இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன். அந்தக் காலத்தில் என் மூத்த அண்ணாவும், இளைய அண்ணாவும் யாழ்ப்பாணத்திலேயே சித்தி வீட்டாரின் வளர்ப்பில்.அப்போதுதான் பிறந்த எனக்கோ அடித்தது யோகம் அப்பா, அம்மாவுடன் கைக்குழந்தையாகக் கூடவே ஹற்றனில் வாழவேண்டிய பாக்கியம் கிட்டியது. ஆனால் என்னுடைய ஆறுவயதுக்குட்பட்ட அந்தக் காலம் இன்னும் மங்கலாகத் தான் நினைவில். எண்பதுகளிலே அப்பாவும் அம்மாவும் மாற்றலாகி சொந்த ஊரான யாழ்ப்பாணம் திரும்பிவிட, என் நினைவு தெரிந்த நாள் எல்லாமே மலையகம் பற்றி வெறும் வானொலி, பத்திரிகை சார்ந்த செய்தி என்ற எல்லைக்குள்ளேயே இருந்து விட்டது. தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.
காளிமுத்து, ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.
"அம்மா! பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா வளந்துட்டார்ங்கம்மா" ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும் போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே
"போய்ட்டு வர்ரேன் சார்" என்று சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால் விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.
எப்போதாவது ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின் கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல இன்னும் பலர்.
முப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித் திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில் கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும் நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. எனவே தனியாகவே பயணிக்க வேண்டிய நிலை எனக்கு.
வெள்ளவத்தைக் கடற்கரைப் பக்கமாக மாலை நடைப்பயிற்சி செய்து கொண்டே போகும் போது, தீடீரென்று ஒரு யோசனை உதிக்க வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறேன். அங்கே ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பவரைப் பார்த்தால் தமிழராக இருக்கிறார் என்று நான் நினைப்பதற்குள், பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டே தன் செல்போனில் உரக்கத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் குறையும்வரை காத்திருக்கும் என்னை விநோத ஜந்துவாக அவர் பார்க்க, மலையகம் போகும் விஷயத்தை மெல்ல அவிழ்க்கிறேன்.
"அதுக்கு நீங்கள் உடரட்ட மெனிக்கே ரயில் எடுக்கோணும், கோட்டை ஸ்ரேசன் போய்த்தான் புக் பண்ணோணும். நல்ல சுப்பறான ட்ரெயின், கண்ணாடிக் கிளாசுக்கிளால மலை எல்லாம் பார்த்துக் கொண்டு போகலாம், இப்பவே புக் பண்ணுங்கோ, இப்ப ஓவ் சீசன் எண்டதால ஹோட்டல் எல்லாம் எடுக்கலாம் பிரச்சனை இல்லை".
கொழும்பு வந்து கோட்டே புகையிரத நிலையத்திற்குச் செல்கிறேன். அங்கே தான் மலையகம் பயணிக்க வேண்டிய ரயிலுக்கு ஆசன முற்பதிவு செய்யவேண்டும். முன்பின் அனுபவம் இருந்தால் தானே எனக்கு. ஆசனப்பதிவுக் காரியாலத்தில் இருந்தவரிடம் ஹற்றன் போவதற்கான பதிவு செய்யவேண்டும் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அவரோ விட்டேனா பார் என்று சிங்களத்தில் ஏதேதோ சொல்கிறார். ஒருமாதிரி சமரசமாகி அவர் ஆங்கிலம் பேசுவதற்குள் எனக்கு இரண்டு முழு எலிபண்ட் பிறாண்ட் ஒரேஞ்ச் பார்லி குடிக்கவேண்டிய களைப்பு. உடரட்ட மெனிக்கே ரயிலுக்குப் பதிவு செய்தாச்சு. ஆனால் பயணத்தில் ஒரு மாற்றம், ஹற்றன் தாண்டி நுவரேலியா போய் அங்கிருந்து ஏதாவது பஸ்ஸில் ஹற்றனுக்கு வருவம் என்று நினைத்து நானு ஓயா வரை டிக்கட்டைப் பதிவு செய்தாச்சு. நுவரேலியாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. நானு ஓயா சென்று தான் பஸ் பிடித்து பத்து நிமிட ஒட்டத்தில் நுவரேலியா செல்லவேண்டும் என்றும் கோட்டை பாடம் கற்பித்தது.
கூகிளாண்டவரிடம் முறையிட்டேன் நல்லதொரு ஹோட்டலை காட்டு என்று. அவர் சொன்ன ஹோட்டல் பட்டியலில் ஒன்றுக்கு அழைத்துப் பதிவு செய்தாயிற்று.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் பயணம். ஏழரை மணிக்கே வந்தாச்சு. சரக்கு ரயில்களுக்குப் போகவேண்டிய மூட்டைகளுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் இருந்து வெற்றி எஃப் எம் காதுக்குள் கிசுகிசுக்க நேரம் போனதே தெரியவில்லை. உடரட்ட மெனிக்கே வந்து விட்டது. பதிவு செய்யப்பட்ட முதல்வகுப்பு ஆசனங்கள் எந்தப் பக்கம் என்று அங்கும் இங்கும் எட்டிப்பார்த்து, கும்பலாகப் போன பொலிசாரில் ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கைகாட்ட, ரயிலில் தாவினேன்.
எவ்வளவு நேரம் சிக்கிரமாகப் போய் என்ன பயன், வந்த ரயிலில் உடனடியாக ஏறத்தெரியாமல் என்று முணுமுணுத்தேன். முதல் வகுப்பு ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருக்க என் ஆசனத்தில் இன்னொருவன். டிக்கட்டைக் காட்டினேன், சிரித்துக் கொண்டு வழி விட்டுக் கொண்டு அடுத்த பெட்டிக்குப் போகிறான். ஜன்னல் ஓரமாகப் என் ஆசனம். உல்லாசப்பயணிகள் அதிகம் பயணிக்கும் ரயில் இது. ஆனால் இருக்கைகளில் இறப்பர் பாலும், பிசினும் கிளறி எடுக்கலாம். அடுக்கடி மூட்டைப் பூச்சி போல ஏதோவொரு வஸ்து கிளுக்கிண்டியது. ஏஸி இருக்கிறதாம். பயங்கரப்புழுக்கமாக இருக்க ஜன்னலைத் திறக்கிறேன் திறக்கவில்லை. முன்னால் இருந்தவர் கை கொடுக்கிறார். ஜன்னலை உடைத்துத் திறந்தார். அப்படித்தான் திறக்கவேண்டுமாம். ஒலிபெருக்கியில் சன்னமாக உடரட்ட மெனிக்கே புறப்படப் போகிறாள் என்று அறிவிப்பு வருகிறது. எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இந்த அறிவிப்பாளர் குரல் அப்படியே இருக்கு.
மெல்ல மெல்லத் தன் ஓட்டத்தை எடுக்க ஆரம்பிக்கிறாள். சிட்னியில் நிதமும் அலுத்துப் பயணிக்கும் ரயில் பயணம் போல அல்ல இது. ஜன்னலூடே தண்டவாளங்களுக்கு அப்பால் பரந்து விரியும் மக்களின் வாழ்க்கையைக் காட்டிக் கொண்டே பயணிக்கிறாள். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட்டுக்களைக் கூர்ந்து பார்த்து தன் குறிப்பேட்டில் பேனாவால் கிறுக்குக் கிறிக்கி விட்டுத் தருகின்றார்.
வடே வடே வடே , பார்லி பார்லி பார்லி என்று கூவிக்கொண்டே ரயில் பெட்டிக்குள் தம் வியாபாரத்தை ஆரம்பிக்க வந்து விட்டார்கள் அன்றாடம் இந்த ஓட்டத்தை நம்பிப் பிழைக்கும் வியாபாரிகள். பொல்காவலை வருகிறது. இங்கே தான் யாழ்தேவி மூலம் வரும் வடபகுதி மக்கள் மலையகத்து ரயிலுக்காக மாறவேண்டிய இடம். அதுவும் கடந்து பயணிக்கிறது. எதிர்ப்படும் ஸ்டேஷன்களில் நறுக்கிய மாம்பழத்துண்டங்களுக்கும், அன்னாசிப்பழங்களுக்கு மிளகாய்த் தூள், உப்புப் போட்டு திசுப்பையால் கட்டி, ரயில் நிற்கும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகள். ரயில் பெட்டிகளுக்குக்குள்ளிருந்து கை நீட்டுப்பவர்களுக்குப் பொட்டலங்களைத் திணிக்கும் முனைப்பு காசை வாங்கிவிடவேண்டும் என்பதில் இல்லை என்பது போல சாவகாசமாக ஒவ்வொரு பெட்டியாகக் கொடுத்துக் கொண்டே ரயில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது ஓடியோடிக் காசை வாங்கித் திணிக்கிறார்கள். சிலர் பெட்டிகளுக்குள் தாவி ஏறிக் காசை வாங்கிப் பின் வேகமெடுக்க முன்னர் பாய்கிறார்கள்.
ஒரு மாம்பழ நறுக்குப் பொட்டலம் வாங்கிப் பிரித்துச் சுவைக்கின்றேன். நுனி நாக்கில் உப்பும் மையத்தில் மிளகாய்த்தூளும் கடவாய்ப் பக்கம் இனிப்புமாக வாயில்"ஜலதரங்கம்".
முன்னால் இளம் காதலர்கள் ஏதோ பேசிச் சிரிக்கிறார்கள். அவன் கோக் வாங்கிப் பாதி குடித்து மீதியை அவளிடம் நீட்டுகிறான்.
பேராதனைச் சந்தியில் பெருமூச்சு விட்டு நிற்கிறாள் உடரட்ட மெனிக்கே. பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற இலங்கையின் புகழ்பெற்ற பெரும் பல்கலைக்கழகத்தை அடைவதற்கான ரயில் நிலையம் அது. ஆச்சி பயணம் போகிறாள் என்ற செங்கை ஆழியானின் நகைச்சுவை நவீனத்தில் இந்த ரயில் நிலையம் எல்லாம் வந்து போகும், அந்த நேரம் யாழ்ப்பாணத்து ஆச்சிதான் நினைவுக்கு வந்தார். யாழ்ப்பாணத்தில் மிகவும் பழைய மரபில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆச்சி தன் மகனுடனும் அவனின் முறைப்பெண்ணுடனும் ரயிலில் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவைச் சித்திரத்தின் கரு.
பசிக்கிறது, ரயில் பெட்டிக்குள் வந்து வியாபாரம் செய்யும் கடலை வடை வியாபாரியிடம் ஒரு பொட்டலம் வாங்கினேன். கைக்கடக்கமான சின்னஞ்சிறு வட்டங்களாக மொறுகிப் பூத்த வடைகள், ஆங்காங்கே செத்தல் மிளகாய் பல் இளிக்க.
ஜன்னலால் தாவிப் பார்க்கின்றேன். வெளியே தண்டவாள எல்லைகளுக்கு அப்பால் உயர்த்திக் கைகாட்டிக் கொண்டே பார்த்துச் சிரித்து ரசிக்கும் சிறார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை ரயில்களை இவர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் இதே பூரிப்புத்தான் அப்போதும் இருக்கும் போல.
நாவலப்பிட்டி ரயில் நிலையம், நாவலப்பிட்டி என்றதும் இங்கே இருந்து ஆன்மீகப் பணி செய்து "ஆத்மஜோதி" என்ற சஞ்சிகையைப் பலவருஷங்களாக வெளியிட்ட ஆத்மஜோதி நா.முத்தையா நினைவுக்கு வருகிறார். அந்தக் காலத்தில் எங்கள் அப்பா என் வயதுக்கு வாசிக்க உகந்தது என்று அங்கீகரித்த ஒரே சஞ்சிகை இது ;)
மலைகளைக் கிளறிக் கொழுந்து விதைத்த தேயிலைத் தோட்டங்கள் பச்சை நிறப் பெருங்கம்பளங்களாகப் பரந்த வெளிகளிலே, கீறல் கோடுகளாக வளையம் போட்ட பாதைகள். ஆங்காங்கே லயன்களும், களஞ்சியங்களும் கவிழ்த்து வைத்த கோப்பைகள் போல. ஜன்னலூடாக மலையகத்தின் எழிலை ரசித்துக் கொண்டு ரயில் பயணத்தைத் தொடர்கின்றேன். அலுக்கவில்லை, கண்கள் குத்திட்டு இயற்கை அன்னை கொடுத்த அந்த மலை முகடுகளையும், தேயிலைத் தோட்டங்களையும், ஆங்காங்கே கடந்து போகும் சிறிதும் பெரிதுமான நீர் வீழ்ச்சிகளையும் என்னுள் ஏற்றுகின்றேன்.
நானு ஓயா அடுத்த தரிப்பு என்று உறுதி செய்து கொண்டு இறங்க ஆயத்தப்படுத்துகின்றேன்.
25 comments:
நுவரெலியாவில் உள்ள ஹோலிடின்டி காலேஜில்தான் என் அப்பா படித்தாராம். கதை கதையாச் சொல்லுவார்!
மணம் முடித்து நாங்கள் தேனிலவு சென்றதும் நுவரேலியாவிற்குத்தான். லிட்டில் இங்கிலாந்த் என்ற பதத்திற்குப் பொருத்தமான ஊர்.
எங்களது ஊர்களுக்கு வந்து அதை எங்களை விட அதிகமாக ரசித்திருகிறீர்கள் கானா அண்ணா..
// எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இந்த அறிவிப்பாளர் குரல் அப்படியே இருக்கு.
அது அவர் குரல் இல்லை; அந்த ஒலிபெருக்கியில் யார் பேசினாலும் அப்படித்தான் இருக்கும்;
கூடவே பயணித்தேன் பெரியப்பு; சூப்பர்!
//ஜன்னலூடே தண்டவாளங்களுக்கு அப்பால் பரந்து விரியும் மக்களின் வாழ்க்கையைக் காட்டிக் கொண்டே பயணிக்கிறாள். ///
ம்ம்..அருமையான வர்ணனைகள் கண்களுக்கு குளுமையான படங்கள் ...சென்று வர முடியாததெனினும் இப்படித் தகவலும் புகைப்படங்களிலாவது பார்க்க முடிந்தது ஆறுதல் ..
அட, நீங்களும் ஹற்றனில் வளர்ந்தனீங்களா? நானும் சிறு வயதில் வளர்ந்தது ஹற்றனில்தான். காரணம் அதே :). அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள்.
பின்னர் மாற்றலில் யாழ் வந்துவிட்டாலும், நான் படித்தது பேராதனை பல்கலையில் என்றபடியால் ஹற்றன் தொடர்பை தொடர்ந்து பேணி வந்தேன்.
உண்மைதான், மலையகம், அழகான ஊர், அதிமகாக அன்பு செய்யும் மனிதர்கள். எங்களுக்கும் ஆறுமுகம், காளிமுத்து எல்லாம் இருந்தார்கள்.
:-))
கலக்கல் தொகுப்பு தல ;-) படங்கள் சூப்பரு ;-)
அருமை பிரபா. ஆரம்பமே அசத்தல், உங்களருகாமையில பயணிப்பது போன்றதொரு அனுபவம்.
அப்துல்லா, நெருங்கிட்டீங்க :0
யோகா
மிக்க நன்றி, அடுத்த தடவை நேரில் சந்திப்போம்
வாங்கோ நிரூஜா
வெவ்வேறு அறிவிப்பாளர்கள் தான், ஆனால் அறிவிப்பாளர் குரல் என்பதைப் பொதுவில் சொன்னேன் :)
Beautiful pictures Kana. My dad lived in Sri Lanka when he was young.He used to describe it to me when I was young. You brought them in picture. When I get a chance, I have to visit there one day as well.
அந்த மலையகங்களின் ஊடே இருக்கும் தூய காற்றை சுவாசித்தது போன்ற ஒரு புத்துணர்ச்சி. ஹற்றன் - இந்த பெயரை இதற்கு முன் கேள்விபட்டதில்லை....மலையக மக்களின் நிலை பற்றிய கவலை..ரயில் பயண அனுபவம்..உங்கள் நடை (ஒரு மாம்பழ நறுக்குப் பொட்டலம் வாங்கிப் பிரித்துச் சுவைக்கின்றேன். நுனி நாக்கில் உப்பும் மையத்தில் மிளகாய்த்தூளும் கடவாய்ப் பக்கம் இனிப்புமாக வாயில்"ஜலதரங்கம்".)...படங்கள்...எல்லாமே அருமை !!!
நன்றி பிரபா
வருகைக்கு நன்றி உமாகிருஷ், சமயம் கிடைத்தால் சென்று பாருங்கள் பக்கத்து நாடு தானே
வாங்கோ கலை , நீங்களும் ஒரே இடத்தில் இருந்திருக்கிறீங்களா :)
தல கோபி மிக்க நன்றி :)
1979 ல், என் முதல் வேலை, முதல் மலையக விஜயம். பதுளையில் தொடங்கியது, 83 கலவரம் வரை, மறக்க முடியாத வாழ்வு.
சுற்று வட்ட நகர் யாவும் சுற்றியுள்ளேன்.
இயற்கை எழிலுடன், அன்பான மக்களையும் கொண்ட மண்.
படங்களில் இன்றும் எல்லாம் அப்படியே உள்ளது போலுள்ளது.
உட ரட மெக்னிக்கே- உயர் நாட்டுப் பெண் - இன்னும் அப்படியே உள்ளாள்.
மிக்க நன்றி தெய்வா
அன்பின் அறிவுக்கரசு சார்
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு
யோகன் அண்ணா
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
நான் நுவரெலியாவுல ரெண்டு வருசம் இருந்தும் ஹற்றன் சரியா பாக்கேல்லை அண்ணே,
பகிர்வுக்கு நன்றி பாஸ்.
நானும் ஊருக்கு வந்திருந்தபொழுது நுவரெலியா போயிருந்தேன் ஆனால் பஸ்ஸில.
மலையகத்தின் அழகை இனிய காட்சிகளுடன் மீண்டும் பார்த்த பரவசத்தைத் தந்திருக்கு உங்கள் பயணக்கட்டுரை நன்றி கானா பிரபா!
பாஸ் இலங்கை போரதா ஒரு தாக்கல் சொல்லியிருந்தா நாங்களும் ஒடியாந்திருப்போமே. ஹட்டன் சூப்பரா இருக்கும். போகணும்னு நினைச்சு போகாம வந்த இடத்துல இதுவும் ஒண்ணு. அந்த கண்ணாடி ட்ரையினில் தான் நுவேரேலியா போகணும்னு நினைச்சு சூழ்நிலை(பாதுகாப்பு( சரியில்லாததால் போகலை. நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க பாஸ்
நன்றி இளா
கறுப்பி
அடுத்தமுறை வாங்கோ ஒண்டாப் போய் வருவோம்
//யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன்// அருமையான சுட்டிக்காட்டல் கானா.
//ஜன்னலால் தாவிப் பார்க்கின்றேன். வெளியே தண்டவாள எல்லைகளுக்கு அப்பால் உயர்த்திக் கைகாட்டிக் கொண்டே பார்த்துச் சிரித்து ரசிக்கும் சிறார்கள்// ஓடும் ரயிலை பர்த்து, சிரித்துக் கொண்டே கைகாட்டும் சிறுவர்கள் எங்கும் இருந்து கொண்டே தான் இருக்கிரார்கள். அருமையான பதிவு கானா.
தனிமரம் said...
மலையகத்தின் அழகை இனிய காட்சிகளுடன் மீண்டும் பார்த்த பரவசத்தைத் தந்திருக்கு // நன்றி நண்பா
புதுகை பாஸ்
அடுத்த தடவை கண்டிப்பா சொல்றேன்
வருகைக்கு நன்றி யசோ
தம்பிக்கு எந்த ஊரு கற்றனிலை. நான் இன்வெரி எஸ்ரேற், டிக்கோயா. 2011 கற்றன் வரையும் 2005இல் இன்வெரி வரையும் போய் வந்தனான். முதல்தரம் போகேக்ககை 23 வருடத்தாலை போனான். நீ எழுதின கணக்கையும் வைச்சுப்பாத்தா ஒரே காலத்திலை இரண்டு பேரும் அங்கை இருந்திருக்கிறம்.
இதிலை இருந்து என்ன விளங்கிது. பெரிய அறிஞர்கள் எல்லாம் கற்றனிலை தான் பிறந்திருக்கினம்.
http://www.facebook.com/media/set/?set=a.10150260513658922.344370.657388921&type=3
Post a Comment