ஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.
இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:
* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,
* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,
* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,
* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,
* கம்பவாரிதி இ.ஜெயராஜ்,
* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்
* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்
அந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)
தரவிறக்கிக் கேட்க
யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்
துர்க்கா துரந்தரியின் ஆன்மீக, அறப்பணியின் வழி செயலாற்றும் சிவநெறிச் செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கும் "சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நாட்களும் அஞ்சலிப்பகிர்வும்".
ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வு
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் "கம்பவாரிதி" இ.ஜெயராஜின் அஞ்சலிப் பகிர்வு
ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் நமது வானொலிக்குக் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வின் எழுத்து வடிவம்

ஆலயம் என்பது வெறும் வழிபாட்டு இடம் மட்டுமல்ல. அந்த ஆலயம் என்பது பலவேறு பணிகளுக்காக ஏற்பட்டது. நாக்கள் பழைய காலங்களிலே பார்க்கும் போது ஆலயங்கள் தேர்தல் களங்களாக இருந்தன, ஆதுலர்சாலைகளாக இருந்தன, சிறந்த நூலகங்களாக இருந்தன, வாழ்வர்றோருக்கு வதிவிடங்களாக இருந்தன, சிறந்த யாசக மண்டபங்களாக இருந்தன, நடனச் சாலைகளாக இருந்தன, நாடகச் சாலைகளாக இருந்தன, உணவு விடுதியாகவும் இருந்தது என்பது பழைய நூல்களில் இருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகள். ஆனால் இப்பொழுது அதை நடைமுறைப்படுத்தியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அதுதான் நான் அவரிடம் மிகவும் வியந்த ஒன்று. அவர் அந்த ஆலயத்திலே வருகின்ற அந்த வருவாயை மிகச்செம்மையாகச் செம்மைப்படுத்தி எப்படிப் பயன்படுத்தவேண்டுமோ "வளர்வதன் பார்த்தியுள் நீர் சொரிந்தற்கு" என்று வள்ளுவர் சொல்லுவது போல அதை வளர்ச்சிக்கான பணிகளிலே ஈடுபடுத்தியவர். அவர் செய்த அறப்பணிகள் என்பது பட்டியலிட்டுக் கூற முடியாது. ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தல், கைமை வாய்ந்த பெண்களுக்கு உதவி செய்தல், அதுமட்டுமல்ல உணவுச்சாலைகள், ஓவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு உணவளித்தல் என்று பலவகையான அறப்பணிகளை அவர் ஏற்படுத்தியவர். அதுமட்டுமல்ல அவர் தன் பிறந்த நாளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு, மருத்துவ நிலையங்களுக்கு, வளருகின்ற சிறார்களுக்கு என்று பலவிதத்திலும் உதவி செய்தவர்.
ஒரு ஆலயம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு தெல்லிப்பழை ஆலயம் தான் ஒரு முன்மாதிரியாக இருந்தது. அதனைப் பல ஆலயங்களும் பின்பற்ற வேண்டும். இன்று தெல்லிப்பழை ஆலயம், தங்கம்மாவினுடைய பெயரைச் சொன்னால் நன்கொடைகள் வந்து குவிகின்றன. காரணம் என்ன, மக்கள் அவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை. தாங்கள் கொடுக்கின்ற அந்தப் பணமானது வீணாகாது, அது மிகவும் பயன்பாடுள்ள பணிகளுக்குச் சொல்லும் என்கின்ற நம்பிக்கை தான். இன்று உலகத்திலே எங்கெங்கோ இருக்கின்ற மக்கள் கூட அவர் கேட்டவுடன், அவருடைய பெயரைச் சொன்னவுடன் தயங்காமல் பண உதவி செய்கின்றார்கள். அதனை மிகச் சிறந்தமுறையிலே ஆற்றுப்படுத்துகின்ற தன்மை தங்கம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை நான் துணிந்தே சொல்வேன்.
ஆறுமுக நாவலருக்குப் பிறகு சமயத்தையும் தமிழையும அதுமட்டுமல்ல சமயத்தையும், சமூகத்தையுமே தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டு சமயப் பணி செய்பவர்கள் சமூகப் பணி செய்வதில்லை என்ற குறைபாட்டை நீக்கியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். பழைய காலங்களிலே அப்பர் பெருமான், சம்பந்தர் பெருமான் ஆகியோர் ஆலயங்களிலே ஆன்மிக சமயப் பணிகளோடு சமூகப் பணிகளையும் செய்தார்கள் என்று நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் நிதர்சனமாக தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் தான் வாழ்ந்து காட்டியவர்கள். செயலிலே செய்து காட்டியவர். அப்படிப்பட்ட ஒரு பெருந்திருவாட்டி. அம்மா என்று சொன்னாலே தங்கம்மா தான். பெயரிலே மட்டும் தங்கவில்லை, அவருடைய செயல்கள், கல்வி, ஒழுக்கம், அவர் மற்றவர்களுக்குக் காட்டுகின்ற முன்மாதிரி, வாழ்ந்து காட்டிய பாதை எல்லாமே போற்றுதற்குரியது.
பெயரிலேயே தங்கத்தை அமைத்துக் கொண்ட அவர்கள் ஒரு சகாப்தம். எப்படி நாவலருடைய வாழ்க்கை ஒரு சகாப்தம் என்று சொல்லுகிறோமோ அது போல தங்கம்மா அவர்களுடைய வாழ்க்கையை ஒரு சகாப்தம் என்றே கொள்ளலாம். அப்படி வாழ்ந்து காட்டிய ஒரு பெரிய மலை இன்று நம்மிடமிருந்து இல்லாமல் போயிருக்கின்றது. எத்தனையோ ஆதரவற்ற கரங்களுக்கு ஆதரவளித்த கரமானது இன்று நழுவி விட்டது என்று நினைக்கும் பொழுது மனம் உருகுகின்றது.
இனி ஒரு தங்கம்மா கிடைப்பாளா? இனி ஒரு பெண்மணி பிறப்பாளா இந்த உலகத்திலே? கருவிலேயே திரு வாய்த்தவள் அவள். ஆகையினால் தான் மிக உயர்ந்த நிலையிலே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மற்றவர்களையும் வாழச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
அவருடைய இழப்பை வெறும் வார்த்தைகளினாலே நாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அந்த வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டவேண்டும். உண்மை, சத்தியம், நேர்மை, அஞ்சாத நெஞ்சம், எத்தனையோ இடுக்கண்கள் வந்த காலத்தில் எல்லாம் அந்த இடுக்கண்களுக்கெல்லாம் இடுக்கண்களை ஏற்படுத்தி நிமிர்ந்து நின்றவர்கள் அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம், ஏராளம். அப்படி வாழ்ந்த அந்தப் பெருந்திருமகளுக்கு, பெருந்திருவாட்டிக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.
டிசெம்பர் 1990 ஆம் ஆண்டு மல்லிகையின் அட்டைப்படக்கட்டுரையாக செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி கலாநிதி நா.சுப்ரமணியன் அவர்கள் வழங்கிய கட்டுரையில் சில மாற்றங்களோடு மீள்படைப்பாகத் தருகின்றேன்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
இது அறிமுகம் அல்ல.
இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்லை.
தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு.
செஞ்சொற் புலமையால் சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத்துக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகிவிட்டவர் இவர். தெல்லிப்பழைத் "துர்க்கா தேவி" தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால் ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச-மானசீகத் தலைவர்.
இவர் சொற்பெருக்காற்றிய மேடைகள் ஆயிரக்கணக்கில். இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப்பணிகள்-அறப்பணிகள் பல. இவர் எழுதியனவும்-இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப்பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மைத் தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல.
சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன; அவ்வளவே.
தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 1925-01-07 அன்று பிறந்தவர் 'தங்கம்மா'; சைவச்சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப்பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய-சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார்; செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின் முதல் நிலை.
தமிழையும் சைவத்தையும் தனிக்கவனம் செலுத்திக் கற்றார். இக் கல்வி அவருக்கு 'பண்டிதர்', 'சைவப்புலவர்' ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப்புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொதுமக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப்பெற்றார். இவ்விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற்பொழிவாற்றல் அவரது ஆளுமையின் முதன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்படலானார். ஈழத்தின் பல்வேறு பிரதேச ஆலயங்களும், சமய-சமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்; கெளரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொதுவாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற்பணியாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே 1966இல் பொருளாளராகப் பணி தொடங்கிய இவர் 1977 இல் அக்குழுவின் தலைமைப் பொறுப்பெற்றார்; அவ்வாலயத்தை ஓர் அறச்சாலையாக, ஈழத்தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவாலயங்கள் பலவற்றின் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் வளர்த்து வந்தார்; அனைத்துலக சைவத்தமிழ்ப்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாகவும் திகழ்ந்தார்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் என்ற வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடைகண்டவர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர் 1950-களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய-சமூக மேடைகளில் தனிச் சொற்பொழ்வுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற்சுவையோடிணைந்து சுவைஞர்களின் செவிநுகர் கனிகள் ஆயின. மேற்படி ஆக்கங்களின் உயிர் நிலைகளான தத்துவங்களும் உணர்வு நிலைகளான இலக்கியச் சுவைகளும், சராசரி ,மனித அநுபவங்களுக்கு இவரால் வழங்கப்பட்டன. இவற்றை அநுபவத்தவர்கள் இவம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு:
'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம் (1966)
'சிவத்தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை(1970)
'சித்தாந்த ஞான கரம்' - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
'சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம் (1972)
'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
'செஞ்சொற்கொண்டல்'- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
'திருமொழி அரசி' - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)
இவரது சொற்சுவைக்கு இவற்றை விட விளக்கம் அவசியமில்லை. மேற்படி விருதுகளிற் 'சிவத்தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி' என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்கவகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சொற்பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றில் ஈழத்துச் சைவாலயங்களில் நிகழத் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்றமொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960 களின் முற்பகுதி வரை சைவாலயன் விழாக்களில் 'சின்ன மேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலைநிகழ்வாக இடம்பெற்று வந்தது. தெய்வீகச் சூழலுக்கு மாறான உணர்வோட்டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப்படுத்தி அதன் இடத்தில் ஆத்மீக விருந்தாகச் சமயச் சொற்பொழிவை முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப்பாங்கு சைவ உலகில் முளை விட்டது. இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல் வடிவம் தந்தவகையில் முதன்மையாக வைத்துக் கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ் செல்வி அவர்களின் சொற்பொழிவுப்பணி.
இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் பெளதீக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இராஜகோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம், எனப்பலவாக இவற்றின் பட்டியல் விரியும். ஆனால் ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறைகள் என்பன கூட அதன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பாலான 'தெய்வ சாந்நித்தியம்' தான் ஆலயத்தின் அடிப்படை அம்சம். அத்தெய்வீகத்தை வெளிப்படுத்தும் துணைக்கூறுகளாகவே மேற்படி பெளதீக அம்சங்கள் அமைவன. தெய்வ சந்நிதனத்தின் உயிர் நிலையான கூறு அன்பு.
உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப்படுகின்றன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புக்களாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு 'மகளிர் இல்லத்தை' நிர்வகிக்கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நின்ற தலைமை 'துர்க்கா துரந்தரி'யுடையது.
சிவத்தமிழ் செல்வியவர்கள் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்கு பற்றி உரை நிகழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்.
சமய சம்பந்தமாக எழும் பிரச்சனைகளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
'அம்மா என்ன சொல்கிறா' என்பது பொதுவாக எழும் வினா. தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி, இது சைவ மக்கள் அவரது கருத்துக்களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்த்த அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள்.
நன்றி:
* சிவத்தமிழ்ச் செல்வியின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும்
* இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உதவிய ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள்
* ஒலிபரப்பில் உதவிய ஈழத்தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* "சிவத்தமிழ் ஓசை" ஒலிவட்டு (கிருபா போட்டோ & றெக்கோடிங் சென்றர், மல்லாகம்)
* "மல்லிகை முகங்கள்", மல்லிகைப்பந்தல் வெளியீடு ஜனவரி 1996
* பிரத்தியோகப் படம் உதவி: வெண்காட்டான்
12 comments:
அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!
இந்த பொழுதில் இவரைக் கேட்க நேர்ந்ததே!
அவருடைய ஆன்மா சிவபதம் அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வணங்குகிறேன்.
ம்ம்ம்ம்....
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்...
ஈழத் தமிழர்களின் தனித்துவத்தை வெளிகாட்டும் முகமான எம்மவர்களின் சிறப்பினை உலகறிய வைக்கும் உங்கள் முயற்சி என்றுமே பாராட்டுக்குறியதே.
இவரது சொற்பொழிவை இதுவரை நானும் கேட்டதில்லை.
உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி
// G.Ragavan said...
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//
உண்மைதான்!
சொற்பொழிவினை இங்கு பதிவிலேற்றி பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிகளுடன்..!
இன்று நானும் காலை செய்திதாளில் படித்தேன். அவரின் ஆத்மா ஷாந்தி அடையட்டும்.
//G.Ragavan said...
அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//
வணக்கம் ராகவன்
அம்மாவின் பெருமைகளை இதுவரை அறியாத உங்களைப் போன்ற அன்பர்களுக்காக அவரின் சொற்பொழிவொன்றை இட்டிருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல் இப்படியான ஆன்மீகச் சொத்துக்கள் பல நம்மிடமிருந்து போவது வருத்தமளிக்கும் செய்தி.
// தமிழன்... said...
ம்ம்ம்ம்....
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்...//
வருகைக்கு நன்றி தமிழன்
// HK Arun said...
உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.//
மிக்க நன்றி அருண்
வருகைக்கு நன்றிகள் ஆயில்யன் மற்றும் மயூரேசன்
எங்கள் வாழ்வின் வழிகாட்டிகளூள் இவரும் ஒருவர்.இன்னும் வாழ்ந்திருக்கலாம்.எங்கள் யாழின் ஒரு அற்புத அம்மையார்.அவரது ஆத்மா எங்களை வழிநடத்தி அமைதி காக்கும்.பிரபா, பல ஆண்டுகளுக்குப் பின் அவரது சொற்பொழிவைக் கேட்டேன் உங்கள் தயவில் நன்றி.
வணக்கம் ஹேமா
"சிலர் வாழும்போதே செத்துப்போனவர்களாக யாருக்கும் பயனில்லாமல் இருப்பார்கள், சிலர் இறந்த பின்னும் உயிரோடு இருக்கும் படி போல் நிலைத்து இருப்பார்கள்"
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் திருநந்தகுமார் அவர்கள் இப்படி சொன்னது அம்மையாருக்கும் மிகப்பொருத்தம்.
Dear Praba Anna thanks for your valuable services. I am in jaffna now. I have created the blogspot for me. I don't know how to use the tamil fonts for my page. Could u explain me how to use the tamil fonts in the blog. Thankin you
yours sincerly
umesh
வணக்கம் உமேஸ்
எங்களூர் உறவை வலைவழி காண்பது மட்டற்ற மகிழ்வைத்தருகிறது. எனது மின்னஞ்சல் முகவரியான kanapraba@gmail.com இற்கு ஒரு மடல் போடுங்கள் விபரமாகச் சொல்லித் தருகின்றேன். அத்தோடு உங்கள் பதிவை தமிழ்மணத்திலும் சேர்க்க உதவுகின்றேன்.
Post a Comment