
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
இன்று அலுவலகம் முடிந்து காரில் வீடு திரும்பும் போது கேட்டுக்கொண்டு வந்த மொழி திரைப்படப்பாடல் தான் அது. சில கண்ணீர்த்துளிகள் என்னையறியாமலேயே என் கண்களில் கருக்கட்டுகின்றன. Black ஹிந்தித் திரைப்பட அனுபவத்திற்குப் பின் என் உணர்வுகளைக் கண்ணீர்ச் சாட்சியமாக்கியது இப்பாடல்.
காரில் பயணிக்கும் போது தென்படுகின்றன நாளைய காதலர் தினத்துக் கொண்டாட்டத்திற்கான பூச்செண்டு விற்பனை நிலையங்கள். பெற்றோல் போடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் போகின்றேன். கட்டணம் செலுத்தும் கியூவின் ஓரமாக தண்ணீர் நிரப்பிய வாளிகளில் பூச்செண்டுகள். ஒன்றைத் தாவி எடுக்கின்றேன். எனக்கு முன்னே நின்ற வெள்ளையர் திரும்பிப் பார்த்து முறுவலித்துவிட்டு ஏதோ யோசனை தோன்றியது போல தானும் ஒன்றை எடுத்துக்கொள்கின்றார். அன்பைக் காட்டக் கூட எடுத்துக்காட்டுகள் தேவை போலும். கியூ மெதுவாக நகருகின்றது. காரில் அமர்ந்து வீதிப்படுக்கையில் சக்கரங்கள் ஏறி அமர்ந்து நகர, மீண்டும்....மீண்டும் அதே பாடலை ஒலிக்கவிடுகின்றேன். எனக்குள் ஆயிரம் சிந்தனைகள்.
காதலர் தினத்தை நாம் வாழும் நாட்டில் கொண்டாடுமாற் போலக் கொண்டாட என் சொந்த நாடும் அந்த நிலையில் இல்லை. காதலனைக் கைப்பிடித்து சிங்களப் படைகளின் பாலியல் பலாத்காரத்தினால் அழிந்து போன கன்னியர் கதைகள் பல . வேலிப் பொட்டுக்குள்ளால் கடிதம் எறிந்து போராட்டம் பல கண்டு தான் விரும்பியவளைக் கைப்பிடித்து இன்று பூஸாவில் தடுப்புக் கைதியாகவோ அல்லது செம்மணி போல புதை குழிகளுதொலைந்து போன காளையர்கள் க்குள் புதைந்தவர்களும், சொந்த நாடு தொலைத்து ரஷ்ய எல்லைகளுக்குள் பனிக்காடுகளுக்குள் தொலைந்து போனவர்களுமாக கதை பலவுண்டு. என்னுடைய வாழ்வில் இப்படிச் சந்தித்தவர்களை நினைத்துப் பார்த்தேன். எழுத முடியவில்லை.......
வெளிநாடு வரும் வரை என்னோடு சைக்கிள் பாரில் நான் அமர, ஏசியா சைக்கிளை வலித்துக்கொண்டு கோயிலடிப்பக்கம் கொண்டு போகும் போது தன் காதல் அனுபவங்களை மீட்கும் நண்பன் சுதா நினைவுக்கு வந்தான். அவனும் இப்போது உயிரோடு இல்லை.

மொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/
பால்ராம் பாடும் போது இது குரலா வெண்கல ஒலியா என்று வேறுபடுத்த முடியாவிதத்தில் இசைக்கருவிகளில் ஒன்றாகக் கலந்து பாடலின் உணர்வுபூர்வமான வரிகளை மெய்ப்பிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது பாருங்கள் உள்ளத்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வலிமை கொண்ட இசையும் வரிகளும் அற்புதமாக அமைந்திருக்கின்றன.
பால்ராமின் குரலில் கேட்க
சுஜாதாவின் குரலில் கேட்க
காதலர் தினம் வெறும் காதலருக்கு மட்டும் தானா? நாம் நேசிக்கும் அனைவரையும் நினைத்துப் பார்க்கவும் ஒருமுறை இதைப் பொருத்திக் கொள்ளலாமே?
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று என்பார்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கக் குறையாதது.
அன்னை தெரேசா ஒருமுறை தன் தொண்டுப்பணிக்காக பணம் சேர்க்க ஒரு செல்வந்தரை நாடுகின்றார். செல்வந்தரோ கண்டபடி ஏசி இவரை விரட்டப்பார்க்கின்றார்.
தெரேசாவோ பொறுமையாக
" நீங்கள் வாங்கிய திட்டை நான் எடுத்துக் கொள்கின்றேன்", நான் நேசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று சொல்கின்றார். செல்வந்தர் வெட்கித் தலை குனிந்து பணத்தினை எடுத்துக் கொடுக்கின்றார்.

" இதய தாகம் இருப்போர் வருக"
தன் பால்யத்திலேயே பார்வை தொலைத்துப் பேச்சும் இழந்த ஹெலன் கெல்லர், தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து படிப்பும் திறமையும் வளர்த்து தன் நிலை மற்றவருக்கும் வரக்கூடாது என்று வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் விளங்கினார். இன்று ஹெலன் கெல்லர் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற பணிகள் இன்னும் தொடர்கின்றன.
பிரபல ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீது வெளிநாடு ஒன்றிற்குச் சுற்றுப்பயணம் சென்றவேளை ஒரு சமயம் வேற்றுமொழிப் படமொன்றைப் பார்க்கின்றார். எத்தனையோ போராட்டத்தின் மத்தியில் நாளாந்த சீவியத்தைக் கழிக்கும் ஒருவனின் வாழ்க்கை பற்றியதான கதை அப்படத்தின் மையக்கரு. அதில் சொல்லப்படும் படிப்பினைகள் ஹமீதின் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டுபண்ணுகின்றது. உலகில் எத்தனை வகையான மனிதர்கள், எத்தனை வகையான வாழ்க்கை முறைகள், எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்கள், ஆனால் நாமோ ஒரளவு எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்தாலும் எத்தனையோ காழ்ப்புணர்வுகளும், முரண்பாடுகளும் என்று இவர் மனதில் சிந்தனையோட்டம் ஓடுகின்றது. தாயகம் திரும்புகின்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் கோபங்காரணமாக முப்பது வருடங்களாக பேச்சு வார்த்தை ஏதுமின்றி இருந்த தன் பால்ய கால நண்பனின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ பெற்று அவனைத் தொலைபேசியில் அழைக்கின்றார். ஹமீதுவால் பேசமுடியவில்லை, அழ ஆரம்பிக்கின்றார். நண்பனின் நிலையும் அதுவே. இருவருக்குள்ளும் கனன்று கொண்டிருந்த நெடு நாள் குரோதம் கண்ணீரால் கரைகின்றது. பழைய நட்பு மீண்டும் பூக்கின்றது. விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் பெற்றுத் தரும் லாபங்களே தனி.
அடுத்த வருஷக் காதலர் தினத்திற்குள்ளாகவாவது என்னால் மனமுடைந்து தொலைந்து போன நட்பு யாராவது இருந்தால் தேடிக் கண்டு கை கோர்க்கப் போகின்றேன். நீங்கள் எப்படி...?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

37 comments:
// இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை//
அருமையான வரிகள். இனிமையான குரல்.. ஒரு வாரமாய் நான் கேட்கும் பாடலும் இதுதான்.
காதலை காட்ட காதலன் மட்டும்தான் தேவையா என்ற உங்கள் கேள்வி நியாயமானது. நம்மை சுற்றி உள்ள அனைவரிடமும் காட்டலாம். :-)
வணக்கம் .:: மை ஃபிரண்ட் ::.
இந்தப்பாடலைக் கேட்டதுமே எண்ணங்களைப் பகிரவேண்டும் என்ற உந்துதல் வந்ததே பாடலுக்குக் கிடைத்த வெற்றி இல்லையா? வருகைக்கு நன்றிகள்.
ப்ரபா, தொலைவில் போனவையெல்லாம் தொலைந்து போனவையாகாது என்று சொல்ல வருகின்றீர்கள். உண்மைதான். தொலைவில் போனவைகளே தேடிப் பார்க்கத்தான் ஆசை. பழைய நட்புகளாகிப் போன பழகிய நட்புகள் மீண்டும் அழகிய நட்புகளாக மாற ஆசைதான். நடக்கிறதா என்று பார்க்கலாம்.
வணக்கம் ராகவன்
நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் உண்மையான நண்பன் இதயத்தின் நடுவில் இருப்பான் இல்லையா?
அருமையான வரிகள். அருமையான இசை.
அதுவும் பல்ராமின் குரலில் headphone ல்
கேட்கும்போது , இனிமை
கடலின் மொழி
காதல் மொழி என்று இழுக்கும் போது அருமை
வணக்கம் நண்பரே
பால்ராமின் குரல் இப்பாடலுக்கு விஷேஷமாகப் பொருந்தியது உண்மையிலேயே சிறப்பு.
//விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் பெற்றுத் தரும் லாபங்களே தனி.//
நூத்துக்கு நூறு உண்மை.
உண்மையான நட்புக்கு ஏதோ காரணங்களால் இடையிலே பிரிவு வந்தாலும், அந்த உண்மை அன்பு அவர்களைச் சேர்த்து வைக்கும். என் அனுபவதிலும் கண்டிருக்கிறேன்.
பாடலும் அற்புதம், உங்கள் எண்ணங்களும் அற்புதம்.. நன்றி
பிரபா!
நடந்த உண்மைகளைக் கூறுகிறேன்.
என்ன? இப்படிப் பெருந்தன்மையுடன் நடக்க முற்படும் போது; குறைபாடுபோல் கருதி அவமானப் படுத்துவோர் அதிகம்.
அடுத்து; பழைய நண்பர்களில் பலர் நிலமை மாறும் போது, அளவுகோல் குறிப்பாகப் பணமாக மாறுகிறது!
எனினும் நட்பையும்;காதலையும்;அன்பையும்;உறவையும் தேட முற்படுவோம்.
என் கடன் பணி என!
கவிதைக்குப் பொய் அழகு;அதனால் நல்லா இருக்கிறது.
//செல்லி said...
உண்மையான நட்புக்கு ஏதோ காரணங்களால் இடையிலே பிரிவு வந்தாலும், அந்த உண்மை அன்பு அவர்களைச் சேர்த்து வைக்கும். என் அனுபவதிலும் கண்டிருக்கிறேன்//
வணக்கம் செல்லி
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
பாட்டு இனிமேல்தான் கேட்கப் போகிறேன். வரிகளை வாசித்தபின் சினிமாப் பாடல் இவ்வளவு கவித்துவத்துடன் இருக்கிறதே என்று யோசித்தேன். நா.முத்துக்குமார் எழுதியதா...? மாயாவி படத்தில் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு'என்றொரு பாடல் இருக்கிறது. மற்றது 'அரண்'படத்தில் 'அல்லாவே எங்களின் தாய்பூமி'என்றொரு பாடல் இரண்டும் கேட்டால் ஏனோ அழுகை வரும். கேட்டுப் பாருங்கள்.
நீங்கள் சொன்னதுபோல காதலர் தினத்தில் எல்லோரையும் நேசிக்க முயன்று பார்க்கலாம்.
//sreesharan said...
பாடலும் அற்புதம், உங்கள் எண்ணங்களும் அற்புதம்.. நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
பிரபா!
எண்ணமும், எழுத்தும், மிக அருமை.
அது சரி வேண்டின பூ ஆருக்கு?:)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
நடந்த உண்மைகளைக் கூறுகிறேன்.
என்ன? இப்படிப் பெருந்தன்மையுடன் நடக்க முற்படும் போது; குறைபாடுபோல் கருதி அவமானப் படுத்துவோர் அதிகம்.//
உண்மைதான் அண்ணா, ஆனாலும் முயன்று பார்க்காலாம் தானே? பணமா காசா ;-)
இரு பக்கத்திலும் ஒரே எண்ணவோட்டம் இருந்தால் எல்லாம் சுபமே
அருமை. பாடலும் பதிவும் மிக அருமை. இங்கே காதலர் தினம் எல்லாருக்காகவும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் அம்மா அப்பாவிற்கு அட்டைகள் தயாரிப்பது முதல், சின்ன வயசில் வகுப்பில் உள்ள எல்லா குழந்தைகளும் எல்லோருக்கும் அட்டைகள் எடுத்து வரவேண்டும். அன்பு செலுத்தும் நண்பர்கள், பெற்றோர்கள் எல்லோருக்குமே நம் அன்பை சொல்லலாம்.
நல்ல பதிவு பிரபா.
மலைநாடர் கேட்கிறதைத்தான் நானும் கேட்கிறேன்.. எந்தப் பூவைக்கு அந்தப் பூவைக் கொடுத்தீர்? :O))
//தமிழ்நதி said...
பாட்டு இனிமேல்தான் கேட்கப் போகிறேன். வரிகளை வாசித்தபின் சினிமாப் பாடல் இவ்வளவு கவித்துவத்துடன் இருக்கிறதே என்று யோசித்தேன். நா.முத்துக்குமார் எழுதியதா...?//
வணக்கம் தமிழ்நதி
முதன் முதலாக என் பதிவிற்கு வந்ததற்கு நன்றிகள் :-)
பதிவில் குறிப்பிட்டது போல இப்பாடலை எழுதியது "வைர"முத்து.
சமீப காலங்களில் வந்த இன்னொரு அழகிய பாடல் "வெயிலோடு விளையாடி"
//மலைநாடான் said...
பிரபா!
எண்ணமும், எழுத்தும், மிக அருமை. //
மிக்க நன்றிகள் மலைநாடான்
//அது சரி வேண்டின பூ ஆருக்கு?:) //
சொல்லமாட்டன் ;-))
வணக்கம் பத்மா அர்விந்த்
தங்களைப் போன்ற பதிவர்களின் கருத்து எனக்கு உற்சாகமளிக்கின்றது. நீங்கள் மேலதிகமாக வழங்கிய தகவல்கள் சிறப்பு.
Nalla paadu prabanna! nanum netruthan keden.mozi trailer parkumpothu kooda perusa antha paadu enai kavarella anal thirumba kedkumpothu nalla iruku.Veyiloodu vilyaadioda "uruguthu maruguthe" aum serkalam ello.
opps naanum antha poo yaaruku vaangenednu kekanum endu ninachidu maranthiden.
பூ அம்மாக்கு குடுக்க வேண்டினவர் ;) ஆனா எந்த அம்மா எண்டது தான் தெரியலை...
பாடல்களின் அறிமுகம், எழுதிய விடயம் அருமை. என்ன காதலர் தினத்திலை எல்லாரையும் காதலிக்க சொல்லுறியள்... அத்துகாறி உதுகளை பாக்கிறேல்லையோ ;)
//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
நல்ல பதிவு பிரபா.//
வருகைக்கு நன்றி ஷ்ரேயா
//சிநேகிதி said...
நல்ல பாட்டு பிரபண்ணா! நானும் நேற்றுத்தான் கேட்டேன்.மொழி ட்ரெய்லர் பார்க்கும்போது கூட பெருசா அந்தப் பாட்டு என்னை கவரேல்லை, ஆனல் திரும்ப கேட்கும்போது நல்லா இருக்கு.வெயிலோடு விளையாடி" "உருகுது மருகுதெ" வும் சேர்க்கலம் எல்லோ. நானும் அந்த பூ யாருக்கு வாங்கினீங்களெண்டு கேக்கணும் எண்டு நினச்சு மறந்திட்டேன்.//
உங்கள் ரண்டு பேருக்கும் பிரபா அண்ணையோடை ஒரு சேட்டை என்ன :-)
மீரா ஜாஸ்மினுக்கு வாங்கினனான். (டி.சே க்கு ஒரு அசின் எனக்கு ஒரு மீரா ஜாஸ்மின்)
//மீரா ஜாஸ்மினுக்கு வாங்கினனான். (டி.சே க்கு ஒரு அசின் எனக்கு ஒரு மீரா ஜாஸ்மின்//
பவனா வையோ ஸ்ரெயாவையோ சொல்லேல்லை தானே :))அந்தளவும் காணும்
//அத்துகாறி //
திருத்தம்-> ஆத்துகாறி எண்டு வரணும்
\\மீரா ஜாஸ்மினுக்கு வாங்கினனான். (டி.சே க்கு ஒரு அசின் எனக்கு ஒரு மீரா ஜாஸ்மின்) \\
மீராஜாஸ்மினா??? அடிக்கடி கேரளாப்பக்கம் போறப்பவே நினச்சன்.
\\பவனா வையோ ஸ்ரெயாவையோ சொல்லேல்லை தானே :))அந்தளவும் காணும் \\
ரொம்ப நிம்மதிப்பெருமூச்சு விடாதீங்க.பாவனாவும் டிஜேக்குதான் :-)
//ரொம்ப நிம்மதிப்பெருமூச்சு விடாதீங்க.பாவனாவும் டிஜேக்குதான் :-)//
ஆகா இந்த பாருடா ஒராள டிஜே விட்டாலும், நீங்க விடமாட்டிங்க போல :)))
டீ ஜே இல்லாத இடத்தில வி.ஜே அட்டகாசம் ;-))
ஒரு விஷயம், இப்பதிவில் அப்துல் ஹமீதுவின் மன மாற்றத்துக்குக் காரணமான சம்பவத்தைத் தவறுதலாக வேறு ஒரு விடயத்தைக் கூறிவிட்டேன். இப்போது தான் உறைத்தது. அந்தச் சம்பவத்தை இப்போது மாற்றிவிட்டேன்.
//இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை//
அட்டகாசமான பாடல், காதலர் தினத்திற்கு..
நீங்கள் சொல்வது போல, காதலர் தினம் என்பது எவ்வகையிலும் எடுத்துக்கொள்ளலாம் பிரபா..
கடவுளின் பால் பக்தன் கொள்வது, வேலையின் மீது பணியாளன் கொள்வது, பெற்றோரின் பால் ஒரு பிள்ளை கொள்வது, மொழியின் பால் கவிஞன் கொள்வது (கவிஞனுக்கு உள்ள நிலவு காதலும்), நண்பனிடம் கொள்ளும் நட்பு, எல்லாமே காதல் தான்..
பிரபா, வாழ்த்து அட்டைகள் விற்கும் நிறுவனங்கள் கொண்டு வந்து ஒரு பக்கம் சாய்த்துவிட்டது, இதை காதலன் காதலியின் மீது கொள்வதற்கு மட்டுமென..
வணக்கம் கார்த்திகேயன்
தங்கள் கருத்துக்கு நன்றிகள். நம் எல்லோரது ஒருமித்த சிந்தனை இந்தக் காதலர்களுக்கே மட்டும் சொந்தம் கொண்ட்டடும் காதலர் தினம் அன்பர்கள் தினமாகப் பரவலாக மாறும்
கொஞ்சம் லேட்டாய்த்தான் இதைப்பார்க்கின்றேன். எனது 'உரிமைகளுக்காய்' குரல் கொடுத்த சிநேகிதிக்கு எனது நன்றி :-). உங்கள் 'உரிமைகளுக்காகவும்'என்றும் நான் குரல் கொடுப்பேன் என்று அன்புடன் கூறிக்கொள்கின்றேன் சினேகிதி.
இப்பாடல் குறித்த பதிவுக்கு நன்றி கானாபிரபா. இந்தவரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை இதில்.
//இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை///
சிலநேரங்களில் நல்ல பாடலின் சிறந்த வரிகள் கேட்கும்போது கண்ணீர் சிந்தும் நல்ல பழக்கம்(!!!!!!) எனக்கும் உண்டு:))
வணக்கம் செல்வநாயகி
வாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். உள்ளத்து உணர்வுகளைக் கண்ணீர்ச்சாட்சியமாக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை இல்லையா?
Thanks a lot Piraba!!!It is a nice a song!!!film is also fine!!!I listen this song for long time in my ringtone!!!No boring so far!!!I just got the chance to see ur creations!!!Fine!!!I like much!!!One request (polite or strict) I will share ur creatins with others!!!!
Aatharshan
வாங்க ஆதர்ஷன்
கரும்பு தின்னக் கூலியா ;-)
அழகான பாடல், படம்.
டி.விடி கிடைக்கும் போது கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
//இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை//
அருமையான பாடல் அருமையான விமர்சனம் .எவ்வளவு யோசித்தாலும் இதை விட சிறந்ததாக என்னால் சொல்லிவிட முடியுமா? என யோசிக்க வைத்து விடுகிறீர்கள்.தள்ளி நின்று பார்ப்பவர்களை விட அனுபவிப்பர்வர்களுக்கே தெரியும் பிரிவின் வலி ..உங்கள் வலிகளை இந்த பாடலேனும் சற்று ஆற்றட்டும்
நேற்று நடுநிசியில் இப்பாடலை திடீரெனக் கேட்க,கேட்டு முடித்ததும் புன்னகை மனம் ஒரு அமைதி கலந்த சந்தோஷத்தில்.இன்று அப்பாடலைப் பற்றியே தங்கள் பதிவில் கண்டதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது :-)
Post a Comment