முதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூலை மன்னிக்கவும் பொத்தகத்தை எழுதிய முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் சினங் கொண்டு (இது தமிழ் தானே?) பாய்ந்து விட்டால் என்னாவது என்ற பயமும் எழாமலில்லை 😀 அட நானும் emoji போட்டு விட்டேனே 😀🙃
மேற்கண்ட பந்தியை ட்விட்டர் உலகத்தில் இல்லாத யாரும் படிக்க நேர்ந்தால் குழம்பிப் போவார்கள். ஏனெனில் அதுவொரு தனி உலகம். அங்கே மீனவர் வாழ்வாதாரப் பிரச்சனையில் இருந்து கூடாங்குளம், அஜித் - விஜய் இல்லையில்லை விஜய் - அஜித் குழுச் சண்டைகள், சினிமா விமர்சனங்கள், பாடல் பகிர்வுகள், திமுக - அதிமுக, தாமரை, சாதிச் சண்டை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயப்படும் உலகம். இது இவ்விதமிருக்க இன்னொன்றும் ட்விட்டரில் தமிழ் முளைத்த காலம் தொட்டு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதுதான் தமிழரின் கலை, பண்பாடு, மொழி சார்ந்த மெய்த் தேடல். தாய்த் தமிழகத்திலும், ஈழத் தமிழகத்திலும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள், வேற்று கலாசாரக் கலப்புகள் போன்றவற்றின் தாக்கத்தால் தமிழ் அதன் மொழி, பண்பாடு போன்ற அம்சங்களில் நிறமிழந்து போவதை இன்று நேற்றல்ல நூற்றாண்டு தொடும் தமிழ் இனம் சார் பேரியக்கங்கள், அறிஞர்கள் என்று சொல்லியும் எழுதியும் வந்ததைத் தான் நண்பர் கண்ணபிரான் இரவி சங்கர் ட்விட்டர் உலகில் கையிலெடுத்திருக்கிறார். தமிழ் மொழி சார்ந்த காராசார விவாதங்களில் “கரச” (@kryes) வின் பங்களிப்பு காத்திரமாக இருக்கும், சூடு பறக்கும். கிட்டத்தட்ட மொழிப் போர் ஒன்றை மைதானத்தில் இறக்கி விட்டது போன்ற பிரமை. “அறியப்படாத தமிழ்மொழி” என்று அவர் முதன் முதலாக வெளியிட்டிருக்கும் இந்த நூல் கூட அவ்வாறான தமிழ் சார்ந்த அதன் இருப்பு சார்ந்த ஆதங்கத்தின் தீவிர வெளிப்பாடே எனலாம்.
நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தொழில் நுட்பக் கற்கை நெறியோடியைந்த வாழ்கையை அமைத்துக் கொண்டாலும் தமிழ் மீது கொண்ட காதலால் முனைவர் பட்டம் பெற்று அத்துறையில் பகுதி நேரப் பேராசிரியராக இருப்பவர். தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதத்தையும் முறையாகப் பயின்றது அவரது அறிவு நீட்சிக்கு மட்டுமன்றி இன்று தமிழ் மொழி சார்ந்த மெய்த் தேடலில் தன் தர்க்க நியாயங்களை ஒப்பு நோக்க நியாயமான காரணங்களோடு நிறுவவும் கை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாகாணமாக ஒருமித்த குடையின் கீழ் இருந்த போது தமிழோடு, தெலுங்கு, கன்னட சமூகத்தின் மொழி ஆளுமையை விட சமஸ்கிருதத்தின் மேலாதிக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அது போலவே ஈழத்திலும் திசைச் சொற்களாக போர்த்துக்கீச, ஒல்லாந்த மொழிச் சொற்கள் இன்றும் நடைமுறை வாழ்வில் ஒன்று கலந்திருப்பதோடு வட மொழியின் ஆதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் இருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, தமிழருக்கான தனித்துவமான கொண்டாட்டங்கள், சடங்குகள் மறைக்கப்ப்பட்டு அல்லது மீள நிறுவப்பட்டு தமிழ் அதன் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டு போகும் அபாயத்தையே
இங்கே நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தன் கட்டுரைகளினூடாக சான்றாதாரங்களோடு காட்டி விழிப்புணர்வு கொள்ள வேண்டுகிறார்.
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி” என்று நம் பழந்தமிழ்ப் பெருமை பேசும் போக்கையே தன் முதல் கட்டுரையில் எடுத்துக் கொண்டு ஆதாரங்கள் துணை கொண்டு வாளைச் சுழட்டுகிறார்.
ஆறு படை வீடுகளா இல்லையே ஆற்றுப்படை வீடுகள் அல்லவா அப்படியானால் படை வீடுகள் எத்தனை என்று இன்னொரு அந்தந்ததுக்குப் போகிறார். மொத்தம் 14 கட்டுரைகள் எல்லாமே எந்த விதமான தொடரோட்டமில்லாத ஆனால் தமிழ் என்ற அடித்தளத்தில் நின்று பார்க்கப்படும் கட்டுரைகள். இங்கே இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும், “அறியப்படாத தமிழ்மொழி” என்ற புத்தகத் தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ தமிழ் இலக்கண நூல் என்ற பொருள் மயக்கம் கொள்வாரும் இருக்கலாம். ஆனால் இது தமிழர் மொழி பண்பாடு, கலை, இலக்கியம் என்று எல்லாத் திக்குகளிலும் பயணப்படுவதால் வேறொரு தலைப்பை இட்டிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறேன்.
ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்க நியாயங்களை நிறுவி விட்டுப் பின் பொழிப்பாக ஒரு பக்கா சுருக்கம் கொடுத்த பாங்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு.
“திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்” என்றொரு கேள்வியை எழுப்பி, அது சூழல் நெறி சார்ந்தது என்று கொடுக்கும் விளக்கக் கட்டுரையே ஒரு நூலாகக் கொள்ளுமளவுக்குக் காத்திரமான ஆய்வுப் பார்வையைக் கொண்டது.
“எங்கள் தலைவன் பிரபாகரன்
அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்”
என்று அறிவுமதி அவர்கள் எழுதிப் பாடல் வடிவம் கண்டதும் அது பெரும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அதெப்படி பிரபாகரனைக் கடவுளுக்கு நிகராக ஓப்பிடலாம் என்று தீவிர ஆத்திகப் போக்குடையோர் விமர்சித்தார்கள். இது நடந்து பதினெட்டு வருடங்களுக்கு முன்பு. அப்போது அறிவுமதி அண்ணன் “முருகன்” என்பது பொதுப்படையான கடவுள் பெயரல்ல, குறிஞ்சி நிலத்து மக்களின் தலைவன் என்பதை வானொலியில் வந்து விளக்கிய போதும் எடுபடாதிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் இந்த “அறியப்படாத தமிழ்” நூல் கிட்டியிருந்தால் இவ்வாறு விமர்சித்தோருக்குத் தக்க பதிலடியாகக் கிட்டியிருக்கும். காரணம், அறிவுமதி அண்ணன் சொன்ன அதே விளக்கத்தையே இந்த நூல் மீள நிறுவுகிறது. ஒவ்வொரு நிலங்களுக்குமாகக் கொள்ளப்படுகின்ற தெய்வங்களின் உண்மை அடையாளம் என்ன என்பதை இந்த நூல் விலாவாரியாக விளக்குகிறது “எது முதல் திணை குறிஞ்சியா முல்லையா? என்ற பதிவின் வழியாக. அத்தோடு ஐவகை நிலங்களாக வரையறுத்த ஒழுங்கின் மீதும் விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது.
தமிழ் மறைப்பு அதிகாரம் என்ற பகிர்வே இந்த நூலின் அடிநாதம் எனலாம். அதில் மொழி, நாடு, இனம், நாகரிகம், கலை, மதம், வரலாறு என்று தொடரும் மறைப்புகளைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார். இன்னொரு நூலுக்கான பொழிப்புரையாகக் கொள்ளக் கூடிய தகவல் இந்தக் கட்டுரையிலும் தொக்கி நிக்கின்றன.
தமிழ் ஆண்டு சித்திரையா? தையா? என்ற முடிவிலி காணா விவாதப் பொருள் இங்கேயும் அலசி ஆராயப்படுகிறது.
வடமொழியில் பெயர் வைத்தால் என்னவாகும்? “யாஷிகா” என்றால் பிச்சை எடுப்பவள் என்று அர்த்தம் இப்போது சொல்லுங்கள் அர்த்தம் தெரியாது நாகரிக அடையாளத்துக்காகப் பெயர் வைக்கலாமா என்று பயமூட்டுகிறார்.
எங்கள் பள்ளிப்பாடத்தில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் “இலக்கிய வழி” நூலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தது அப்போது. “கம்பன் செய்த வம்பு” என்ற பகிர்வின் வழியாகக் கம்பராமாயணத்தை எழுதப் போந்த கம்பனின் சொல் விளையாட்டுகளை அவையடக்கம் (அவைக்கு அடங்குதல், அவையை அடக்குதல்) என்றெல்லாம் அலசப்பட்டிருந்தது. ஆனால் “அறியப்படாத தமிழ்மொழி” கம்பன் மீதான விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது. வான்மீகி எழுதிய இராமாவதாரம் (வான்மீகி இராமாயணம் என்பது பிற்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது) என்ற நூலைக் கம்பன் மத நூலாக மேன்மைப்படுத்த ஏற்படுத்திய மாற்றங்களை விமர்சிக்கிறார்.இங்கே கம்பனுக்கும் இளங்கோவடிகளுக்குமான ஒப்பீடு எழுகிறது அப்படியே கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரம் என்ற குடி மக்கள் காப்பியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். கண்ணகி மதுரையை மெய்யாலுமே எரித்தாளா? கோவலன் உண்மையில் ஆணாதிக்க அடையாளமா? எல்லாவற்றுக்கும் இங்கே விடை கிடைக்கின்றது.
இந்த நூலின் சிறப்பே அதுதான் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அம்சங்களைத் தொட்டுப் பேசுவது.
“இலக்கண அரசியல்” என்ற பகிர்வில் தொடங்கி
“நாட்டுப்புறத் தமிழ்”, ”தமிழகத்தின் ஊர்ப் பேர் விகுதிகள்”, “அறிவியல் தமிழ், Meme தமிழ், வளரும் தமிழ்” என்று தொடரும் கட்டுரைகள் மொழி என்ற புள்ளியில் இருந்து எழுந்தவை.
இந்த நூலைப் படிக்க ஆரம்பித்ததும் என்னவொரு வேகமெடுக்கிறது என்று நினைக்குமளவுக்கு விறு விறுப்பான எழுத்தோட்டம். ட்விட்டர் உலகில் நுழைந்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றிய அச்சொட்டான வாதப் பிரதிவாதங்களின் பிரதியே இந்த நூல் எனலாம். ஆனால் அதுவே வாசிக்கும் போது சில இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வேடிக்கையாகப் பயன்படுத்தும் கலாத்தல் மொழி (கப்சா), சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் முகக் குறி (emoji) ஆங்கிலச் சொற்களின் தேவையற்ற பாவனை ( சில இடங்களில் தமிழின் அருஞ் சொற்களை விளக்கும் விதமாக வந்த ஆங்கிலச் சொற்கள் பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கின்றன) இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். காரணம் இணைய உலகில் தமிழரின் அடையாளம் மீதான மெய்த்தேடலும், மெய்யான கவலையும் கொண்டு அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைகளோடு இருப்போர் ஒருபுறமிருக்க இன்னொரு பகுதியினர் இந்த அடையாளத் தேடலை ஒரு ஆயுதமாக வைத்துத் தம் கலாய்ப்பு, கல்லெறிதல் நோக்கத்துக்காகவே வெறுமனே பயன்படுத்தும் அவலச் சூழலும் இருக்கிறது. அப்படியானதொரு செயற்பாட்டுக்கு வழி வகுக்குமாற் போல இந்த நூலில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகளை வெறுமனே கடக்கக் கூடாது என்ற நியாயமான காரணத்தாலேயே இவ்வாதங்கம் எழுகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள், நாட்டார் பாடல்கள்
இவற்றைப் பொருத்தமான இடங்களில் எடுத்தாண்ட பாங்கு, இன்றைய நவீன யுகத்தை உள்ளிளுக்கும் meme கருத்தாடல் என்று “அறியப்படாத தமிழ்மொழி” நூல் மிகவும் எளிமையாகத் தமிழ் மொழி மற்றும் கலை, பண்பாடு குறித்த விழிப்புணர்வைக் கொடுக்கிறது.
பள்ளிப் பாட நூலில் சேர்க்க வேண்டிய நேர்த்தியான பகிர்வுகளும் உண்டு.
நூற்றாண்டுகளாகத் தமிழரது மொழி, நாகரிகத்தில் நிகழ்ந்த இடைச் செருகல்களை ஒரே நாளில் தூக்கி எறிந்து விட முடியாது. ஆனால் கால ஓட்டத்தில் எம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கவும், மாற்றிக் கொள்ளவும் இந்த நூல் பேருதவி செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.
கானா பிரபா
25.06.2018
1 comments:
நன்றி உங்கள் நூல் பற்றிய தகவலுக்கு.
Post a Comment