
“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,பொஙகல்திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும், இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.
தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.
பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.
என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு எங்கடவீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்

விசுக்கு விசுக்கெண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.
கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.
ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.
ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்சிருக்கும்.
ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,
வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா " எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போ" என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.
அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை
" கெதியா வாங்கோ பிள்ளையள்" என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது
"என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே" எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.
" இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்" என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.
" சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை" எண்டு சொல்லிப் பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.
என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டிருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு "பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்" என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.
பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.
அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)
யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.
வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.
ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.
திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.
கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.
அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.
தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல் அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.
எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.
வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.
பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.
பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள

அட்டைவாணத்தைக் கொளுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.
சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போய்க் கருகி ஓய்ந்துவிடும்.
நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாக வைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாக விருக்கென்று சென்று வெடிக்கும்.
றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து " ஐயோ அம்மா" என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.
திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” எண்டபெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.
ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.
இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.
ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொருத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வைத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.
பொங்கல் அடுப்பு செய்வதும் ஒரு கலை.பொங்கல் ஆரம்பிப்பதற்கு ஒரு கிழமைக்கு முந்தியே செம்பாட்டு மண்ணிலை தண்ணீரைக் கலந்து நல்லாக் குழைத்து அலுமினிய வாளியில அந்தக் குழைத்த மண்ணைப் போட்டு இறுக்கி விட்டு சுத்தமான தரையில கொஞ்சம் குருமணலைப் பரவி விட்டு அப்பிடியே கவிட்டு விட்டால் அது கூம்பு வடிவில காய்ஞ்சு இறுகிவரும்.பொங்கலுக்கு ஒரு சில தினம் முன்னுக்கு சாணி கரைச்சு அந்த அடுப்புக்களின் மேல தடவித் திருநீறையும் தடவிவிடுவார்கள். பல குடும்பங்களுக்குப் பொதுவில் இந்த அடுப்புக்கள் செய்து பரிமாறப்பபடும்.
பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.
அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த

சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.
முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இதை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.
ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.
பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
காகங்களுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.
17 comments:
இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் பிரபா.தமிழர் திருநாளும் கூட.சரியா?ஏன் அநியாயத்துக்கு பொங்கலை
யெல்லாம் ஞாபகப்படுத்துறீங்க.
பெருமூச்சு வெப்பத்தில, நாங்களெல்லோ இப்போ பொங்கிக் கொண்டிருக்கிறம்.இனியும் எப்போ
வாவது வருமா அந்த ஒரு நாள்.
எங்கட வீட்டில வருஷம் முழுக்க துளசி மாடத்தடியில கோலம் போடுவம்.ஆனா மார்கழி மாசத்துகெண்டே விசேஷமான கோலங்கள்.ஒரு நாளைக்கு நான், தங்கை என்று.பொங்கல் வேலைகள் ஒரு மாசமாகவே நடக்கும்.பொங்கல் அன்று பொங்கல் கறி என்று பயறு போட்டு 7- 9 மரக்கறி கலந்து ஒரு கறி அம்மா வைப்பா.அதன் வாசம் இப்பவும்.போனமுறை விடுமுறைக்குப் போகேக்க அந்தக் கறி சமைக்கச் சொல்லி சாப்பிட்டன்.
எண்டாலும் பொங்கல் அண்டு வைக்கிறமாதிரி இல்லையே.
குறிப்பா தாவடிச்சந்தி சுந்தரலிங்கண்ணை கடை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க.நன்றி.
மண்மணக்க மீண்டும் ஒரு அருமையான பதிவு. மூல வெடியை மறந்துவிட்டிர்க்களா? ரோல் கப் வெடியை துப்பாக்கி இல்லாதவிடத்து சுவரில் தேய்த்து வெடிப்பது ஞாபகம் இல்லையா?
.......
கீழே உங்களுகக்கு மட்டும். dont forget to delete this when u approve my comment.
venkattan.blogspot.com என்று பதிவை ஆரம்பித்துள்ளேன்.எப்படி தமிழ் மணம் தமிழ் வெளியில் இணைப்பது என்று தெரியவில்லை. இரண்டிலும் இணைத்துவிட்டேன். பதவு வரவில்லை. தரமில்லை போல. நேரம் இருந்தால் பார்க்கவும்.
.பொங்கல் - ஒன்னும் இல்லே இங்கே. இப்படி பதிவு எழுதி பழசைத் தான்பேச வேண்டி கிடக்கு :((
பொங்கல் எண்ண இப்படிதான் இருக்கணுமுங்க.நல்லா எழுதிறிங்க தொடர்ந்து எழுதுங்க
// ஹேமா said...
பெருமூச்சு வெப்பத்தில, நாங்களெல்லோ இப்போ பொங்கிக் கொண்டிருக்கிறம்.இனியும் எப்போ
வாவது வருமா அந்த ஒரு நாள்.//
வாங்கோ ஹேமா
அன்று கொண்டாடிய அந்தப் பொங்கலை இன்று யாழ்மண்ணிலும் கூட காணமுடியாது போல. வெறும் எழுத்தில் எழுதியே ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறோம் இல்லையா.
உங்களின் நனவிடையும் ரசிக்க வைத்தது, மிக்க நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சம்பியன் வெடி ஞாபகம் உங்களால் கிட்டியது.
'மரக்கறி கலந்து ஒரு கறி அம்மா வைப்பா'
அதனை நாங்கள் ஒண்டாக் காச்சல் என்போம். வயிறு நிறையு மட்டும் ஒரு பிடி பிடிப்போம்
//பெருமூச்சு வெப்பத்தில, நாங்களெல்லோ இப்போ பொங்கிக் கொண்டிருக்கிறம்.இனியும் எப்போ
வாவது வருமா அந்த ஒரு நாள்.
//
மறுமொழிகிறேன்!
//வெண்காட்டான் said...
மண்மணக்க மீண்டும் ஒரு அருமையான பதிவு. மூல வெடியை மறந்துவிட்டிர்க்களா? ரோல் கப் வெடியை துப்பாக்கி இல்லாதவிடத்து சுவரில் தேய்த்து வெடிப்பது ஞாபகம் இல்லையா?//
மிக்க நன்றி வெண்காட்டான்
மூலவெடியை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
தமிழ்மணம், தமிழ்வெளியில் உங்கள் பதிவு வருவதற்கு அவர்கள் திரட்டியில் இன்னும் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு நாள் காத்திருந்து மீண்டும் ஒரு முறை இணைத்துப் பாருங்கள்.
// ILA said...
.பொங்கல் - ஒன்னும் இல்லே இங்கே. இப்படி பதிவு எழுதி பழசைத் தான்பேச வேண்டி கிடக்கு :((//
வாங்க இளா, நீங்க சொல்றது வாஸ்தவம் தான்.
//ஹஜன் said...
பொங்கல் எண்ண இப்படிதான் இருக்கணுமுங்க.நல்லா எழுதிறிங்க தொடர்ந்து எழுதுங்க//
வருகைக்கு நன்றி ஹஜன்
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
'மரக்கறி கலந்து ஒரு கறி அம்மா வைப்பா'
அதனை நாங்கள் ஒண்டாக் காச்சல் என்போம். வயிறு நிறையு மட்டும் ஒரு பிடி பிடிப்போம்//
வருகைக்கு நன்றி டொக்டர், ஒரே இடத்தில் வாழ்ந்தாலும் ஊருக்கு ஊர் புழங்கும் சொற்களும் வித்தியாசமா இருக்கிறது.
வருகைக்கு நன்றி ஆயில்யன்
விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.
//பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா//
பொங்கினாத்தான் பொங்கல், பொங்கல் வாழ்த்துக்கள் கானா
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களுடைய பதிவை வாசிக்கும் போது,
முன்பு ஊரில் பொங்கல் செய்த நினைவுகள் கண்களை கலங்க
வைத்தது.
அந்த நாட்கள் எவ்வளவு அருமையானவை.
நான் சிறுவயதில் இருக்கும் போதே வெடி தடை செய்யப்பட்டுவிட்டதால்
எனக்கு வெடி கொழுத்திய அனுபவங்கள் பெரிதாக இல்லை.
யாழ்ப்பாணத்தில் மற்றைய விழாக்களை விட தைப்பொங்கலை தானே விசேடம்.
மறக்க முடியுமா அந்த அழகான நாட்களை. ம்ம்ம்ம்ம்ம்
பதிவு நன்றாக இருக்கு.
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
Sorry தவறாக எழுதிவிட்டேன் என மனைவி கோபிக்கிறா. அது சாம்பாரக இருக்க வேண்டும். ஒண்டாக் காச்சல் என்பது சாம்பார் சாதம்.
தல
பொங்கல் வாழ்த்துக்கள் ;))
இளா அண்ணே சொன்னாது போல தான் நிலைமை இருக்கு ;)
வருகைக்கு நன்றி சின்ன அம்மணி, உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
//வாசுகி said...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களுடைய பதிவை வாசிக்கும் போது,
முன்பு ஊரில் பொங்கல் செய்த நினைவுகள் கண்களை கலங்க
வைத்தது.
அந்த நாட்கள் எவ்வளவு அருமையானவை.//
உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் வாசுகி
இழந்தவை இழந்தவை தான் என்னுமாற்போல இப்படியான விஷயங்களும் தொலைந்தே போய் விட்டன என்பதை நினைக்கும் போது ஏக்கம் மேலிடுகிறது. இப்படி எழுதிவைத்து இரை மீட்பதே ஒரு மனத்திருப்தியாகப்படுகிறது.
வணக்கம் திகழ்மிளிர், தல கோபி
மிக்க நன்றி உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
வணக்கம் டொக்டர்
;-) மீண்டும் வந்து சரியாகச் சொல்ல வைத்ததுக்கு நன்றி
Post a Comment