என் ஆதர்ஷ எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் இன்றைய பத்தி எழுத்தில் அவரின் சோரம் போகாத சிந்தனையைப் பார்த்தபோது அதை மீள்பதிவாகத் தரவேண்டும் என்ற உந்துதல் மூலம் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
000000000000000000000000000000000000000000000000000000000000000
இறுதிப்போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின்ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும் வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது.
குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது அற்ப அரிப்புகளும் தீனி கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை இதையே நகலெடுக்கின்றன. இறந்து போன பல்லாயிரம் மனிதர்களுக்கான துக்கத்தையோ உயிர் பிழைத்தவர்களின் சொல்லவொண்ணாத துயரத்தையோ எந்த ஊடகமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
நண்பர் நாகர்ஜ�னன் தனது வலைப்பக்கத்தில் இன்றைய ஈழத்தின் அவலநிலை பற்றிய சில இணைப்புகளை வழங்கியிருந்தார். டைம்ஸ் இதழ் ஈழப்படுகொலைகள் பற்றி என்ன தகவல்களை தருகின்றன. என்ற இணைப்புகள் அவை.
அத்துடன் அவரே மேரி கொல்வின் கட்டுரையை மொழியாக்கம் செய்து போட்டிருந்தார். அந்த கட்டுரையின் சாரம் தரும் அதிர்ச்சியும் மனித நம்பிக்கை மோசடியும் நாம் வாழும் காலம் குறித்த மிகுந்த குற்றவுணர்வை. பயத்தை, அசிங்கத்தையே தருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஈழத்திலிருந்து அவ்வப்போது சில நண்பர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நம்பிக்கைகளை, வலியை, துயரை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்வதைத் வேறு வழியில்லை என்ற சூழலில் எழுதப்படும் கடிதங்கள் அவை.
வலி மிகுந்த அந்த மின்னஞ்சல்களை திறந்து படிக்கவே தயங்குவேன். அவை பெயர் தெரியாத உறவுகளின் மரணசாட்சியங்களை அல்லவா சுமந்து வந்திருக்கிறது. எல்லா மின்னஞ்சலிலும் சாவிற்கு கூட அழமுடியாத உடைந்த மனது பீறிட்டுக் கொண்டிருக்கும்.
என்ன பதில் அனுப்புவது. அவர்கள் எந்த பதிலையும் கேட்கவில்லை. அந்த கடிதங்கள் தங்களை சுற்றிய உலகின் கருணையற்ற தன்மையை சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்கள் விலங்குகளை விடவும் கீழாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டும் வரிகள். சொந்த துயரங்களை விடவும் தன் நிலத்தையும் நிலம் சார்ந்த விடுதலையை. அதன் இழப்புதுயரங்களையும் முன் வைத்த கடிதங்கள்.
யோ என்ற ஒற்றை எழுத்துடன் ஒரு நண்பர் இரண்டு ஆண்டுகாலமாக அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார்.
தமிழ் ஈழ விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு உறுதியாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களில் சோர்வுறாத நம்பிக்கை இருப்பதை கண்டிருக்கிறேன். யுத்தசாவுகள் அவரது நம்பிக்கைகளை தகர்க்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்
அதில் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை தவிர வேறு வாசகமே இல்லை.
படித்து முடித்த இரவெல்லாம் கணிணியை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்தபடியே செயலற்று இருந்தேன். அது ஒரு மனிதனின் வெளிப்பாடு அல்ல. மீதமிருக்கும் நம்பிக்கைகளை கூட கைவிட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதே என்ற ஒரு இனத்தின் அவலக் குரல். அது என்னை துவள செய்துவிட்டது.
பகலிரவாக கரையான் அரிப்பதை போல அந்த சொற்கள் என்னை அரித்துக் கொண்டேயிருந்தது. அந்த மின்னஞ்சலுக்கு என்ன பதில் அனுப்புவது. பதில் தேவையற்ற அந்த மின்னஞ்சல் தரும் வலி ரணமாக கொப்பளிக்க துவங்கியிருந்தது. அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வராதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வரவேயில்லை
பேரழிவின் இரண்டு தினங்களுக்கு பிறகு அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. திறந்து பார்த்தேன். மூன்றே வார்த்தைகள்
உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்
எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கபட்ட சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது.
நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.
நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.
ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாறிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?
ஈழப்போரின் வழிமுறைகளை தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு சொந்த வாழ்வின் சொகுசு கலையாமல் யோசிப்பதும் புத்திமதி வழங்குவதும் போன்ற மோசடிகளை வேறு எந்த சமூகத்திலும் காணமுடியாது.
எது சரி, யார் செய்தது தவறு? ஈழபோராட்டம் முடிந்து விட்டது என்பது போன்ற உப்புசப்பில்லாத மயிர்பிளக்கும் விவாதங்கள் எப்போதும் போலவே காணும் எல்லா ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது.
தொலைவில் குருதி குடித்த மண் அறுபட்ட குரல்வளையோடு கிடக்கிறது. சவஅமைதி எளிதானதில்லை. அதன் வலிமை அடங்காதது. சாவின் துர்மணம் கொண்ட மண். பித்தேறிய மத்தகத்தின் கண்களை போல நம்மை வெறித்துக் கொண்டிருக்கிறது.
பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.
ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.
நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.
வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.
யோவின் மின்னஞ்சல் நினைவில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது
உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.
இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.
0000000000000000000000000000000000000000000000000000000
கடந்த வாரம் சக வலைப்பதிவர் தீபாவின் பதிவில் ஒரு மொழியாக்கப் பதிவினை வழங்கியிருந்தார். குறித்த ஆங்கிலப்பதிவை உள்வாங்கி அந்த மனவோட்டத்தில் தீபா தன் மொழிபெயர்ப்பினை வழங்கியொருந்தார். அவரின் அனுமதி பெற்று குறித்த பதிவை மீள் இடுகையாகத் தருகின்றேன்.
ஒரு மனசாட்சியின் குரல்
இலங்கையர் ஒருவர் தனது வலைப்பூவில எழுதிய பதிவிது.
அத்திறந்த வெளியில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சிலர் சிரித்துக் கொண்டும் ஆரவாரமிட்டுக் கொண்டும் இருக்கின்றன. முக்கியமாக வெற்றிக் களிப்பில் உள்ளனர். அவர்கள் முன் புல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்கள் மீது காமிரா நகர்கிறது. இராணுவ அடையாள அட்டை ஒன்றை தங்களுக்குள் கைமாற்றியபடி
புகைப்படக்காரரை அதையும் படமெடுக்கும்படி கேட்கின்றனர். வெற்றிப் பூரிப்பு அந்த இடமெங்கும் தெறிக்கிறது.
இத்தகைய காட்சிகளை நான் முன்பு கண்டிருக்கிறேன். துப்பாக்கிகள் ஏந்தியபடி, வெற்றிக்களிப்பு முகத்தில் கூத்தாடக் காலனியாதிக்கவாதிகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வெற்றி கொண்டாடிய காட்சிகள் தாம் அவை. பெரும்பாலும் அந்த நிலத்தின் உண்மையான குடிமகன்கள் இருவர் அடிமைகளாக இருபுறமும் வெறித்த பார்வையுடன் நின்றிருப்பார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தின் ஆவணமாகக் கொண்டாடப்படும் அப்புகைப்படங்கள். மிகப்பெரியதொரு வேட்டையாடலின் வெற்றிப் பரிசுகள் அவை. சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டை அவை.
மே 19, 2009 தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் அப்படியொரு பெரும் வேட்டையைப் பற்றியது. மனித்ப் புலிகள் வேட்டை. உலகின் மிக பயங்கரத் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, வீழ்த்தப்பட்டுக் கிடந்தது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்படங்கள் காட்டப்பட்டன. சில நேரங்களில் மிகக் குரூரமாக, தேவையில்லாமல் மீண்டும் மீண்டும்...
வார இறுதியில், விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் என்று முற்றும்
அறிந்தபின் கொழும்பு மக்களும், தீவின் இன்னபிற மக்களும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். வாணங்கள் வெடித்து, பெரிய பெரிய லாரிகளிலும் ட்ரக்குகளிலும் சிங்களக் கொடியைப் பறக்க விட்டபடி, வீதிகளில் வலம் வந்தனர். ஆண்களும் பெண்களும் தெருக்களில் ஆடிப்பாடினர், இனிப்புகளும் பால்பாயசமும் விநியோகித்தனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தேசியக் கொடி பறந்தது. வீடுகளின் கூரையில், கடைகளில், வணிகக் கட்டடங்களில், தெருவோரங்களில்.. வாகனங்கள் கூட அணிந்து சென்றன. போர், கலகம், பயங்கரவாதம், தற்கொலைப் படை வெடிகுண்டுகள், கன்னிவெடிகள், சிறுவர் சிப்பாய்கள் இவற்றால் பெருஞ்சோர்வடைந்திருந்த சலிப்படைந்த சிங்களர்கள் தீவிரவாதம் வீழ்த்தப்பட்டதில் மிகப் பெருமிதம் கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.
ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூச்சல்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும்
வீழ்த்தப்பட்ட அந்த மக்களின் கனத்த மௌனத்தையும் கேட்கிறேன். கூரையைக் கிழித்துக் கொண்டு கேட்கும் இக்கூச்சல்களில் சொல்லப்படாத செய்தி அது தான். நாம் வெற்றி பெற்று விட்டோம். அதனால் என்ன? யாரோ தோற்று விட்டார்கள். யார் அது? என்னைக் கேட்டால் நாம் அனைவருமே என்று தான் சொல்வேன். இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் நான்.
அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அவர்கள் இப்போது? பீதியிலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்களா? அல்லது அவர்களுக்கும் இந்தப் போர் முடிவு சந்தோஷத்தைத் தருகிறதா?
அவர்களால் சிங்களக் கொடியைப் பறக்க விட்டு மகிழ முடியுமா? இந்தப் போர் முடிவை நாம் இவ்வாறு ”கொண்டாடக்” கூடாது என்றே எனக்குப் படுகிறது. யாரோ சொன்னார்கள். இதற்குப் பதில் கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.ஒவ்வொரு வெற்றிக் கூச்சலைக் கேட்டும் நான் கூனிக் குறுகுகிறேன்.
ஆடிப்பாடும் கூட்டங்களைக் கண்டு திரும்பிக் கொள்கிறேன். ஏன் எனக்கு
இப்படித் தோன்றுகிறது. எனக்கு என்ன போயிற்று? ஆனால் என் நண்பர்கள்
பலரும் இப்படித் தான் எண்ணமிடுவார்கள் என்றும் உணர்கிறேன். நாங்கள்
அனைவருமே சிந்திப்பது தவறாக முடியாது.
இப்போர் முடிவை இந்நாடு பார்க்கும் பார்வை எனக்கு மிகுந்த
வருத்தமளிக்கிறது என்றே நினைக்கிறேன். தத்தா காமினி கூட ஈழாராவின்
மரணத்தைக் கண்ணியத்துடன் கையாண்டான். எனக்கு அந்த அரசன் மீது பெரிய மதிப்பு இல்லாவிடினும் இன்றைய இலங்கைத்தலைமைக்கு இல்லாத
கண்ணியம் அவனிடம் இருந்தது. 2500 ஆண்டுகள் கூடுதல் நாகரிக வளர்ச்சி
அடைந்த மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது?
பிரபாகரன் ஒன்றும் திடீரென்று தீவிரவாதியாக முளைத்து விடவில்லை.
அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிடில் 26 ஆண்டுகால போருக்குப் பின் நாம் பாடம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை.
இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான். என் அறையில்
சிங்களக் கொடியொன்று மடித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை எழும்
போதும் இரவு தூங்கும் போதும் அதைப் பார்க்கிறேன். என்றைக்கு ”நான் ஒரு சிங்களன்” என்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேனோ அன்று அதைப் பறக்க விடுவேன். தற்போது அது மடித்துத் தான் வைக்கப் பட்டுள்ளது.
16 comments:
:((
படம் பார்த்ததுமே மனம் பதறிப்போகிறது சின்னச்சிறு குழந்தைகளின் நிலையே இப்படி என்றால்....?
:(((((
//பகலிரவாக கரையான் அரிப்பதை போல அந்த சொற்கள் என்னை அரித்துக் கொண்டேயிருந்தது.////
இதே சூழல் என் ஈழத்து நண்பர், தம் சகோதரியையும் அவர் தம் குழந்தையையும் “செல்லடித்து கொன்ற செய்தியினை சொன்ன போது...!
ஆறுதல் கூற கூட வரிகளற்று மெளனமாகிப்போனேன் :((((
எஸ்.ரா அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்பதால்,
அடிக்கடி அவரது இணையத்தளம் சென்று அவர் எமது பிரச்சினை பற்றி என்ன எழுதப்போகிறார் என்று பார்ப்பேன்.
வேறு சில பிரபல எழுத்தாளர்களின் கட்டுரையை வாசித்து கவலையடைந்த எனக்கு
எஸ்.ரா வின் இந்த பதிவில் ஒரு ஆறுதல் கிடைத்தது.
உண்மையான அக்கறையுடன், எமது வலியையும் உணர்ந்து எழுதியுள்ளார்.
பகிர்வுகளில் எதனையுமே சொல்லத்தோணாமல் வருந்துகிறேன் நண்பா...
நாங்களிருக்கிறோம் உனக்கு. என்ற ஒற்றை வார்த்தையை கூட இங்கிருந்து சொல்ல முடியாதவர்கள்தான் கருத்துக்களை களமாக்கி வெற்றி தோல்வி பெற்றதாக கூவுகிறார்கள்..
எனக்குத்தெரிந்து ஒன்றுதான் சொல்ல முடியும்..
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னையும் சேர்த்து.. :-(
என்ன செய்வதென்றும் தெரியவில்லை - யாரிடம் எம் மனதைப் பகிர்ந்து கொள்வது என்றும் முடியாமல் தனியே இருந்து தவிக்கிறேன்! பதிவை மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள்!
"ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?"
ம்ம்ம் வன்முறைதான்!!! சந்தேகமேயில்லாமல்.
தெளிவு.மிகவும் தெளிவான படைப்பு.
தமிழகத்தின் கிராமங்களுக்கு இதை நாங்கள் எடுத்துச்செல்லவேண்டும்.
இல்லையேல் உயிரோடு இருப்பதற்கு நாங்களும் வெட்கப்படவேண்டும்.
வணக்கம்
;-( ம்
தமிழர்களின் வாழ்வைப்போல துயரம் சுமக்கும் வரிகள்......
நடந்து முடிந்த சம்பவங்களையொட்டி என் மனதில் தோன்றியவைகளை எஸ். இரா அவர்களின் வார்தைகளின் கண்டெடுத்தேன்...
:(
நான் கொண்டாடிய மூன்று எழுத்தாளர்களில் இருவர் , மழையில், குடை விற்ற நேரத்தில் , எம்மை புரிந்து கொள்ள ராமகிரிஷ்ணனாவது உள்ளாரே, என சிறு நிம்மதி
மனிதர்கள் வதை படுவதையும், மனிதம் மரித்துக் கொண்டிருப்பதையும் இவ்வுலகம் பார்த்தும் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது.
இனி உலகம் இப்படித்தானா!? என்றும் நினைக்கத் தோன்றுகிறது!
எஸ்.ரா அவர்களுக்கு ஏற்படும் எண்ணமே எமக்கும் ஏற்படுகிறது.
இதுவே உண்மையான ஒரு மனிதனின் மன நிலையாக இருக்க முடியும் இச் சூழலில். இது போன்ற மனிதனின் எழுத்துக்களில் பாசாங்கு இருக்க முடியாது. இது போன்ற மனிதர்கள் காணக்கிடைப்பது அரிதிலும் அரிது. இவரின் புத்தகங்களே நம் கைகளில் வைத்திருப்பதற்கு தகுதியானவை என்று தோணச் செய்கிறது. எஸ். ரா விற்கு எனது வணக்கங்கள்.
அந்த சிங்கள நண்பரின் சிந்திப்புப் போல எல்லோரும் எண்ணியிருந்திருந்தால் இத்துனை துர்ச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்க முடியாது.
கானா பிரபா,
மீள்பதிவுக்கு நன்றி.சற்றே ஆறுதலான பதிவு. வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை...
அண்மையில் ஒரு சந்திப்பின்போது கவிஞர் சக்கரவர்த்தி ஒரு கருட்தை சொன்னார். இறாந்தவர்கள் 20 பேர் , 30 பேர் என்று தொடங்கி 100 பேர் என்று வரும்வரை எமக்கு கவிதை வந்தது. இப்போது 20000 பேர் இறந்த்விட்டார்கள் எனும்போது கவிதை வரவில்லை. அழுகைதான் வருகின்றது. அந்த அழுகையின் மௌனம் தான் இன்று நாம் அறியும் நிசப்தம்.............
எம் இழப்புக்ககுக்கு யாராலும் ஆறுதல் தந்து விட முடியாது எனினும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரின் குரல்களாவது உரத்து வருகிறதே என சந்தோசப் பட்டுக் கொள்ள வேண்டியது தான் ..
நன்றிகள் உங்கள் மீள் பதிவுக்கு ..
Post a Comment