இண்டைக்குச் சித்திராப் பறுவம் எண்டதும் நாக்குச் சப்புக் கொட்டியது, ஈழத்தில் இருந்த காலத்தில் இந்நேரம் காய்ச்சிக் குடிக்கும் சித்திராக் கஞ்சியை நினைத்து.
சித்திரப் பெளர்ணமி நாளைச் சித்திராப் பறுவம் என்றே சொல்லிப் பழகி விட்ட பேச்சு வழக்கு அது.
“இண்டைக்கு ஏன் வேலைக்குப் போகேல்லை?”
“பறுவம் எல்லோ” என்று சொல்லி விட்டுக் கடந்து போவர்.
எங்களூர்க் காவல் தெய்வம் வைரவர் தான். சந்திக்குச் சந்தி நாய் மீதேறி நிற்பார். எங்கட பக்கம் இருக்கும் வைரவர் கோயிலெல்லாம் கிடாரம் வச்சுச் சித்திராக் கஞ்சி தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருப்பர்.
ஈழத்தின் முக்கியமான பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வுகளில் தந்தையை நினைத்து ஆடி அமாவாசை நிகழ்வை எப்படி நிகழ்த்துவரோ அது போலவே தாயின் நினைவில் சித்திரைப் பெளர்ணமி தினத்தை அனுட்டிப்பர். ஆடி அமாவாசை சிவனுக்கு, சித்திரைப் பெளர்ணமி அம்மனுக்கு.
அது போலவே ஆடிப் பிறப்புக்கு ஆடிக்கூழ் அரிசிமாவும் பனங்கட்டியும் வறுத்த பாசிப்பருப்பும், தேங்காய்ப் பாலும் சேர்த்துச் செய்வது போல சித்திரைப் பூரணை தினமன்று சித்திரைக் கஞ்சி என்ற இந்தச் சித்திராக் கஞ்சி.
சித்திராப் பெளர்ணமி வரப் போகுது என்றதுமே ஊர் வீடுகளுக்குப் போய் அயலட்டை எல்லாம் சிரட்டை பொறுக்கி அவற்றைக் கழுவித் துடைத்துத் தயாராக வைத்திருப்போம். சிலர் இதற்காகவே அன்றாடச் சமையலில் தேங்காய் துருவி எஞ்சிய அந்தச் சிரட்டைகளை எடுத்து வைத்திருப்பர்.
நல்ல வில்லுக் கத்தியால் தேங்காய்ச் சிரட்டையின் வெளிப்புறத்தையும் மழித்து, நூறாவது நாள் சத்யராஜ் மண்டை போல வழுவழுப்பாக்கி விடுவோம்.
சித்திராப் பெளர்ணமி அன்று குளித்து முடித்து விட்டு வைரவரடிப் பக்கம் போய் ஒவ்வொருவராக ஒவ்வொரு வேலையை இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும்.
ஒருவர் சிரட்டைகளைப் பொறுக்கிக் கழுவி அடுக்க, இன்னொருவர் புதிதாக வாங்கி வந்த தேங்காய்களைப் பாதியாக உடைப்பார்.
உடைத்த தேங்காயின் உட்புறம் இருக்கும் வெள்ளைச் சொட்டை மெல்லக் கோதித் துண்டு துண்டுகளாக வெட்டி வைப்பார் இன்னொருத்தார்.
வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டி அடுக்குவதுமான இன்னொருத்தர்.
சிவப்புப் பச்சையரிசியில் நன்றாகக் குழைந்த தண்ணீர்ப் பதமாகக் கஞ்சி காய்ச்சப்படும். அது வெந்து வரும் பருவத்தில் வெங்காயம், மிளகாய், தேங்காய்ச் சொட்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டால் சித்திராக் கஞ்சி தயார்.
அடுப்பில் இருக்கும் கிடாரத்தை ஒரு கலக்குக் கலக்கி அந்தக் கஞ்சியை ஒரு ஒரு அளவான ஏதனத்தில் (பாத்திரத்தில்) போட்டு வடை மாலை போட்ட வைரவருக்குப் படைத்து விட்டு அடுத்தது என்ன பரிமாறல் தான்.
அடுக்காகக் காத்திருக்கும் தேங்காய்ச் சிரட்டைகளைக் கழற்றி ஒவ்வொருவருக்கும் கொடுத்து விட்டு, சுடச் சுட அந்தக் கஞ்சியை சிரட்டை வழிந்தும் வழியாத அளவுக்குப் போடுப்படும்.
சூட்டை ஊதி ஊதி ஒவ்வொரு சொட்டுச் சுவைத்து, நடுவில் மிதந்து போகும் தேங்காய்ச் சொட்டையும் அவுக்கென்று வாய்க்குள் சிக்க வைத்துக் குடிக்கும் போது ஒரு பக்கம் சின்ன வெங்காயத்தின் வாசனையும், இன்னொரு பக்கம் பச்சை மிளகாய் உறைப்பும், தூக்கலான உப்பும் சேரக் கடிபட்ட தேங்காய்ச் சொட்டோடு வாய்க்குள் ஜலக்கிரீடை செய்யும் சித்திராக் கஞ்சியின் ஜாலம் சொல்லி வேலை இல்லை.
கூடவே கதலி வாழைப்பழத்தையும் ஒரு கடி கடித்துக் கொண்டே கஞ்சியைக் குடிப்பது ஃபைவ் ஸ்ரார் ஹோட்டல் விருந்து மாதிரி.
வைரவர் கோயிலடியால் வழி வழியாக வருவோரை மறித்துச் சிரட்டையை ஒராள் கொடுக்க இன்னொருத்தர் கஞ்சியை ஊற்றுவார்.
சைக்கிளை ஓரம் கட்டி விட்டு அங்கேயே வயிற்றை நிரப்பி விட்டுப் போகும் சனம்.
சரி அடுத்த வைரவரடியான் எப்பிடி இருக்குமடா
என்று ஊர்வலம் கிளம்பிப் போவோம், எல்லாம் அந்தச் சித்திராக் கஞ்சிக்காகத் தான்.
கானா பிரபா
புகைப்படம் நன்றி : ஈழத்தில் இருந்து சகோதரி ஒருவர் சுடச் சுட
1 comments:
அஹா என்ன வர்ணணை. சித்திராக் கஞ்சியை நினைத்து வாய் ஊறுகிறது. சத்யராஜ் மண்டை போல வழுவழுப்பாக்கி விடுவோம், நல்ல உவமை.
Post a Comment