சோழ அரசன் திஸ்ஸ உக்கிரசிங்கனின் மகள் மாருதப்புரவீகவல்லி, கலைக்கோட்டு முனிவரின் சாபத்தினால் முகத்தில் ஏற்பட்ட குதிரை முகம் போன்ற விகாரம் நீங்க கீரிமலைத் தீர்த்தம் நீராட வந்தபோது முருகனுக்குக் கோயில் ஒன்று அமைத்தாள். சோழ இளவரசி தங்கியிருந்ததைக் கேள்விப்பட்ட ஈழத்தின் கதிரமலையை ஆட்சி செய்த உக்கிரசிங்கன் அவளைக் கவர்ந்து சென்று மணம் புரிந்தான். பின்னர் மாருதப்புரவீகவல்லியின் வேண்டுகோளுக்கிணங்க அவன் அந்த முருகன் ஆலயத்தை இந்தியாவில் இருந்து விக்கிரகங்களைத் தருவித்துக் கட்டினான். இவ்வாறு கந்தனின் விக்கிரகங்களைத் தருவித்த இடமே காங்கேசன் துறை எனவும், மாருதப்புரவீகவல்லி தெய்வீக அருளால் தன் குதிரை முகம் நீங்கப்பெற்ற இடம் மாவிட்டபுரம் (மா = குதிரை ) எனவும் அழைக்கப்பட்டது. கீரிமலை, காங்கேசன்துறை, மாவிட்டபுரம் உள்ளடங்கலான இடத்தைக் கோயிற்கடவை என்று அழைப்பார்கள். (தல வரலாற்றுக்குறிப்புக்கள் உசாவ உதவியது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்)
"நிலாவரைக் கிணறு பார்ப்போமா" என்றவாறே சின்னராசா அண்ணர் ஓரமாக ஆட்டோவை நிறுத்த எதிரே நிலாவரைக் கிணறு என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. யாழ்ப்பாணத்தில் என்றுமே வற்றாத கிணறு என்று சிறப்பைப் பெற்றது இந்த நிலாவரைக் கிணறு. அயற்கிராமங்களில் பயிர்ச்செய்கைக்காக இந்தக் கிணற்றில் இருந்து நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது ஒருகாலம். கிணற்றை அண்டி எதிரே இராணுவ அரண் ஒன்றும், பனக்கட்டிக் குட்டானை விற்பனை செய்யும் சிங்களவர் ஒருவரையும் காணலாம்.

அரசமரத்தைக் கண்டால் இரவோடிரவாகப் புத்தரைக் கொண்டு வந்து நட்டுவிட்டுப் போகும் கூத்து நடக்கின்றது. அதுவும் கடந்த இரண்டு வருஷமாகவே இந்த வேலை வெகு மும்முரமாக நடக்கின்றது. புத்தர் இப்போதெல்லாம் ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறிவிட்டதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இனவாதத்தின் மூலம் நாட்டு மக்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர்கள் புத்தரையும் நடுறோட்டுக்குக் கொண்டு வந்தது தான் அவலத்தின் உச்சம். பல இடங்களில், தகுந்த பராமரிப்பு இன்றிக் கைவிடப்பட்ட நிலையில் அரசமரத்தில் தீவிர நிஷ்டையில் இருக்கிறார்கள் புத்தர்கள். இதில் வேடிக்கையான சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன். இப்போதெல்லாம் நம் தாயகத்தில் எங்காவது அரசமரம் தப்பித்தவறித் தென்பட்டால் புத்தர் வருகைக்கு முன் ஒரு வைரவரை நட்டு விடுவார்கள் விண்ணர்கள். ஒரு இராணுவக் காவலரண் பக்கமாக இருந்த அரசமரப் புத்தர், அந்த இராணுவக் காவலரண் அகற்றப்பட்டதும் மாயமானார். பின்னர் அந்த அரச மரத்துக்குக் கீழ் பிள்ளையார் வீற்றிருக்கின்றார். இதெல்லாம் அங்கே கண்டதும் கேட்டதும்.
காங்கேசன்துறை வீதி என்பதை ஜம்புகோல படுன வீதி என்று தமிழில் பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டதையும் கண்டேன். (அதாவது சிங்களவருக்கு ஜம்புகோளப்பட்டுன என்றால் தான் காங்கேசன் துறை)


ஆலயம் அன்று ஏதோ ஒரு விழாவை முன்னிட்டு சனக்கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. கோயிலில் நின்ற பக்தர் ஒருவரைக் கேட்டேன்.
"என்ன திருவிழா அண்ணை"
"என்னண்டு தெரியேல்லை" சேஃப்டிக்காகச் சொன்னாரோ தெரியேல்லை ;-)
அருச்சனைச் சீட்டு, பழத்தட்டுடன் நீலப்பட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்தேன். "தட்சணை கொடுங்கோ" என்று ஐயராகவே முன்வந்து கேட்டது புதுமையாக இருந்தது. ஆலயத்தின் மணற்பரப்பில் கால்களை அளைந்தவாறே வெளிப்பிரகாரத்தில் நடந்தேன். நேரம் ஆகிவிட்டது.
11 comments:
\\"தட்சணை கொடுங்கோ" என்று ஐயராகவே முன்வந்து கேட்டது புதுமையாக இருந்தது.\\
தல இங்க கொஞ்சம் ஸ்பெசல் அர்ச்சனை முடிச்சிட்டு தட்டு கொடுக்கும் போது வாங்கிறேன்னு சொல்லுவாங்க ;))
;)
தல எல்லா ஊருக்கும் பொதுவானது போல
Super, pl do continue.
மிக அருமையான வரலாற்றுடன் கூடிய பதிவுகள் பிரபா!
நல்லதொரு வரலாற்று ஆவணம்.
நினைத்துப் பார்க்கிறேன். இன்னுமொரு 10 வருடங்களின் பின் இந்த நிலையில் எத்தனை மாற்றங்கள் வந்திருக்கும்.
முக்கியமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்ற இக் காலத்தின் நகர்வுகளை படங்களோடு பதிவு செய்யும் கடைமைகளை ஏற்ற கரங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்.
விபரங்கள் வெகு தத்ரூபம்!
போகாத நாங்களும் உங்களோடு பயணிப்பதைப் போல ஓருணர்வு!
தொடர்க!தொடர்ந்து படிக்கிறேன்.
ஹரன்பிரசன்னா, சகோதரி மணிமேகலா
மிக்க நன்றி தொடர்வேன்
வல்லை வெளி எத்தனை புரியாத மர்மங்கள் சில காலங்களில் ஆனாலும் அக்காலங்களிலும் நாங்க யாரு கண்ணுலையே விரலை விட்டு ஆட்டுவோம் இல்ல ஆனால் ஒரு முறை பாடசாலையே எங்களைத் காணவில்லை என்று தேடி எங்களுக்கு செய்தி காதுகளுக்கு எட்டியவுடன் வரம்புக்கால் ஓடியா ஓட்டம் என்ன? பீல் பைக் துரத்துவதை விட வேகமா ஓடினம் எல்ல. இத்துடன் பயணம் முடிந்ததா???
நல்லாயிருந்துது ஊர்ப் புதினங்கள்.. கோயிலுக்கை படம் எடுக்க விடாததுக்குக்க் காரணம். புகைப்படக்கருவிகளிலிருந்து செல்லும் கதிவீச்சுக்கள்,விக்கிரகங்கள், எழுந்தருளிகளைப் பாதிக்காலாமென்பாதாலாகுமாம்
வடலியூரான்
அந்த விஞ்ஞான விளக்கம் இன்னும் புரிபடேல்ல ;)
தொடர் பாதிக்கிணறு தானே கடந்திருக்கு இன்னும் வரும்
அட எங்கடை ஊருக்கு வந்திருக்கிறியள் நான்தான் ஊரில இல்லாமல் போட்டன்.
கோயிலுக்க போட்டோ எடுக்க வேண்டாமெண்டுறதுக்கு முக்கியமான காரணம் எங்கடை ஆக்களாகத்தான் இருக்கும்,பெரிய கோவில்கள் என்கிற இடங்களிலை இதெல்லாம் சாதாரணம்தானே கானா. :)
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா(புகைப்படங்கள்)
http://www.jaffnavoice.com/?p=2125
நல்லூர் கந்தசுவாமி திருவிழா2011 புகைப்படங்கள்
http://www.jaffnavoice.com/nallur
இந்தப் பதிவில் உங்கள் எழுத்துக்கு ஈடாகப் புகைப்படங்களும் வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. நல்ல பதிவு, எப்பொழுதும் போல!
amas32
Post a Comment