இந்தச் சம்பவம் நடந்து இற்றைக்கு பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதாவது ஒருநாள் என் நினைவின் அடுக்குகளில் இருந்து ஏதோ ஒரு சமயத்தில் ஞாபகத்தில் எழுந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் அப்படியே மீண்டும் நினைப்பூட்டிவிட்டது விஸ்வரூபம் படம் பார்த்த பின்.
1995 ஆம் ஆண்டு, தாயகத்தில் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிக்கட்டிலைப் பிடிக்கிறார். மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிறது ஆனால் அதுவும் கானல் நீர் தான் என்று உணரும் சமயம் வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரர், அப்போது கொழும்பில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது மெல்பேர்னில் இருக்கும் அந்தக் கல்லூரிக்கு முகவராக கொழும்பில் உள்ள சிங்களவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னுடன் இரண்டு சிங்களப் பெண்களும், மூன்று சிங்கள ஆண்களுடன் ஒற்றைத் தமிழனாக மெல்பேர்னுக்கு வருகிறேன். வந்த பின்னர் நடந்த சதிராட்டங்கள் தனி நாவல் அளவுக்குப் போடவேண்டியவை. ஆனால் அதுவல்ல இங்கே நான் சொல்ல வந்தது.
மெல்பனுக்கு வந்த அந்த ஒரு மாதமும் எல்லோருமே ஒரே வீட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொண்டே அந்த ஒரு மாதத்தில் இருப்பிடம் பார்த்து, கிட்டியபின் வீடு மாறுவதாகத் திட்டம். ஐந்து சிங்கள நண்பர்களுக்கும் எனக்கும் ஒரே ஊடக மொழி ஆங்கிலம், காரணம் அசல் யாழ்ப்பாணத்தான் எனக்குத் தமிழைத் தவிர சிங்களத்தைக் கற்கும் வேளையும், வேலையும் இருகவில்லை. அவர்களில் நிமால் என்ற ஒரே ஒருத்தன் மட்டும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசினான், தமிழ்ப்படங்களை விரும்பிப்பார்ப்பேன் என்றும் அப்போது வந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கள் பிடிக்கும் என்றும் "சின்னச் சின்ன ஆசை" பாட்டை சிங்களத் தமிழில் பாடியெல்லாம் காட்டிக் கொண்டு வந்தான். மற்றவர்கள் என்னோடு அதிகம் பேசாவிட்டாலும் ஓரளவு சமாளித்துக் கொண்டு இருந்தார்கள்.
கல்லூரியில் முதல் நாள் வகுப்பு, அந்த வகுப்பில் ஆங்கிலேயர்களை விட, சீனர், ஜப்பானியர், கொரியர் என்று பிற ஆசிய நாட்டவரே சூழ வலம் வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியர் வந்து விட்டார். ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்தச் சொல்லக் கேட்கின்றார். சீனத்துப் பெடியன், ஜப்பானியப் பெண், கொரிய ஆண், ஜப்பானிய ஆண் என்று ஒவ்வொருவராக தாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.
ஐந்து சிங்களவர்களைக் கடந்து ஆறாவதாக நான், எழுந்து நின்று "சிறீலங்காவில் இருந்து வருகின்றேன், என் தாய் மொழி தமிழ்" என்றும் சொல்கிறேன்.
"டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்" குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன். ஆனாலும் ஓரக்கண்ணால் நிமாலைப் பார்க்கிறேன், அவன் எனக்கு ஆதரவாக ஏதாவது பேசித் திசை திருப்புவானோ என்று. அவனின் கண்ணாடியும் சேர்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கோ முன்பின் இப்படியானதொரு தாக்குதலைச் சந்திக்காத தருணம் இருபதை எட்டிப்பிடித்தாலும் ஆசிரியைத் தாயின் சேலைத்தலைப்புக்குள் அடங்கிய செல்லப்பிள்ளையாக அதுநாள் வரை வளர்ந்துவிட்டேனே, (இன்று அப்படி நடந்திருந்தால் நிலமை வேறு ;-) ) ஆனாலும் அந்தக் கண நொடிகளுக்குள் சுதாகரித்துக் கொண்டு ஆசிரியரும் லக்மாலின் கதையைப் பொருட்படுத்தாது அடுத்த மாணவனைக் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த நாளே மெல்பேர்னில் உள்ள ஒரு தமிழர் மூலம் எனக்கு உறைவிடம் கிட்டி நான் விலகிப் போனேன். அந்தச் சம்பவம் எனக்கு மட்டுமல்ல, என் போன்ற சமூகத்தினருக்கு ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் ஒருமுறையாவது கிட்டியிருக்கும்.
விஸ்வரூபம் படம் வரப்போகிறது என்பதைக் காட்டும் trailer முதற்கொண்டு, பாடல்கள் வரை என்னைப் பெரிதாக ஆக்கிரமிக்கவில்லை. அதற்கு முதற்காரணம், தமிழில் சண்டைப்படங்களை எல்லாம் தியேட்டர் சென்று பார்க்குமளவுக்கு மனோதைரியம் எனக்கில்லை. விதிவிலக்காக ஷங்கர் படங்களைப் பார்ப்பதற்கு அவர் கொடுக்கும் காட்சிகளின் பிரமாண்டமும், ரஜினி படங்கள் என்றால் கிட்டும் முழு நீளப் பொழுது போக்குமே காரணம். அதையும் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு என்னை தியேட்டருக்கு இழுத்தது இந்தப் படம் கிளப்பிய சர்ச்சைகள் தான். எனவே சர்ச்சைகளும் படம் பார்க்க விரும்பாதவனைத் தியேட்டருக்கு இழுக்கும் என்பதற்கு நான் நல்ல உதாரணம் ;-)
விஸ்வரூபம் ஒரு சாதா தமிழ் மசாலாப் படமாகத்தானே இருக்கும் என்ற என் நினைப்பை அடியோடு மாற்றிவிட்டது படத்தின் ஆரம்பித்தில் இருந்து. என்னளவில் இந்தப் படம் தமிழ் சினிமா என்ற ரீதியில் புதிய அனுபவமாக அமைந்தது. அதற்கு கமலில் இருந்து பொருத்தமான அளவான நடிகர் தேர்வு, காட்சிக் களம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, மிகமுக்கியமாக எடிட்டிங் ஆகியவை சொல்லி வைக்கவேண்டிய ஒற்றுமைக் கூட்டு. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை போரடிக்காத காய் நகர்த்தல்கள், முடியும் போது அடுத்த பாகம் வரும் என்றபோது எழும் எதிர்பார்ப்பு வரை கமல்ஹாசனுக்கான வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஏதோவொரு அம்சத்தில் தூர நோக்கு என்ற கமலின் பலத்தை, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சரியில்லாத சேர்க்கை பாழாக்கிவிடும். கமல் எட்டடி பாய்ந்தால் கூட இருக்கும் ரவிக்குமார்கள் பதினாறு அடி கீழே தள்ளிவிடுவார்கள். தசாவதாரத்தில் வரும் மொக்கை மசாலா இடைச்செருகல், சந்தானபாரதித்தனமான வில்லன்கள் சரியான சான்று.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை கமலோடு கூட உழைத்தவர்களும் சரி, அவருக்குப் பின்னணியில் இருந்த ஆலோசகர்களும் சரியாகவே இயங்கியிருக்கிறார்கள் படத்தின் உருவாக்கம் என்ற ரீதியில். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கேரளச் சூழலில் இயங்கும் மெது ஓட்டமான மலையாளப்படத்தைத் தமிழ்ப்படத்தோடும், தமிழ்ப்படத்தை ஆங்கிலப்படத்தோடும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம் இல்லை. அந்தந்த சினிமாக்கள் அவரவர் எல்லையில் இருந்து திருப்திப்படுத்தியிருக்கின்றனவா என்றே பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வேன். அந்தவகையில் விஸ்வரூபம் இதுவரை நான் கண்ட தமிழ் சினிமாக்களில் மேம்பட்ட தரம் கொண்டது என்பேன். ஏதோவொரு டொரண்ட்டில் நோண்டியும், பஜாரில் கிடைக்கும் டிவிடியிலும் இந்தப் படம் தியேட்டரில் கொடுக்கும் உன்னத அனுபவத்தில் ஒருவீதமேனும் நிறைவேற்றாது என்பபேன்.
விஸ்வரூபம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய படமே அல்ல.
விஸ்வரூபம் படத்தின் நெருடல்கள் என்ற வகையில் இரண்டே இரண்டு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கின்றன.
நெருடல் ஒன்று "அமெரிக்கன் பெண்களையும், குழந்தைகளையும் ஒண்ணும் பண்ணமாட்டான்" என்று கமல் சொல்லும் போது வயிறு குலுங்கிச் சிரிக்கத் தோன்றுகிறது. இதுவரை கமல் ஆஸ்காருக்கு அனுப்பிய படங்களை விட விஸ்வரூபம் தான் தொழில் நுட்ப ரீதியில் மேம்பட்டது, கவனிக்கப்படவேண்டியது என்பதால், அமெரிக்கனுக்கு காக்காய் பிடித்து அந்தப் பக்கத்தையும் கவனித்துவிடுவோம் என்று கமல் எண்ணினாரோ தெரியவில்லை.
என்னதான் இன்னொரு நாட்டுத் தீவிரவாதி அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும், தொடர் காட்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் என்னையே கொஞ்சம் நெளிய வைக்கிறது. காரணம் நாம் வாழும் சூழல் அப்படி. ஒரு படைப்பைப் பகுத்துப் பார்த்து அது எந்த விஷயத்தை முக்கியமாகச் சொல்லிவைக்கின்றது என்ற அளவுக்கு நம் தமிழ்ச்சூழலுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பேன். இந்தச் சூழலில் இப்படியொரு படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் தலிபானாக கமல் நடிப்பார் என்று சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர மூளையும் அவருக்கு இல்லை. கமல் போன்ற மூத்த கலைஞனுக்குப் பொறுப்புணர்வு மிக முக்கியம்.
இப்பொழுதே சமூக வலைத்தளங்கள் ஈறாக கோஷ்டி பிரித்து மதச்சண்டை அளவில் வீணான சர்ச்சைகள். அல்லாவின் நாமத்தைத் தொடர் காட்சிகளில் வைக்கும் போது சக இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தாது, அப்படியே புண்படுத்தினாலும் கண்டுக்காதீங்க என்ற ரீதியில் வரும் ஒப்புச்சப்புக்களைச் சொல்ல நான் யார்?
இந்தப் படத்தைத் திரையிடத் தமிழக அரசு தடைவிதித்ததன் நியாய தர்மங்கள் இங்கே தான் பிறக்கின்றன.
சிறுபான்மை இனத்தவன் என்ற ரீதியில் ஏதோவொருவகையில் நானும் என் சார்ந்த சமூகமும் கிட்டத்தட்ட இதேரீதியான மன உளைச்சலில் இருப்பதால் என்னை இந்தக் காட்சியமைப்புக்கள் அதிகம் பாதித்திருக்கலாம்.
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.
வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.
ஆதங்கப்படுவதற்கும் சுதந்திரம் உண்டுதானே?
18 comments:
சிறுபான்மை.... தீவிரவாத பயம்.. வாழ்விலிருந்தே ஒரு எ.கா'வா..! சரியான சொல்லாடல்கள் தான் அருமையாய் பொருத்தி.. பொருந்தி வந்திருக்கிறது.
அமீர் கான் ஹிந்தியில் இது போன்ற சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு படமெடுக்க அதற்கு மத ஜாதி அமைப்புக்கள் எதிர்ப்பு ..
இங்கேயும் கமலுக்கு அதே போன்றதொரு எதிர்ப்பு....அனுபவம்.
கமலுக்கும், அமீருக்கும் நிகழ்ந்த நிகழ்வுகள் "பொறுப்புள்ளவர்களாக" மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சி.
சமூகத்தில் மக்களின் வழக்கத்தையும், பழக்கத்தையும் தீர்மானிப்பது இந்த கலாச்சாரக்காவலர்கள் எனப்படும் அரசியல் வேஷம் போட்ட ஓநாய்கள் தான். இப்படிபட்ட மனஊனமான ஓநாய்களின் ரத்த தாகத்தை தீர்க்கும் அரசியல் உண்மையான கலைஞனுக்கு புரியாமல் போவதில் வியப்பில்லைதான்.
ஏன் முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் இதே படம் வெளியிடப்பட்டுள்ளதே. அதும் இஸ்லாம் நெறியை பின்பற்றும் பெரும்பான்மை மக்கள் கொண்ட நாடு.
சிறுபான்மை அதிலும் தீவிரவாதி என்றொரு பயம் விதிக்கப்பட்டுள்ளது... அதை களைய.., நீங்கள் சொன்னது போல் "கமல் போன்ற மூத்த கலைஞனுக்குப் பொறுப்புணர்வு மிக முக்கியம்".
அதுவும் கூத்தாடி என்றதொரு நிலை தாண்டி பொழுதுபோக்கு தொழில் நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லும் ஒரு மெஸ்ஸையாவாக... கொஞ்சம் நாசூக்காக விளையாண்டிருக்கலாம்.
நிதர்சனமான உண்மை நண்பரே அருமையான பதிவு மனிதாபிமானமும் சகோதரத்துவமும் காணாமல் போய் விடுமோ என்ற நிலையில் தான் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது வலிமையுள்ளவன் வலிமையற்றவனை விழுங்கி வியாபாரம் பார்க்கிறான் விலிமையற்றவன் சூழ்நிலை கைதியாகிறான்.
முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற செய்தியையா படம் வலியுறுத்துகிறது.இன்றைக்கு நடப்பது என்ன - யார் பாகிஸ்தானில்,அல்ஜீரியாவில்,மாலியில் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிக்கிறார்கள்.அது பயங்கரவாதமா இல்லையா. சமூக நல்லிணக்கம் என்பது உண்மைகளை மறைப்பதன் மூலம் வருமா.26/11 பொய்,தலிபான்கள் இல்லை என்று சொல்லிவிட்டால் வந்துவிடுமா.26/11க்கு எதிர்ப்பாக சாலைக்கு வராத அமைப்புகள், பாகிஸ்தானை அதற்காக கண்டித்து கூட்டறிக்கை விடாத அமைப்புகள் விஸ்வரூபத்தை தடை செய்யக் கோருவது என்ன நியாயம். ஒரு தமிழனாக,இந்தியனாக அந்த தீவீரவாதத்தினை நேரடியாக,மறைமுகமாக ஆதரிப்பவர்களை நான் எப்படி ஆதரிக்க முடியும்.
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஸ்வரூபம் கலை அல்ல களை..
தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும் என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.
இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும், அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள்.
அப்படி இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின் நிர்வாணம்.
கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.
அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது என்று காட்டுகிறார்.
இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு இல்லை.
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..
தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அயல்நாட்டு போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.
வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம் பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும்,
ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக் என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.
இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும் உண்மை என்பது வேறு கதை) என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான்.
ஒருவேளை கமலின் நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம்.
இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர கண்ட பின் கமலின் ஆஸ்கார் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும் போலிருக்கிறது.
, கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார் என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.
ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்பது திண்ணம்.
இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம் எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது தமிழ்நாட்டில் ரொம்ப எளிது.
இதில் கமலுக்கு என்னதான் லாபம்?
ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும் செய்து வருகிறார்.
இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன் இருக்கக்கூடாது?
தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு?
கமலின் இந்த பிரச்சாரம் வெறும் கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது?
மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க கைகூலிங்குறான்.
ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு தோணுது!”
இந்த படம் வெளியாக வேண்டும்.
தமிழ் மக்கள் அதை பார்த்து கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
கமல்ஹாசன் உட்பட இந்த படத்தின் மூளையாக செயல்பட்ட அத்துணை பேரையும் மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும்.
அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும்.
உடனடியாக தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள் புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும்.
இத்தகைய படத்தினால் விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும்
இது உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் தங்கசாமி அவர்களின் முகநூலில் இருந்து பகுதி இது…….
>>>>>> முழுதும் படிக்க
THANKS TO SOURCE: http://manithaabimaani.blogspot.com/2013/01/blog-post_27.html
இவ்வளவு தீவீரமான பார்வைகள் இல்லாத சில வருடங்களுக்கு முன்பே, 10 பேராக மொழி தெரியாத தூர மாநிலத்தில் (எல்லாம் ஒரே தேசத்தினர், பெரும்பான்மையாக தமிழர்) வேலைக்கு சேர்ந்த புதிதில் வீடு தேடுகையில், எல்லாம் சரியாய் அமைந்து advance கொடுக்கும்போது, எங்களில் ஒருவர் இஸ்லாமியர் என தெரிந்ததும், அவரை கழட்டிவிடுங்கள் வீடு தருகிறேன் என சொன்னது எங்கள் எல்லோருக்கும் முதல் முறை அதிர்ச்சி.. அவருக்கு எப்படி இருந்திருக்கும்..
அந்த நினைவே இந்த படப்பிரச்சனையின்போதும், பார்த்த சிலர் (இஸ்லாமியர் அல்லாதவர்), இதில் மோசமான சித்தரிப்பு இல்லை, இந்து மதத்தை சித்தரித்தபோது நாங்க என்ன எதிர்ப்பா தெரிவித்தோம் (நாங்க எவ்ளோ சகிப்புத்தன்மை கொண்டவுங்கனு) சொல்லும்போதெல்லாம்.. இவர்களெல்லாம் மற்றவர்களுடன் பழகியியே இருக்கமாட்டார்கள் என்றுதான் தோணுது..
பகிர்ந்தமைக்கு நன்றி.... எல்லோருக்கும் நீங்க சொல்லவந்து புரிந்து நடந்துகொள்வோம் என நம்புகிறேன்..
படத்தைப் பாக்கததால படம் பற்றிய கருத்துகளைச் சொல்லல.
அந்தச் சூழ்நிலையில் உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனாது ஆச்சு. போனது போச்சு. இனிமேலாவது இருப்பவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
பொதுவில் மதங்களுக்கு இடையில் இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. இது எங்கு போய் முடியுமோ! :(
niyayamana pathivu sir
Pure Honest on your writings including the sentences in your profile.....!!!!!!!!!!
Thanks a lot for registering your honest view!!!!!!!
அனுபவத்தினூடாக அருமையான கருத்தாக்கம்.
கொடுத்துவச்சவரு தல நீங்க...படத்தை பார்த்துட்டிங்க.. ;))
//நெருடல் ஒன்று "அமெரிக்கன் பெண்களையும், குழந்தைகளையும் ஒண்ணும் பண்ணமாட்டான்" என்று கமல் சொல்லும் போது வயிறு குலுங்கிச் சிரிக்கத் தோன்றுகிறது.//
குழந்தைகளும் பெண்களும் வசிப்பதால் அமெரிக்கர்கள் இங்கே குண்டு வீச மாட்டர்கள் என்று ஒரு ஆப்கன் தீவிரவாதி சொல்லி கொண்டிருக்கிறார் கமல் அல்ல. சொல்லி முடித்த கணம் அமெரிக்க ராணுவம் அங்கு குண்டு வீசுகிறது. யாரும் நியாயம் பார்ப்பதில்லை என்ற இதையே படத்துக்கான விமர்சனமாக எடுத்து கொள்ளலாம்.
மனதில் முள் தைத்தது போல உள்ளது உங்கள் கல்லூரி முதல் நாள் அனுபவம். எத்தனை சிரமம் புலம் பெயர்ந்த உங்கள் அனைவருக்கும். இதை மற்றவர்கள் யாரும் ஒரு கணப் பொழுதுக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.
ரொம்ப அருமையான விமர்சனம். அரசாங்கம் சிறுபான்மையினரின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்தாக வேண்டும்.
அவர் DTHல் வெளியிட்டிருந்தாலும் தவறு தான். அத்தனை வன்முறைக் காட்சிகள் உள்ள படத்தை வீட்டு வரவேற்பறையில் பார்ப்பது நல்லதில்லையே.
amas32
முஸ்லீம்களின் போராட்டம் அவர்களின் உள்ளக் குமுரளை தான்.காட்டுகிறது. வலி அடிபட்டவனுக்குதான் தெரியும்.இஸ்லாமியர்கலின் போராட்டம் அவர்களின் பெற்ற வலியின் வெளிபாடாகவே நான் பார்கின்றேன்
Good Post
இவை எல்லாம் ஏற்கனவே நடந்துவிட்டது some examples -சர்ச்சைகளும் கமலும் -- மருதநாயகம் படம் எடுத்தல் தமிழ்நாட்டில் நடமடமுடியது என்று கமல் மிரட்டப்பட்டர் .- சண்டியர் - படத்தின் பெயரை மாற்ற கூறி தேனியில் படபிடிப்பு தாக்கப்பட்டது - வசூல்ராஜா MBBS - படத்தின் பெயர் மாற்ற கூறி சென்னை உயர் நீதி மன்றதில் டாக்டர்களால் வழக்கு தொடரப்பட்டது
உங்கள் பதிவு அனுபவத்தோடு சீர்தூக்கிப் பார்த்து வந்திருக்கிறது.படம் திரையிடப்பட்டு ஒரு குழு சார்ந்து என்றில்லாமல் சராசரியாக உள்ள இஸ்லாமியருக்கு விஸ்வரூபம் வேதனையளிக்கிறது என்ற அடிப்படையில் இயல்பாக போராட்டம் துவங்கியிருந்திருக்க வேண்டும்.மாறாக இப்போதைய நிகழ்வுகள் படம் ட்ரெயிலர் காலத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்து விட்டு அமுங்கி போன பின் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கமலுக்குமான பிரச்சினையாக உருவாகி பின் அதுவும் அமுங்கி போனபின் தமிழக அரசியல் உள் நுழைந்து மீண்டும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு படம் போட்டுக்காண்பித்து பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமாகி விட்டது.
சராசரி பார்மூலா சினிமா மட்டும் போதும்,உலகதரம்,கண்ணோட்டம் தமிழர்களுக்கு தேவையில்லையென்றால் சமூகம் சார்ந்த,உலகம் சார்ந்த பிரச்சினைகளை அலசாமல் திரைப்படம் எடுக்கலாம்.
கமல் தமிழ் சினிமா இலக்கணத்தையும் மீறி சிந்திப்பது அவரது குற்றமே.
ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையும் கூட மௌனமாகி பெட்டியில் உறங்குகிறது.காரணம் அரசியல்,சிலரின் உணர்வுகள் பாதிக்கப்படும், இன்னொரு நாட்டின் பிரச்சினை,சில உண்மைகள் திரைப்படம் மூலமாக வெளியே வந்து விடலாம்,இந்திய இறையாண்மைக்கு எதிரானது என பல காரணங்கள் சொல்லலாம்.
ஒரு புறம் உலக திரைப்படங்களையும்,ஈரானிய திரைப்படங்களையும் புகழ்ந்து கொண்டு தமிழ் பார்முலாவுக்கும் வெளியே எட்டிப்பார்க்கும் ஒன்றிரண்டு படங்களையும் சிதைத்து விடுகிறாம்.
விமர்சனங்கள் எதுவும் எழாமல் இருந்திருந்தால் ஒரு மாதம் படம் ஓடி,சில மாதம் தொலைக்காட்சிகளில் பாட்டுக்கள் கேட்டு தமிழகத்தையும்,இந்தியாவையும் இன்னுமொரு திரைப்படம்,இன்னுமொரு பரபரப்பான நிகழ்வு வரும் நேரத்தில் விஸ்வரூபம் அனைவருக்கும் மறந்து போயிருக்கும்.
ஒரு புறம் மதம் சார்ந்த வருத்தம்,இன்னொரு புறம் கமலுக்கான பொருளாதார நஷ்டம் என அனைவருக்கும் இழப்பே.
காயங்கள் மட்டும் வடுக்களாக நிற்கும்.
plz put sharing icons like fb ,tweet,g+ etc.,
Well set:)
Post a Comment