ஒரு சுபயோக சுப தினத்தில் எங்கள் பாடசாலைக்கு ஒரு கொம்பியூட்டர் வந்த செய்தியை, காலைவேளைக் கூட்டுப்பிரார்த்தனை முடிந்த கையோடு அறிவிக்கிறார் பாடசாலை அதிபர். எங்களுக்கெல்லாம் வலு சந்தோசம் இருக்காதா பின்னை. விக்ரம் படத்திலை தான் கம்பியூட்டர் எண்டால் என்னவென்ற ஒரு அடிப்படை அறிவு வந்தது. சுஜாதா அந்த நேரம் குமுதத்தில் தொடராக எழுதேக்கை எல்லாம் சதுரம் சதுரமான எழுத்துகளோட வரும்போதே அதைப் பார்த்து கொப்பியில் அச்சடித்தது போல எழுதிப்பார்க்கிறது வழக்கம். லையன்னா, ளனா எல்லாம் சதுரம் சதுரமா சின்னச் சின்ன முக்கோணமா எழுதி "இப்பிடித்தான்ரா கொம்பியூட்டர் மனுசர் சொல்லச் சொல்ல எழுதுமாம், மனுசர் என்ன கேட்டாலும் டக்கு டக்கு எண்டு சொல்லும் கொம்பியூட்டர் மூளை" என்று கூட்டாளிமாருக்குப் பீலா விட்டிருந்த நேரம், சொன்ன சாமானே எங்கட படலைக்குள் வந்தால் எப்படி இருக்கும் எங்களுக்கு.
கொம்பியூட்டருக்கு என்று ஒரு தனி அறை ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
அதுவரை இன்னொரு வகுப்பறையாக இருந்த அந்த அறையில் தனி ஒரு கொம்பியூட்டர் மட்டும் தான் இனிமேல் இருக்கும். "சரி அடுத்ததென்ன கொம்பியூட்டர் பழக எல்லாருக்கு வசதி செய்து கொடுப்பினம், முதல்வேலையா அந்தச் சதுரம் சதுரமா எப்பிடித் தமிழ் எழுதுறது எண்டு கண்டு பிடிக்கவேணும்" என்று மனசுக்குள் ஓராயிரம் கற்பனைக்குதிரைகளை அவிழ்த்து விட்டோம். ஆனால் அடுத்த நாள் அதிபரிடமிருந்து இன்னொரு அறிக்கை மரண அடியாக வந்து விழுந்தது.
"பிள்ளையள் நீங்கள் விருப்பப்பட்டா கொம்பியூட்டர் படிக்கலாம் ஆனால் கணிதம், ஆங்கிலம் இரண்டுக்கும் எண்பது மார்க்ஸ் இற்கு மேலை எடுத்திருக்கோணும்" ஓராயிரம் கற்பனைக் குதிரையும் வாயால் ஊதிப் பெருப்பித்த பலூன் பொசுக்கொண்டு இறங்கின மாதிரி இருந்தது. எனக்கோ, சக கூட்டாளிமாருக்கோ கணிதம் ஆங்கிலம் இரண்டும் ஜென்ம விரோதிகள், சைவசமயம், தமிழ் இரண்டிலும் தொண்ணூறுக்கு மார்க்ஸ் இற்கு மேலை எடுத்தவை என்று ஒரு அறிக்கை வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று மனதுக்குள் புழுங்கினோம். ஆனாலும் ஏற்கனவே கணித பாட நேரத்தில் கொப்பிக்குள் களவாக ராணி காமிக்ஸ் படிக்கிற எங்களுக்கு இன்னொரு சவாலையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் இல்லாததால் பறவாயில்லை என்று எங்களையே மனச்சமாதானம் செய்து கொண்டோம். கொம்பியூட்டர் சிலவேளை கணக்குப் போட்டு நிறுவச் சொல்லிக் கேட்குமோ என்ற மனப்பிராந்தி தான் காரணம்.
B வகுப்புக்காறங்கள் தான் நிறையப்பேர் படிப்பாங்கள் எல்லாரும் கணக்கு, இங்கிலீஷில் சுழியன்கள், பறவாயில்லை கொம்பியூட்டர் படிக்கேலேட்டியும் அதை ஒருக்கால் பார்த்தாலே போதும் என்ற நிலைக்குக் கீழிறங்கி வந்தது தீர்வுத்திட்டம். ஆனால் அதுவும் அவ்வளவு சாத்தியமில்லைப் போல. கொம்பியூட்டர் அறை எப்போதும் இறுக்கமாகப் பூட்டப்படிருந்தது. அறை வாசலில் ஒரு பெரிய கால் துடைப்பு மெத்தை போடப்பட்டு அதுக்குப் பின்னால் இரண்டாம் கட்டக் கால் துடைக்கும் துணியும் போடப்பட்டு இருந்தது. கொம்பியூட்டர் அறைக்குள்ளை போறவை கண்டிப்பாக சப்பாத்து, செருப்பை அறைக்கு அரை அடி தூரத்தில் கழற்றி வைக்கவேணும், தூசு, அழுக்கு ஒண்டும் கொம்பியூட்டருக்குள்ளை போகக்கூடாது என்ற கட்டளையாம். அதை விட, கொம்பியூட்டர் படிக்கிறவையைத் தவிர யாரும் உள் நுழைய முடியாது என்ற ஒரு தடுப்புக்காவலும் போடப்பட்டிருந்தது. மோகனதாஸ் மாஸ்டர் தான் பொறுப்பாகக் கவனிப்பார் என்று அவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
"வாரத்தில் இரண்டு நாள், ஒவ்வொரு மணி நேரம் தான் கொம்பியூட்டர் கிளாஸ் நடக்குமாம் இதுவரை கொம்பியூட்டரை எப்பிடி திறக்கிறது, மூடுறது எண்டு காட்டித்தந்திருக்கினம்" கிளாசுக்குப் போற B வகுப்புக்காறப் பெடியன் சொன்னன். ஒரு நாள் கொம்பியூட்டர் வகுப்பு நடக்கிற நேரம் அந்தப் பக்கமாய்ப் போய் எட்டிப்பார்ப்போம் என்று கூட்டாளி ஒருத்தனோட எங்கட வகுப்பறையில் இருந்து வெளிக்கிட்டாச்சு. வழி தெருவில மகேந்திரன் மாஸ்டரைக் காணக்கூடாது, கண்டால் "எங்கையடா வகுப்பு நேரத்திலை திரியிறீங்கள்" என்று சொல்லிக் கண் மண் பாராமல் கராத்தே பழகிவிடுவார். ஒரு வழியாக கொம்பியூட்டர் அறைப்பக்கம் வந்தாச்சு. ஆனால் உள்ளே வகுப்பு நடந்தாலும் அந்த அறை பூஸா தடுப்பு முகாம் போல பலத்த காவலோடு பூட்டப்பட்டிருந்தது. வெளியில ஒரு பொலிஸ்காறனைப் போடாதது தான் இல்லாத குறை கண்டியளோ. கதவு நீக்கலுக்குள்ளால (ஓட்டை) எட்டிப்பார்த்தால் சின்ன வெள்ளைப்பெட்டியைச் சுத்திப் பெடியள் நிக்கிறாங்கள். அதைத் தவிர எதுவும் தெரியவில்லை. இதுக்கு மேலையும் இந்த இடத்தில் மினக்கெட்டால் மகேந்திரன் மாஸ்டர், கராத்தே என்று பயம் தொற்றிக்கொள்ள அந்த இடத்தில் இருந்து விலகியாச்சு.
சில காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக ஊர் முழுக்க "கொம்பியூட்டர் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்" எண்டு புது நோட்டீஸ்கள், கொம்பியூட்டர் இப்ப வெளி உலகையும் சந்திக்க வந்துட்டுது தனியார் கல்வி நிறுவனங்கள் வழியாக. ஆனாலும் ஒன்றிரண்டு தான் அப்போது. முன்னை நாளிலை ஏ.எல் (பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு) எடுத்துப் போட்டு ரைப்பிங் கிளாஸ் போறம் என்று லெவலாகச் சொன்ன பெடி பெட்டையள் காலம் போய், "கொம்பியூட்டர் கிளாசுக்குப் போறன்" என்று பெருமையடித்துக் கொள்ளும் காலமாகிவிட்டது. டைப்ரைட்டர் எல்லாம் மியூசித்தில் சேர்க்கவேண்டிய வஸ்து ஆகிவிட்டன.
ஆனால் அந்தக் கொடுப்பினை இல்லாமலேயே நான் அவுஸ்திரேலியா வந்து பல்கலைக்கழகப் படிப்புக்குப் போக முன்னர் ஆறு மாதம் கொம்பியூட்டர் பழகலாம் என்று மெல்பர்னில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படித்தேன். அப்போதெல்லாம் ப்ளொப்பி டிஸ்க் கருப்பான பெரிய கொப்பி சைசில் இருக்கும். அதை வாங்கி வச்சிருக்கிறதே ஒரு பெருமை தான். அப்போது பேர்த் நகரத்துக்கு வந்து சேர்ந்த கூட்டாளி உமாகரனும் போனில் பேசும் போது "மச்சான் பிரபு ! நான் எதையும் தாண்டிப்போடுவன் ஆனால் இந்தக் கொம்பியூட்டரைத் திறந்தால் தான் வயித்தைக் கலக்குது" என்று அநியாயத்துக்குக் கிலி கொண்டு பேச நான் ஆறுதல் கொடுத்தது இப்ப நினைவுக்கு வருகுது.
1996 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரு கொம்பியூட்டரை வாங்க முடிவெடுத்து என் சேமிப்புக் காசு எல்லாத்தையும் நிரப்பி இரண்டாயிரத்துச் சொச்சம் டொலருக்கு ஒரு கொம்பியூட்டர் வாங்கியாச்சு, அந்தக் காசு இப்ப ஐயாயிரம் டொலர் பெறும். என்னோடு மெல்பர்னில் அறைத்தோழனாக இருந்த கோயம்புத்தூர் பெடியன் சதீஷ், "முதல் வேலையா அந்தக் கொம்பியூட்டர் பெட்டியை சுவாமி அறைக்குக் கொண்டு போய் அங்கை வச்சுப் பிரிங்க, அப்புறமா சாமி படத்துக்கு வேண்டி, கம்பியூட்டருக்கு ஊது வத்தி காட்டிடுங்க, திருநீற்றையும் அது மேல தடவிடுங்க பிரபா" என்று திடீர் புரோகிதராக சமய விளக்கம் சொல்ல அதன் படியே நடந்தது எல்லாம். கொம்பியூட்டர் பாவிக்காத நேரம் அதைச் சுற்றி வந்த பாலித்தீன் பையினால் மூடி, போதாக்குறைக்கு இன்னொரு துண்டையும் போர்த்தி விடுவோம். அந்த நேரம் கொம்பியூட்டர் வாங்க வசதிப்படாத நண்பர்களுக்கும் எங்கள் வீட்டுக் கொம்பியூட்டர் தான் கதி. சாமம் சாமமாக இருந்து பல்கலைக்கழக அசைன்மெண்ட் செய்த கூட்டாளிமாரும் உண்டு.
மெல்ல மெல்ல இணையமும் பிடிபட ஆரம்பித்தது, அப்போது மிகச் சொற்ப தமிழ்த்தளங்கள் தான். ஈழம் செய்திச் சேவை என்று லண்டனில் இயங்கிய தமீழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகத்தில் இருந்து தினமும் ஸ்கான் செய்து போட்ட தமிழ்ச்செய்திகளைப் படிப்பதே அலாதிப்பிரியம், அப்போது அது இலுப்பைப்பூ அல்லவோ.
அவுஸ்திரேலியா வந்து பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். ஊர் முழுக்க இன்ரநெற் கஃபே தான், ஸ்கைப்பில் பேச, கொம்பியூட்டர் கேம் விளையாட, கொம்பியூட்டர் மூலம் வெளிநாட்டு அழைப்புக்களை ஏற்படுத்த எல்லாம் வசதி உண்டு என்று கொட்டை கொட்டையான எழுத்துகளுடன் திடீர்க் கடைகள் வந்து குமிந்து விட்டன. ஆனாலும் செருப்பைக் கழற்றிவிட்டு கடைக்கு உள்ளே நுழையவும் என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை.
ஒருமுறை யாழ்ப்பாணம் லேடீஸ் கொலிஜ் இற்கு முன்னால இருந்த இன்ரநெற் கடையில் இப்படியானதொரு அறிவிப்பைப் பார்த்து, அவுசியில் இருந்து வாங்கிப்போன புதுக் காலணியை வெளியே கிடத்திவிட்டு அரை மணி நேரம் ஈமெயில் பார்த்து விட்டு வந்தால், அந்தக் காலணிகள் மாயம். அந்தக் கொடும் வெயிலில் வெறுங்காலோடு சைக்கிள் மிதித்து யாழ்ப்பாணம் நியூ மார்க்கெட் வந்து பாட்டாக் கடையில் செருப்பு வாங்கிப் போட்டுக் கொண்டு இணுவிலுக்குப் போனேன். இன்றைக்கு எங்கள் கிராமத்தில் கொம்பியூட்டர் இல்லாத வீடே கிடையாது. டிவிக்குப் பதிலாகப் டிவிடி படம் போட்டுப் பார்க்க வசதி, நாடகமும் யூடியூப் இலை பார்க்கலாம் எல்லோ" என்று சொல்லும் தாய்க்குலங்கள் வரை இந்தக் கொம்பியூட்டரின் பரிணாமம் பரந்து விரிந்திருக்கிறது. ஏதேனும் கஷ்டமான காரியத்துக்கு மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாலும் எண்பது வயது கந்தையா அண்ணை "உந்தக் கொம்பியூட்டரிட்டக் கேட்டுப் பாரன்" என்று ஆலோசனை சொல்லுறார்.
ஆனாலும் எனக்கு இன்று வரை புரிபடாத விடயம் "ஏன் கொம்பியூட்டர் திறந்து மூட கணிதமும் ஆங்கிலமும் படிக்கவேணும்" எண்டதுதான்.
20 comments:
சுவாரசியமான பதிவு :)
Super Praba. Enjoyed reading this one. As I recall, many postsecondary students who came here to Canada, in the 90's and 00's from SL, had to struggle or change career paths due to lack of computer knowledge, coupled with weak English skills. They excelled in math and science and obviously everyone wanted to be an engineer!
-Kaj
நன்றி புலவர் தருமி :-)
Kaj
மிக்க நன்றி வாசித்துக் கருத்தளித்தமைக்கு
அற்புதமானப் பதிவு! தீண்டாமை மாதிரி இந்த ஆங்கிலமும் கணிதமும் தெரிந்தால் தான் கம்பியுட்டர் என்னும் கொடுமையான விதி. அதையும் எத்தனை நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள் :-) இதில் கம்பியுட்டர் ஆரம்ப கால சரித்திரமும் அடங்கியுள்ளது! Kudos!
amas32
ரொம்ப நன்றாக உள்ளது. நம் எல்லார் மனதிலும் இதே எண்ணங்கள்தான் இருந்தது அப்பொழுது. உங்கள் தமிழைக் கண்டு நாங்களெல்லாம் வெட்கப்படவேணும். வாழ்க நீங்கள் இறைவனருளால்.
அருமையான நினைவுப்பதிவுகள்! கண்கள் பனித்தன! இடமும்,காலமும், வேறு வேறு ஆனால் பருவமும் அனுபவித்தல்களும் வந்த பாதைகளும் ஒன்றாகவே இருக்கிறது எங்கணும். Today's everything at your discretion days don't give you the thrill of nothing you are privileged with days.
ஒவொவொரு அனுமதி மறுப்பிலும் ஒரு வைராக்கியம் விதைக்கப்பட்டது; ஏக்கங்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் - வெற்றிகள்.
ஒவ்வோர் இல்லைக்கும் ஒவ்வோர் அவமானம்; ஆங்கிலமும் கணிதமும் deterrents என்பது அவரின் எண்ணங்கள்; அதுவே விதை; அதுவே மூட்டிய தீ;
இன்றைய வெற்றிகளின் பிள்ளையார் சுழி. பகிர்ந்தமைக்கு நன்றி.
வெல்லுவோம், இனியும் வளர்வோம். @Qobit
amas
மிக்க நன்றிம்மா
vasanthigopalan
மிக்க நன்றி வாசித்துக் கருத்தளித்தமைக்கு
Qobit
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-)
Nice bro
This is an intersting write up :)
IT felt like i was watching a short film :)
btw, how come you didnt tell them about the shoe part?
ட்விட்டர் போலவே இங்கும் ஆதே கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் அதிகம் இவ்வழக்கிலேயே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வழக்குச் சொற்களில் பலவற்றை வேறுமாதிரியும்(இன்ரநெற்) புதுச்சொற்களாக (கொப்பி)யும் கிடைத்தன.
பழைய பதிவுகள் வழக்கில் சொல்ல வேண்டுமஎனில் நல்ல ஊதுபத்தி சுற்றல் பதிவு.
சிங்காரவேலன்
மிக்க நன்றி :)
Bhar
:-) ஷூ தொலைந்ததைச் சொன்னேன் அதுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்றார்கள்
MSATHIA
கண்டிப்பாக, நனவிடைதோய்தலை நம்மூர்ப்பேச்சு வழக்கில் எழுதுவேன் :-)
அற்புதமான படைப்பு. இன்னும் எழுத வேணும்.
சிலிர்ப்பும் சிந்தனையும் தூண்டுகின்றது கடந்தகால கணனி அறிமுகத்தை பகிர்ந்த விதம்.
முதன் முதலாக கம்ப்யூட்டர் எங்கள் பள்ளிக்கு வந்த போதும் இப்படிதான்! ஏ. சி ரூமுக்குள்ளே செருப்பு போடாம போவணும் அது இதுன்னு ஏக கெடுபிடி. ஐயே பெரிய கொம்பா அதைப் படிச்சு என்ன செய்யப் போகிறோம்னு தள்ளி வெச்சது நினைவுக்கு வருகிறது கானப்பிரபா. உங்களின் நினைவலைகளில் நீந்தினேன்......
பிரபா , உங்களை அடிசசுக்குவே முடியாது .வாழ்த்துக்கள் நண்பா
Post a Comment