும், பெருமையும் எழும்.
நம்மால் ஒரு சிறு துரும்பை எடுக்கக் கூட ஆயிரம் சாட்டுச் சொல்லும் வாழ்வியலில் அவரின் பன்முகப்பட்ட அறப்பணிகள் நம் ஈழச் சமூகத்துக்குக் கிட்டிய பெரும் பேறு.
தாயகத்துக்குப் போகும் தோறும் என்னை அவரின் வாகனத்தில் இருத்தித் தன் சமூக ஸ்தாபனங்களின் இயக்கத்தைக் காட்டி வருவார்.
ஆறு திருமுருகனின் “சிவபூமி” அறச் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய மக்களின் பார்வைக்கு எட்டும் வண்ணம் ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்த போது அதற்குச் செயல் வடிவம் தந்தவர் சகோதரன் ஜெரா. Jera Thampi
இப்படியான பட வேலைகளுக்கு இரண்டு, மூன்று கமெராக்கள் தேவைப்படும் சூழலில் ஒரே கமராவை வைத்துக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தானே தன் குரலில் ஒலிச் சேர்க்கை செய்து திறமானதொரு ஆவணப்படத்தை ஆக்கியளித்தார். அவருக்கு உறுதுணையாக விளங்கிய சகோதரர்கள்
யோ ரவீந்திரன், காண்டீபன் இப்பட உருவாக்கத்தில் இணைந்துள்ளார்கள்.
இவ் ஆவணப்படம் சிட்னியில் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து கொண்ட நிதி சேகரிப்பு ஒன்று கூடலிலும் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப் படம் சிவபூமி என்ற சமூக இயக்கத்தின் பன்முகச் செயற்பாடுகளை விரிவாகக் காண்பிக்கின்றது.
இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் பெரு மதிப்புக்குரிய செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற தன் அறச் செயற்பாட்டோடும் உழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இன்றைய நாளில்
“ஈழத்தில் சிவபூமியின் அறப்பணிகள்” என்ற ஆவணப்படத்தை உங்கள் பார்வைக்காகவும் பகிர்கின்றேன்
தன்னுடைய அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டி உலகத் தமிழர் பரந்து விரிந்து வாழும் தேசங்கள் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளையாற்றி அவற்றில் கிட்டும் நிதி வளத்தோடும், ஈகைக் குணம் மிக்க அன்பர்கள் வழங்கும் நன்கொடைகளின் வழியாகவும் முன்னெடுப்பவர். அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் அபய கரம் அமைப்பின் முன்னெடுப்புக்காக வருகை தந்து சிறப்பிக்கும் இவரை இங்குள்ள மக்களுக்கு முதன் முதலில் ஈழத்தமிழர் கழகம் வழியாக அறிமுகப்படுத்தித் தனியான விருந்துபசார நிதி சேகரிப்பு நிகழ்வின் வழியாகவும் பலரை ஒன்று கூட்டி நிகழ்வுகளை முன்னெடுப்பவர் திரு வை.ஈழலிங்கம் Vaithilingam Elalingam அவர்கள்.
2015 ஆம் ஆண்டில் சிட்னி வந்த போது அவரோடு நானும், அருமை நண்பர் ஶ்ரீ Sritharan Sri Thirunavukkarasu அவர்களும் எடுத்திருந்த பேட்டியையும் இங்கே சிறப்புப் பகிர்வாகத் தருவதில் மகிழ்வடைகின்றேன்.
இன்று அகவை 60 காணும் எங்கள் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களின் நீண்ட நெடிய அறப்பணிகளைக் கொண்டு நடத்த எல்லாம் வல்ல இறைவன் அவரைப் பூரண சுக தேகியாக என்றென்றும் வைத்திருக்க வாழ்த்துகிறோம்.
அன்புடன்
கானா பிரபா
0 comments:
Post a Comment