ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன். அந்த ஒலிவடிவைக் கேட்க
திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் குறித்து தமிழ் விக்கிபீடியா வழியாக
இலங்கையின் வடமாகாணத்தில், அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக்கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டு வசித்து வருகின்றார். இவரின் மனைவி லட்சுமிதேவி.
தொழில் ரீதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். தனது கல்வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கவில்லை என இன்றுவரை ஆதங்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஓய்வுபெற்றார்.
படிக்கும் காலங்களில் நகைச்சுவை ததும்ப எழுதுவதும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையான சிரித்திரன் சஞ்சிகையை தனது இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார்.
1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். இதன் மூலமாக ‘நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.
"சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்" என்று செங்கை ஆழியான் ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.
எழுதியுள்ள ஊடகங்கள்
நகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, ஈழநாடு, இடி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.
இவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
தத்துவப்படகு 1985
வரலாற்றில் தமிழும், தமிழரும் 1999
சிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003
திருவள்ளுவர் திடுக்கிடுவார் 2004
மட்டக்களப்பில் கண்ணதாசன் 2003
தமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002
சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004
நாட்டுக் கருடன் பதில்கள் 2005
வெளியிட்ட சஞ்சிகைகள்
இவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன.
‘சுவைத்திரள்’ என்ற நகைச்சுவை
‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு
விருதுகள்
இவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் நடத்திய சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கௌரவத்தை வழங்கியது.
4 comments:
எனது இரங்கலும்.
எனது தளத்தில் இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி
அன்னாருக்கு களத்துமேடு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அவருக்கு எனது அஞ்சலிகள்.
ஊர்விட்டுப் பிரிந்தபோதும், மரணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புவரை தொடர்பில் இருந்த நட்புடையோன்.
ஓரு தடவை சிரித்திரன் டொக்டரின் டயறி தொடருக்கு நான் கொடுக்க வேண்டிய கட்டுரை தாமதாமாகிவிட, வீடு தேடி வந்து, நான் கட்டுரை எழுதி முடிக்கும் வரை காத்திருந்து வாங்கிச் சென்ற கடமையுணர்வை மறக்க முடியாது.
சிரித்திரனிலும், சுந்தரிலும் அளப்பரிய பற்றும் நன்றியுணர்வும் கொண்டவர்.
'சுவைத்திரள்' சஞ்சிகை ஆசிரியரும் எழுத்தாளருமான திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் மறைவுச் செய்தி எமக்கு அதிர்ச்சி அளித்தது. உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் தமது இரங்கலைப் பதிவு செய்கிறது.
Post a Comment