முற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களின் மனைவியரும் அப்படியே. சின்னஞ்சிறுசுகள் நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாயில் நோகாமல் உட்கார்ந்தார்கள். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் போட்டோவில் பார்த்துப் பழகிய ஆர்மோனியப் பெட்டியோடு ஒருத்தர், தபேலாவோடு இன்னொருத்தர், சுருதிப்பெட்டியோடு ஒரு அம்மா.
முன்னால் வைரவருக்குப் பக்கத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்ட கதிரையில் ஒரு ப்ரேம் போட்ட படம் உட்கார்த்தப்படுகிறது. சுருள் சுருளான முடிகளும் செம்மஞ்சள் நிற உடுப்பும் போட்ட அந்தப் படத்தில் இருப்பவர் தான் சாய் பாபாவாம்.
அயலட்டைச் சனம் கும்பலில் கோவிந்தாவாக, முன்னே குழுமியிருந்த அந்த அன்னிய மனிதர்களுக்குப் பின்னால் இருந்த பாய்களில் இடம்பிடிக்கின்றது. சாய்ராம் என்று முன்னே இருந்தவர் ஒருவர் குரல் கொடுக்க, ஓம் என்ற ஓம்கார மந்திரத்தை ஒலிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு ஒரு நிமிடத் தியானத்தின் பின் முன்னே இருந்த அந்த பக்தர்கள் தெய்வீகப் பாடல்களை பிள்ளையாரில் இருந்து ஆரம்பித்த்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடுகின்றார்கள். ஒருவர் ஒரு அடியைப் பாட அதே அடியை கூட்டத்தில் குழுமியிருந்தோர் பாடுகிறார்கள். அதுவரை தேவார திருவாசகங்களைக் கேட்டுப் பழகிய நமக்குப் புதுமையாக இருந்தது. இந்த சாய்பாபா பஜனைகள் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும், கூடவே முருகேசம்பிள்ளை அவர்களின் வீட்டில் சனிக்கிழமைகள் தோறும் பாலவிகாஸ் வகுப்புக்களும் இடம்பெற உள்ளன என்ற அறிவிப்பும் அங்கே சொல்லப்படுகின்றது. எல்லாமே விநோதமாக எமக்குப்பட்டது.
அடுத்த சனிக்கிழமை வழக்கமாகக் கள்ளன் பொலிஸ் விளையாடும் கூட்டாளிகளைக் காணவில்லை. எல்லாரும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போயிட்டினமாம். கை கால் அலம்பிப் புதுச் சட்டை போட்டு நானும் வேடிக்கை பார்க்க முருகேசம்பிள்ளை மாமா வீட்டில் நடக்கும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போகிறேன். அங்கே முதற்கிழமை பஜனைக் கோஷ்டியோடு வந்திருந்த பெண்மணி தான் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடசாலை சென்றால் தான் சமய பாடம் படிக்கலாம் என்ற நிலையில் இருந்து இன்னொரு புது அனுபவமாகப்பட்டது. அந்தப் பெண்மணி தான் டீச்சராம். எப்படியெல்லாம் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்று என்று நீதிக் கதைகளையும், கருத்துக்களையும் சொன்னார். சப்பாணி கட்டி விரிக்கப்பட்ட பாயில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிவில் சின்ன பஜனைப் பாடல்களோடு நிறைவு பெற்றது. இதுவே நாளாக நாளாக பாலவிகாஸ் வகுப்பில் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம். பிள்ளைகளோடு கடிந்து பேசாது நல்ல நீதிகளைத் தன் வகுப்பில் போதித்த அந்த டீச்சர் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரின் அமைப்பாளர் சரவணபவனின் மனைவியார். இந்த வகுப்பில் நீதிக்கதைகளை எல்லாம் நாமே அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாகத் தோன்றி நாடகங்களாக நடித்துக் காட்ட டீச்சர் உதவினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பாலவிகாஸ் வகுப்பில் பாடம் படிக்கக் கூடியதாக இருந்தது. மானிப்பாய் வீதி தாவடியில் இருந்த சத்யசாயி சென்ரரில் வாராந்த சாயி பஜனைகளுக்கும் போய் வரத் தொடங்கினோம். காலப்போக்கில் இன்னொரு சத்யசாயி சென்ரர் தேவை என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் பெருகிவிட இப்போது ஞாயிற்றுக்கிழமை வாராந்த பஜனை இணுவில் அண்ணாகோப்பி நிறுவனத்தின் மூன்றாம் மாடிக்கு நகர்ந்தது. இணுவில் ஆஸ்பத்திரியில் தலைமை வைத்தியராக இருந்த டொக்டர் பவளத்துரை ஆர்மோனியத்தோடு முன்னால் இருக்க, பக்கத்தில் கமலாகரன் சேர் தன் பிள்ளைகளோடு அமர, அவர்களுக்குப் பின்னால் விரித்த பாயை நிரப்பும் கூட்டம். முன்னால் சத்யசாயி பாபாவின் பெரும் படம் ஒன்று கதிரையில் சாய்த்து வைத்திருக்க, ஒரு மணி நேர பஜனையில் முழுக்க முழுக்க இறைவனை நோக்கிய துதிப்பாடல்களை விரித்து வைத்த பஜனைப்பாடல்கள் புத்தகத்தில் இருந்து பிள்ளையார் தொடங்கி சிவன், அம்மன், விஷ்ணு, முருகன் என்று ஒவ்வொரு தெய்வங்களாகத் துதித்து ஓம் ஜெய் ஜெகதீச ஹரே என்று நிறைவு பெறும்.
கோவிந்தா மாதவா கோபாலா கேசவா என்று பாடிக்கொண்டிருப்பவர் கிரிதாரி கிரிதாரி ஜெய நந்தன கோபாலா என்று வரும் போது மெய்மறந்த நிலையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்ல பின் தொடரும் பக்தர்களின் குரல்களும் அந்த எல்லையைத் தொட முனையும். எங்களோடு கிட்டிப்புள்ளு விளையாடிய அகிலன் தான் கற்ற மிருதங்கத்தில் தன் கைவண்ணத்தைக் காட்ட கூடவே அவனுக்கு அன்புப் பரிசாக தபேலா ஒன்றைக் கொடுத்து நிரந்தர பஜனை வித்துவானாக்கிவிட்டார்கள். லோக்கல் எஸ்.பி.பாலசுப்ரமணியமாகத் தன்னைக் கற்பனை செய்து பாடிக்கொண்டிருந்த பாலகுமாரும் பஜனைப் பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடும் அளவுக்கு ப்ரமோஷன் பெற்று விட்டான்.
ஆனால் நமக்கோ இந்த இரண்டு விஷயங்களும் விஷப்பரீட்சை ஆயிற்றே. அதனால் இந்த பஜனைப் பாடல்களைப் பாட நல்ல குரல் வளம் பொருந்தியவர்கள் எல்லாம் இருக்க கூட்டத்தோடு கூட்டமாகப் பாடும் போது அதே பாங்கில் பாடுவது போலக் கற்பனை செய்து பாடமுனைவேன். எனது எல்லை வைரவர் கோயிலடி தான் என்று நினைத்துக் கொள்வேன். எங்கள் வைரவர் கோயில்பூசையை சித்தப்பா தான் கவனித்துக் கொள்வார். அவரும் சாயிபக்தராக மாறிவிட்டதால் காலையில் பஜனைப் பாடல்களைப் பாட எங்களைப் போன்ற வாண்டுகளை அழைத்தார். முதற்கிழமை பஜனையில் பாடிய அந்தப் பாடகரை நினைத்துக் கொண்டு கார்த்திகேசு அண்ணர் மகன் ராசனும் நானும் மாறி மாறி ஒவ்வொரு பாடல்களாகப் பாடி எம் தீரா ஆசையைத் தீர்த்துக் கொள்வோம்.
அகண்ட பஜனை என்று ஒரு சமாச்சாரத்தை அப்போது தான் கேள்விப்பட்டோம். வழக்கமாக ஒரு மணி நேரமோ அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரமோ கொள்ளும் பஜனைப் பாடல்கள் இந்த அகண்ட பஜனையில் இருபத்து நான்கு மணி நேரம் வரை செல்லுமாம். அந்தப் புதுமையைக் காண நாம் சத்யசாயி சென்ரர் தாவடிக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் மற்றைய சாயி சென்ரர்களில் இருந்தெல்லாம் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு மணி நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பின்னாளில் நாச்சிமார் கோயிலடியில் இருந்த கண்ணன் கோஷ்டி என்று அறியப்பட்ட இசைவாணர் கண்ணன் வீட்டில் நடந்த இந்த அகண்ட பஜனைகளிலும் கலந்து கொள்வோம். கண்ணன் எங்களூர் பஜனை நிகழ்வுகளுக்கு தன் நண்பர் அப்பி என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாயி பக்தரையும் அழைத்து வருவார். வெற்றிலை குதப்பிய செவ்வாயும் சிரித்த முகமுமாக இருக்கும் அப்பி அவர்கள் தபேலா வாசிப்பதில் திறமைசாலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார் என்றறிந்து கொண்டேன்.
சாயி பக்தர்கள் புட்டபர்த்தி சென்று விபூதிப் பிரசாதங்களோடு, சாயி முகம் தரித்த மோதிரங்களையும், கை வளையல்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இப்படியான வஸ்துக்களை யார் அதிகம் வைத்திருப்பது என்பது நண்பர்களுக்குள் அறிவிக்கப்படாத போட்டியாக இருக்கும். சனாதன சாரதி என்ற சஞ்சிகையை வாங்கிப் படிக்கும் வழக்கமும், ஸ்வாமி எழுதிய நூல்களைத் தேடிப் படிக்கும் ஆவலும் மெல்ல மெல்ல ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை பார்க்க வைத்த இந்த ஆன்மீக விஷயங்களை ஈடுபாட்டோடு பார்க்கத் தொடங்கினேன். புலம்பெயர் சூழலில் இந்த வாராந்திர ஆன்மீக வட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வகையில் தேவைகளும் சோலிகளும் அமைந்து விட்டன. ஆனாலும் என்னளவில் இன்று வரை சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.
7 comments:
நல்ல பகிர்வு தல !
ம்ம்ம்
சமூக,மருத்துவ சேவைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதிலும் பலரால் மனதால் போற்றப்படுபவர்!
//சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.//
சரிதான்!
பெரியவங்க சொல்றதை ஏத்துக்கிடலாம் முடிஞ்ச வரையிலும் நல்ல விசயங்களை நாமும் ஃபாலோ பண்ணலாம் ஆனா சாமியை ஃபாலோ பண்ணுன்னு சொல்ற மாதிரியான பிரச்சாரங்கள்தான் மனதுக்கு வருத்தமளிகின்றன !
போதனைகளினூடாக வாழ்ந்துகாட்டியவர்.
நல்லா சொன்னேங்கள் பாஸ்.
பிரபா எம்.
சாய்ராமைப்பற்றிய நல்ல பகிர்வு
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு,படமும் அருமை
சமூக விழுப்புணர்வை ஏற்படுத்தியவர் பாபா!
மதத்தினால் மாறுபட்ட மனிதரை
ஒன்று பட பாடு பட்ட மகான்
Post a Comment