சிட்னி Taronga மிருகக்காட்சிச்சாலைக்காரருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம். இருக்காதா என்ன, சில மாதங்களுக்கு முன்னர் தான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானைக் குட்டி “Luk Chai" ஐ ஈன்றெடுத்த மண் என்ற பெருமையோடு லுக் சாயை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் வேளை இன்னொரு குட்டியும் இன்னும் சில மாதங்களுக்குள் பிறக்கப் போகிறதே என்ற இன்னொரு இனிப்பான செய்திதான் அது. இப்போது வளர்ந்து வரும் Luk Chai இன் தாய்க்காரி Thong Dee படுகண்டிப்பானவள். Luk Chai பால் குடிக்க வரும்போதெல்லாம் நெட்டித் தள்ளுவாள். அத்தோடு இவனின் வால்தனத்தை எல்லாம் கண்டு பேசாமல் இருக்கமாட்டாள். மண் மேட்டில் ஏறுகிறேன் பேர்வழி என்று மெல்ல மெல்லத் தாவி ஏறிப்போய் சரார் என்று இவன் வழுக்கி விழுந்த அனுபவத்தை எல்லாம் பார்த்துச் சகிக்காமல் தன் கையுக்குள்ளும்,காலுக்குக்குள் பொத்திப் பொத்தி வளர்த்தாள். ஆனால் Luk Chai அடக்குமுறையெல்லாம் துச்சமென்று மதிப்பவன். மிருகக்காட்சிச்சாலைப் பணியாளர்களுக்கே பெண்டு நிமித்தும் வேலை வைப்பான். கறுத்தப் பெட்டி போட்ட பந்தை உருட்டி முன்னங்காலால் சடாரென்று கோல் போடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். தன் தாய்க்கு மட்டுமல்ல சித்திமார் வந்தால் கூட தன் பந்து விளையாட்டில் பங்கு கொடுக்காத கஞ்சப் பிறவி இவன்.
இப்படி Luk Chai தனிக்காட்டு ராஜாவாக ஆறு மாதங்களாக வளைய வரும் போது, அவனது சித்தி Porntip இன் உடலில் பெருத்த மாற்றம் மெல்ல மெல்ல ஏற்படுகிறது. இதற்கிடையில் மெல்பன் மிருகக்காட்சிச் சாலையிலும் Mali என்ற பெண் குட்டி பிறந்து விட்டாள். ஆனால் அவள் பெண் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசித்து விட்டார்கள். Porntip மிகுந்த பொறுமைசாலி என்று பெயரெடுத்தவள். தன் வயிற்றுக்குள் நூற்றுச் சொச்சம் கிலோ எடையுள்ள குழந்தையைச் சுமக்கிறோம் என்று எள்ளளவு வருத்தமோ வலியோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாளாம். Porntip தன் சுகமான சுமையை இறக்கும் காலமும் வந்தது. ஆனால் அதுவரை அவளுக்கு மட்டுமல்ல மிருகக்காட்சியில் விசேடமாக வரவழைக்கப்பட்ட மருத்துவருக்கும், அவரோடு அங்கே இருந்த பணியாளர் குழாமுக்கும் தெரிந்திருக்காது Porntip மிகப்பெரிய சவாலைச் சந்திக்கப் போகின்றாள் என்று.
மார்ச் 2010 ஆரம்பக் கிழமை அது. Porntip இருப்புக் கொள்ளாமல் தன் இருப்பிடத்தில் அங்குமிங்கும் அலைகிறாள். வயிற்றுக்குள் இருக்கும் தன் பிள்ளை அலுங்காமல் குலுங்காமல் வெளியே வரவேண்டும் என்ற கவலையை விட, தன் வயிற்றுக்குள் இருக்கும் வரை இதமான நிலையில் இருக்க வேண்டும் என்ற பெருங்கவலை தான் அவளைப் பீடித்தது. அதனால் ஒரு வாரகாலமாக உறக்கமற்ற இரவுகளில் கூட தன் இருப்புக் கூண்டின் இரும்புச் சட்டங்களில் தன் காலை ஒருக்களித்து வைப்பதும் பின்னர் இறக்குவதுமாக இருக்கிறாள். இதையெல்லாம் தூக்கம் தொலைத்த சிவப்புக் கண்களோடு மருத்துவர் குழாம் நேரடியாக வீடியோ கருவி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அந்த அவதானம் மெல்ல மெல்லக் கவலையாக உருவெடுக்கிறது. இதற்கு மேல் பொறுமையிழந்த அவர்கள், மெல்ல எழும்பி வந்து Porntip இன் உடலைப் பரிசோதிக்கிறார்கள், அல்ட்ரா சவுண்ட் கருவி மெளன மொழி பேசுகின்றது. அந்தக் கணம் அவர்கள் உடைந்து போகிறார்கள், விரக்தியோடு ஆளையாள் பார்த்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மார்ச் 8, 2010
Taronga மிருகக்காட்சியின் பேச்சாளர் ஊடககங்களுக்குத் தன் வாயைத் திறக்கிறார். Porntip உடலில் இது நாள் வரை சுமந்து வந்த குட்டி இறந்து விட்டது என்ற அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் முதன்மைச் செய்தியாக வந்து கவலை ரேகையைப் பரப்புகின்றது. அதைவிடக் கொடுமை Porntip இன் உடலில் இருக்கும் அந்த செத்த பிள்ளையை வெளியே எடுக்க முடியாது, அது இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் அப்படியே தாயின் உடலுக்குள் சமாதியாய் இருக்க வேண்டியது தான். செத்துப் போன குட்டியை எடுக்கும் முயற்சியில் Porntip இன் உயிருக்கே உலைவைத்து விட வேண்டிய துர்பாக்கிய நிலை வந்து விடும் என்று கூட இருந்த வைத்தியர்கள் கவலையோடு சொல்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் Porntip இருப்பாளோ என்னமோ, தன் இருப்பிடத்தில் இன்னும் ஒரு அமைதி நிலையற்று துர்பாக்கியவதி போன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.
மார்ச் 10, 2010
அதிகாலை மூன்று மணியைத் தொடுகிறது. இது நாள் வரை தொடர்ச்சியாக ஒவ்வோர் இரவும் மருத்துவ தீவிர கண்காணிப்பில் இருந்த Porntip களின் இற்கு இதெல்லாம் இல்லாத ஒரு இரவு. அவள் மட்டும் தன் கூட்டில் இருக்க,Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளோடு Thong Dee உம் ஒருக்களித்து ஒரே கூண்டில் படுத்திருக்கிறாள். Thong Dee இன் வால் பையன் Luk Chai நேரம் மூன்று மணியாகியும் நித்திரை வராமல் அதே கூண்டுக்குள்ளே சுற்றும் வளைய வந்து கொண்டிருந்தான். இந்த நேரம் நீச்சல் அடிக்கவும், கால் பந்து விளையாடவும் ஆட்களைத் தேடியிருப்பான் போல. Luk Chai இற்கும் சிறிது நேரத்தில் களைப்பு வந்து தன் தாய் Thong Dee இன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெருக்கமாகத் தூங்கிப் போகிறான்.
ஒரு வீடியோ கண்காணிப்புக் கருவி மட்டும் அமைதியாக இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
நேரம் அதிகாலை 3.27
Porntip தன் அரைத்தூக்கத்தை உத றிவிட்டுத் தன் கூண்டில் இருந்து வெளியே ஓடுகிறாள். கூண்டின் புறப்பகுதியில் இருந்த சதுக்கம் அது. அங்கே போனதும் தான் தாமதம் அப்படியே தன் வயிற்றில் இருந்ததைக் கொட்டுகிறாள். அந்து ஒரு சதைப்பிண்டமாக சதுக்கத்தின் குழிக்குள் போய் விழுகிறது. இது நாள் வரை மலையே சரிந்தாலும் தன் கவலை தன்னோடு என்று க ர்ப்ப உபாதையை அடக்கப் பழகிக் கொண்ட Porntip இந்தக் கணம் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு பெருங்குரலெடுத்தவாறே அழுகிறாள். சத்தம் கேட்டதும் தான் தாமதம் படுத்திருந்த யானைகள் திடுக்கிட்டு எழுந்து ஆளுக்கொரு திசையாக பிளிறிக் கொண்டே போகின்றன. Tang Mo என்பவள் மட்டும் Porntip இன் சத்தம் வரும் திசையைக் கண்டுணர்ந்து அந்தப் பக்கம் ஓடுகின்றாள். அங்கே Porntip குழியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறாள். இவளை ஆறுதல்படுத்துமாற் போல Tang Mo என்ற அந்தப் பெண் யானை பக்கத்திலேயே நிக்கிறாள். ஆனால் இருவருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்.
காலை புலர்கிறது. யானைப்பணியாளர்கள் இவர்களின் இருப்பிடத்துக்கு வருகிறார்கள். ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது. மெல்ல மெல்லத் தயங்கி அந்தச் சதுக்கத்துக்கு வருகிறார்கள். அங்கே Porntip உம் Tang Mo நிற்கும் கோலமும் கீழே அந்தக் குழியில் ஒரு உருவம் மிதப்பதையும் பார்த்த கணம் திடுக்கிடுகிறார்கள். அந்த வயதான ஆண் உதவியாளர் உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கூட வந்த அந்த இளம் பெண் பணியாளரை ஒரு துணியைச் சீக்கிரமாகக் கொண்டு வருமாறு கட்டளை இடுகின்றார். அவள் அழுதுகொண்டே ஓடிப்போய் எடுத்து வருகிறாள். முதலுதவி ஆரம்பமாகிறது, யாருக்கு? குழிக்குள் அசைந்து கொண்டிருக்கும் அவனுக்குத் தான்.
தன் தாய் Porntip பக்கபலமாக இருக்க நடந்து முடிந்த முதலுதவியும், உடனடி சக்தி மருந்தும் அவனைத் தெம்பாக்குகிறது. காலனுக்குக் கண் அடித்து விட்டு மெல்ல எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் உடனே முடியவில்லை. இன்னும் மெல்ல இன்னும் மெல்லெ என்று எழும்பி எழும்பி மீண்டும் விழுவதும் சறுக்குவதுமாக இருக்கிறான், ஆனாலும் விடவில்லை. தன்னை நெருங்கி வந்த சாவையே விரட்டியவன், தனக்கு மரண சாசனம் எழுதியவர்களின் நினைப்பையே மாற்றியவன் அல்லவா அவன். ஆம் மெதுவாக....ஆனால் நிதானமாக...உறுதியாக எழ ஆரம்பித்தான் ஐந்து மணி நேரம் கடந்து. மிருகக்காட்சிச் சாலைப் பணியாளர்களின் கண்கள் ஆனந்தத்தால் அல்ல ஆச்சரியத்தால் நிரம்பியதை கண்ணீரால் உறுதிப்படுத்தினார்கள். Porntip முறுவலிப்போடு தன் சிங்காரப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் வந்து வேண்டிய மட்டும் ஆசை தீரத் மடியில் பாலைக் குடிப்பதை அமைதியோடு அனுமதிக்கிறாள். 116 கிலோ குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கின்றது.
மிருகக்காட்சிச் சாலை இயக்குனர் Cameron Kerr, சொன்னார் இப்படி " his birth was set to rewrite the textbooks". மருத்துவ நிபுணர் Dr Thomas Hildebrandt (Berlin Institute for Zoo and Wildlife Health), such an outcome after a protracted labour has never been seen before" என்று சொல்லி வியக்கிறார்.
Sydney's baby elephant 'miracle': he's alive
இப்படிக்கொட்டை எழுத்துக்களில் சிட்னியின் முன்னணிப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுமளவுக்குப் பிரபலமாகி விட்டான் இவன்.
Pathi Harn என்று அவனுக்கு அவனின் தாய் வழி தேசமான தாய்லாந்து மரபுப் பெயரும் வைத்தாகி விட்டது அவன் பெயருக்கு அர்த்தமே அதிசயம் (miracle) தானாம்.
இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.
கண்களை அகல விரித்துக் கொண்டே தன் தாயின் மடி தரும் நிழலில் அவளோடு ஒட்டியவாறே மெல்ல நடக்கிறான் இந்த விதியைத் துரத்திய யானைக் குட்டி.
Luk Chai இன் பிறப்பு பற்றிய எழுதிய முந்திய பதிவு:
ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு
உசாத்துணை மற்றும் படங்கள்:
Taronga மிருகக்காட்சிச் சாலை பிரத்தியோகத் தளம்
Channel 7 இன் விவரணச்சித்திரம் The Zoo
The Sydney Morning Herald
10 comments:
நானும் ஏற்கனவே ஒரு போஸ்ட்டில் படித்து இருக்கேன்.. அற்புதம்..:-)
வீடியோவில் சூப்பரா இருக்கு!
யானை குட்டியின்ர கதை(சம்பவம்) நல்லாயிருக்கு...மனித சக்திக்கு அப்பாற்பட்டு அதிசயங்கள் நடப்பது உண்டுதானே..அதிலயும் மனிதரை போலவே உருவகித்து சொல்லியிருப்பது வாசிக்க தூண்டுகிறது....Luk Chai ஐ நீங்கள் வைத்துக்கொண்டு முடிந்தால் Pathi Harn ஐ கடத்தி இலங்கைக்கு அனுப்பிவையுங்கோ....;)
வருகைக்கு நன்றி தமிழ்ப்பிரியன் ;)
சுவாரசியமான தகவல் பெரிய பாண்டி! :-)
டீவீல ஒரு மணி நேர நிகழ்ச்சி பாத்தேன் பாஸ். நல்லா தொகுத்திருக்கீங்க
தாருகாசினி said...
யானை குட்டியின்ர கதை(சம்பவம்) நல்லாயிருக்கு//
வாங்கோ தாருகாசினி
லுக் சாய் ஐ மட்டுமல்ல பதியையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் கண்டியளோ
மிக நல்ல பகிர்வு பாஸ்..
யப்பா டி...! ;)
சந்தனமுல்லை said...
சுவாரசியமான தகவல் பெரிய பாண்டி! :-)
//
நன்றி ஆச்சி ;)
சின்ன அம்மிணி said...
டீவீல ஒரு மணி நேர நிகழ்ச்சி பாத்தேன் பாஸ். நல்லா தொகுத்திருக்கீங்க
//
நன்றி சின்ன அம்மிணி
*இயற்கை ராஜி* said...
மிக நல்ல பகிர்வு பாஸ்..
//
நன்றி பாஸ்
கோபிநாத் said...
யப்பா டி...! ;)
//
வாங்க பாஸ்
அழகு! அருமை! அட்டகாசம்!
யானைக்குட்டியைச் சொன்னேன் :)
Post a Comment