Thursday, February 11, 2010
ஈழத்தின் "தமிழ்க்கலைக்காவலன்" செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்
நேற்றைய இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "உதயன்" பத்திரிகையினை இணையத்தில் விரிக்கின்றேன், ஒவ்வொரு பக்கமாக விரியும் ஈ பேப்பரின் ஒரு பக்கம் ஒரு அதிர்ச்சியான செய்தியைப் பகிர்கின்றது. அது, நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமான ஈழத்துக் கலைஞர் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களுக்கு அஞ்சலிச் செய்தியாக அமைகின்றது.
பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளரும் பாரம்பரிய சைவ வல்லுநருமான கலாபூஷ ணம் செல்லையா மெற்றாஸ்மயில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது-65. நேற்றுப் பிற்பகல் நெஞ்சு வலியால் அவஸ்தைப்பட்ட அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூ ணம் செ.மெற்றாஸ்மயில் யாழ்ப்பாணம்,தீவகம் ஆகிய கல்வி வலயங் களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை யாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர்.1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்றவர்.
மேலே படங்கள் : மெற்றாஸ் மயில் அவர்களின் மேடையேற்றங்கள்
பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர் கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதி லும் காத்திரமான பங்காற்றியவர்."வேழம்படுத்த வீராங்கனை" என்ற நாட கத்தை நெறியாழ்கை செய்து பல மேடை யேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரிய கலைகள் தொடர்பான பல நூல் களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்ட மெற்றாஸ்மயில் சிறந்த நிர்வாகி என்ற பெருமையையும் பெற்றவர்.
செல்லையா மெற்றாஸ் மயில் கலைத்துறைக்கு ஆற்றிய பணிகளில் சில முத்துக்கள்
இசை நாடக நடிகனாக -
நாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தினை மூத்த கலைஞர்களிடையே பயின்று "சத்தியவான் சாவித்திரி" என்ற இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். வள்ளி திருமணம் நாடகத்தில் விருத்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார்,
நாட்டார் இசைப்பாடகனாக -
நாட்டார் பாடல்களில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான வன்னிப் பகுதி நாட்டார் பாடல்களை தொகுத்து 1980 ஆம் ஆண்டு "வன்னி வள நாட்டார் பாடல்" என்னும் நூலை வெளியிட்டார். இவரின் முயற்சியால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ்சேவை மூலம் துறை சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு நாட்டார்பாடல்கள் நிகழ்ச்சி "நாட்டார் இசை மாலை" என இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பவனி வந்தது.
கிராமியக் கலை ஆடவல்லோனாக -
பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகம், காவடி, குதிரையாட்டம் போன்றவற்றைப் பயின்று ஆற்றுகை செய்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டில் இளங்கலைஞர் மன்றத்தில் ஆடிய ஒயிலாட்டம் நிகழ்வை விழா மலர் ஒன்றில் காணக் கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்றவர்.
கூத்து இசை நாடகத் தயாரிப்பாளனாக -
படித்தவர்கள் மட்டத்தில் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இவர் வழங்கிய நாட்டுக் கூத்து "கண்ணகி வழக்குரை". அதன் பின் "காத்தவராயன் கூத்து","வேழம்படுத்த வீராங்கனை கூத்து" வள்ளுவர் வாக்கு இசை நாடகம், சத்தியவான் சாவித்திரி இசை நாடகம், வள்ளி திருமணம் இசை நாடகம் போன்றவற்றைத் தயாரித்தார்.
கூத்து நெறியாளனாக -
வேழம் படுத்த வீராங்கனை போன்ற நாட்டுக் கூத்து இசை வடிவங்களினூடாக சிறந்த நெறியளானாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
நூல் எழுத்தாளனாக -
இவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக, வன்னி வள நாட்டார் பாடல் (1981), ஆனையை அடக்கிய அரியாத்தை (1993), இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999), மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000), மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001) போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு இவரது இரண்டு நூல்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசினையும், ஒரு நூல் மத்திய கலாச்சார அமைச்சின் கலைக்கழக சாகித்தியப் பரிசினையும் பெற்றுள்ளன.
மேலே படத்தில்: யாழ்ப்பாணம் மாதனை கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரு உரலில், ஒரே நேரத்தில் நெல்லுக் குற்றிப் பாடலைப் பாடி நெல்லுக் குத்தும் பாடலை இவர் ஆவணப்படுதியிருக்கின்றார். எனக்கு அனுப்பிய புகைப்படங்களில் மறக்காமல் இதையும் அனுப்பியிருந்தார்.
பாரம்பரியக் கலைகளின் பாதுகாவலனாக -
பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டின் குழப்பமான சூழ்நிலையிலும் வவுனியா , திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், உடப்பு, புத்தளம் ஆகிய இடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று பல பாடல்களைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்.
இவரின் மேடையேற்றங்கள் படங்களாக
செல்லையா மெற்றாஸ்மயில் என்ற கலைஞனின் அறிமுகமும் எனக்கு உதயன் பத்திரிகை மூலம் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டியது. 2006 ஆம் ஆண்டு என் தாயகத்துக்குச் செல்கிறேன். என் யாழ்ப்பாண மண்ணில் இருந்து கொழும்பு திரும்பும் நாளுக்கு முதல் நாள் உதயன் பத்திரிகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் அங்கம் வகிக்கும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஈழத்து நாட்டுக்கூத்து, இசை நாடகங்கள் பதினொன்றை இறுவட்டிலே வெளியிடுகிறார்கள் என்றும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நிகழ்வும் இந்த விழா ஏப்ரல் 16, 2006 ஆம் ஆண்டு நிகழவிருப்பதாகவும் விளம்பரம் ஒன்று தென்படுகிறது. ஆகா, எமது மண்ணின் கலைவடிவங்களைப் பேணிப்பாதுகாக்கும் இந்தப் பணியைக் காணும் வாய்ப்பைத் தவற விடுகிறோமே என்ற பெரும் கவலை அப்போது எனக்குள். அந்த நேரம் பார்த்து யாழ்ப்பாணத்துக்கு என்னைப் போலவே நீண்ட நாட்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த அபிமான வானொலி நேயரான திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் என்னுடைய மொபைல் போனுக்கு எடுத்தார். என் கவலையை அவரிடம் சொன்னேன். "நீங்கள் ஒன்றும் கவலைப்படாதேங்கோ பிரபா, நான் அந்த சீடிக்களை உங்களுக்காக வாங்கிக் கொண்டு வருகிறேன். கூடவே உங்களின் ஈழத்துக் கலைப் படைப்புக்களை வைத்துச் செய்யும் வானொலி நிகழ்ச்சிக்காகவும் திரு செல்லையா மெற்றாஸ்மயிலைப் பேட்டி எடுத்து வருகிறேன் என்றார். அவர் சொன்னது போலவே 50 நிமிடம் திரு செல்லையா மெற்றாஸ்மயிலின் கலையுலக வாழ்வினை அழகான பேட்டியாக எடுத்ததோடு அவர் மூலமாக மேடையேற்றங்களின் படங்கள், 11 இறுவட்டுக்கள், அவரின் வாழ்க்கைப் பணியைக் கெளரவித்த விழா மலர் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்.
இறுவட்டு நிகழ்வு அழைப்பிதழ்
இறுவட்டு நிகழ்வின் புகைப்படங்கள், ஏப்ரல் 17, 2006 யாழ் உதயனில் வந்த போது
திருமதி ஜெகந்தா பிரிதிவிராஜ் அவர்கள் எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சிக்காக திரு மெற்றாஸ் மயில் அவர்களைப் பேட்டி கண்ட அந்த 50 நிமிடத் துளிகள் இதோ:
1945 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ்மயில் என்ற படம் வந்த போது அந்தப் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இவரது தந்தை இவருக்கு மெட்ராஸ்மயில் என்று பெயரைச் சூட்டினாராம், இது வானொலிப் பேட்டியில் அவர் சொன்னது. இவரின் இந்தப் பேட்டியைக் கொடுக்கும் போது மெட்ராஸ் மெயில் படம் குறித்த விளம்பரத்தையும் இடவேண்டும் என்று நான் தேடி எடுத்து வைத்திருந்த படத்தையும் பகிர்கின்றேன். தன்னுடைய கலையுலக வாழ்வு மட்டுமன்றி கூடவே நாட்டுப்புற, இசை நாடகங்கள் குறித்த பகிர்வாக பாடியும் பரவசம் கொண்டும் இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருக்கின்றார்.
செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் நாட்டுக்கூத்து, இசை நாடகங்களைப் பாதுகாக்கவெண்ணி வெளியிட்ட அந்த இறுவட்டுக்கள் இவை தாம்:
சம்பூர்ண அரிச்சந்திரா (இசை நாடகம்) 5 மணி நேரம்
காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து ) - 6 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
சத்தியவான் சாவித்திரி (இசை நாடகம்) - 3 மணி நேரம்
நந்தனார் இசை நாடகம் ( இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
சிறீ வள்ளி (இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
கோவலன் கண்ணகி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
சாரங்கதாரன் (இசைநாடகம்) - 2 1/2 மணி நேரம்
பூதத்தம்பி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
பவளக் கொடி (இசை நாடகம்) 3 1/4 மணி நேரம்
நல்ல தங்காள் ( இசை நாடகம்) - 4 மணி நேரம்
ஞான செளந்தரி ( இசை நாடகம்) - 5 1/4 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
ஈழத்தின் இசை நாடகக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்துச் செய்த இந்த ஒலி ஆவணப்படுத்தல் முயற்சியின் விளைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்களிலும், விழாக்களிலும் விடிய விடிய அரங்கேறும் முழு நீள இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை அப்படியே முழு அளவிலாகப் பதிவு பண்ணிச் செய்த பெருமுயற்சியாக அமைந்தது. அந்த வகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ஈழத்து இசை நாடகத் துறைக்கு ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு பண்ணத்தக்கதாக அமைந்து விட்டது.
செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களின் கலைப்பணியைக் கெளரவித்து தங்க்கிரீடம் என்ற மலரை 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள், அதனையும் நான் பேணிப் பாதுகாக்கும் ஒரு ஆவணமாக வைத்திருக்கிறேன். அதில் வெளியான சில கருத்துரைகளை இங்கே பகிர்கின்றேன்.
மெற்றாஸ்மயில், எல்லோரும் நேசிக்கும் ஒரு கலைஞன், எல்லோரையும் நேசிக்கும் ஒரு கலைஞன். பாரம்பரியக் கலையே தன் மூச்சு, பேச்சு என்று தன் முழு வாழ்வையும் அந்த நற்பண்புக்காகவே அர்ப்பணிக்கும் ஒரு கலைப்பித்தன் என்று கூறின் அது மிகையாகாது - அருட்திரு கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார்
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தில் கலை, பண்பாடு, பாரம்பரியங்களை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதுடன் இதற்கு தனது பாரிய பங்கினை நல்கி வருகின்றார். கலை சம்பந்தமான நீண்ட அனுபவம் கொண்ட இவர் நூல்களை வெளியிட்டு இருப்பதுடன் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏன் சமுதாயத்திற்கும் கூட சிறந்த கலைப்படைப்பாளராகத் திகழ்கிறார் - யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
கூத்துக்களில் ஆடுவது மட்டுமன்றி, கூத்துக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது, நாட்டுப்புறக்கலைகளான பழமொழிகள் நாட்டார் பாடல்கள், இசை நாடகங்கள் போன்றவற்றைச் சேகரிப்பதிலு, அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவரது பணி குறிப்பிடத்தக்கது - இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உயர் திரு க.பரமேஸ்வரன்
செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் 1992 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கால் வைத்த பின் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தை நிறுவி அதன் மூலம் 15 மூத்த கலைஞர்களை ஒரே மேடையில் அமர்த்தி கிரீடம் அணிவித்து கெளரவிக்கக் காரணமாக இருந்ததுடன், சுமார் 36 மூத்த கலைஞர்களின் வரலாற்றையும் நூல் உருவில் கொணர்ந்தார். - பொன் தர்மேந்திரன் (விழா அமைப்புக்குழுத்தலைவர்)
இவர் தனது 45 வது வயதில் துணிச்சலுடன் கூத்தினைப் பழகியதோடு, "வேழம்படுத்த வீராங்கனை" நாட்டுக்கூத்தில் வன்னி மகாராசனாக ஆடும் ஆட்டத்தைப் பார்த்த பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் "வயதுக்கு மிஞ்சிய ஆட்டம்" எனப்புகழ்ந்துரைத்தார். கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை "பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது" என்று புகழ்ந்துரைத்ததுடன் சுமார் ஏழு மேடைகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்து ரசித்திருக்கின்றர்.
1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோவலன் கூத்தை மேடையேற்றி பாண்டியரசனாக நடித்தார். இந்தக் கூத்து ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஒளிபரப்பப்பட்டது.
ஈழத்து இசை நாடக உலகில் செல்லையா மெற்றாஸ்மயிலின் இழப்பு ஒரு வெறுமையை ஏற்படுத்தியிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
மேலதிக தகவல் உதவி:
தங்கக்கிரீடம் விழா மலர்
உதயன் நாளிதழ்
வேம்படி இணையம்
நன்றி:
பேட்டியை எடுத்ததோடு ஆவணங்களையும், இறுவட்டுக்களையும் அன்பளித்த திருமதி.ஜெகந்தா பிரிதிவிராஜ்
14 comments:
பிரபா!
என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
சலசலப்பில்லாமல் பல சாதனைகளைச் செய்துள்ளார். மிக அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
பிரமிக்கவைக்கின்ற தொகுப்பாக அமைந்திருக்கிறது நாடக கலைஞர் பற்றிய செய்திகள் - தகவல்கள்! எங்கள் பகுதியிலும் நடக்கும் கோவில் விசேஷ கால நாடக கூத்துகளில் கலைஞர்களினை பற்றி இத்தனை ஆர்வம் கொண்டு அறிந்துகொண்டது இல்லை !
தொகுப்புக்கு நன்றி!
கலைஞ்சன் மெற்றாஸ் மயிலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆவணப் படுத்தத் தக்க பல தொகுப்புக்களை தரும் கானாபிரபாவுக்கு நன்றிகள்!
மெட்றாஸ் மெயில் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் நாட்டார் கலைகளிற்கு செய்த பணிகள் மிகப்பெரியன.
இது போன்ற விடயங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் உங்களுக்கு நன்றிகள்
ஈழத்தின் சகல பாரம்பரிய கலைகளை தனித்தும் சிலரினது உதவியுடனும் பேணிக்காத்த பெருமகனார். கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக நூல்கள் இறுவட்டுக்கள் என்பனவற்றை வெளியிட்டார். என்ன செய்வது எமக்கு இருந்த சினிமா மோகத்துள் இவை எல்லாம் அள்ளுப்பட்டு போய்விட்டன. ஆனால் அவர் இவற்றை பேணிய காலம் என்பது 95 ற்கு பின்னதான முக்கியமான காலம். எதுவும் அழிந்து போகும் நிலையில் இருந்த போது தாமாக வந்து புதுப்பித்தவர். ஆவணப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றிகள் பிரபா...!!
மெற்ராஸ் மெயில் அவர்களின் வேழம்படுத்த வீராங்கனையை 2001 அல்லது இரண்டில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பார்த்தேன். அந்த ஒரு கூத்திலேயே ஈர்த்தவர். ஆழ்ந்த அனுதாபங்கள். (அவரது பெயர்க்காரணம் தவிர விபரம் எதுவும் தெரியாதிருந்தேன். தகவலுக்கு நன்றி பிரபா அண்ணா)
அன்னாருக்கு எனது அஞ்சலிகள். பதிவுக்கு நன்றி. மெட்ராஸ் மெயில் திரைப்படம் 1936 ஆம் ஆண்டில் வெளிவந்ததாக அறிகிறேன். அப்படியானால் இவர் 1936 இல் பிறந்தவரா?
வணக்கம், இவரின் பெயர் மெற்றாஸ்மயில் என்று சில இடங்களிலும் மெற்றாஸ் மெயில் என்று சில இடங்களிலும் எழுதியிருக்கிறீர்கள். அவர் எப்படித் தன் பெயரை எழுதினார்? அவரது நூல்களில் அல்லது இறுவட்டுக்களில் எப்படி எழுதியுள்ளார்?
Anonymous said...
அன்னாருக்கு எனது அஞ்சலிகள். பதிவுக்கு நன்றி. மெட்ராஸ் மெயில் திரைப்படம் 1936 ஆம் ஆண்டில் வெளிவந்ததாக அறிகிறேன். அப்படியானால் இவர் 1936 இல் பிறந்தவரா?//
வணக்கம் நண்பரே
இவர் 1945 இல் தான் பிறந்தவர்
கானா பிரபா said...
Anonymous said...
வணக்கம், இவரின் பெயர் மெற்றாஸ்மயில் என்று சில இடங்களிலும் மெற்றாஸ் மெயில் என்று சில இடங்களிலும் எழுதியிருக்கிறீர்கள்//
வணக்கம் நண்பரே
மெட்ராஸ்மெயில் படத்தின் பாதிப்பால் இவரின் தந்தையார் இவருக்குப் பெயர் சூட்டினாலும் அந்தப் பெயரை மெற்றாஸ்மயில் என்றே சூட்டினார் என்பதை இங்கே தந்த ஒலிப்பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். மெற்றாஸ்மயில் என்பதே இவர் பெயர். பதிவிலும் திருத்தி இருக்கிறேன், நன்றி
விக்கியில் மெற்றாஸ்மயில்.
நன்றி
அன்பு நண்ப;
நலந்தானே?
காசால் வூடு கட்டி (may be) தனியா நடை நடந்து
xxxxx xxxxx xxxxx xxxxxxx
என் சின்ன வண்டு போவதெங்கே?
இப்படி மட்டக்களப்பின் நாட்டுப்பாடல் ஒன்று முன்னர்
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படும்.
இந்தப்பாடலின் மீதி வரிகள் உங்களுக்குத்தரியுமா?
அல்லது எங்கே தேடலாம்?
நன்றி.
நட்பார்ந்த தங்கள்
தங்கள் தொகுப்பினை அடியொற்றி (வடிவமாற்றம் செய்து)19.10.2013 நமது முரசொலிக்காக மெட்ராஸ் மெயில் அவர்களைப்பற்றிய தொகுப்பொன்றை வரைகிறேன். தங்கள் பெறுமதிமிக்க தகவல்களின் துணைக்காக நன்றிகள் பல
.
அன்பரே
என் தளத்தில் பகிரும் கட்டுரைகளை நானும் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதால் தயவு செய்து முன் அனுமதி பெற்றுப் பகிருங்கள்
இந்தக் கட்டுரையின் பிரதியையும் அனுப்பிவிடுங்கள்
Post a Comment