"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?”
என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத்தும் இங்கே
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் திரு.வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களைச் சந்திக்கிறோம். வணக்கம் ஐயா
வணக்கம் கானா, வணக்கம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேயர்களே
இதுவரை காலமும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாகத் திகழ்ந்து வரும் நீங்கள் தற்போது ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக ஒரு நல்லதொரு திரைக்கலைஞனாகப் பேசப்படுகின்றீர்கள் அதற்கு முதலில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி கானா பிரபா, என்னுடைய வாழ்க்கை முழுவதுமே தொடர் அட்வன்சர்ஸ் ஆகத் தான் இருந்திருக்கின்றது. இது ஒரு புதிய அட்வென்சர் என்று என்னுடைய இயக்குனர் ஒருமுறை கூறியிருந்தார். நான் மிகவும் மனச்சோர்வு அடைந்து துயரத்தில் மூழ்கியிருந்த ஒரு தருணத்தில் ஒரு தப்பியோடுதல் மாதிரித் தான் இந்தச் சினிமாப் படவாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்றைக்கு வந்து இந்த முயற்சியில் வெற்றிடைந்திருப்பதால் உலகின் பலபாகங்களில் இருந்தும் எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் உட்படத் தொலைபேசியில் அழைத்து ஒரு ஈழத்தமிழர் நிமிர முடியும் வெற்றியடைய முடியும் என்று நிரூபித்திருக்கின்றீர்கள் நன்றி என்று சொல்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நீங்கள் வெறும் படைப்பாளியாக மட்டும் நின்றுவிடாது பல இடங்களிலே மனித நேயம் மிக்கவராக நீங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். ஈழத்தின் பேரவலம் உங்களுக்கும் பெரும் மனச்சோர்வை உண்டுபண்ணியதைப் பல பேட்டிகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.
ஈழத்தில் பிறந்து புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் இருக்கும் நீங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு இளம் இயக்குனரின் பார்வையில் பட்டு ஆடுகளம் என்கின்ற திரைப்படத்தில் ஒரு புதிய களத்தில் நடிகராகக் களம் இறங்கியிருக்கின்றீர்கள், இந்த அறிமுகம் எப்படி அமைந்தது?
உண்மையில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு பெரிய பாதையைத் திறந்தது பாலுமகேந்திரா அவர்கள். இருந்தாலும் அந்தப் பாதை இன்னும் பெரிதாக வேண்டியிருந்தது. பாலுமகேந்திராவுக்கும் எனக்குமான நட்பே இந்த வாய்ப்புக்குக் காரணமாகியிருக்கின்றது. அந்த நட்பின் வழி இந்தப் பாதையைப் பெரிதாக்கியிருக்கின்றேன். பாலுமகேந்திராவின் மாணவன் வெற்றிமாறன். பாலுமகேந்திரா தன் மாணவர்களுக்கு மட்டுமல்ல தன் உறவினர், நண்பர்களுக்கும் என் கவிதைகளை வாசிக்கச் சொல்லுவது வழக்கம். மேடைகள் தோறும் என்னுடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவார். இந்தவகையில் என்னுடைய கவிதைகளூடாகத் தான் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும். இந்தப் படத்துக்கான டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கும் போது அவருடைய வார்த்தையில் சொல்வதானால் "சிங்கம் மாதிரி ஒராளைத் தேடுறோம் நீங்க நடிக்கிறீங்களா?" என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு வாழ்க்கை முழுக்க அட்வென்சர்ஸ் தான் இதுவும் அப்படியொன்று என்று ஏற்கிறேன் உங்களால் முடியுமானால் என்னை நடிக்க வையுங்கள் முடியாட்டி என்னை விட்டுடுங்க என்றேன். எனக்கு நடித்த அனுபவம் உண்டு. நான் 87 ஆம் ஆண்டு திருமணம் ஆனதில் இருந்து எனது மனைவிக்கு முன் நடித்திருக்கின்றேன் (;-) என்று சொன்னபோது அவர் சொன்னார் அது போதும் என்று. இப்படித் தான் இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால் நான் பாலுமகேந்திராவின் பாதையை அகலமாக்கியிருக்கின்றேன். இதற்கூடாக எமது ஈழத்தவர் பலர் வந்து தமிழகத்தவரோடு கொலாபிரேட் பண்ணி படங்கள் தயாரிக்கவும் நடிக்கவும் பல்வேறு சினிமாத் துறையில் ஈடுபடவும் என்னுடைய வரவும் வழி சமைக்கும் என்று எண்ணுகிறேன். உண்மையில் தமிழ் சினிமா வந்து உலகத் தமிழ் சினிமாவாக வரும் உலகமயமாக்கலின் ஒரு பரிமாணம் தான் நான்.
இந்தப் படம் ஒருவருடத்துக்கு மேல் தயாரிப்பில் இருந்தது, மதுரையைப் பின்புலமாக வைத்துப் படமாக்கப்பட்டது, உங்களுக்கு இதுவொரு புதிய அனுபவமாக அமைந்திருக்கும் இல்லையா?
உண்மையில் ஆறுமாதங்களுக்குத் தான் கேட்டார்கள் அதனால் தான் உடனேயே சம்மதித்தேன் ஆனால் பிறகு மூன்று மாதம் என்று இரண்டு வருஷம் எடுத்திட்டுது. அந்தத் தருணங்களில் நான் விரக்தி நிலையில் இருந்த காலம். என்னுடைய சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையில் நான் மிகவும் மனம் உடைந்திருந்தேன் பொது நிகழ்வுகளை நான் முற்கூட்டியே உணர்ந்ததால் என்னால் எதுவுமே செய்யமுடியாத சொல்ல முடியாத கையாலாகாத நிலையில் இருந்த கட்டத்தில் தான் இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். உலக சினிமாவைப் பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் சினிமா நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பயிற்சிப்பட்டறை மூலம் விளங்க வைக்க முடியாது என்றபோது வெற்றிமாறன் எனக்குச் சினிமா நடிப்பு பற்றிய கோட்பாட்டு வகுப்புக்களை எடுத்தார். நான் நிறைய உயிர்த்த ஆளுமைகள் பிறந்த மண்ணில் இருந்து வந்த வகையிலும், நிறையப் போராட்டங்களில் ஆளுமைகள் பலரைப் பார்த்தவன் என்றவகையிலும் என்னிடத்தில் ஒரு பெரிய வீடியோக்களஞ்சியம் இருப்பதை நான் உணர்ந்தேன். வெற்றிமாறன் சிச்சுவேஷன் சொல்லும் போது என் வீடியோக்களஞ்சியத்தில் இருந்து மீள நினைவூட்டி நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
அதாவது பேட்டைக்காரர் என்பது மதுரைச் சூழ்நிலைக்கான ஒரு பாத்திரப்படைப்பாக இருந்தாலும் எமது தாயகத்திலும் இதையொத்த சண்டியர் என்ற பாத்திரம் இருக்கும். அப்படியாக உங்களுடைய வாழ்வியலில் நீங்கள் யாராவது ஒருவரைப் பொருத்திப்பார்த்திருந்தீர்களா?
ஆமாம் என்னுடைய மாமா ஒருத்தர் இதேமாதிரியான ஒரு சண்டியர் தான். அவருடைய உடல்மொழி இப்படித்தான். அதேமாதிரி என்னுடைய தகப்பான பெரும் ஈகோ படைத்த பணக்காரர், அவருக்கும் எனக்கும் இதனாலேயே பல மோதல்கள் வந்திருக்கு. இந்த இரண்டுபேருடைய முகபாவங்களும் உடல்மொழிகளும் எனக்கு உதவியிருக்கு என்று தான் நினைக்கிறேன். அத்தோடு வாழ்க்கை முழுவதும் நிறையச் சண்டியர்களைச் சந்தித்திருக்கின்றேன். என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்குப் புரியும் என்னுடைய 15, 16 வயதிலே சாதிவெறியர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியவன் நான். போர்டிங்கில் இருக்கும் காலத்தில் களவாக இடதுசாரியினர் நடத்தும் சாதி ஒழிப்புக் கூட்டங்களுக்குப் போவது வழமை. இவற்றால் வீட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலையும் உருவானது. ஆறேழு வருஷங்கள் படிப்பை இடைநிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களோடே வாழ்ந்ததால் எனக்கு நிறைய வன்முறை, எதிர் வன்முறை கொண்ட மனிதர்களோடு வாழ்ந்த அனுபவம்.
பாலுமகேந்திரா அவர்கள் இந்தப் படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்துவிட்டு எப்படித் தன் கருத்தை வெளிப்படுத்தினார்?
அவருக்கு என்னுடைய தோற்றம் இந்தப் பாத்திரத்துக்கு ஏற்றதென்றே எண்ணினார். ஆனால் இவ்வளவு இயல்பாகவும் வித்தியாசமாகவும் நடித்திருப்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. படம் பாதி எடுக்கும் போதே அவரும், ஒரு சில கன்னட இயக்குனர்களும் பார்த்த போது எனக்கு விருது கிடைக்கும் என்றே சொல்லியிருந்தார்கள். ஆனால் டப்பிங் பேசினால் விருது கிடைக்கும் என்ற சூழல் இருக்கின்றது. தன்னுடைய நண்பன் வெற்றிபெற்றிருக்கின்றான் என்ற மகிழ்ச்சி பாலுமகேந்திராவுக்கு இருக்கின்றது.
அந்தப் படத்தின் பேச்சு வழக்கு என்பது ஒரு தடைக்கல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன், உங்களுக்கு ராதாரவியின் குரலை டப்பிங்கில் பயன்படுத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது நீங்களே உங்களின் குரலில் வழங்கியிருக்கலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?
உள்ளே நிறைய அரசியல் இருக்கின்றது அதையெல்லாம் சொல்லவேண்டி எதற்கு. இயக்குனர் பாலா சிங்களப்பெண்ணான பூஜாவை அவருக்கு விருது கை நழுவிப்போயிவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ் பேச வைத்திருக்கின்றார். இயக்குனர் அமீர் மலையாளப்பெண்ணான ப்ரியாமணியையும், மலையாள நடிகர்களையும் தமிழ் பேச வைத்திருக்கின்றார். யாருக்கு விருது கிடைக்கவேண்டும் கிடைக்கக்கூடாது என்பதை இயக்குனர் தீர்மானிக்கக் கூடியதாக அமைந்து விடுகின்றது. விருதுக்கமிட்டி தீர்மானிக்க முன்னர் இப்படியான செயற்பாடுகள் அபத்தமென்பதை அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மற்றும்படிக்கு கிராமியமக்கள் மத்தியில் என்னுடைய பாத்திரத்துக்குப் பெரும் வரவேற்புக் கிட்டியிருக்கின்றது.
தமிழகத்திலே ஊடகங்களும் சரி, தனிப்பட்டவர்களும் சரி பலருடைய பாராட்டுதல்கள் உங்களுக்குக் கிட்டியிருக்கும் வேளை மறக்கமுடியாத சில பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்
சற்று முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் என்னுடைய நீண்டகால நண்பர் பேராசிரியர் சிவலிங்கராஜா அழைத்திருந்தார். வலம்புரி பத்திரிகையில் தான் ஒரு கட்டுரையை எழுதியிருப்பதாகவும் அது பரவலான வரவேற்பைப் பெற்றதாகவும் சொன்னார். என்னுடைய இன்னொரு நண்பர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கனும் பாராட்டியிருந்தார். ஆச்சரியம் தரத்தக்க விதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் சென்னை சாந்தி தியேட்டரில் என்னைப் பாராட்டி ஒரு தட்டி வைத்திருக்கின்றார். இப்படியான நிகழ்வுகள் என் மனச்சோர்வில் இருந்து விடுபடவும் ஈழத்தமிழரால் இப்படியும் சாதிக்க முடியும் என்று அழைப்புக்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனால் இதைத்தவிர வேறு எதைச் செய்து விட முடியும்?
நன்றி: பேட்டியைத் தந்த வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர், தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தித் தந்த நண்பன் "காதல் கடிதம்" வசீகரன்
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (யாழ்.பல்கலைக்கழகம்) யாழ்ப்பாணம் வலம்புரி பத்திரிகைக்காக எழுதிய ஆடுகளம் பார்த்தேன்
நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங் கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின. எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப் பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. அசல்கிராமத்தவனாக, கிராமத்து ஆளுமைகள் நிரம்பிய தலைமைப் பாத்திரமாகப்படம் முழுவதும் பவனி வரும் ஜெயபாலனும் கதாநாயகனாக நடிக்கும் தனுஷிம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை-காலனித் துவகாலக் கிராமிய வாழ்வியலை நம் கண்முன்கொண்டு வருகின்றனர்.
தனுஷ் தவிரப் பெரும்பாலும் மற்றவர்கள் புதுமுகங்களே. இந்தோ ஆங்கிலக் கிறிஸ்தவப் பெண்ணான கதாநாயகி, அவரது வீட்டுச் சூழல், மொழி, சடங்குகள் முதலானவை காலனித் துவ வாழ்வியலின் ஒரு கூறு எங்கள் கிராமங்களிலே எவ்வாறு எஞ்சி இருந்தது என்பதைப்படம் சிறப்பாகக் காட் டுகின்றது. “வெள்ளாவியில் வைத்து வெளுத்ததோ, வெய்யிலைக்காட்டாமல் வளர்த்ததோ” என்றபாடல் நன்றாகவும் மிகப் பொருத்தமாகவும் இருக்கின்றது. தனுஷ் சற்றுவித்தியாசமாக நடித்துள் ளார். அவரது வளர்ச்சியும் முதிர்ச்சியும் இப்படத்திலே தெளிவாகத் தெரிகின்றது.
பேட்டையாராக நடிக்கும் ஜெய பாலனை தனுஸ் அண்ணே! அண்ணே! என்று குழைந்து குழைந்து பழகுவதும் அதற்கேற்ப முகபாவமும் தோற்றமும் கிராமத்து உறவுநிலையை யதார்த்தமாகப் புலப்படுத்துகின்றது. ஆங்கிலம் பேசும் கதாநாயகியை காதலிக்கும் தனுஸ் அவளின் மொழி விளங் காமல் கஸ்ரப்படும் இடம் மிகப் பிர மாதமாக இருக்கின்றது. மெய்ப்பாடு என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப் பிடும் ‘உடல் மொழியை’ தனுஷ் சிறப் பாகப் பயன்படுத்தியுள்ளார். இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே எழுதப்பட்ட நாவல்களில், குறிப்பாக இலங்கைத் தமிழ் நாவல்களில், காலனித்துவ படோடபத்தில், கிறிஸ்தவச் சூழலில் வாழும் அழகான பெண்களை கிராமத்து அப்பாவி இளைஞர்கள் விரும்புவதாக சித்தரிக்கப் பட்டுள்ளமை ஆடுகளம் படத்தைப் பார்க்கும்போது என் நினைவில் ஒருகணம் பட்டுத் தெறித்தது.
படத்தின் ஆரம்பத்திலே மதிப் பார்ந்த பாத்திரமாக தோன்றிய ஜெய பாலன் கதையின் பிற்பாதியிலே வில்லனாக மாறுகின்றார். பேட்டையாரின் சொல் லைக் கேளாது அவரின் கருத்தை அசட்டை செய்து கோழிச் சண்டைப் போட்டியிலே தனுஷ் ஈடுபடுவதும், தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றுவதும் ஜெயபாலனுக்கு (பேட்டையாருக்கு) பிடிக்கவில்லை.
பேட்டையாரின் ஈகோவும் தனு´ன் ஈகோவும் வெளிப்படும் வகையிலே கதையைப் பின்னி அதைச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். இயக்குநரின் சிறப்பாற்றல் படம் முழுவதும் வெளிப்படுகின்றது. சிறப்பாக இரு வரினதும் “ஈகோ” தான் (தன் முனைப்பு) கதையின் மையமாகின்றது. இந்த மையப் பொருளைக் கையாள்வதில் இயக்குநர் பெரு வெற்றி பெற்றுள்ளார்.
சண்டைச் சேவலை பேட்டையாரிடம் பணங்கொடுத்து ஏமாற்றி வாங்க வந்தவனின் கையிலிருந்து சேவலைப் பறித் தெடுத்த பேட்டையார், அந்தச் சேவலை அடித்துக் கொல்லும் காட்சி அற்புதமாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றது. இந்தக் காட்சியிலே ஜெயபாலனின் முரட்டுச் சுபாவமான ஆணவம்சார் தன் முனைப்பான நடிப்பு துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கோழிச்சண்டைப் போட்டிப் பாரம் பரியம் பெரும்பாலும் மறைந்துவிட்ட நிலையில் இதனை கலாபூர்வமாக ஆவணப்படுத்தி இன்றைய இளைய தலைமுறைக்கு காட்ட முனைந்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். இலங்கை யிலேயே யாழ்ப்பாணத்திலே நடை பெற்ற கோழிச்சண்டைப் போட்டி பற்றி கே.டானியல் தனது “அடிமைகள்” என்ற நாவலில் விபரமாக குறிப்பிட்டுள்ளமை யை ஆடுகளம் எனக்கு நினைவுபடுத்தியது.
இலங்கையிலேயே நெடுந்தீவிலே பிறந்து வன்னிக் கிராமத்திலே வளர்ந்த கவிஞர் ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். பல்கலைக் கழக மாண வனாக இருக்கும் காலத்தில் மாணவர் அவைத் தலைவருக்கான போட்டியிலே களமிறங்கி, அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்று மாணவர் அவைத் தலை வராகிச் சிறப்பாகப் பணியாற்றியவர். நமது ஒரு சாலை மாணாக்கனாகிய ஜெயபாலனைத் திரையிலே “பேட்டை யாராகப்” பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியே ஆடுகளம் பற்றிய குறிப்பினை எழுதத் தூண்டியது. தனுஸ் ஜெயபால னைச் சைக்கிளில் ஏற்றி ஓடும் காட்சியைப் பார்த்தபோது 35 ஆண்டுகளுக்குமுன் நான் ஜெயபாலனை சைக்கிளில் ஏற்றி பலாலி வீதியில் ஓடிய நினைவு என் நெஞ்சத் திரையில் நிழலாடியது.
பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவராக ஜெயபாலன் இருந்த காலத்திலே, துணைவேந்தர், பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள் முதலானோருடன் முரண்படுவது, கோவிப்பது, உணர்ச்சி வசப்படுவது முதலான காட்சிகளை நேரிலே பார்த்துள்ளேன். படத்திலே பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டு சத்தமிட்டு சபதமிடும் காட்சியைப் பார்த்த போது அந்தப் பழைய நினைவு மீண்டும் என்னுள் தலை காட்டியது.பேராசிரியர் க.கைலாசபதி ஒரு முறை ஜெயபாலனைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது “ஒரு முரடன் ஆனால் நல்ல கவிஞன்” என்று கூறிய கூற்றினைப் படம் பார்க்கும் போது நினைந்துகொண்டேன்.
ஜெயபாலன் நல்லதோர் கவிஞன். இவனின் கவிதைகள் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினர் வெளியிட்ட தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து தொகுத்த “எல்லா நதியிலும் என் ஓடம்” என்னும் கவிதைத் தொகுதியிலும் ஜெயபாலனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஜெய பாலன் நல்ல கவிஞன் மாத்திரமல்ல சிறந்த ஆய்வாளரும் கூட அவ்வப் போது நல்ல கதைகளும் எழுதியுள்ளார். பல்பரிமான ஆளுமை கொண்ட ஜெயபாலன் தென்னிந்திய திரைப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித் துள்ளமை எமக்குப் பெருமை சேர்க்கும் விடையம் எனலாம்.
13 comments:
என் இனிய நண்பன் ஜெயபாலனின் களங்கள்,
இன்னும் இன்னும்,
புதிது புதிதாய் விரியும்.
இந்த நட்பின் மனம்
சந்தோசத்தில் வாழ்த்துகிறது! நன்றிகள் பிரபா
இந்தப் பதிவுக்கு எனது வலைப்பதிவிலும் இணைப்புக் கொடுத்துள்ளேன். ஆடுகளம் பதிவுக்கு நன்றி பிரபா
நடிப்புத்தெரியாத மனிதருக்குள் இத்தனைதிறமையா?
கன காலத்துக்குப் பிறகு இஞ்சாலப்பக்கம் வந்திருக்கிறன் பிரபா.அருமையா இருக்கு பேட்டி.ரசிச்சேன் !
நீங்கள் ஆரம்பத்தில் எழுதி இருக்கும் வ. ஐ. ச. ஜெயபாலனின் கவிதைக்கு நான் நிரந்தர ரசிகன் :-). எல்லார் மனத்திலும் உள்ளது. ஆனால், ஒரு நல்ல கவிஞனால்தான் வெளிப்படுத்த முடியும். நன்றி பிரபா.
ஈழக்கவிஞர் வில்வரத்தினம் மறைவின்போது சென்னைப் பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுக் கூட்டத்தில் ஈழக் கவிஞர்களின் பொதுத் தன்மை என்பது, தமிழக கவிஞர்களைப்போல் கோடம்பாக்கம் ஒரு மறைமுக, சென்றடையவேண்டிய இலக்காக இல்லை என்பதைப் பெருமையாகக் கூறியவர் - இப்ப கோடம்பாக்கத்து நடிகராகியுள்ளார்.
wonderful interview, with indepth knowledge.
Good one. Thanks praba! But it's a shame that he couldn't use his own voice for re-recording...:(
I reckon he could have nailed it easily!
தலைப்புக்கு அடுத்துள்ள கவிதையை விட ஈழமக்களின் வாழ்க்கையை இவ்வளவு எளிமையாக சொல்லி விட முடியும் என்பதில் வியக்கிறேன்.
அதேமீசை தோற்றம் அனைத்தும் நண்பர் ஜெயபாலனுக்குமிகப்பொருத்தம்.
நடிக்கவும் முடியுமென்பதை வெளிக்காட்டியுள்ளார்.
Vathiri .C.Raveendran.
ஆடுகளம் இன்னமும் பார்க்கவில்லை நன்றாக நடித்திருக்கின்றார் எனப் பலர் விமர்சனம் செய்திருக்கின்றார்கள். வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்த்துக்கள் கானா
காலத்துக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள் பிரபா
எஸ்.கே .குணா
ஆடுகளத்தில் ராதாரவி டப்பிங்குரலில் இத்தனை அரசியலா?இதற்க்கு யார் காரணாமாக இருந்தாலும் மன்னிக்கமுடியாத குற்றம்.
Post a Comment