வலைப்பதிவு உலகுக்கு வந்த காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, இணையப்பரப்பில் இருக்கும் சக நண்பர்களை அறிமுகப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் இணைப்பாக இருந்தார் மதி கந்தசாமி. அவரின் வழியாகவே எனக்கு ஈழநாதன் என்ற வலைப்பதிவரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவருடைய வலைப்பதிவு, மற்றும் தட்ஸ்தமிழின் முந்திய பதிப்பு (இந்தியா இன்ஃபோ என நினைக்கிறேன்) வழியாக ஈழநாதன் என்ற ஒரு கவிஞரை அறிந்து கொண்டாலும் இவ்வளவு இளையவர், ஈழத்து இலக்கிங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆகப்பெரிய கனவோடு இருப்பார் என்பதை நான் அவரைச் சந்திக்கும் வரை உணர்ந்ததில்லை. என்னுடைய முதல் சிங்கப்பூர்ப் பயணத்தில் ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று ஒரு குழந்தைக்கு வழிகாட்டுமாற்போல ஒவ்வொன்றாகக் காட்டி மகிழ்ந்தார், முதல் நாள் இரவு வேலை முடிந்த களைப்போ, தூக்கக் கலக்கமோ இல்லாது. "வடிவாச் சாப்பிடுங்கோ பிரபா" தான் வழக்கமாகச் செல்லும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று ஆசை தீரப்பரிமாறினார்.
அதன்பின்னர் மின்னஞ்சல் வழியாக நீண்டது நம் தொடர்பு. எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். "பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ" என்று விதை போட்டார். அவர் சொன்னதை நான் ஒருபக்கமாகச் செய்யத் தொடங்கினேன், அவற்றையே மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஒலிப்பதிவுகளாகவும் இட்டேன். பெரும் இலக்கியக் கனவோடு இருந்தாலும் தன்னுடைய பணிச் சுமை காரணமாக இணையப்பரப்பில் முன்னர் அளவுக்குத் தீவிரமாக இல்லாவிட்டாலும், அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை, ஈழத்துப் பதிவுகள் வரும்போது தன்னுடைய சிந்தனையைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஈழநாதனின் வலைப்பகிர்வுகள் இங்கேயுள்ள அவரின் இணைப்பில் http://www.blogger.com/profile/06819662477238200109
ஈழநாதா! நான் நினைக்கவில்லை இனி உம்மை என் வாழ்வின் எஞ்சிய நாட்களில் சந்திக்காமல் இருக்கப்போகின்றேன் என்று :-(
ஈழநாதனின் பகிர்வு ஒன்று
நீட்டிக்கப்படும் உயிர்வாழ்க்கை
காலையிலிருந்துவானொலிஅலறிக்கொண்டிருக்கிறது.
மீண்டுமொருமுறை
உயிர்வாழும் உரிமை
எங்களுக்கு
நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம்.
தொலைக்காட்சியில் கூட
அடிக்கடி காட்டினார்கள்.
சிரித்த முகத்துடன்
தலைவர்கள்
கைகுலுக்கிக் கொண்டார்கள்.
தேவதைகள் ஆசீர்வதித்தன.
தேவர்கள்பூமாரி பொழிந்தனர்.
வானத்திலிருந்து அசரீரியாய்
வானொலி
பெருங்குரலெடுத்து அலறியது.
சமாதான முன்னெடுப்பாய்
உயிர்வாழும் உரிமை
எங்களுக்கு
நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.
இப்போதைக்கு
உயிர்வாழ மட்டுமேஅனுமதி.
படிப்படியாக
வெளியே நடமாடவும்
பிற செயற்பாடுகளுக்கும்
அனுமதி கிடைக்கும்,
அக்கம் பக்கத்தில்
பேசிக்கொண்டார்கள்.
இப்படியாக
வானொலியும்தொலைக்காட்சியும்
சேதி சொன்ன காலையொன்றில்,
பக்கத்து வீட்டண்ணன்
சுடப்பட்டிறந்தான்.
"ஒருவேளை
உயிர்வாழ்வதற்கானஅவனது விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்."
தன்னைத்தானேதேற்றிக்கொள்ளும்
அவனது தந்தை!
ஈழநாதனைச் சந்தித்த அந்த 2006 நினைவில்
யூன் 10, 2006, சனிக்கிழமை காலை 10.30 மணி
பெங்களூரிலிருந்து வரும் போது ஒரு நாள் சிங்கப்பூரின் தங்குவதாக முடிவெடுத்தேன். ஆசிய நாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் சிங்கப்பூருக்கு இன்னும் செல்லவில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. எனவே அந்த குறையும் இந்தப் பயணத்தோடு தீர்ந்தது.
சிங்கப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது ஈழநாதன். பெங்களுரில் வைத்து ஈழநாதனுக்கு மடல் ஒன்றைத் தட்டியதன் விளைவு அவரும் ஆவலோடு நான் தங்கியிருந்த Pan Pacific ஹோட்டலுக்கு வந்தார்.
நேராக அவர் என்னை அழைத்துப் போனது சிங்கப்பூர் நூலகத்துக்கு. அங்கு அருகில் உள்ள கலையரங்கில் சிங்கபூர் அரசின் அனுரசணையுடன் பல்லின மக்களின் கலைநிகழ்ச்சி வாரமாக அமைந்திருந்தது அது. சிங்கப்பூர் என்றால் வெறும் வர்த்தக நகரம் என்ற இமேஜை மாற்றும் அரசின் ஒரு கட்ட நடவடிக்கையே இந்தக் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளும் ஊக்குவிப்புக்களும் என்றார் ஈழநாதன்.சிங்கப்பூர் நூலகம் சென்றபோது ஓவ்வொரு புத்தகப் பிரிவினையும், சினிமா சம்பந்தப்பட்ட வாடகைக்கைக்கு விடும் சீடிக்கள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தார். ஆளுக்கும் நூலகத்துக்கும் நல்ல பொருத்தம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்
சிராங்க்கூன் சாலை சென்று ஒரு உணவகத்தில் மீன், கணவாய், இறாலுடன் ஈழநாதன் உபயத்தில் (பெடியன் என் காசுப்பையைத் திறக்கவிட்டாத் தானே?) ஒரு வெட்டு வெட்டினோம். காலாற சிராங்கூன் சாலையை அளந்தவாறே புத்தகம், நாட்டு நடப்பு, வலையுலகம் என்று பேசித் தீர்த்தோம்.
முஸ்தபா சென்டர் சென்று சீ.டிக்களின் பிரிவுக்குள் சென்று ஒவ்வொரு சீ.டியாகத் துளாவினோம். நல்ல சீனத்திரைப்படங்களை ஈழநாதன் அடையாளம் காட்டினார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா (மலையாளம்) வீ.சி.டியையும், அச்சுவின்டே அம்மா மலையாள இசை சீ.டி (இளையராஜாவுக்காக) நான் வாங்கவும் நம் சந்திப்பும் பிரியாவிடை கொடுத்து நிறைவேறியது. நிறைய வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதற்கு தன் இளவயதில் நல்ல இலக்கிய சிந்தையுள்ள ஈழநாதன் ஒரு உதாரணம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
14 comments:
அஞ்சலிகள்!
:-( shocking.. What happened?
we miss you too ilanko anna.
மிகுந்த துக்கமளிக்கும் செய்தி.
என்ன பிரபா இது? சின்ன வயசு மாதிரி இருக்கு, மனசுக்கு கஷ்டமாய் இருக்கு :-(
கண்ணீர் அஞ்சலிகள்...!
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக...!
கண்ணீர் அஞ்சலிகள்.
கண்ணீர் அஞ்சலிகள்.
dear Mr. Piraba
im his room mate 2001 to 2003 we are best friend. now im in dubai i last cht with JUly 15 on fb only. ITS SO UN FORGETTABLE. STILL IM ON SHOCK . NO WORDS TO SAY PLEASE SORRY
he is my good friend and room mate and when we in Sinagapore 2001 tp 2003. i so sorry to him its its un forgettable. still im on shock. now in uae. no words to say about to him god bless
நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத் திவ்வுலகு.
அஞ்சலிகள்!
மிகவும் வருத்தம் தரும் செய்தி -:( ஈழத்தமிழரது இலக்கியம் மற்றும் ஆளுமைகள் ஆவணமயமாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியதுடன், "நூலகம்" உருவாக்க எண்ணக் கருவும் அவரிடம் இருந்தே பிறந்தது. தமிழர் தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதர். எனது ஆழ்ந்த இரங்கல்கள்!
மிகவும் வருத்தம் தரும் செய்தி -:( ஈழத்தமிழரது இலக்கியம் மற்றும் ஆளுமைகள் ஆவணமயமாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியதுடன், "நூலகம்" உருவாக்க எண்ணக் கருவும் அவரிடம் இருந்தே பிறந்தது. தமிழர் தாயகத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதர். எனது ஆழ்ந்த இரங்கல்கள்!
கண்ணீர் அஞ்சலிகள்...!
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக...!
Post a Comment