எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட வேளை நாங்கள் தங்கியிருந்த உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தது ஒரு குடும்பம்.
நெற்றியில் மூன்று கோடும் பதிந்த திருநீற்றுப் பட்டையும் நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட அந்தக் கவர்ச்சிகரமான மனிதர் நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் போல இருந்தார்.
அப்பா ஆசிரியராகப் பணி புரியும் தாவடி தமிழ்க் கலைவன் பாடசாலையின் புதிய அதிபர் அநு.வை.நாகராஜன் என்றளவிலேயே அவருக்கான அறிமுகம் எனக்குக் கிட்டியது. தெல்லிப்பழையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தார்கள்.
அந்த நேரத்திலும் கச்சான் கடலைச் சரைப் பேப்பரைக் கூட விட்டு வைக்காமல் படிக்கிறானே இவன் என்று அநு வை நாகராஜன் அவர்கள் என்னை ஓரக் கண்ணால் பார்த்திருக்க வேண்டும். ஒரு நாள் ஒரு பெரிய கட்டு எழுத்துப் பிரதியை என் முன்னால் வைத்தார்.
"காட்டில் ஒரு வாரம்" என்று தன் கைப்பட எழுதிய அந்த சிறுவர் நாவலை எடுத்து முழுமூச்சாகப் படிக்கத் தொடங்கி விட்டேன். அதுவரை இந்திய, ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களிக் சிறுவர் படைப்புகளைத் தேடிய எனக்கு அதுவொரு புது அனுவத்தைக் கொடுத்தது. இலங்கையின் காடும், என் வயதொத்த சிறுவனின் வீர தீரத்தையும் படிக்கப் படிக்கப் புதுமையாக இருந்தது.
சுற்றும் முற்றும் ஷெல் அடியும், துப்பாக்கிச் சூடும் தக தகத்துக் கொண்டிருக்கிறது. படித்து முடித்ததும் அந்த நாவல்
வாசிப்பனுபவம் குறித்து என் கைப்பட எழுதி அவருக்குக் கொடுத்தேன்.
ஒரு சில மாதங்கள் கடந்தது. நூல் வெளியீட்டு விழா அழைப்பொன்றை எனக்கு நீட்டினார். அது நாலாக மடிக்கப்பட்ட "காட்டில் ஒரு வாரம்" நாவல் வெளியீடு யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி இன்ன திகதி, 1988 ஆம் ஆண்டு நடக்கிறது என்று இருந்தது. அந்த விழா அழைப்பிதழின் முதுகைத் திருப்பிப் பார்த்தேன். நான் கைப்பட எழுதிக் கொடுத்ததை "கனக பிரபா" வழங்கிய அணிந்துரை என்று குறிப்பிட்டிருந்தார். பெடியன் எனக்கு ஆச்சரியமும் புழுகமும் பிடிபடவில்லை.
ஓவியர் ஆசை இராசய்யாவின் வண்ணம் கலந்த அட்டையோடு காட்டில் ஒரு வாரம் நாவல் மேசையில் பகட்டாக இருக்க, ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகள் சொக்கன், சிற்பி சரவணபவன் (அப்போது வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபர் இவர்) , செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் உள்ளிட்ட இன்னும் பல ஜாம்பவான்களை அந்த மேடையில் கண்டதே பெரும் பேறாக அப்போது நினைத்தேன். காரணம் இவர்களையெல்லாம் ஈழநாடு, வீரகேசரி, ஈழ முரசு, மல்லிகை வழியாகத் தானே பார்த்திருந்தேன் இதுநாள் வரை. அந்த நிகழ்வில் எழுத்தாளப் பெருந்தகைகளோடு, தான் அதிபராக இருக்கும் தாவடி இந்துத் தமிழ்க் கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்த
மாணவிகளையும் அழைத்து நூல் ஆய்வு விமர்சன அரங்கை வைத்தார். அந்த நிகழ்வு போல நூலைப் "படித்து" அக்கு வேறு ஆணி வேறாக நிகழ்த்திய கூட்டத்தை நான் இது நாள் வரை பார்த்ததில்லை.
அந்தக் கூட்டத்தில் தான் செங்கை ஆழியானை நேரில் கண்டு அவரின் கையெழுத்தை நூலின் உள் அட்டையில் வாங்கியது பற்றி முன்னர் சொல்லியிருந்தேன்.
அந்த ஆண்டுக்கான சாகித்திய இலக்கியப் பரிசைப் பெற்றது "காட்டில் ஒரு வாரம்" சிறுவர் நவீனம்.
ஈழத்து முன்னோடிச் சிறுவர் நாவலாகக் கொள்ளப்படும் நவசோதி எழுதிய "ஓடிப் போனவன்"
நாவலையும் அந்தக் காலத்தில் தேடிப் படித்தது மறக்க முடியாத அனுபவம். அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்து வருக் முருகபூபதி அண்ணரின் பாட்டி சொன்ன கதைகள் (தமிழகத்தில் பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது), கவிஞர் அம்பி போன்றவர்களின் சிறுவர் இலக்கியங்களைப் பின்னாளில் நுகரும் வாய்ப்புக் கிட்டியது. அநு.வை.நாகராஜன் அவர்கள் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்திலும், ஆன்மிகப் படைப்புகளிலும் வழங்கிய பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதவை.
ஈழத்து நூலகம் தளத்தில் அவரின் நூல்கள் சிலது படிக்கக் கிடைக்கின்றன.
http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாகராஜன்,_அநு._வை.
அநு.வை.நாகராஜன் அவர்கள் குறித்து வெளிவந்த, சிற்பி எழுதிய மல்லிகை அட்டைப்படக் கட்டுரை
என் அணிந்துரையைப் பொறித்து வந்த புத்தகம், ஆதர்ச எழுத்தாளரின் கையெழுத்தும் வாழ்த்தும் எழுதிய அந்தப் புத்தகம் காலவோட்டத்தில் தொலைந்து போனது. பல்லாண்டுகள் கழித்து தாயகப் பயணத்தில் அவரைச் சந்திக்கப் போன போது காட்டில் ஒரு வாரம் நாவலின் ஒரு பிரதியாவது கிட்டுமா என்ற நப்பாசையோடு கதவைத் தட்டினேன். அந்தக் கால இடவெளியில் நோய் அவரைச் சூறையாடி நாற்காலிக்குள் முடக்கிப் போட்டிருந்தது. என்னை நினைவுபடுத்த முயன்று பார்த்தார். அந்த நிலையில் புத்தகத்தைப் பற்றிப் பேசாதிருந்து சுகம் மட்டும் விசாரித்து அடுத்த சந்தர்ப்பத்தில் அதைப் பற்றிப் பேசுவோம் என்று மனதை அடக்கிக் கொண்டேன். அவரின் இறப்புச் செய்தி முந்திக் கொண்டது.
அநு.வை.நாகராஜன் அவர்கள் மறைந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள். தன் படைப்பு எட்டக் கூடிய வாசகனின் நாடித் துடிப்பு அறிய அவனுக்கு அதை நுகர்ந்து பார்க்க வைக்கவும், கருத்துக் கேட்டுச் சீர்திருத்தவும் எத்தனை படைப்பாளிகள் இறங்கி வருவார்கள். இன்று அவரது நினைவு நாளில் அநு.வை.நாகராஜன் அவர்களின் அந்தப் பண்பே நினைப்புக்கு வருகிறது.
1 comments:
படைப்புகள் போற்றப்படுகிறவரை
படைப்பாளனுக்கு என்றுமே அழிவில்லை!
அன்னாரின் பெருந்தன்மையும் அதை தாங்கள் விவரித்த விதமும் நெகிழ செய்தன!
Post a Comment