ஈழத்துக் கலைஞர், எழுத்தாளர், டொக்டர் இந்திரகுமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் காலமானார் என்ற துயர்மிகு செய்தியை நண்பர் ரிஷான் பகிர்ந்து கொண்டார். அன்னாரின் இழப்பில் என் துயரையும் இங்கே பதிவு செய்து, தினக்குரலில் வெளியான டொக்டர் இந்திரகுமாரின் வாழ்க்கைக் குறிப்போடு, வீரகேசரியின் கலாகேசரி இணையத்தில் வெளியான அவரின் பேட்டியையும், டொக்டர் இந்திரகுமார் அவர்கள் கதாநாயகனாக நடித்த வாடைக்காற்று திரைப்படம் குறித்து நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவையும் மீண்டும் அவர் நினைவாக மீள் பிரசுரம் செய்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.
தினக்குரலில் வெளியான ஆக்கம்
தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.
அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.
இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.
விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.
அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.
இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.
தமிழ் கலாசாரத்தை காப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்களே முன்னோடி - வீரகேசரிக்கு வழங்கிய பேட்டி
இலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத் தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருப்பவரும், இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு சிறந்த மருத் துவராகச் செயலாற்றி வரும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் வீரகேசரிக்கு அளித்த செவ்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு ஒரு சாதனையாளராக, உங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள்?
யாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் மாந கரத்திற்கு நான் 1983இல் சென்றேன். அப் பொழுது இருந்த இனக்கலவரமே நான் லண்டன் செல்லக் காரணமாக அமைந்தது. இலண்டன் செல்லும் முன்னர் இலங்கையில் நாடறிந்த ஒருவனாக இருந்தேன். முதல் நிலைக்கல்வியை கொழும்பில் 1958களில் சென்ட் தோமஸ் கல்லூரியில் படித்தேன். பின்னர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யில் படிப்பை நிறைவு செய்தேன். யாழ்ப் பாணத்தில் முதல் நிலைக் கல்வியை ஒரு வருடம் படித்து முடித்தேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் "மண்ணில் இருந்து விண்ணிற்கு' என்ற கட்டுரை வீரகேசரியில் தொடர்கட்டுரையாக வெளி வந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. 1972களில் அந்தப் புத்தகத்திற்காக இலங்கையின் "அரசு மண்டல சாகித்திய பரிசினை' பெற்றேன். இலங்கையில் நான் கதாநாயகனாக நடித்த "வாடைக்காற்று' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு "ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களு டன் ஏற்பட்ட நட்பு அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.
இலங்கையில் இருந்த தினகரன் நாளேட் டிற்கு, ""விண்வெளியில் வீரகாவியம்'' என்ற கட்டுரையை ஞாயிற்றுக்கிழமை இதழுக்காக எழுதினேன். பின்னாளில் அந்தக் கட்டு ரையை நூலாக இந்தியாவில் பிரசுரித்தேன். 1997இல் தமிழ்நாடு அரசு என்னுடைய நூலுக்கு விருது வழங்கியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வந்த ஓர் எழுத்தாளருக்கு, இந்தியாவில் விருது கிடைப்பது ஆச்சரியம்தான்.
லண்டனில் நீங்கள் எழுதிய நூல் களைப் பற்றிக் கூறுங்கள்?
பரவலாகப் பேசப்பட்ட என்னுடைய மற் றொன்று, ""டயானா வஞ்சித்தாரா? வஞ் சிக்கப்பட்டாரா?'' என்ற நூல். இது டயானா வின் மறுபக்கத்தைப் பற்றிய முதல் நூல். தமிழில் அச்சேறாமல் இருந்த பல்வேறு நூல்களைப் பிரசுரித்திருக்கிறேன். என் னுடைய தனிமுயற்சியில் பிரசுரம் பண்ணப் பட்ட முதல் நூல் ""இலங்கேஸ்வரன்''. பின் னர் தாமரை மணாளனுடன் இணைந்து பல நூல்களைப் பிரசுரம் பண்ணினேன். அவற் றுள் யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றிய நூலை, எம்.ஜி.ஆர் அவர்கள் படமாக்க முயற்சித்தார்கள். அத்தகைய சிறப்புடைய நூல் அது. மற் றொரு முக்கியத்துவம் வாய்ந்த நூல் ""தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்''. நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எழுதிய நூல் அது.
உங்களுடைய அடுத்த படைப்பு என்ன? அதனைப் பற்றிக் கூறுங்கள் ?
""உலகத்திலேயே மிகப்பெரிய இந்துக் கோவில் இருப்பது "கம்போடியா'வில்தான். அது ஒரு (திருமால்) விஷ்ணு கோவிலாகும். பல்லவ சோழ கட்டிடக்கலை அடிப்படை யில் கட்டப்பட்ட கோவில் அது. கம்போடி யாவின் பழைய பெயர் ""காம்போசம்''. கம்புக முனிவரின் வழி வந்தவர்கள் வாழ்ந் ததால், அந்நாட்டின் பெயர் ""காம்போசம்'' என்றானது. அங்கு பல்லவர் ஆதிக்கம் நிறைந்து இருந்தது. கி.மு. 2 முதல் கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் ஆதிக் கம் செலுத்தியுள்ளனர். பல்லவர்கள் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் பட்டமான "வர்மன்' என்பதையே, காம்போடியா மன்னர்களும் பெயருடன் இணைத்துக் கொண்டனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கம்போடியாவின் பழைய இனம், "மியூனன் இனம்'. அதிலிருந்து தான் "ஹெல்லா இனம்' தோன்றியது. அதன் வழியில் "ஹெமர் இனம்' உரு வானது. கி.பி.6இல் நிலவிய பல்லவப் பண்பாட்டுக் கூறுகள் இந்த இனங்களில் காணப்படு கிறது. ஹெமர் நாகரிகம் கி.பி.6இல் தொடங்குகிறது. இந்த நாகரிகத்தை தான் ""உலகின் முதல் நாகரிகம்'' என்று உலகத்தோர் கூறு கின்றனர்''. இந்தச் செய்திகளடங்கிய என் அடுத்த நூலை தொல்லியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். கம்போடிய நாட்டின் கட்டிடக்கலை, பல்லவசோழ கட்டிடக்கலை என்பது நான் கொடுக்கும் ஒரு சிறுதிறப்பு மட்டுமே.
பல்லவக் கட்டிடக்கலையையும்கம் போடியக் கட்டிடக்கலையையும்; சோழக் கட் டிடக் கலையையும் கம்போடியக் கட்டிடக் கலையையும்; பல்லவ, சோழ இணைப்புக் கட்டிடக் கலையையும் கம்போடிய கட்டிடக் கலையையும் ஒப்பிட்டு உண்மை காண வேண்டியது இளைய தலைமுறையினரின் கடமை. அதற்காகவே என்னுடைய நூலை அவர்களுக்கு காணிக்கையாக அளிக் கிறேன். கண்டுபிடிப்புகள் உண்மையாக நிகழ வேண் டும் என்பதற்காக, கல்வெட்டுச் செய்திகளை வார்த்தை மாறாமல் அப்படியே கொடுத்துள் ளேன்.
தமிழ் கலாசாரத்தை காப்பதில் இலங்கைத் தமிழரின் நிலை எவ்வாறு உள்ளது?
இலங்கைத் தமிழர்கள் எங்கு குடியேறி னாலும் நம் பண்பாட்டை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள். கலா சாரத்தைப் பரப்புவதில் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
இந்தியத் தமிழர்களிடம் இருக்கிற அளவுக்கு திறமையும், பயிற்சியும் இல்லாது இருக்கலாம். ஆனால் அவர்களது ஆர் வத்தையும், ஊக்கத்தையும் தமிழ்நாட்டில் யாரும் எட்ட முடியவில்லை. இசை, நாட் டியம், நடனம் முதலான கலைகளை மாலை வகுப்புகள் வைத்து, வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வளர்த்து வருகின் றனர். பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது ?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந் ததைப் போன்று, கல்கி, அகிலன், சாண்டில் யன் போன்ற முழு நேர எழுத்தாளர்களை இப்போது காணமுடிய வில்லையே ஏன்...! , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன...!, முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே...!, இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்...! ஒருவன் மற்றொருவனைச் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதுமே இந்த தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம்.
பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது என்றால், அதற்கு ஒரே வழி எழுத்தாளர்கள் ஒன்று கூட வேண் டும். ""எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகங்கள் உருவாக்கப்படவேண்டும். சென்னை எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், மதுரை எழுத் தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், ஐரோப் பிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்று உருவானால்தான், எழுத்தாளர்களைச் சுரண்டி பணத்தைச் சேர்த்துக் கொழுப்பவன் இருக்கமாட்டான். அங்கு பதிப்பகத்தில் அமைப்பாளர் ஒருவர் இருப்பார், சரிபார்ப் பவர் ஒருவர் இருப்பார். அந்நிலை வந்தால் படைப்புகளுக்கு உரிமையாளர் எழுத்தாளர் களே!. சென்னைப் பதிப்பகத்தார் மதுரைக்கும், மதுரையிலிருந்து இலங் கைக்கும், இலங் கையிலிருந்து ஐரோப்பாவிற்கும் தொடர்பு கொண்டு பதிப்பகத்தார்களின் புத்தகங்களை விற்பதன் மூலம் இடம் பரிமாறப்படும். படைப்புப் பரவல் ஏற்படும்.இல்லாவிட்டால் அழிந்த கலைகளுள் ஒன்றாக எழுத்துக்கலையும் மாறிவிடும்.
எழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்....
கே: தாங்கள் எழுதிய நூல்களை வெளியிடுவதில் எழுத்தாளர்கள் சந்திக் கும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தாங்கள் வெளியிடும் நூல்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதுதான் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வெற்றி. இலங்கையில் நிலவும் போர் நிலையால் அங்கு புத்தகம் பிரசுரிக்க அதிகம் பணம் தேவை. புத்தகம் வெளியிடப்படும் பொழுது, எழுத்தாள ருக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறிப் பிட்ட விழுக்காடு பங்குக்காக, 100 புத்தகம் கொடுத்து அதை விற்று, பங்குப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுவார்கள். ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு 1015 புத்தகங்கள் மட்டுமே வரும். எழுத்தாளர்களுக்கு உங்கள் நூலை லண்டனில் வெளியிடுகிறோம் என்று அறிவிப்பை வழங்கிவிட்டு, விழாவின் பேனரில், 'ஙீ'பதிப்பகத்தாரின் வெளியீடு கள்' என்று எழுதியிருப்பார்கள். எழுத் தாளர்களின் பெயர் இருக்காது. இருந் தாலும், நம்முடைய நூல் அச்சாகின்றதே என்ற நிம்மதி மட்டுமே எம்போன்ற எழுத்தாளருக்கு மிஞ்சும். பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு வழங்க வேண்டிய பங்கிற்காக, என் புத்தகத்தை "மறுபதிப்பு' என்று அச்சேற்றி, மோசம் பண்ணியிருக்கிறார்கள். 14 முறை பதிப்பு செய்யப்பட்டும் ஒவ்வொரு முறையும் மறுபதிப்பு செய்யப்பட்ட பழைய பதிப்பு என்றே காட்டியிருந்தனர். எழுத்தின் அச்சு முறை மாறி இருந்ததைக் கண்டு அவர்கள் செய்த மோசடியைத் தெரிந்து கொண் டேன்.
14ஆம் பதிப்பு என்று அச்சிட்டால் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கு பெருமையும், வெகுமதியும் கிடைக்கும். ஆனால் மறுபதிப்பு என்று குறிப்பிட்டு எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றனர். இத னால் பதிப்பகத்தார்களுக்கு மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும்.
வாடைக்காற்று நாவல் குறித்த என் பார்வையோடு அந்த நாவல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படக் காட்சிகள்
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
மேலே படத்தில் வாடைக்காற்றில் மரியதாஸாக நடித்த டொக்டர் இந்திரகுமார், நாகம்மாவாக நடித்த ஆனந்தராணி
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
நன்றி:
தினக்குரல்
வீரகேசரியின் கலாகேசரி இணையத்தளம்
வாடைக்காற்று நாவல் - கமலம் பதிப்பகம்
23 comments:
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" இந்தப்பாடலை எங்காவது தரவிறக்க ஆவன செய்யுங்களன் அண்ணா ?
முன்புமொருமுறையும் உங்களிடம் கேட்டிருந்தேன் !
பிரபா!
எங்கள் ஈழத்தின் கலைச்சொத்துக்களில் ஒன்றைப் பற்றி மிக அருமையாக உங்கள் தனித்துவமான பாணியில் தந்துள்ளீர்கள்.
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
வணக்கம் மாயா
அந்தப் பாடலை உரியவர்களிடம் கேட்டு நிச்சயம் பகிர்கின்றேன், தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வருகைக்கு மிக்க நன்றிகள் யோகன் அண்ணா, நீண்ட நாளைக்குப் பின்னர் உங்களைக் காண்பதில் உண்மையில் பெருநிறைவு அடைகின்றேன்
பிரபா அண்ணா,
ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி.
------------------------
செங்கை ஆழியான் பற்றி தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லாத போதும்,முன்பு அவருடைய புத்தகங்கள் வாசித்ததில்லை.
"நான் உங்கள் ரசிகன்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவு வாசித்த பின் தான் நான்
அவருடைய புத்தகங்கள் வாசிக்க தொடங்கினேன்.
செங்கை ஆழியானில் எனக்கு ஆர்வம் வர காரணமான உங்கள் அன்றைய பதிவுக்கு நன்றி.
நீங்கள் புத்தகங்கள் பற்றி தந்த அறிமுகமும் உதவியாக இருந்தது.
( அன்றைய பதிவுக்கு நான் comment எழுதாததால் இப்ப எழுதினேன், sorry for that )
வணக்கம் ...பிரபா .. சிவாஜி போன்ற நடிப்பு ஜாம்பவான்கள் இருந்த கால கட்டத்தில் யாதார்த்த நடிப்பு என்ற பதம் பேசப்பட்டு சர்ச்சை இருந்து வந்தது ...அப்படி ஒரு இயல்பான யாதார்த்த நடிப்பை வாடைக்காற்றில் இந்திரகுமார் அவர்கள் செய்து காட்டியது இன்னும் என் கண் முன் நிற்கிறது..
அவரின் நினைவாக போடப்பட்ட இந்த பதிவுக்கு நன்றி.
இழப்புகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக பெரு மூச்சைத்தான் விட்டுக்கொண்டிருக்கிறோம்.
மருத்துவர் இந்திரகுமார் அவர்களுக்கு
என் அஞ்சலிகள் உரித்தாகுக.
அண்மையில் பத்திரிகைகள் மூலமாகத்தான் அறிந்துகோண்டேன்..
உங்கள் பாணியில் சிறந்த முறையில் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்..
நன்றி....
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
நன்றி பிரபா! நிறைய விடயங்கள் அறிந்து கொண்டோம். தொடருங்கள் உங்கள் பணி. எத்தனை படைப்பாளிகளின் கதைகள் எம்மை அடையாமல் உள்ளன. நன்றி.
//எழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்....//
ஈழத்து பதிப்பாளர்களில் சிலர் இந்தியாவிலும் தங்களது கிளைகளை வைத்துள்ளார்கள. அவர்கள் ஈழத்தில் எழுத்தளர்களுக்கு 1000 அடிப்பாதாக சொல்வார்கள். ஆனால் இந்தியாவல் அதை 2000மாக அடித்து இந்திய நூலகங்களுக்கு விற்பார்கள். ஈழத்து எழுத்தாளர்களுக்கு இதனால் 1000குரிய லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையியில் தமிழ்வாணனின் பதிப்பகம் செய்வது பறவாயில்லை என சொல்லலாம். ஏனனில் 10இல் ஒன்றவாவது நல்ல புத்கமாக அமைகிறது. இதனால் நலிந்துபோயிருக்கும் ஈழத்து படைப்புலகமும் இதனால் ஒரு வேகத்துடன் வரலாம். பொதுவாக ஒரு தராதரம் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே இந்த சந்தையை வைத்துள்ளார்கள். தமிழ் அறிஞர்கள் தரத்தை வைத்திருப்பதோடு மற்றவற்றை அடியோடு ஒதுக்குவதையும் அவதானிக்கலாம்.
மற்றது வாசிப்வர்களின் எண்ணிக்கை ,,ஈழத்தைப் பொறுத்தவரை அனைவரும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். 500 புத்தகம் அடிக்க 40000 செலவாகும் என்றால் 1000 அடிக்க 45000 தான் செலவாகும். ஆகாயால் 80ருபாயிலிருந்து 45 ருபாயாக புத்தகத்தின் செலவு குறையும். ஆகவே வாசிப்போர் கூடினால் விலையும் குறையும். எனவே வாசிப்பவர்களிலேயே விலையும் தங்கியுள்ளது. ஆனால் பரம்பரையாக பதிப்பகத்தொழில் இருப்பவர்கள் இவ்வாறான விலையை பார்பபதில்லை. ஆனால் அவர்கள் அடிப்பதே கொள்ளை லாபம். இதே வேளை இந்தியாவில் அதை பதிப்பித்து பின் அதையே இலங்கையில் இந்திய விலையில் விற்கும் போது அதிகளவான லாபத்திதை இவர்கள் பார்க்கிறார்ககள்.
வணக்கம் வாசுகி
பெரும் எழுத்தாளர் செங்கை ஆழியானை உங்கள் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தை அறிந்து உண்மையில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அவருடைய காட்டாறு, தீம் தரிகிட தித்தோம், முற்றத்து ஒற்றைப்பனை போன்றவற்றை தவறவிடாதீங்கோ.
மிக்க நன்றி
//சின்னக்குட்டி said...
இயல்பான யாதார்த்த நடிப்பை வாடைக்காற்றில் இந்திரகுமார் அவர்கள் செய்து காட்டியது இன்னும் என் கண் முன் நிற்கிறது..//
சின்னக்குட்டியர்
முந்தி ரூபவாஹினியில் ஏதோ ஒரு சிறுதுண்டு வாடைக்காற்றை சிறுவயதில் பார்த்த ஞாபகம், இப்படம் முழுமையான டிவிடியாக வெளிவந்து பலரைச் சென்றடையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.
// ஆதித்தன் said...
இழப்புகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக பெரு மூச்சைத்தான் விட்டுக்கொண்டிருக்கிறோம்.//
வணக்கம் ஆதித்தன்
டொக்டர் இந்திரகுமார் சிறந்த கலைஞர், படைப்பாளி தவிர எமது தேசியத்தின் மீது பற்றோடு உழைத்தவர். அவரின் இழப்பு உண்மையில் இன்றைய காலகட்டத்தில் வந்த பெரும் இழப்புக்களில் ஒன்றே :(
ஜீவராஜ் மற்றும் கதியால்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
வணக்கம் வெண்காட்டான்
மணிமேகலை போன்றவை குறைந்த செலவில் அச்சிட்டு வழங்கினாலும் இப்போது கொஞ்சக்காசிருந்தால் யாரும் எதையும் பதிப்பிக்கலாம் என்ற நிலைக்கு மாற்றியதில் முன்னோடி இந்த மணிமேகலை. ஆங்காங்கே ஒரு சில நல்ல படைப்புககள் வந்தாலும் கூட. என்னைப் பொறுத்தவரை இப்படியான பதிப்பகங்கள் இலாபம் பார்க்கும் அதேவேளை தரக்கட்டுப்பாட்டையும் தம்முள் கொண்டு வரவேண்டும்.
இன்றுதான் அறிந்து கொண்டேன். விரிவான தகவல்களுக்கு நன்றி.
nalla aakam nammavar paadal iruntha enaku anuppi vaikavum
rahini
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" பாடலை இங்கு கேட்கலாம்:
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
நல்ல முயற்சி பிரபா.... காலத்தின் தேவை உணர்ந்து எம்மவர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்துகின்றீர்கள்.....
தொடருங்கள்.. உண்மையாக இப்போது தான் இவர் பற்றி நிறைய தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது.... உங்களால் முடிந்தால் ஈழத்துப் பொப்பிசை பற்றி ஏதாவது தகவல்களை எங்களுக்காகப் பகிர முடியுமா??????
அனானி அன்பர்கள், ராகினி, மெல்பன் கமல்
வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ராகினி, மெல்பன் கமல்
நம்மவர் பாடல்களை அவ்வப்ப்போது தருகின்றேன்.
வாடைக்காற்று பாடல் தொடுப்பைத் தந்த நண்பருக்கு நன்றி.
இந்த நாவலை வாசித்திருக்கிறேன் இப்பொழுதும் என் புத்தகக்கட்டுக்களோடு ஊரிலை இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...
படம் நான் பார்த்ததாக நினைவில்லை ...
உண்மைதான் சில இடங்களில் பேச்சுத்தமிழும் சில இடங்களில் இலக்கணமுமாக இருக்கும்..
கதையை இப்படி ஆராய்ந்திருப்பதில் திரும்ப படிச்ச மாதிரி ஒரு உணர்வு ...
பகிர்வுக்கு நன்றி அண்ணன் காலம் கைகூடினால்...எம்மவர்களில் நிறையத் திறமைசாலிகள் இருக்கிறார்கள் அவர்களால் நல்ல படைப்புகளை உருவாக்க முடியும் என்னற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
வருகைக்கும் உங்கள் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன்
My good friend Dr.Indrakumar was a Tamil enthusiasist;artist;writer;humanist;medicaldoctor as well a good humanbeing!Long live his name and fame!
வணக்கம் ஷண் நல்லையா
உங்கள் நண்பர் குறித்த பகிர்வைத் தந்தமைக்கு நன்றி
Post a Comment