![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSYQ-AXscoL5huCe4oxB3k-yt85z2f0s0-adGmMN9vNgVykJgGuoJBpeeocsDZNXN3YCHsCxnc7bHN6ImOK7ZL35cF_IfjUw9JY81_4U-8_-9YYH17Ojm5mqxwRyO4_QYaAnhR/s400/balibofront.jpg)
"வன்னியிலே தற்போது நடந்து வரும் சிறீலங்கா அரசின் மூர்க்கமான தாக்குதல்களுக்கு மத்தியில் இருந்து நான் உலகத்துக்கு இந்த அவலங்களை எடுத்து வருகின்றேன், எனக்கு பக்கத்தில் எல்லாம் குண்டுகளும், ஷெல்களும் விழுந்து வெடிக்கின்றன. நாளை என் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு நான் உங்களோடு பேசுகிறேன்" - வன்னிச் செய்தியாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி (இந்தச் செய்தியை வழங்கிய ஒரு சில தினங்களுக்குள் அவரும் குண்டு வீச்சில் பலியாகின்றார்)
Balibo திரைப்படத்தின் டிவிடியை இன்று வாங்கித் திரையில் ஓட விடுகின்றேன். ஜீலியானா என்ற மங்கை Timor-Leste Commission for Reception, Truth and Reconciliation என்ற ஆணைக்குழுவின் முன்னால் பேசத் தொடங்குகிறாள். அவள் ஒன்பது வயதுப் பெண்ணாக இருந்த அந்த 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கண்முன் நடந்த காட்சிகள் விரிகின்றன.
"இந்தோனோசியத் துருப்புக்கள் எமது கிழக்கு தீமோரின் தலைநகர் டிலிக்குள் ஊடுருவப் போகின்றன. எனவே எங்களை எல்லாம் இங்கிருந்து வேறு இடத்துக்குப் போகச் சொல்லி என் அப்பா பலவந்தப்படுத்தி அனுப்ப எத்தனிக்கிறார். Hotel Turismo என்ற என் அப்பாவின் ஹோட்டலில் தங்கியிருந்த Roger East என்ற அவுஸ்திரேலிய செய்தியாளருக்குக்கு நடந்த கொடூரத்தை நான் என் கண் முன்னே பார்க்கின்றேன்" குமுறலோடு வெளிப்பாட்ட ஜீலியானாவின் வார்த்தைகள் ஆணைக்குழுவிடம் கண்ணீருடன் சாட்சியமாக.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiVMSGGVSvcJo4U5ujaGCRgT5vPIEoU2Ym9D6hq5X0UAziX_glhpzYCz4Ma0AAtq_9fQcypJgDX_6P2h1x8IvZucpIzCFvq_ZV-kLR7TB3aBt7BO_DVABM_MThvoENvTdzEEMm/s400/balibo4.jpg)
படம் தொடர்ந்து Roger East என்ற அந்தச் செய்தியாளரின் பயணமாக ஆரம்பிக்கின்றது. Australian Associated Press என்ற அவுஸ்திரேலிய செய்திஸ்தாபனத்துக்கு ஒரு சுதந்திர செய்தியாளனாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட Roger East ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட கிழக்குத் தீமோரின் வெளியுறவு அமைச்ச்சர் Jose Ramos-Horta ஐ சந்திக்கின்றார். கிழக்குத் தீமோரின் செய்திஸ்தாபனத்துக்கு Roger East தலைமையேற்று நடத்தவேண்டும், இந்தோனோசியா தம் நாட்டின் மீது கொண்டிருக்கும் வல்லாதிக்கத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே Jose Ramos-Horta இன் விருப்பாக அமைகின்றது. ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்து செய்தியாளர்களாகப் பயணப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கிழக்குத் தீமோர் - இந்தோனோசிய எல்லையில் இருக்கும் Balibo என்ற இடத்தில் வைத்துக் காணாமற் போன செய்தி என்ற ஒன்று மட்டுமே Roger East இந்த நாட்டுக்குப் பயணப்பட வைக்கும் ஒரே காரணியாக அமைகின்றது. Roger East கிழக்குத் தீமோர் வருகின்றார், எத்தனையோ போர் அவலங்களைச் சந்திக்கின்றார், அனுபவப்படுகின்றார், தான் தேடி வந்த அந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு நடந்த கோர நிகழ்வு கண்டு வெதும்புகிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது அதைத் தான் Balibo என்ற இப்படம் பேசுகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6J5hBCaVyXHFfrldasNjEqzh5XuImJ5PtA6aOKrS-Ph7UFFJP9BZ6a7pV5Z4sPaVObRYlkpEJKZsJx5XOpd1ksV4rY3GWZlXU5VwZkiK_3250p0lkl844jvMJrPvfPL9gNt-9/s400/balibo5.jpg)
1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குத் தீமோர் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு. மனிதப் பேரவலம் ஒன்று இந்தோனேசியாவால் கோரத்தாண்டவமாக கிழக்குத் தீமோரில் அரங்கேற்றிய ஆண்டு தான் அது. போர்த்துக்கீச தீமோர் என்று அது நாள் வரை போர்த்துக்கல் நாட்டின் காலணித்துவமாக இருந்த கிழக்குத் தீமோரை இந்த 1975 தன் பிடியை விடவும், தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால் தொடர்ந்த இந்தோனோசியாவின் வல்லாதிக்கத்தினால் மீண்டும் அடிமைச் சிறைக்குள் புகுந்து கொண்டது.
ஏன் எமக்கு இந்த நிலைமை? உங்கள் நாடு ஏதாவது செய்யக் கூடாதா? தன்னுடைய படையை அனுப்பி வைக்கக் கூடாதா? எமக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை குறைந்த பட்சம் ஐ.நா சபையிலாவது எடுத்துக் கொண்டு போய் உலகத்தின் கவனத்தை எம்மீது திசை திருப்பலாமே? ஜப்பான் உங்கள் நாட்டுக்குப் படையெடுக்கும் போதெல்லாம் எங்கள் ஆட்களை உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து உயிர்த்தியாகம் செய்ய வைத்தோமே? எங்களுக்கு உங்கள் நாடு ஏதாவது செய்யலாமே? நிர்க்கதி நிலையில் இந்தோனோசியாவின் வல்லாதிக்கப் போர்ச் சூழலில் இருக்கும் கிழக்குத் தீமோர் அபலைகள் அந்த அவுஸ்திரேலியச் செய்தியாளர்களிடம் கேட்கிறார்கள். "என்னிடம் இதற்குப் பதில் இல்லை" என்ற வாறே சானல் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் Greg Shackleton பெயர் தெரியாத அந்தக் கிராமத்தில் நின்று கொண்டு வீடியோ கமராவின் முன்னால் பேசுகிறார். இந்தோனோசியப் படைகள் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றார்களாம். அவசரமாக இன்னோர் இடத்துக்கு நகர்கின்றார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9gyw0vHM4YZeIPVorPwFOrmdCASpt7YjHZW8AWCsvshrJRkdjptVceLYsylvsERVKXkkLBXPpap7YyBPJ9JTbpFmGLdROGJokzmewlMNtOk2TEpCbSOjmpLJdgyKvsbE8OO3q/s400/balibo1.jpg)
உண்மைகள வெளியே வரவேண்டும், அந்த ஐந்து செய்தியாளருக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை நான் வெளியுலகுக்குக் கொண்டு வருவேன், அதன் மூலம் இந்தோனோசிய அரசின் வல்லாதிக்கத்தைக் காட்ட ஒரு வாய்ப்பும் கிட்டும் - இது Roger East.
"முட்டாள்தனமாகப் பேசாதே, இத்தனை ஆயிரம் எம் கிழக்குத் தீமோர் மக்கள் கொல்லப்படும் போது உங்கள் உலகத்தால் என்ன செய்ய முடிந்தது? ஐந்து வெள்ளையர்களை வைத்துத் தான் மனிதாபிமானம் பார்ப்பார்களா?" Jose Ramos-Horta .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1A3sM4eiZmQCnGf-iRiknMHWY2Mwmur_neBsJ4_uNIOL95DDre-l0j5-wqY_psqnBdu51bEjHsoMWT8rOh4jlGCZ9uDzM6f_JjWLmjuGqBniGFrNvNmy8aY7yUyCvMIkeuNh_/s400/balibo9.jpg)
சானல் 7 என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சியின் சார்பில் Greg Shackleton (செய்தியாளர்), Tony Stewart (ஒலிப்பதிவாளர்), Gary Cunningham (படப்பிடிப்பாளர்), மற்றும் இன்னொரு அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சானல் 9 சார்பில் Brian Peters (படப்பிடிப்பாளர்), Malcolm Rennie (செய்தியாளர்) ஆகிய ஐந்து பேரும் கிழக்குத் தீமோரில் அப்போது நடந்த பேரவலத்தை போர்க்களத்தில் நின்று செய்தி திரட்டி வெளியுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதையும் அதற்கு அவர்கள் கொடுத்த விலையும் கூடவே இந்தச் செய்தியாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தேடிப் போகும் Roger East சந்திக்கும் அனுபவங்கள் சொல்லும் செய்திகள் அன்று அடிமைப்பட்டுப் போகின்ற ஒரு சமுதாயத்தின் இறுதிக் கணங்களை வேதனையோடு சொல்லி மாய்கின்றது. மனதில் பெரும் பாரம் ஒட்டிக் கொள்கின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlUVIOBIdfuPiLR2kQyQ0YxR9rGWB5T6VKQDDWOkrkIULvn4m-l4N6_eXol8BQZ5oWEBIydziWNfKX91lTfP8Rfa0Fewfx9oGoDBF1hk-k8FPm4L4uKsQleiIlm1uyzkeJQrY2/s400/balibo7.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJiK2U9_fivFt4D1_CUnw1QruqzARwygFQwSbgl7T52SsDrDOStOIwP90xzDtql1nVM1ilkz8NGn5WhnKHG4EOwFNpMMwK0TYoanRbk47Q3viUwe0ekhdn9mHm1ar6wftw9vx4/s400/balibo6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5EDfBp9gQcH6dziwbz_XINto4-SgRptgNYTAS3K-NijU5VUwyZTRfM3x2DIEOfvNFumaPU2r3MaRROPGUcpiMtfYgVuJK7ufuF1mihEom4yqarfMOTW4h7efyDL4iblxnZZpu/s400/balibo8.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfYnKWYPEDXb1owqYJdLnd0fJAUqtMYOn-sCQNNHLCPtl8yCB80qFJnipvY4PjdklvJ8ogb0Tzdbw1jF9at8sxC5xI0RyAwCMzy1o7p0vFPAMUynZQBs7L1hzgm_u2ixo7wj2r/s400/balibo3.jpg)
தாம் Balibo வில் தங்கியிருக்கின்ற Chinese house இன் முன் சுவரில் Australia என்று சிவப்பு மையினால் எழுதி வைத்தால் எங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் Greg Shackleton (சானல் 7 செய்தியாளர்), பின்னர் இந்தோனோசிய இராணுவம் ஊடகவியலாளர்களை நடாத்திய கொடூரமும், பின்னர் அதைச் சாதாரணமாக "இராணுவம் முன்னேறிய போது தவறுதலாகச் சுடப்பட்டார்கள்" என்று இந்தோனோசிய அரசு சொல்லிய சப்பைக் கட்டை இன்று வரை ஏற்கும் உலகமும் என்று முழுமையான வலி தாங்கிய உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகத் தான் இந்தப் படம் அமைந்திருக்கின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnuuzvjN7l7sK0P5cyyYPIKknwzqXDATByukrRySZ3emB7NyJZuby_QgIk42gIWnFxOkI-T5D0i4_jZ9UkyijmD3A0s6XwQ0h56ulrzftnjrDFLyOHQcWab2-eXW4dXaOLS6g4/s400/balibo2.jpg)
கொல்லப்பட்ட செய்தியாளர் Greg Shackleton இன் மனைவி பின்னாளில் கிழக்குத் தீமோர் சுதந்திரத்துக்காகத் தீவிரமான போராட்டக்காரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தோனோசியா தந்த கொடுந்துயரில் பாதிக்கப்பட்ட 8000 கிழக்குத் தீமோர் அபலைகளின் வாக்குமூலங்களைத் தான் ஜீலியானா என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பேசுகிறது Balibo.
படம் நிறைவை நாடும் கணங்கள் வருகின்றன. மீண்டும் ஜீலியானாவின் சாட்சியத்தைக் காட்சி பகர்கின்றது.
நாளை உன்னுடைய மிச்ச அனுபவங்களைச் சொல்வாயா? - ஆணைக்குழு அதிகாரி ஜீலியானாவைப் பார்த்துக் கேட்கிறார்.
கடந்த 24 வருச கொடும் போர்ச் சூழலில் நான் சந்தித்த எல்லா அவலங்களையும் கேட்க உங்களுக்கு நேரம் கிட்டுமா? எத்தனை நாட்கள் உங்களால் இதற்காக ஒதுக்க முடியும்? எந்த அவலத்தை நான் சொல்லாமல் விடுவது? சொல்லுங்கள்? ஜீலியானா குமுறிக் கொண்டே கேட்கிறாள் அந்த அதிகாரியைப் பார்த்து.
அந்தக் குரல் முப்பது வருஷங்களுக்கு மேலாக இன்னும் ஓய்வில்லாத அடிமைச் சூழலில், முள் வேலிகளுக்குள் இருக்கும் அபலைகள், சிறைச்சாலைகளுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள், அரச பயங்கரவாதத்தை வெளியுலகுக்குக் காட்ட முனைந்து தம் உயிரை அதே பயங்கரவாதத்துக்குப் பறி கொடுத்த ஊடகவியலாளர்கள், சொந்த நாட்டில் இருந்து உயிரை மட்டும் பிடித்தால் போதும் போதும் என்று உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்ற ஏதிலிகள் என்று ஈழத்தின் ஒட்டு மொத்த வலிகளையும் பொருத்திப் பார்த்து வேதனைப்பட்டு நிற்க முடிகின்றது.
ஆண்டாண்டு காலமாகப் வெறும் பட்டியல் போட்டு வைக்க முடிகின்றது எம்மவர் அவலங்களை. "Who is Lasantha" என்று கேட்கும் கோத்தபய ராஜபக்க்ஷேக்களை கைகுலுக்கி வைக்கிறது உலகம்.
வானொலியில் பணி புரியும் காலத்தில் ஈழத்தில் இருந்து செய்திகளை மறுமுனையில் கொடுத்த ஊடகவியலாளர்கள் நிலையும் இப்படம் காட்டிய அதே நிலைதான்.
புலம்பெயர்ந்த சூழலில், கிழக்குத் தீமோர் மக்கள் ஈழத்து அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அனுபவ ரீதியாகப் பல எழுச்சி நிகழ்வுகளில் கண்டிருக்கின்றேன். அவர்களின் பிரதிநிதி ஒருமுறை எங்கள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதியிடம் சொன்னாராம், "எங்களுக்கு முன் உங்கள் நாட்டின் விடுதலை தான் கிட்டியிருக்கும்" என்று நினைத்தேன் என்று. அவருக்குத் தெரிந்திருக்காது ஒற்றுமை இல்லாத எம் சமூகம் கொடுத்த பெரிய விலை இது என்று.
அன்று தொட்டு இன்று வரை உலகம் கண்மூடி நிற்கின்றது, ஐ.நாவில் உதடு ஒட்டாது ஜனநாயகம் பேசப்படுகின்றது, எங்கோ ஒரு மூலையில் சுதந்திரம் நிர்வாணப்படுத்தப்படுகின்றது.
தகவல் குறிப்புக்கள் நன்றி:
Balibo திரைப்பட இணையம்
Balibo உசாத்துணை டிவிடி
விக்கிபீடியா
Scribe Publications
12 comments:
பார்க்க வேண்டிய படம்.
அருமையான விமர்சனம் பிரபா!, படிக்கும் போதே பார்க்கத்தூண்டுகிறது. படத்தை பார்த்து விட்டு எனது கருத்தை பதிவு செய்கிறேன். இப்படியான திரைப்படங்களும் எமது ஈழத்து திரைப்படத்துறையில் வரவேண்டும். அதுவே எனது ஆசை, அதற்காகவே எனது பயனமும். ;)
பகிர்வுக்கு நன்றி தல..!
குட்டிப் பிசாசு,
கண்டிப்பாக பாருங்க, நிச்சயம் பிடிக்கும்
நிதர்சனமான கண்ணோட்டம்...நிகழ்கால நிகழ்வுகளையும் பிரதிபலிக்கின்றது...படத்தை தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்..
நல்ல பதிவு
நல்ல பகிர்வு.. இதே போன்ற ஆவணப்படுத்தப்பட்ட அவலங்களை பரப்பும் முயற்சிகள் தொடரட்டும்.
ஒரு சிறு தகவல்.
//"Who is Lasantha" என்று கேட்கும் பசில் ராஜபக்க்ஷேக்களை கைகுலுக்கி வைக்கிறது உலகம்.//
அது பசில் அல்ல கோத்தபய...
Tamiliam said...
அருமையான விமர்சனம் பிரபா!, படிக்கும் போதே பார்க்கத்தூண்டுகிறது. படத்தை பார்த்து விட்டு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
//
வாசித்துக் கருத்தளிதமைக்கு மிக்க நன்றி, உங்களிடம் இருந்து இவ்வகையான படைப்புக்களை எதிர்பார்க்கின்றேன்
கோபிநாத் said...
பகிர்வுக்கு நன்றி தல..!
/
/
வருகைக்கு நன்றி தல
டொன் லீ, யூ.பி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
வணக்கம் பதி
திருத்தம் செய்து விட்டேன், மிக்க நன்றி
//அவர்களின் பிரதிநிதி ஒருமுறை எங்கள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதியிடம் சொன்னாராம், "எங்களுக்கு முன் உங்கள் நாட்டின் விடுதலை தான் கிட்டியிருக்கும்" என்று நினைத்தேன் என்று. அவருக்குத் தெரிந்திருக்காது ஒற்றுமை இல்லாத எம் சமூகம் கொடுத்த பெரிய விலை இது என்று.//
முழுக்க முழுக்க உண்மை.நல்ல பதிவு..எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்...
வருகைக்கு மிக்க நன்றிகள் அஞ்சலி
இத்திரைப்படத்தின் விமர்சனத்தை பின்வரும் தளத்திலும் வாசிக்கலாம்:
http://www.wsws.org/tamil/articles/2010/sep/100910_balibo_p.shtml
இறுதிக்காட்சியில் இயக்குனரின் முடிவு இக்கட்டுரையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment