"அம்மோய்! அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்" பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்களின் தினசரி வாடிக்கை இது. இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.
"இரா. அருட்செல்வம்" இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு. ஆறாம் வகுப்பில் இருந்து தான் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுப் படலை திறக்கும். அந்த நாளும் வந்தது. நல்ல நாளொன்றில் தான் புது வகுப்புக்களை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் புதுக்கொப்பி, ரெனோல்ட் போனையுடன் அதிகாலையில் முதல் ஆளாய் போய் நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயதையொத்த வாலுகள் வந்தன. எல்லோருமே ஆளையாள் பார்த்துக் கொண்டே வாங்கில் இருந்தோம். அருட்செல்வம் மாஸ்டர் வருவார் என்று. வந்தவர் அவருடைய தம்பி திருச்செல்வம். அப்போதெல்லாம் திருச்செல்வம் மாஸ்டர் தான் ஆரம்ப வகுப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தொருந்தார். மிகவும் கண்டிப்பான மனுசன். நாங்கள் புது வகுப்புக்குப் போன முகூர்த்தமோ என்னமோ திடீர் வெளிநாட்டு வாய்ப்புக் கிட்டி திருச்செல்வம் மாஸ்டர் வெளிநாடு போய் விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் மேலதிகமாக படிக்கக் கூடிய அதிஷ்டமும் எங்களை வந்து சேர்ந்தது.
அருட்செல்வம் மாஸ்டரை நினைத்தால் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.
அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர் வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்ததால் சில சமயம் அங்கிருந்து எங்கள் வகுப்புக்கு வர காலதாமதமாகும். அந்த அவருடைய கடைசித் தங்கை அருட்செல்வி அக்காவிடம் தான் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு விடப்படும். ஆனால் எங்கள் வால்தனங்கள் எல்லை மீறி கூச்சலும் கும்மாளமுமாக மாறும் போது அருட்செல்வி அக்காவுக்கு அநாதரட்சகராக வருவார் அவர் தாய் ஆச்சி. செறிந்து வளர்ந்த செவ்வரத்தமரத்தின் கிளையை ஒடித்து வந்து எங்களுக்கு ஆச்சி கொடுக்கும் பூசை மறக்கமுடியாது.
அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.
ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. "விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா" என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து "என்னடா உடுப்பிது" என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.
அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு
படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.
பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா " எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.
எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு "விதுரன் கதை" நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.
பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு " அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் " என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.
O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.
அருட்செல்வம் மாஸ்டரின் ரியூசன் வருவாய் தான் அவர்களின் குடும்பத்துக்கு பெரும் பலமாக இருந்தது. இடையில் வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டிய வேளை நாம் ஓ எல் படித்துக் கொண்டிருந்தோம். அவர் இடத்துக்கு இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். எங்களுக்கோ "கடவுளே!, அருட்செல்வம் மாஸ்டர் திரும்பி வரவேணும்" என்ற பிரார்த்தனை. எங்கள் பிரார்த்தனை மடத்துவாசல் பிள்ளையார் காதில் கேட்டிருக்க வேணும். அருட்செல்வம் மாஸ்டர் மீண்டும் பழையபடி தன் ரியூசன் வகுப்புக்கு வந்து சேர்ந்தார். அதுக்குப் பிறகு அவரும் வெளிநாட்டுக்குப் போகும் யோசனையை கைவிட்டு விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் அடிப்படைக் கல்வியைக் கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக என்று ஏராளம் விழுதுகள்.
ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. அருட்செல்வம் மாஸ்டருக்கு மட்டும் என் பெயர் "கள்ளப்பிரபு". "எங்கே எங்கள் கள்ளப்பிரபு வந்துவிட்டானா?" என்று சொல்லிக் கொண்டு வகுப்புக்குள் வருவார். ஆனால் ஒரு நாள் கூட அவர் கை என்னைப் பதம் பார்க்கவில்லை. அருட்செல்வம் மாஸ்டருக்கு கோபம் வந்தாலும் அவர் அதை பக்குவமான அறிவுரையாக மாற்றி பேசும் போது எங்கள் குழப்படிகளுக்கு சூடு வைக்கும். அருட்செல்வம் மாஸ்டரின் அன்பைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுப் படித்தவர்கள் பலர். ஆனால் நம்ம ராசிக்கு கணக்குத் தான் சுட்டுப் போட்டாலும் ஏறாதே.
அருட்செல்வம் மாஸ்டரிடம் இருந்த நேசம் மரியாதையாக மாறி இன்றும் என் மனதில் இருப்பதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நடக்கும் காலம் நெருங்கி விட்டது. அப்போது தான் என் சின்ன அண்ணனின் துர் மரணம் வந்தது. பரீட்சை நடக்க ஒரே மாதம் தான். மரண வீட்டில் பாடப்புத்தகத்தைத் திறந்து படிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். புத்தகத்தைத் திறந்தால் அண்ணனின் முகமும், பக்கத்து அறையில் அம்மாவும், உறவினர்களும் அழுது புலம்பும் வேதனை ஒலிகளுமாக. என்ன செய்வது, யாரிடம் போவது?, பக்கத்து வீடுகளிலும் அந்த நேரத்தில் அண்டமாட்டார்கள், துடக்குகாரர் (தீட்டு)தம் வீட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான். அப்போது தான் அருட்செல்வம் மாஸ்டர் என்னைத் தேடி வந்தார்.
"பிரபு! நீ எங்கள் வீட்டுக்கு வந்து படி, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் சொல்லித் தருகின்றேன்" என்று விட்டு வேகமாகப் போய் விட்டார். தயங்கித் தயங்கி அவர் வீட்டுக்குப் போகின்றேன். வெளியே போடப்பட்ட ஒரு வாங்கில் உட்கார்கிறேன். "உள்ளுக்கு வந்து இருந்து படி பிரபு" இது அவரின் அம்மா ஆச்சி. பரீட்சைக்காலம் முடியும் அவரை அருட்செல்வம் மாஸ்டரும் ஆச்சியும் என்னைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.
000000000000000000000000000000000000000000000000000000000
2007 ஆம் ஆண்டு 14 வருஷங்கள் கழித்து அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குப் போகிறேன்.
படலை இல்லாத,அகலத் திறந்த வெறும் முகப்பினை எல்லாம் சைக்கிள்கள் நிறைத்து நிற்கின்றன. உள்ளே மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்க்கின்றேன். நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா? திடீரென்று பழைய நினைவலைகளுக்குள் சுனாமியாய் இழுத்துக் கொண்டு மனம் போகிறது.
கடுமையான யுத்தம் தீவுப்பகுதி மக்களையும் இடம்பெயர்த்து யாழ்ப்பாணப் பெரும்பாகத்துக்குள் தள்ளியது. அப்படி வந்தவள் தான் அவள். வேலணையில் இருந்து இடம்பெயர்ந்து தாவடியில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் தரிசனத்திலேயே என் மனதை இடம்பெயரவைத்துவிட்டாள்.
ஓ எல் வகுப்பில் ஒரு நாள். விஞ்ஞான பாட நேரத்தில் அருட்செல்வம் மாஸ்டர் இறுதிப் பரீட்சைக்கு நாம் தயாரா என்று பரிசோதிக்க திடீரென்று கேள்வி நேரம் ஒன்றை வைக்கிறார். அவளைத் தான் முதலில் பார்த்துக் கேட்கிறார். எனக்குத் தெரியும், அவள் கெட்டிக்காறி, கட்டாயம் விடை சொல்லுவாள்.
"...... நீர் சொல்லும், பெண் தன்மைக்கான சுரப்பி எது"?
அருட்செல்வம் மாஸ்டர் கேள்வி கேட்டதும் வேகமாகத் தலையாட்டி தெரியாது என்கிறாள், கடைக்கண்ணால் பார்த்து எனக்கே ஏற்பட்ட அவமானம் போல குறுகி என் பலகை மேசையை மட்டும் வெறித்துப் பார்க்கிறேன். பக்கத்தில் இருந்த நண்பன் எனக்கு பேனையால் குத்தி சீண்டுகிறான்.
அந்த நேரத்தில் தான் ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.
"பிரபு நீர் சொல்லும், அந்தக் கேள்விக்கு விடை என்ன?" அருட்செல்வம் மாஸ்டர் கூடியிருந்த மாணவர் மத்தியில் என்னை எழுப்பிக் கேட்கிறார்.
"ஈஸ்ட்ரோஜின் சேர்" சரியான விடை சொன்ன புழுகத்துடன் சொல்லி விட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பெற்றிய பெருமை கணக்காக இருக்கிறேன். சரியான விடை சொன்னதுக்கு இல்லை, அவள் காதில் நானும் படிக்கிறேன் என்பதை போட்டு வைத்தேனே என்ற பெருமையில் தான்.
காதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.
நினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.
இன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.
வகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.
"பிள்ளையள் சத்தம் போடாதேங்கோ, கொஞ்ச நேரத்தில் வாறன்" சொல்லியவாறே அதே தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு அருட்செல்வம் மாஸ்டர் என்னை நோக்கி வருகிறார்.
பேஸ்புக்கில் அருட்செல்வம் மாஸ்டர் டியூட்டறி
19 comments:
தல இந்த பதில் உங்களை பத்தி எதுவும் கிண்டல் பண்ண முடியல மாஸ்டரால் தப்பிச்சிட்டிங்க ;))
மாஸ்டருக்கு வணக்கங்கள் ;)
ஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ? அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே? இனிமையான இளவயது காலங்கள். இனி திரும்பாதே.
மனதைத் தொடும் நல்ல பதிவு தல. எல்லாருக்கும் வாழ்க்கையில் டியூசன் வகுப்புகள் ஒரு மறக்க முடியாத ஒரு ஞாபகப் பெட்டகம். இதைப் படித்தவுடன் எனது டியூசன் வகுப்புகள், வாத்தியார், நண்பர்கள், பெண்கள் எல்லாம் மன்சுல படமா ஓடுது.
அன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.
அருட்செல்வம் மாஸ்டருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
//அவள் இருந்து படிப்பாள் இல்லையா? //
ரைட்டு அந்த கேள்விக்குறியிலிருந்து தொடங்கட்டும் உங்கள் ஆச்சர்யமிகுந்த அந்த வாலிப வயசனுபவங்கள் ஸ்டார் மியூஜிக்:)))
//ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. //
திருட்டு பயபுள்ள அப்படின்னு ஒரு கமெண்ட் போடணும்ன்னு யோசிச்சேன் பாஸ் ஆனா நெக்ஸ்ட் லைன்லயே வாத்தியாருரே சொல்லிப்புட்டாரு கள்ளப்பிரபு :)))))
//சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும்.//
மாஸ்டரின் போட்டோவினை பார்த்ததுமே சட்டென்று எங்கள் ட்யூசன் டீச்சர் ஞாபகம்தான் வந்தது கைகளில் வெண்மை நிறத்தோடு வெகுவாக எழுதி தீர்ந்துபோன சாக்பீஸினை விரல்களால் சொடுக்கி விட்டெறியும் [பொதுவாக எதாவது கெக்கேபிக்கேவென்று மொக்கை ஜோக் சொல்லி சிரித்துகொண்டிருக்கும் எங்கள் பக்கமே வரும் அந்த அஸ்திரம்] ஸ்டைல் எல்லாம் !
கண்கள் பனிக்கின்றன.
வேறொன்றும் சொல்வதற்கில.
தல கோபி
;) நன்றி
பிரகாஷ்
PRAKASH said...
ஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ? அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே? //
ஓம் ஓம் வாங்கோ வாங்கோ ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெல்லைக் கிறுக்கன்
துபாய் ராஜா said...
அன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.//
மிக்க நன்றி ராஜா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன் மற்றும் சூர்யா
/*
நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா?
*/
பழைய ஞாபகங்கள்..., கண்ணீர்.....
இது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்...இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே...
ம்ம்....எங்கள் சின்ன வகுப்பு ஞாபகங்களும் மனசில ஓடுது....அப்புறம் இன்னொரு ஆட்டோகிராப் படம் எடுக்கலாம் போல...கொஞ்சம் இருங்கோ அண்ணா இயக்குனர் சேரனை கூட்டிக்கொண்டுவாறன்....;)
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி மாறன்
நதியானவள் said...
இது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்...இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே...
//
உண்மைதான், இப்படியான பல கதைகளை ஒவ்வொரு டியூட்டறிகளும் சொல்லும்
தாருகாசினி
ஆட்டோகிராப் சேரனுக்கே நாங்கள் பாடம் எடுப்போம்ல ;), உங்கட சின்ன வகுப்பு ஞாபகங்களையும் சொல்லியிருக்கலாம்
இப்ப அதுக்கு பேர் ஏரிசி.. எண்டா தான் எல்லாருக்கும் தெரியும்..
Post a Comment