தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள்.
தன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றான். அந்த சாட்சியங்களே இந்த ஆவணப்படத்தின் கூட்டில் நின்று சாட்சியம் பகிர்கின்றன. தாம் சேர்த்து வைத்த அசையும், அசையா என்று எல்லாச் செல்வங்களையும் ஒரே நொடியில் தொலைக்கும் வாழ்க்கை தான் அன்றிலிருந்து இன்று வரை ஈழத்தமிழனுக்கு வாய்த்திருக்கின்றது. வெறும் வாய்வழியே சொல்லப்படும் சோகவரலாறுகள் தான் இன்று எமக்கான வரலாற்று ஆதாரங்கள். அந்தச் சோக வரலாறுகளில் ஒன்றான யாழ் பொது நூலகம் எரிப்பையும் அந்தக் காலகட்டத்தில் தம் உயிராகவும், ஊனாகவும் இதைப் பேசத் தொடங்குகின்றார்கள். "எரியும் நினைவுகள்" அவற்றை ஒளி வழி ஆவணப்படுத்துகின்றது.
கடந்த வாரம் தான் இந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. இந்த "எரியும் நினைவுகள்" ஆர்ப்பரிக்கும் சிந்தனைகளோடும், உணர்ச்சி வசப்படும் பேச்சுக்களோடும் அல்லாமல் மெதுவாக ஆனால் வீரியமாக அந்த அறிவுசால் ஆலமரம் வீழ்ந்த கதையைச் சொல்லி நிற்கின்றது. பொதுசனத்தொடர்பூடாகங்களில் நம் ஈழத்தவர் அதிக முனைப்புக் காட்டி வரும் வேளை ஆவணப்பட முயற்சிகள் மிக மிகக்குறைவாகவே இருக்கின்றது. நம் இருண்ட சோக வரலாறுகள் ஒளி ஆவணப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலைமுறையும் தம்முள்ளே இவற்றைப் புதைத்து வைத்து அவை தொலைந்து போனதாகிவிடும். அந்த வகையில் "எரியும் நினைவுகள்" என்னும் இந்த ஆவணப்படம் உண்மையிலேயே நல்லதொரு விதையாக விழுந்திருக்கிறது.
இந்த ஆவணப்படத்திற்கான முழுமையான தரவுகளும், சாட்சியங்களும் சொந்த மண்ணில் இருந்தும், சிறீலங்காத் தலைநகரில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை பிற்தயாரிப்பு முயற்சிகள் திரைத்துறைத் தொழில்நுட்பம் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யாழ் நகரின் அன்றைய மேயர் ராஜா விஸ்வநாதன் 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பு நடந்த பின்னர் வெளியிட்ட கருத்து வீடியோ, இந்த நூலக எரிப்பை முதலில் கண்ணுற்ற யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தகைநிலைப் பேராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியாளர்கள், நூகலர்கள், நூலகத்து வாசகர்கள் என்று பலரின் நினைவுக்கதவுகளை இந்த ஆவணப்படம் திறந்திருக்கிறது. நிகரி திரைப்பட வட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டு சி.சோமிதரனின் இயக்கத்திலும், தமிழகத்தின் தேர்ந்தெடுத்த திரைத் தொழில்நுட்பவியலாளர்களின் கூட்டிலும் இந்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆவணப்படத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், இந்த ஆவணப்படத்தைப் வாங்குவதற்கும்
http://burningmemories.org/
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இவ் ஆவணப்பட இயக்குனர் செல்வன் சி.சோமிதரனை வானலை வழி சந்தித்திருந்தேன்.
ஊடகவியலாளரும், எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனருமான செல்வன் சோமிதரன் சொல்லும் " எரியும் நினைவுகள்" உருவான கதை
வணக்கம் சோமிதரன், நீங்கள் இலங்கையிலே இருந்த காலத்தில் ஊடகவியலாளராக உங்களை உருவாக்கிக் கொண்டீர்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது எரியும் நினைவுகள் என்கின்றஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். முதலில் உங்களுக்கு இந்த ஊடகத்துறையில் உங்களை வளப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி சொல்லுங்களேன்?
இலங்கை வானொலியிகள் மீதான ஈர்ப்பு தான் எனக்கு இந்த ஊடகத்துறையில் வரவேண்டும் என்கிறவிருப்பை உருவாக்கியது என்பேன். ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு கணிதத்துறை மாணவன். உயர்தர வகுப்புபடித்ததன் பிறகு கொழும்பில் இருந்த காலகட்டங்களில் இலங்கை வானொலியின் நெருக்கம், அவ்வானொலியின் நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு, இலங்கை வானொலியின் நாளைய சந்ததி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு இவையெல்லாமே இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர் என்னும் இடத்தை நோக்கி எடுத்துச் சென்றது. நான் ஊடகத்துறையில் வந்தபொழுது பின்னாலுள்ள சமூகம் பற்றிய பார்வை வராத காலகட்டம் என்று சொல்லலாம்.
அதற்குப் பிறகு வானொலியில் இருந்து பத்திரிகைத் துறைக்கு வரவேண்டிய நிலமை வந்தது. ஏனெனில் வானொலியில் இருந்தோ, ஸ்ரூடியோவுக்குள் இருந்தோ எதையும் செய்யமுடியாத நிலமை. ஏனெனில் இலங்கை வானொலி வந்து ஒரு இருபது வருஷங்களுக்கு
முன்னாலையோ, அல்லது பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலையோ இருந்த நிலமையில் இருக்கவில்லை. நான் சின்ன வயசில் கேட்ட இலங்கை வானொலி இப்போது இல்லாமல் போச்சு.
இந்த மாதிரிச் சூழலில் நான் பத்திரிகைத் துறைக்குள் வந்தேன்.பத்திரிகைத் துறைக்குள் வந்த பிறகு தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு மறைந்த ஊடகவியலாளர் சிவராமினால் உருவாக்கப்பட்ட North eastern Herald என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றியிருந்தேன். திரு தராக்கி சிவராம் மற்றும் திரு சிவநாயகம் இருவருடனும் சேர்ந்து அந்தப் பத்திரிகையில் பணியற்றியிருந்தேன். அது ஒரு பெரிய கொடுப்பினையாக இருந்தது என்றே சொல்வேன்.நிறைய விஷயங்களை அதன் மூலம் சமாதான காலத்திலே, நிறையச் செய்திகளை, போர், அரசியல் என்பதற்கு அப்பாற்பட்டு தமிழர்களுடைய அபிவிருத்தி தொடர்பாக, எங்களுடைய வளங்கள், பண்பாடு தொடர்பாக, எங்களுக்குள் இருக்கக்கூடிய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதக்கூடிய வாய்ப்பை எனக்கு அது உருவாக்கியது.அந்தத் தொடர்ச்சி காரணமாக எனக்கு பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
நீங்கள் ஊடகத்துறையில் இருந்த காலகட்டத்தில் இருந்த ஊடகச் சூழல் எப்படி இருந்தது?
அதாவது 2002 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தின் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்வதற்காகப் போகின்றேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில், ஆனால் வளர்ந்தது முழுமையாக மட்டக்களப்பில். அதாவது தொண்ணூறுகளின் முழுமையான காலகட்டத்தில் என் வளர்ப்பு மட்டக்களப்பிலேயே இருந்தது. திரும்பவும் நான் 2002 ஆம் ஆண்டு யாழ் போகின்றேன். அதாவது A9 பாதை திறந்த காலகட்டத்தில் முதற்தொகுதி பயணிகளோடு போய் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு நாலைந்து மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு வந்துவிட்டேன். இந்தக் காலப்பகுதி எல்லாமே சமாதான காலப்பகுதி தான். சுதந்திரமாக நாங்கள் வேலை செய்யக் கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எனவே நிறையத் தகவல்களையும், செய்திகளையும் நாங்கள் சொல்லக் கூடியதாகவும் இருந்தது. அதன் பின்னால் 2004 இல் நிலமை மோசமடையத் தொடங்கியது. அதாவது கிழக்குப் பகுதியில் முற்றுமுழுதாகப் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலமை வந்தது. பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி, 2005 இல் தராக்கி சிவராம் அவர்கள் கொல்லப்பட்டார். எனவே 2005 இற்குப் பிறகு எல்லோருக்குமே தெரிந்த விடயமாக இந்த ஊடக அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
உங்களுடைய ஆரம்பம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று வானொலி பின்னர் பத்திரிகைத்துறை என்று மாறி தற்போது இன்னொரு ஊடக வடிவம் அதாவது ஆவணப்படங்களை எடுக்கும் முனைப்பு என்று தற்போது மாறியிருக்கின்றது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை ஏராளமான குறும்படங்கள் வந்திருக்கின்றன. அந்த முயற்சிகள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஆவணப்பட முயற்சிகள் என்பது மிக மிக அரிதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் உங்களுக்கு இந்த ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி வந்தது?
நான் முதலில் North eastern Herald இல் வேலை செய்த காலப்பகுதியில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை மையப்படுத்தி பி.பி.சி அந்தக் கட்டுரைகளுக்கு அமைவாக ஆவணப்படங்களை எடுத்தது. அதன் பொருட்டு அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் அதன் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு Visual Media வில் நுளைந்து அதன் மூலம் நிறையச் செய்யலாம் என்று என் மனதில் பட ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் நண்பர் சரிநிகர் சிவகுமார் அவர்கள் சொன்னார் நாங்கள் அடுத்தகட்டமாக Visual ஆக ஏதாவது செய்வோம் என்றார். இப்படியாக இலங்கையில் தொலைக்காட்சிப் படமோ அல்லது ஒரு ஆவணப்படமோ செய்வோம் என்று நாம் தீர்மானித்தோம். ஏனெனில் Visual revolution என்ற ஒன்று வந்திட்டுது.அச்சூடகத்துறையில் இருந்து Visual Media வின் ஆக்கிரமிப்பு இப்போது பரவலாக இருந்து வருகிறது. அத்தோடு அந்த ஊடகமும் மிகவும் இலகுவாக்கப்பட்டு, எமது கைக்கு அண்மையதாக வந்து விட்டது. ஆகவே இந்த ஊடகத்தை நான் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் நான் சென்னையில் லயோலா கல்லூரியில் Media Visual Communication கல்வி கற்றேன். எனவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள்
Visual Media வை கையில் எடுக்கவேண்டும் என்ற நிலமை உருவாயிற்று. அதிலும் குறிப்பாக ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்ர முடிவை எடுத்தோம்.
இதைப்பற்றி விரிவாகப் பேச ஆசைப்படுகின்றேன். சாதாரணமாக எங்களுக்கு வந்து படம், சினிமா, பிலிம் என்று பல்வகையாகச் சொல்லப்படுவது எங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தப்படுகின்றது என்றால் சாதாரணமாக தமிழகத்தில் இருந்து வரும் வியாபாரத்தனமான படங்களைத் தான் தமிழர்கள் நிறைய அனுபவிக்கின்றோம். அதிலும் குறிப்பாக் ஈழத்தமிழர்களுக்கு இந்தப் போர்ச்சூழலில் வேறு எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத சூழலில் எமக்கு கிடைக்கக்கூடிய ஒரே பொழுதுபோக்காக இருப்பது இந்த தமிழ் சினிமா. சதா சர்வகாலமும் தமிழ்சினிமாவை போட்டு போட்டு படமென்றால் தமிழ் சினிமா என்ற நிலமையில் இருந்து வந்தோம். இந்தச் சூழலில் அதற்கு மாற்றான ஒரு ஊடகத்தைத் தேடிக்கொண்டுவரவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் நாங்கள் ஆவணப்படங்களைத் தெரிவு செய்தோம். ஏனெனில் ஆவணப்படத்திற்கும், குறும்படத்திற்கும் வித்தியாசம் தெரியாத நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ச்சூழலில் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழகத்திலும் இந்த ஆவணப்படம் வளர்ச்சி பெற்று வருவதாக இருக்கின்றதே தவிர முற்றாக வளர்ச்சி பெற்ற ஒன்றாக ஆவணப்படம் என்பது இருக்கவில்லை.
அதாவது இந்த ஊடகத்தில் நாம் கடக்கவேண்டிய படிகள் பல உள்ளன, இதற்கு முன் மாதிரியாக பல ஆவணப்படங்கள் வெளிவரவேண்டும். அந்தவகையில் நீங்கள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த அனர்த்தம் தாங்கிய ஆவணப்படமாக இந்த எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். இந்த ஆவணப்படம் உருவான பின்னணியைச் சொல்லுங்களேன்?
நான் முன்னர் சொன்னது போல நானும் சிவகுமாரும் 2004 இல் தீர்மானித்ததன் அடிப்படையில் இங்கே, இலங்கையிலே நிறைய ஆவணப்படங்களை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். ஏனெனில் தமிழ்சினிமாவுக்கு நிகராக ஒரு சினிமாவை எடுப்பது என்பது சாத்தியமற்ற விடயம். எங்களுக்கு இருந்த குறுகிய வசதிகளைப் பயன்படுத்தி எங்களிடம் இருக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவேண்டுமென்ற தேவை இருந்தது. எனெனில் எங்கட தமிழ்ச்சமூகத்தின் பெரிய குறைபாடு என்னவென்றால் நாங்கள் எதையுமே ஆவணப்படுத்துவதில்லை. இந்தச் சூழலில் நாங்கள் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த விடயம் யாழ்ப்பாண பொது நூலகம். ஏனெனில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 27 வருஷமாயிற்று. இந்த இனப்போரின் முக்கியமான ஒரு விடயமாக இந்த யாழ் நூலக எரிப்பே இருக்கின்றது. இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த நூலகம் எப்போது எரிக்கப்பட்டது போன்ற விபரங்களே தெரியாது. எங்களைப் போன்ற அடுத்த சந்ததி எரிக்கப்பட்ட இந்த நூலகத்தின் சாம்பலில் பிறந்து, தவழ்ந்து , வளர்ந்து, நாடுகள் தேசங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைமுறை. எனவே இந்தத் தலைமுறைக்கு வந்து எமக்கு முன்னான ஒரு தலைமுறை வந்து எவ்வளவு செளகரியமாக இருந்தது, எவ்வளவு வளங்களோடு இருந்தது, எவ்வளவு தன்னிறைவாக இருந்தது, பின்னர் அவையெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது. எப்படித் திட்டமிடப்பட்டு ஒரு இனவாதத்தினால் அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவேண்டிய தேவை இருந்தது. அதனுடைய மிகச்சிறந்த குறியீடாக இந்த யாழ்ப்பாண நூலகம் விளங்குகின்றது.
நான் பிறந்து சரியாக 19 ஆம் நாள் இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. மே 31, 1981 ஆம் ஆண்டு இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. அந்தச் சம்பவத்தின் பின்னர் தான் போர் உக்கிரமடைகின்றது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான ஆயுதப்போராட்டக் குழுக்கள் வருகின்றன. 83 இலே திரும்பவும் கலவரம் நடக்கின்றது. அதன் பின்னர் முழுமையாக ஆயுதப் போராட்டம் வெடிக்கின்றது.
இந்த 27 வருஷகால வரலாற்றை நூலகத்தை வைத்து பதிவுசெய்யவேண்டும் என்பதற்காக நூலகத்தினை ஆவணப்படமாக்கும் முயற்சியை நாங்கள் 2005 இல் ஆரம்பித்தோம். ஆனால் ஒரு ஆவணப்படம் என்பது மிகச்சாதாராண விடயம் அல்ல. அதற்கான வளங்கள், நிதித்தேவைகள் நிறைய இருந்தன. எனவே 2005 இலேயே அதை ஆரம்பிக்க முடியாமல் போயிற்று. 2006 ஆம் ஆண்டில் நூலகம் எரிக்கப்பட்ட 25 வருஷத்தில் நாங்கள் படப்பிடிப்புக்குத் தயாரானோம். 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கான A9 பாதை மூடுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரை படப்பிடிப்பை நடத்தியிருந்தோம். யாழ்ப்பாணத்தில் அப்போது படப்பிடிப்பை நடத்துவது மிகச்சிரமமாக இருந்த சூழலாக இருந்தது. நான் இந்தப் படப்பிடிப்புக்கு யாழ்ப்பாணத்திற்கு யாரையுமே கொண்டுபோக முடியாத சூழலில் சந்திரன் என்கிற கார் ஓட்டுனரோடு மட்டுமே இருந்து எடுக்கவேண்டியிருந்தது. ஊடகவியலாளர்கள் பிஸ்கட் பெட்டிக்குள் கமராவை மறைத்துக் கொண்டுபோன காலம் அது.
இந்த யாழ்நூலகம் குறித்த ஆவணப்படம் குறித்த தேடல்கள் மேற்கொண்டபோது அந்தத் தேடல்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அங்கேயே அமைந்திருந்தனவா அல்லது கொழும்பிலும் மேலதிக தேடல்களை மேற்கொண்டிருந்தீர்களா?
உண்மையைச் சொல்லப்போனால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாண நூலகத்தில் கூட எந்தவிதமான ஆவணமும் இல்லை. ஏனெனில் சேர்த்துவைத்ததெல்லாமே காலம் காலமாக நடந்த குண்டுத்தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் எல்லாமே அழிந்து போயிற்று. எனவே யாழ்ப்பாணத்து மக்களிடமும் எதுவுமே இல்லை. எல்லோருமே ஒரு பெரும் இடப்பெயர்வைச் சந்தித்துத் திரும்பி வந்த சமூகம் அது. எனவே அங்கே வந்து எந்தப் பெரிய ஆவணமும் இல்லை. பழைய புகைப்படங்கள் கூட இல்லாத சூழல்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் நூலகம் தொடர்பானவர்களின் பேட்டிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. கொழும்பில் இருக்கும் இலங்கைத் தேசிய நூலகத்தில் பழைய பத்திரிகைகளை எடுக்கக்கூடியதாக இருந்தது. அதுவும் சிரமமான விடயம் தான். இலங்கை தேசிய நூலகம், இலங்கை தேசிய சுவடிகள் கூடம் போன்ற இடங்களுக்குச் சென்று இலஙகை இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை எடுப்பது மிகச்சிரமமான விடயம் தான். ஆனாலும் தேசிய நூலகத்தில் இருந்த அந்தக் காலத்தில் வந்த கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளின் பேட்டிகள், செய்திகள் எல்லாவற்றையும் எடுத்திருந்தோம். இதைத்தவிர வெளிநாட்டில் வாழ்வோர், தமிழகத்தில் இருப்போர் என்று பல்வேறு
யாழ் நூலகம் தொடர்பில் என்னென்ன தகவல்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் கடந்த மூன்று வருடமாகச் சேகரித்தோம். அதில் முதன்மையானது க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய "யாழ்ப்பாண நூலகம் ஓர் ஆவணம்" என்னும் புத்தகம். அந்தப் புத்தகம் தான் யாழ்ப்பாண நூலகம் குறித்த முழுக்கதையையுமே எனக்கு தீர்மானிக்க உதவியது.
தவிர யாழ்ப்பாண நூலகம் சார்ந்த ஆட்கள், அந்தக் காலப்பகுதியில் இருந்த மக்கள் இவர்களிடமும் தகவல்களைப் பெற்றேன். இப்படியாக கடந்த மூன்று வருடகாலமாக நிறையத் தேடிப் பெற்றுக்கொண்டோம். இன்னும் பலரிடமும் நிறையத்தகவல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் மூலம் நீங்கள் சொல்ல நினைப்பது என்ன? இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் என்று நீங்கள் யாரைத் தீர்மானித்திருக்கின்றீர்கள்?
குறிப்பாக சில ஆவணப்படங்களுக்கு ஒருவகையான பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஆவணப்படத்தினுடைய பார்வையாளர்கள் பல்வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள்.ஒன்று வந்து இந்த நூலகத்தின் எரிவு காலப்பகுதிக்கு முன்னர் நூலகத்தோடு மிகப்பரிச்சயமாக ஊடாடிய மக்கள், நூலகத்தை இழந்து நிற்பவர்கள். இன்னொன்று இந்த நூலகம் இருந்தது பற்றியும், அந்த நூலகம் குறித்த நேரடி அனுபவமும் இல்லாத எங்களுடைய தலைமுறையினர். இந்த இரண்டு தலைமுறையும் எங்கள் மத்தியில் இருப்பவர்கள். இன்னொன்று புலம்பெயர்ந்த எமது தமிழ் மண்ணை அறியாத இன்னொரு தலைமுறை. இப்படி எமது சமூகத்தின் எல்லாத் தலைமுறைக்கும் இது போய்ச்சேரவேண்டும் என்பதே எம் நோக்கம். இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தாலும் எமது தமிழ்ச்சமூகத்தினுடைய அடையாளமாக இருக்கின்றது. எனவே இந்த அடையாளம் குறித்து எல்லாத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே முக்கியமாக எமது தமிழ்ச்சமூகத்துக்குப் போக வேண்டும்.
இரண்டாவது வந்து இந்தத் தமிழ்ச்சமூகத்துக்கு வெளியில் இருக்கக்கூடியவர்கள். இந்த ஆவணப்படம் நான்கு மொழிகளில் வந்திருக்கின்றது. தமிழ் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று. எங்களுடைய சமூகத்தின் பிரச்சனைய மற்றைய சமூகத்திற்கு தெளிவு படுத்தக்கூடிய தேவையும் இருக்கின்றது. இலங்கையில் நடந்த மிக மோசமான ஒரு வன்முறையை மற்றைய சமூகத்திற்கு சொல்லவேண்டிய தேவையாக இருக்கிறது. எனவே இந்த ஆவணப்படம் எங்கட சமூகத்துக்கும் சொல்லும் அதே வேளை எங்கட சமூகத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் இந்தச் சேதியைச் சொல்கின்றது.
இந்த நூலகம் சம்பந்தப்பட்ட மற்றும் வெளியாட்கள் என்று இந்த ஆவணப்படத்திற்கு யார் யாரெல்லாம் பயன்பட்டார்கள்?
இந்த நூலகத்தின் ஊழியர்களாக இருந்தவர்கள், இந்த நூலகம் எரிக்கப்படும் போது இருந்த நூலகர், அதற்குப் பிறகு வந்த சில நூலகர்கள் மற்றது இலங்கை அரச தரப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தவிர 1981 ஆம் ஆண்டிலும் 2006 இலும் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த திரு சி.வி.கே.சிவஞானம் அவர்கள், முதன் முதலில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர் அவர் தான். இப்படிப் பல்வேறுபட்டவர்கள். பழைய வீடியோ படங்களின் பகுதிகள், அதாவது 1981 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராக இருந்த திரு விஸ்வநாதன் அவர்கள் அப்போது கொடுத்திருந்த பேட்டி, மற்றும் பழைய வீடியோ காட்சிகள் என்று எல்லாமே சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அதாவது 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கான தயாரிப்பைச் செய்ய உங்களுக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள், அதாவது தகவல்களைத் திரட்டல், பின்னர் முறையாக ஒழுங்குபடுத்தல், பொருளாதார ரீதியாக இந்தத் திட்டத்திற்கு வலுப்படுத்தி இந்த முயற்சியில் இறங்குவது என்பதற்காக இவ்வளவு காலமும் பிடித்திருக்கிறது இல்லையா?
பொருளாதார ரீதியில் எங்கள் சமூகத்தில் வலுவான எந்த அமைப்புக்களும் கிடையாது. மற்றது அது பற்றிய கரிசனையும் எங்கள் மத்தியில் கிடையாது. எங்களிடம் இருக்கும் வளர்ச்சி, வாய்ப்புக்கள் இவையெல்லாம் நிறைய விடயங்களை ஆவணப்படுத்த முடியும். 27 வருஷத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை ஆவணப்படுத்தவேண்டுமென்றோ, இந்த யாழ்ப்பாண நூலகத்தை மட்டும் தான் ஆவணப்படுத்த முடிஞ்சது என்பது மிகத்துரதிஷ்டவசமான ஒரு விஷயமாகும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக முன்னர் சமாதான காலத்தில் மிக அதிகமான விடயங்களை நாம் ஆவணப்படுத்தியிருக்க முடியும். ஆனால் நாம் செய்யவில்லை. ஆவணப்படுத்தல் ஊடாகத் தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கவும் இல்லை. இந்தக் காலப்பகுதியில் எங்கள் சொந்த முயற்சியாகவே, வேறு வேலைகள் மூலம் கிடைத்த பணத்தைப் போட்டு செய்யவேண்டிய நெருக்கடியான நிலமை இருந்தது. சிலர் கொடுத்த சிறு பண உதவிகள் இப்படியானவற்றின் மூலமே இதக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது.
இப்பேட்டியின் நிறைவாக நீங்கள் நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
நான் சொல்ல விரும்புவது இது தான், நாங்கள் காலம் காலமாக எதையும் ஆவணப்படுத்தாமல் இருப்பதென்பது எங்களுக்கு பெரிய சாபக்கேடான விடயம். எனக்கு இந்த ஆவணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பு தென்றியது 2005 இல் கோவா திரைப்பட விழாவுக்கு சென்ற போது அங்கே ஒரு மணிப்பூர்காரர் இருந்தார். அவர் தன் மணிப்பூர் பற்றிய பிரச்சனையைச் சொல்வதற்கு அவரிடம் ஒரு ஆவணப்படம் இருக்கு. ஆனால் அப்போது என் நாட்டின் பிரச்சனையைச் சொல்ல ஒரு ஆவணப்படமும் என்னிடம் இருக்கவில்லை.
எனவே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆவணப்படம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனையும் கூட. எங்களுக்கு எங்கள் பிரச்சனையைச் சொல்வதற்கான ஆவணப்படம் வேண்டும். சரியான ஊடகம் அதுவாகத் தான் இருக்கும். ஒரு ஆவணப்படம் எல்லா மொழிகளையும், நாடுகளையும், வரையறைகளையும் எங்கெங்கு தாக்கம் செலுத்தவேண்டுமோ அதைச் சரியான முறையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக ஆவணப்படங்கள் இருக்கும். எங்கள் பிரச்சனை குறித்தும், மக்களுடைய அவலங்கள் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலம் பதிவு செய்ய்யப்படவேண்டும் என்பதே என்பதே என் விருப்பம்.
18 comments:
//ஒரு தலைமுறை வந்து எவ்வளவு செளகரியமாக இருந்தது, எவ்வளவு வளங்களோடு இருந்தது, எவ்வளவு தன்னிறைவாக இருந்தது, பின்னர் அவையெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது.///
இப்போதைய காலகட்டத்தில் ஒரு பைல் சேவ் பண்ணாமல் மூடுபட்டாலே மனசு மொத்தமும் காலியாகி விடுகிறது!
ஆனால் எத்தனை எத்தனை ஆவணங்கள் எல்லாமே எரிக்கப்ப்ட்ட நம் வரலாற்று சுவடுகள் அழிக்கபட்ட சம்பவம் தொடர்பான செய்திகள், குறும்படங்கள் கண்டிப்பாய் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தும்!
வாங்க ஆயில்யன்
நமது தேசத்தில் பேரினவாதக் காளான்கள் முதலில் கைவைப்பதே இப்படியான வரலாற்றுக் களன்களைத்தான். இந்த ஆவணப்படம் அந்த வகையில் தொலைந்து போன வரலாற்றை மீட்டிருக்கின்றது.
வணக்கம் கானாபிரபா,
ஆவணப்படம் தொடர்பான அறிமுகத்திற்கும் பேட்டிக்கும் நன்றி.
சோமிதரனுக்கு வாழ்த்துக்கள்.
இலங்கை சூழலில் இத்தகைய ஆவணங்களை சேகரிக்க அவர் எத்துணை சிரமப்படடிருக்கவேண்டும் என்பதை உணரமுடிகிறது.
ஆரம்பவரி தென்கிழக்காசியா அல்ல. தெற்காசியா என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மீண்டும் நன்றி.
பிரபா,
சோமியின் குரலில் நிறைய மாற்றம் தெரியுது.
ஆவணப்படுத்தலின் அவசியம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நண்பர் சோமி தெளிவுபடுத்தியிருக்கிறார். முழுத்தமிழருக்கும் பொக்கிஷமாக விளங்கிய நூலகக் கோயில் சாம்பலான வரலாற்றுக்கரையை எதைக் கொண்டும் மனதிலிருந்து அகற்ற முடியாது பிரபா. அந்த நாள் 1981 மே 31 என நினைக்கிறேன். சரியா பிரபா.
ஆவணப்படுத்தலின் மூலம் எமது இருப்பு எவ்வாறு இருந்தது வளர்ச்சிப் போக்கு என்பதை வரும் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. சோமியின் படைப்புக்கு பாராட்டுக்கள்.
நல்ல பதிவுகளைத் தருகிறீர்கள் பிரபா. தொடர்ந்து எழுதுங்கள்.
// ஆ.கோகுலன் said...
இலங்கை சூழலில் இத்தகைய ஆவணங்களை சேகரிக்க அவர் எத்துணை சிரமப்படடிருக்கவேண்டும் என்பதை உணரமுடிகிறது//
உண்மை தான் கோகுலன் அதை அவர் பேட்டியிலும் சொல்லியிருக்கிறார், இந்த இறுவட்டை அனைவரும் வாங்கி மற்றைய சமூகத்துக்கும் நமது அவலத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும். தவறைக் காட்டியமைக்கு நன்றி திருத்தி விட்டேன்.
//இறக்குவானை நிர்ஷன் said...
ஆவணப்படுத்தலின் மூலம் எமது இருப்பு எவ்வாறு இருந்தது வளர்ச்சிப் போக்கு என்பதை வரும் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. சோமியின் படைப்புக்கு பாராட்டுக்கள்//
வருகைக்கு நன்றி நிர்ஷான், இது போன்ற ஆவணப்பட முயற்சிகள் பரவலாக்கப்பட வேண்டும். ஊடகத்துறையில் ஈடுபாடுள்ள உங்களைப் போன்றவர்களும் இதில் இறங்கலாம்.
மே 31 இரவு தான் அந்தக் கோரம் நிகழ்ந்தது
பிரபா, உங்கள் இந்த ஆக்கம் மனதிற்குள் நீர்த்துக் கிடந்த நூலகத்தின் அகோர நினைவுகளை மீண்டும் புகைக்க வைக்கிறது.மனம் எரிகிறது.எங்கள் இனத்தின் கல்வியை எரித்த நினைவுகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஹேமா, இந்த ஆவணப்படம் முன்பிருந்த நூலகத்தின் பெறுமதியைச் சொல்ல வல்லது.
தொடர்ந்தும் தேவையான பதிவுகளை பதிந்து வருகிறீர்கள்.
முயற்சிக்கு நன்றி
அன்புடன் அருண்
செல்வன் சோமிதரன்//
இப்பிடி சொல்ல சொல்லி அவர் சொன்னாரா..? அல்லது உங்களது வலிந்த உதவியா
அவரது எதிர்காலத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா?
vanakkam piraba,
thank you 4 ur post.
"sayanthan anna ungkalukenna poraamai"
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்
சயந்தன்
அந்தப் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் ;-)
சோமி
ஏதோ எங்களால் முடிந்தது ;)
பதியப்பட வேண்டிய விசயங்கள் அண்ணன்...
நீங்கள் பதிந்தமைக்கும் பகிர்வுக்கும்
நன்றி...
நன்றி பிரபா! தொடரட்டும் உங்கள் பணி. எரிந்த நூலகம் இப்போது புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இயங்கியும் வருகிறது. ஆனால் என்னுடைய சிற்றறிவுக்கு தெரிந்த வகையில் அங்கு எரிந்தமைக்கான எந்த சான்றும் இல்லை. அது சம்பந்தமான புகைப்படங்களும் இல்லை. இது பின்னர் வரும் சந்ததிகளுக்கு தெரிய வர வாய்ப்பில்லாமல் செய்து விட்டது.நிச்சயமாக இதுபோன்ற படைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதே அளவிற்கு அவை மக்களை சென்றடையவும் வேண்டும். அதற்கு இவ்வாறான முயற்சிகள் பலனளிக்கும். இந்த நூலகத்தை நிர்வகிப்பவர்கள் ஏன் அதை புரிந்து கொண்டு அந்த நூலகத்திற்குள் ஒரு பகுதியை ஒதுக்கி "எரியும் நினைவுகள்" என எரிந்த நூலகம் சம்பந்தமான சகல ஆவணங்களையும் சேகரித்து மக்களிற்கு தெரியப்படுத்தவில்லை. கண்டி தலதா மாளிகையில் நூதன சாலை என்ற பெயரில் தகர்க்கப்பட்ட கோவிலின் ஒளிப்படங்கள், கண்டன அறிக்கைகள், கட்டுரைகள் உள்ளன. எம்மவர்களால் ஏன் முடியவில்லை. நாம் எல்லாச்சந்தர்ப்பங்களிலும், எமக்கான ஆவணக்காப்பினை அவ்வப்போது செய்யத்தவறுகிறோம். வரலாறு எம்மை மன்னிக்காது. என்னைப்பொறுத்தவரை இந்த நூலகத்தை மீண்டும் புனரமைக்க விட்டமை மிகப்பெரிய வரலாற்றுத்தவறு. அரச பயங்கரவாதத்தால் நிர்மூலமாக்கப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரி எவ்வாறு வரலாற்று சின்னமாக பேணப்படுகிறதோ அவ்வாறே யாழ்.பொது நூலகத்தையும் காத்திருக்க வேண்டும். இப்பொழுதும் சம்பந்தப்பட்டவர்கள் உண்ர்ந்தால் முயலலாம்.
யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை பற்றி படிக்கும்போதெல்லாம் மனம் பாரமாகிவிடுகிறது. ஆணவப்படம் நல்லதொரு முயற்சி. பதிவுக்கு நன்றி பிரபா.
வணக்கம் தமிழ்விரும்பி
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அவசர அவசரமாகக் கட்டிடம் எழுப்பி வெள்ளையடித்து நடந்த கோரத்தை மறைத்துவிட்டார்கள். இடிந்த நூலகத்துக்குப் பக்கத்திலேயே புதிய நூலகத்தை அமைத்திருக்கலாம்.
நமது சூழலும் நிரந்தரமற்ற வாழ்க்கை முறையும் தான் இந்த ஆவணச் சேகரிப்புக்கான தடைக்கற்கள். வன்னியில் இன்னொரு ஆவணக் காப்பகத்தையும் தனி ஒருவரே கொண்டு நடாத்துகின்றார்.
நிஜமா நல்லவன்
தங்கள் உள்ளக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நூலகம் எரிக்கப்பட்டது மே 31 இரவு என்பது தவறு. ஜுன் 1 இரவுதான். .
தங்கமுகுந்தன்
அக்காலத்தில் எழுதப்பட்ட நூலை அடிப்படையாகக்கொண்டே மே 31 - 1 என உறுதிப்படுத்தப்பட்டது
Post a Comment