ஜல்.....ஜல்....ஜல் என்று மாட்டு வண்டி ஒன்று றோட்டில் போகும் சத்தம் கேட்கிறது. வீட்டுக்குள்ளிருந்து அந்தச் சத்தம் கேட்டு ஓடிப்போய் வெளியே பார்க்கிறேன். இருக்க இடமே இல்லாமல் முழுமையாகக் குழை நிரப்பிய மாட்டு வண்டி ஒன்று தெருவில் நடைபயின்று போகின்றது. வெறுப்போடு உள்ளே போகின்றேன். கொஞ்ச நேரத்தில் இன்னொரு மாட்டுவண்டிச் சத்தம் வருகிறது. எட்டிப் போய்ப் பார்க்கின்றேன். மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன். தாவடியில் இருக்கும் என் சித்தி வீடு வந்ததும் வண்டியிலிருந்து துள்ளிப் பாய்ந்து வெளியேறி, சித்தி வீட்டுக்குள் நுளைகின்றேன். கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே றோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இணுவில் பக்கமாகப் போவதற்காக ஒரு மாட்டு வண்டி வருகிறது. துள்ளிப் பாய்ந்து ஒட்டி மீண்டும் என் மாட்டுவண்டிச் சவாரி இன்பத்தை அனுபவித்துக் கொண்டே என் வீடு நோக்கிப் போகின்றேன். " உவன் பிரபு வந்த மாதிரிக் கிடக்கு, காணேல்லை ஆளை" பின்னால் என் சித்தி பின்னாற் கதைப்பது கேட்கின்றது. குறும்பாகக் கொடுப்புக்குள்ள சிரித்துக்கொண்டு மாட்டுவண்டிச் சவாரியில் மூழ்குகின்றேன். இது என் இளமைக்காலச் சந்தோஷ நினைவுகளில் ஒன்று.
மாட்டுவண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான். தாவடிப் பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை விளக்குப்பூசை எங்கள் வீட்டு உபயமாக நடைபெறும் ஒவ்வொரு வருஷமும் பூபாலசிங்கம் மாமா தன் மாட்டுவண்டியோடு அன்று காலையே வந்துவிடுவார். இணுவிலிலிருந்து கோயிலுக்குத் தேவையான சாமான் சக்கட்டுகளோடு குஞ்சுகுருமான்கள் எங்களையும் ஏற்றிக்கொண்டு மெல்ல நகரும் மாட்டுவண்டி. வண்டியின் வெளிப்புறம் காலை நீட்டி வருவதற்கான இட ஒதுக்கீட்டில் சின்னனுகள் எங்களுக்குள் பெரும் போட்டியே நடக்கும். இரவுப்பொழுது திருவிழா முடிந்ததும் பொங்கற்பானை நைவேத்தியம் சகிதம் வண்டி வீடு திரும்பும்.
பங்குனித்திங்கள் காலத்திலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலத்திற்கு மாட்டுவண்டிகள் புடை சூழ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் என் நினைவில் இருந்து நீங்காதவை.
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ள, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும்.
சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் செல்லும் வழியில் இளைப்பாறி நீராகாரம் அருந்திப்போக வசதியாக முக்கிய சந்திப்புக்களில் நீர்த்தொட்டிகள் இருந்த காலமும் என் ஞாபக இடுக்குகளில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்குச் சமீபமாகவும் முனியப்பர் கோயிலடியிலும் இவை இருந்ததாக நினைப்பு.
எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்கு ஆறரைப் பூசைக்கு வண்டி கட்டி வந்து ஐயர் தந்த திருநீறையும் குங்கும சந்தனத்தையும் காளைகளின் நெற்றியில் தடவித் தன் வேலையைத் தொடங்கும் விசுவலிங்கமும், எங்கள் புகையிலைத் தோட்டத்திற்கு குழை தாக்கும் வேலைக்காகப் பூவரசம் இலை நிரவிய மாட்டுவண்டி சகிதம் தோட்டம் வரும் மாரிமுத்துவும் மாட்டுவண்டிக்காலத்தின் சில சாட்சியங்கள். 80 களின் நடுப்பகுதியில் இருந்து நவீனத்தின் ஆக்கிரமிப்பில் லாண்ட்மாஸ்டர் என்ற பதிலீடு மாட்டுவண்டிக்காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியாக வந்து இப்போது முழு அளவில் ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம். விசுவலிங்கமும் காலைப்பூசைக்குத் தன் லாண்ட் மாஸ்டரில் வரத்தொடங்கிவிட்டான். மாடுகளின் நெற்றியில் தடவிய நீறும் சந்தனமும் லாண்ட் மாஸ்டரின் எஞ்சினில் இப்போது.
எங்களூர்த் தெருக்களில் ஜல் ஜல் என்று கழுத்துமணியெழுப்பி குழம்பொலிகள் சந்தம் சேர்த்த மாட்டுவண்டிகளுக்குப் பதில் லாண்ட் மாஸ்டரின் கர்ணகொடூரச் சத்தம். அடுத்த தலைமுறைக்கு மாட்டுவண்டிகள் காட்சிப் பொருளாகும் காலம் நெருங்கிவிட்டது.
இந்த நேரத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்படும் மாடுகள் தருவிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்லவேண்டும். வடக்கன் மாடுகள் என்றவகை மாடுகளே இதற்கெனத் தனித்துவமான பாவனையில் இருந்தவை. வடக்கன் மாடுகள் என்ற பதம் வரக்காரணம் ஈழத்தின் வடக்கே உள்ள இந்தியாவிலிருந்து தான் இவை முன்னர் தருவிக்கப்பட்டவை. இது பற்றி மேலதிக விபரங்களை நான் தேடியபோது சிட்னியில் தற்போது வாழும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இ.சிவகுரு தாத்தா தந்த தகவல்களின் படி 1940 களின் தான் சின்னப்பையனாக இருந்த காலப் பகுதியில் பெரியோர்கள் சொன்ன கூற்றுப் படி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன் துறை போன்ற இறங்கு துறைகள் ஈழத்தின் பாரிய துறைமுகங்களாக விளங்கியவையாம். இந்த இறங்குதுறைகளுக்கே 40 களுக்கு முந்திய காலகட்டத்தில் இப்படியான தமிழ்நாட்டிலிருந்து மாடு தருவிக்கும் முறைமை இருந்ததாகச் சொல்லுகின்றார்.
சலங்கு என்ற பாய்மரக்கப்பல்கள் உதவியுடன் ஈடுபட்ட இந்த இறக்குமதி வர்த்தகம் வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில், இறக்குமதியாகும் பொருட்களோடு ஊர்காவற்துறைத் துறைமுகத்தில் பாதுகாப்புக்காகக் கட்டிவிடும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இப்படி ஊர்காவற்துறைக்கு மாற்றலாகும் முறைமை "ஒதுக்கான இடம்" தேடிப் போவது என்று சொல்லப்பட்டுவந்தது.
தில்லைச்சிவனின் "அந்தக் காலக்கதைகள்" என்ற நூலை தட்டிப்பார்த்தேன். 1928 ஆம் ஆண்டு சரவணை என்ற தீவுப்பகுதியில் பிறந்த அவரின் பிள்ளைப்பிராய நினைவுப் பதிவாக இருக்கும் அந்நூலில் இப்படிக் கூறுகின்றார்.
"அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டுவந்த இரண்டு வடக்கன்மாட்டுகாளைகள். ஊர்காவற்துறையில் உள்ள மாட்டுகாலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் இருந்து வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள், வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை.." அந்தக்காலத்த்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனர் வாங்கிக் கொண்டு வந்தார், இப்படி நீண்டு செல்கின்றது அந்த நினைவுப்பகிர்வு.
வரதரின் மலரும் நினைவுகளில் கூட இதையே இப்படிச் சொல்கின்றார்.
அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள "திருவண்ணாமலை" என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். "உரு" என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும், காலத்தில், அவ்ற்றை வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப்பார்க்க வருபவர்களுமாக ஊர்காவற்துறை திருவிழாக்காலம் போலக் களை கட்டிவிடும்.
வட தமிழீழத்தித்திற்கு ஒரு மகாகவி (உருத்திரமூர்த்தி) போல தென் தமிழீழத்தில் கவிப் பணி ஆற்றிய சிறப்பு மிக்க கவிஞர் நீலாவணன் (சின்னத்துரை). நீலாவணனின் கவியாழத்தின் விசாலத்தைப் பகிர எனக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். எனவே அவரின் கவிப் படையலில் தோன்றிய முத்து "ஓ வண்டிக்காரா" கவிதையையும் அது ஈழத்து மெல்லிசைப் பாடலாக எப்படி மாறியது என்பதையும் செவியில் நனைக்க இங்கே தருகின்றேன். இந்த மூலக்கவி ஈழநாடு பத்திரிகையில் 21.06.1965 ஆம் ஆண்டு வெளிவந்தது.
கவி வரிகளைப் பாருங்கள் எவ்வளவு அழகுணர்ச்சி தென்படுகின்றது. என் மழலைப் பருவத்தின் இலங்கை வானொலி அனுபங்களில் மெல்லிசைப் பாடலாக வந்த இந்தப் பாடல் காலம் கடந்தும் அதே சுவை குன்றாது என் ரசனையில் பதிவாகி இருக்கின்றது. கண்ணன் - நேசம் என்ற புகழ் பூத்த ஈழத்து இரட்டையர்களின் இசையும், மா. சத்தியமூர்த்தியின் குரலும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது. பாடலில் கலந்து வியாபித்திருக்கும் புல்லாங்குழல் போன்ற தேர்ந்தெடுத்த வாத்தியங்கள் பாடலைச் சேதாராம் பண்ணாமல் நம் தாயகத்துக் கிராமியச் சூழ்நிலைக்கு மனதைத் தாவவிடுகின்றன.
ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு
காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு
ஓ என் அருமை வண்டிக்காரா....
பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு
ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு
பாடலைக் கேட்க
1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு "களத்தில் கேட்கும் கானங்கள்" பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த "களத்தில் கேட்கும் கானங்கள்" ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது.
இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளைத் தமிழகப் பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்கின்றார்கள். ஒரு மாட்டு வண்டிக்காரன் பயன்படுத்தக்கூடிய எளிமையான சொல்லாடலும், அன்றைய காலகட்டத்தின் அவன் கொண்டிருந்த மனப்பாங்கையும், தன் மாட்டுடன் பேசிக்கொண்டே பயணிப்பதாக அழகாகத் தன் கவி வரிகளில் அடக்குகின்றார் புதுவையார்.
தமிழீழத்தின் தன்மானமுள்ள வண்டிக்காரன் விடுதலைப்புலிகளின் வீரத்தையும் தீரத்தையும் வியந்து பயணவெளிப்பாதையில் பாடுகிறான் இப்படி:
நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது (2)
பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்
பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்
நடடா ராசா....
ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லிப்பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லிப்பேசும் (2)
நீலமேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்துப் போகும் (2)
நீங்கள் வெற்றி சூட வேண்டும் என்று வாழ்த்துக்கூறும்
என்றும் வாழ வாழ்த்தும்.....
நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது
ஊரில் எங்கும் புலியைத் தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரை எங்கும் குண்டு போட்டுப் பாரும் (2)
போரில் எங்கள் புலிகள் செய்த புதுமை கேட்டுப் பாரும்
புலரும் காலை தலைவன் மீது பரணி ஒன்று பாடும்
தரணி எங்கும் கேட்கும்.......
நடடா ராசா........
காடு மேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காற்றில் கூட எங்கள் வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்
போற்றி போற்றி பிள்ளையாரே
புலிகள் வாழ வேண்டும் (2)
பேய்கள் ஓடிப் போக வேண்டும்
புலிகள் ஆள வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும்.......
பாடலைக் கேட்க
அதாவது நம் தேசத்தின் வரலாற்றுச் சூழ்நிலைக்கேற்ப இந்த மாட்டுவண்டிப் பயணம் எப்படியான கவியைப் புனைய வைத்திருக்கின்றது என்பதற்காகவே இந்த இரண்டு பாடல்களைத் தந்திருக்கின்றேன். இரண்டு வேறுபட்ட காலப்பகுதியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், தான் சந்திக்கும் பாதிப்பையே இலக்கியமாகப் பெருமளவில் வடிக்கின்றது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
அதே மாட்டு வண்டி, அதே பாதை ஆனால் சூழ்நிலையும் தான் எதிர் நோக்கும் வாழ்க்கை தான் பாடலாகின்றது.
ஓ வண்டிக்காரா பாடலின் எழுத்து வடிவம் அனுமதி பெற்று மீள் பதிப்பிக்கப்படுகின்றது.
நன்றி: neelaavanan.com
44 comments:
"ஓ வண்டிக்காரா!" மிகவும் பிடித்த பாடல். இணைப்புக்கு மிக நன்றி.
இத்தட்டானைக் கொஞ்சம் கவனியுங்கள் "21.06.1096"
எப்பவும் போல வித்தியாசமான ஒரு பதிவு.. எப்பொழுதும் போல சம்பவங்கலை மனதில் நிறுத்தி உணர்ந்து எழுதியிருக்கீறீர்கள்..
//
சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன்//
நான் ரசித்த வரிகள்
வணக்கம் பெயரிலி
ஆண்டு திருத்தப்பட்டிருக்கின்றது. ஒலித்தென்றல் என்ற ஈழத்துப்பாடற் தொகுப்பு இசைப்பேழையில் இருந்து "ஓ வண்டிக்காரா" என்ற அந்தப்பாடலைத் தந்திருக்கின்றேன். என்றும் கேட்டு இன்புறக் கூடிய இனிமையான பாடல் அது.
பிரபா, நல்ல பதிவு. இந்தப் பொங்கல் காலத்தில் மாட்டு வண்டிச் சவாரி பதிவு பொருத்தமானது. வழக்கம் போல எளிமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.
எந்த ஊர்ப் படங்கள்? கேரளாவோ?
//மங்கை said...
எப்பவும் போல வித்தியாசமான ஒரு பதிவு.. எப்பொழுதும் போல சம்பவங்களை மனதில் நிறுத்தி உணர்ந்து எழுதியிருக்கீறீர்கள்.//
வணக்கம் மங்கை
நவீனத்தின் கோரப்பிடியில் அழிந்து போன நம்மூரின் சில விழுமியங்களை நினைத்துப் பார்த்தப்பொது எழுததோன்றியது இப்பதிவு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
அடடா பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறீர்களே.நானும் தாவடியில் இருக்கும் என் மாமா வீட்டுக்கு பாடசாலை விடுமுறைக்கு செல்லும்போது மாட்டுவண்டி சாவாரி,ரக்டர்(தமிழ் ???)புகையிலைத்ததோட்டத்தையும் மிஸ் பண்ணுவதில்லை. அது எல்லாம் ஒரு காலம். ம்.....
//Kanags said...
பிரபா, நல்ல பதிவு. இந்தப் பொங்கல் காலத்தில் மாட்டு வண்டிச் சவாரி பதிவு பொருத்தமானது. வழக்கம் போல எளிமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.
எந்த ஊர்ப் படங்கள்? கேரளாவோ?//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சிறீ அண்ணா
படங்களில் மூன்றாவது படம் மைசூரில் கடந்த வருடம் எடுத்தது. மற்றய படங்கள் ஈழத்தின் சில பாகங்களில் எடுக்கப்பட்டு இணையத்தில் பெறப்பட்டவை. மேலதிக விபரங்களைப் பெறமுடியவில்லை.
அருமையாக உள்ளது.
//அடுத்த தலைமுறைக்கு மாட்டுவண்டிகள் காட்சிப் பொருளாகும் காலம் நெருங்கிவிட்டது.//
எங்கள் பகுதிப் பிள்ளைகளுக்கு இப்பொழுதே காட்சிப் பொருள் தான்.அரும் பொருட் காட்சியகத்தில் தான் சிறுவர்கள் போய் தொட்டுப் பார்கிறார்கள்.
"ஓ.. வண்டிக்காரா" பாடலுடன்
இன்னொருவர் எழுதிய பாடலும் நினைவுக்கு வருகிறது
"அழகான ஒரு சோடிக் கண்கள்"
வணக்கம் பிரபா.. நல்லதொரு நாளில் நல்லதொரு பதிவு..... வடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்த காலம் வருசா வருசம் மாட்டு சவாரி நடக்கும்.சிரித்திரன் ஆசிரியர் கண்ட உண்மை பாத்திரமான சவாரி தம்பர் பரம்பரையில் வந்த அந்த ஆளுடைய மாட்டு வண்டில் தான் எப்பவும் முதலாக வரும்.
மாட்டுவண்டில் சவாரி நல்லா இருக்கும். ஒருக்கா ஏறிப்போன ஒரு ஞாபகம் ஏதோ நிழல் மாதிரி இருக்கு.
மாடுகள் இந்தியாவிலயிருந்து வந்த கதையும் நல்லாச் சொல்லியிருக்கிறீர்.
//சிட்னியில் தற்போது வாழும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இ.சிவகுரு தாத்தா//
இந்தப் பாட்டமாரையெல்லாம் எங்கேயிருந்து தேடிப்பிடிக்கிறீர்? அடுத்த வலைப்பதிவர் சந்திப்புக்கு இழுத்துக் கொண்டு வருவீரோ?:O)
/அடுத்த வலைப்பதிவர் சந்திப்புக்கு இழுத்துக் கொண்டு வருவீரோ?:/
போட்டாலும் போட்டீர் பாரும் மாட்டுவண்டிப்பதிவு; இப்பிடித்தான் பின்னூட்டங்கள் வரும் ;-))
"ஒரு சோடி அழகான கண்கள்," குலசீலநாதனும் பரராஜசிங்கமும் சேர்ந்து பாடிய மென்மையான பாட்டு; பாடவகுப்புகளை வைத்தே பதிமத்தின் உணர்த்துவதிலே வெற்றி பெற்ற பாடலது.
பிரபா, "ஓ வண்டிக்காரா!" இற்கு இதைத்தவிர வேறோர் இசையமைப்பும் இருக்கின்றதா? ஏனெனில், முன்னர் கேட்ட பாடலுக்கும் இதற்கும் அமைப்பிலே சின்ன வித்தியாசங்கள் இருப்பதுபோன்ற உணர்வு. கேட்டு இருபது இருபத்தைந்தாண்டுகள் என்பதால், ஞாபகத்திலே சரியாக இல்லையென்பதும் காரணமோ தெரியவில்லை.
//U.P.Tharsan said...
நானும் தாவடியில் இருக்கும் என் மாமா வீட்டுக்கு பாடசாலை விடுமுறைக்கு செல்லும்போது மாட்டுவண்டி சவாரி//
வணக்கம் தர்சன்
என்னைப் போலவே நீங்களும் இந்த அனுபவத்தை அனுபவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி,
வருமா அக்காலம் :-(
//பஹீமா ஜகான் said...
அருமையாக உள்ளது.
எங்கள் பகுதிப் பிள்ளைகளுக்கு இப்பொழுதே காட்சிப் பொருள் தான்.அரும் பொருட் காட்சியகத்தில் தான் சிறுவர்கள் போய் தொட்டுப் பார்கிறார்கள்.//
உண்மை தான் :-(
//"ஓ.. வண்டிக்காரா" பாடலுடன்
இன்னொருவர் எழுதிய பாடலும் நினைவுக்கு வருகிறது
"அழகான ஒரு சோடிக் கண்கள்"//
அழகான ஒரு சோடி கண்கள் உள்ளிட்ட பல பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன.
பொட் காஸ்டிங்கில் என் பதிவுகளில் எதிர்காலத்தில் அவற்றை அவ்வப்போது தரவிருக்கிறேன்.
தங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள்.
ஜாலியான நல்ல பதிவு கானா பிரபா.
என் சிறு வயது மாட்டு வண்டி பயணங்களை ஞாபகப்படுத்தியது.
நானும் நண்பர் குழாமும், செங்கல் ஏற்றி வரும் மாட்டு வண்டியின் பின்னால் ஓடிப்போய் தொற்றிக் கொள்ள, வண்டிக்காரன் எங்களை அடிக்க வருவான். டபாய்த்து திரும்ப ஏறி இறங்கி ஜாலி செய்த காலம் சூப்பர். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.
மாடுதான் பாவம். சுத்தமாக அதை பற்றி கவலை படாமல் இருப்பான் வண்டிக்காரன். மாடு சோர்ந்து படுத்தால், சூடு வைத்து எழுப்பும் கோரக் காட்சிகளும் நினைவுக்கு வருது.
// சின்னக்குட்டி said...
வணக்கம் பிரபா.. நல்லதொரு நாளில் நல்லதொரு பதிவு.....//
வணக்கம் சின்னக்குட்டியர்
மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. முன்னர் தினகரனும் தைப்பொங்கல் மாட்டுச்சவாரிப்போட்டியை வெகு சிறப்பாக நடாத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிரபா, நல்லதொரு பதிவு. மாட்டுவண்டிச்ச்வாரிகள் கீரிமலைக்குப் பக்கமும் நடைபெற்றதாய் சின்னவயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன்; பார்க்கவில்லை.
....
நடடா ராசா மயிலைக்காளைப் பாடலை பின்னாட்களில் சாந்தன் பாடிக்கொண்டு திரிந்ததைக் கேட்டது நினைவு.
பிரபா
மாட்டு வண்டில் என்றவுடன் என் நினைவுக்கு வருவது மட்டுவில் கிடுகு வண்டில்கள்தான்.
அப்படிப்பட்ட கிடுகு வண்டிலகாரர் எங்க அக்கா புருஷன் தியாகர் வாடைக் காற்று படத்தில் மாட்டுச் சவாரிக் காட்சியில வாறாராம் எண்டு கேள்விப்பட்டேன்.
//வட தமிழீழத்தித்திற்கு ஒரு மகாகவி (உருத்திரமூர்த்தி) போல தென் தமிழீழத்தில் கவிப் பணி ஆற்றிய சிறப்பு மிக்க கவிஞர் நீலாவாணன் (சின்னத்துரை).//
போட்டோ யாருடையது?உருத்திரமூர்த்தியோ? அல்லது நீலாவாணனோ?
பொங்கல் வாழ்த்துக்கள்!
கானா பிரபா said...
//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
இந்தப் பாட்டமாரையெல்லாம் எங்கேயிருந்து தேடிப்பிடிக்கிறீர்? அடுத்த வலைப்பதிவர் சந்திப்புக்கு இழுத்துக் கொண்டு வருவீரோ?:O) //
பாட்டாமார் நடமாடும் வரலாற்று நூலகங்கள்,
முயற்சி செய்து பார்க்கிறன் ;-))
அடுத்த வலைப்பதிவாளர் மகாநாடு எப்ப எண்டு தான் தெரியேல்லை.
வருகைக்கு நன்றி.
//-/பெயரிலி. said...
போட்டாலும் போட்டீர் பாரும் மாட்டுவண்டிப்பதிவு; இப்பிடித்தான் பின்னூட்டங்கள் வரும் ;-))//
:-)))
//"ஒரு சோடி அழகான கண்கள்," குலசீலநாதனும் பரராஜசிங்கமும் சேர்ந்து பாடிய மென்மையான பாட்டு; பாடவகுப்புகளை வைத்தே பதிமத்தின் உணர்த்துவதிலே வெற்றி பெற்ற பாடலது.//
அதே குலசீலநாதன், பரா பாடிய சந்தன மேடை பாடலும் என்றும் சொக்கவைக்கும் இனிய பாடல்
//பிரபா, "ஓ வண்டிக்காரா!" இற்கு இதைத்தவிர வேறோர் இசையமைப்பும் இருக்கின்றதா?//
உங்கள் கணிப்புச் சரி, இந்தப் பதிவில் இணைத்துள்ள பாடல் மறு இசையாக்கம் ஆகும். அதாவது மூல இசையில் பயன்படுத்திய மெட்டு, மற்றும் வாத்தியங்களின் மீள் பதிப்பு.
சந்தன மேடை & அழகான ஒரு சோடிக் கண்கள் தொடர்பாக, பழைய பதிவொன்று
//SurveySan said...
ஜாலியான நல்ல பதிவு கானா பிரபா.
என் சிறு வயது மாட்டு வண்டி பயணங்களை ஞாபகப்படுத்தியது.//
சர்வேஸ்வரரே வருக ;-)
கிராமிய வாழ்வோடு தம் இளமையைக் கழித்தவர்களுக்கு மாட்டு வண்டிச்சவாரி தவிர்க்கமுடியாதல்லவா. மாட்டுக்கு அடையாளத்துக்காகக் குறிவைக்கும் கொடுமையும் தாங்கமுடியாது.
கானா பிரபா said...
// டிசே தமிழன் said...
நடடா ராசா மயிலைக்காளைப் பாடலை பின்னாட்களில் சாந்தன் பாடிக்கொண்டு திரிந்ததைக் கேட்டது நினைவு. //
வருகைக்கு நன்றிகள் டி.சே
சாந்தன் 90 களின் ஆரம்பத்தில் அருணா இசைக்குழுவில் இதோடு பல எழுச்சிப்பாடல்களைப் பார்த்து இரசித்த அனுபவமும் மறக்கமுடியாது.
கானா பிரபா said...
//செல்லி said...
போட்டோ யாருடையது?உருத்திரமூர்த்தியோ? அல்லது நீலாவாணனோ? //
வணக்கம் செல்லி
கிடுகுவண்டில்கள் மேல் எனக்குக் கோபம், இருக்க இடம் இராது.
படத்தில் இருப்பவர் நீலாவாணன்.
உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
ரைஸ் குக்கரில பொங்கியிருப்பியள் எண்டு நினைக்கிறன்:-)
//-/பெயரிலி. said...
சந்தன மேடை & அழகான ஒரு சோடிக் கண்கள் தொடர்பாக, பழைய பதிவொன்று //
பதிவுகளின் இணைப்புக்கு நன்றிகள், பரராஜசிங்கம் அவர்களின் ஒலிப்பேழை என்னிடமும் இருக்கின்றது.
ஈழத்து மெல்லிசைப்பாடல்களைப் பதிவு செய்வதில் நானும் அதிக ஆர்வம் காட்டிவருகிறேன். அவற்றை அவ்வப்போது பரிமாறுகின்றேன்.
//சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன்//
பிரபா!
அருமையான மற்றுமொரு பதிவு.
பாராட்டுக்கள்.
மேலே குறிப்பி்டடுள்ள வகை மனிதர்களை நானும் சந்தித்திருக்கின்றேன். அவர்களில் எனை அசத்திய பெண் பற்றி ஒர் பதிவிட வேண்டும். செய்வோம்.
/ஈழத்து மெல்லிசைப்பாடல்களைப் பதிவு செய்வதில் நானும் அதிக ஆர்வம் காட்டிவருகிறேன். அவற்றை அவ்வப்போது பரிமாறுகின்றேன்./
செய்யுங்கள். முற்கூட்டிய நன்றி
இளம்பிராயத்து மாட்டு வண்டிப்பயணங்களை அசை போட வைத்துவிட்டீர்கள். வழக்கம்போலவே இதுவும் அருமையான பதிவுதான்.
வருகைக்கு நன்றிகள் மலைநாடான், தங்கள் பதிவையும் எதிர்பார்க்கின்றேன்
வணக்கம் கெளதம்
தங்களுக்கும் இந்தக் கிராமிய இன்பம் கிடைத்தது அறிந்து மகிழ்கின்றேன், வருகைக்கு என் நன்றிகள்
பிரபா!
சிறுவனாக இருந்தபோது; இந்த மாட்டுவண்டிச் சவாரி கிடைத்தது. அந்த "சல் சல்" சலங்கைச்சத்தம் பிடிக்கும். இப்பாடல்களுக்கு முன் திரையில் வந்த "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கையோலி,சல சல சல பாதையிலே ,செல் செல் செல் எங்க காளைகளே; சேர்ந்திட வேணுமிரவுக்குள்ளே" ..;என ஜானகி அம்மா பாடியது என நினைக்கிறேன். இன்றும் என் மனதைவிட்டகலாத பாடல்.
இந்த ஓ வண்டிக்காராவும் கேட்ட போது பிடித்தது.(முதலே).
ஊர்காவற்றுறை மாட்டுக்காலையில் 1950 க்கு முன் மாடு வந்திறங்கியது. என் இளமையில் அப்படி ஒன்றைக் கண்டதில்லை.
வடக்கன் மாட்டில் பசு மாடு , நான் சென்ற இலங்கைக்கிராமம் எங்கும் கண்டதில்லை. நீங்கள் யாராவது கண்டுள்ளீர்களா??நலமடிக்கப்பட்ட காளைகள் வந்திறங்கியதால் அதற்குச் சாத்தியமில்லை. என நினைக்கிறேன்.
காளையை இறக்கியவர்கள் ஏன் 10 சோடியை இறக்கி இனப்பெருக்கம் செய்யவில்லை.ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இபோ இந்த வடக்கன் மாடுகள்; கிளடு தட்டி இறந்து அருகிக் கொண்டு போய்விட்டது.
நல்ல பழைமை மீட்டல்
யோகன் பாரிஸ்
வணக்கம் யோகன் அண்ணா
//இப்போ இந்த வடக்கன் மாடுகள்; கிழடு தட்டி இறந்து அருகிக் கொண்டு போய்விட்டது. //
உண்மை, இப்போது தாயகத்தில் இருக்கும் மாடுகள் நோஞ்சான் தரத்தில் தான் அதிகம் இருக்கின்றன. நன்கு செழிப்பான மாடுகளைக் காண்பதரிது. எனக்கு இந்தச் சிந்தனை வந்த போதுதான் இந்தப் பதிவே பிறந்தது.
நீங்கள் குறிப்பிட்ட பாடல் பாசம் படத்தில் ஜானகி பாடியது. வழக்கம் போல் பின்னூட்டத்தில் சுவையான தகவலைப் பரிமாறியமைக்கும் என் நன்றிகள்.
கா.பி,
நல்ல நினைவுமீட்டல் பதிவு. மாட்டுவண்டிச் சவாரிகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க்கவில்லை. ஆனால் எமது ஊரின் புறப்பகுதியில் அமைந்துள்ள தரவையில் [விவசாயம் செய்ய முடியாது கைவிடப்பட்ட கடற்கரைக்கு அண்மையான நிலங்கள்]தீபாவளி, பொங்கல் போன்ற நிகழ்வுகளுக்கு இப்படியான மாட்டு வண்டிச் சவாரிகள் முன்னர் நடந்ததாம்.
வணக்கம் வெற்றி
மாட்டுவண்டிச் சவாரி செய்வது ஒரு இனிய அனுபவம், நம் ஊரில் இருந்தும் உங்களுக்கு அந்த அரிய வாய்ப்புக் கிடைக்கவில்லைப் போலும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
மாட்டுக்கார வேலா
ஓம் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!
மாட்டு வண்டி....நினைவிருக்கிறது. இருக்கங்குடிக்கு மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சென்றது. சிறிய வயதில். வண்டிப் பைதா மிகப் பெரியதாக இருக்கும். கிட்டத்தட்ட உட்கார்ந்திருப்பர் தலை வரைக்கும் கூட வரும். அது சுற்றும் அழகே அழகு. வண்டியில் ஏறுவதற்கும் அந்தச் சக்கரத்தை மிதித்து ஏறுவதும் உண்டு.
எங்கள் குடும்பத்தில் ஒரு தாத்தா இருந்தார். அதாவது என்னுடைய பாட்டிக்குச் சகோதரர். என்னுடைய பாட்டியின் மகள்...சிறுமி....அவளுக்கு மாமாவின் மீது மிகுந்த பாசம். அவளைப் பலமுறை வண்டியில் ஏற்றிக் கொண்டு போவாராம். ஒருமுறை வண்டியில் இவர் உட்கார்ந்திருக்கையில்...அவருக்குத் தெரியாமல் வண்டியில் ஏற சக்கரத்தில் காலை வைத்து ஏறியிருக்கிறார். இது தெரியாமல் அவர் வண்டியைப் பத்தவும் அந்தத் துயரம் நடந்திருக்கிறது. உடைந்து போய் விட்டாராம் மனிதர். போன மகளைக் கூட மறந்து விட்டு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றினார்களாம் என்னுடைய பாட்டனும் பாட்டியும்.
கா.பி,
/* மாட்டுவண்டிச் சவாரி செய்வது ஒரு இனிய அனுபவம், நம் ஊரில் இருந்தும் உங்களுக்கு அந்த அரிய வாய்ப்புக் கிடைக்கவில்லைப் போலும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். */
மாட்டுவண்டிச் சவாரி என்றால் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்வதையா சொல்கிறீர்கள்? எம்மூரில் சவாரி என்றால் race [ஓட்டப் போட்டி]. நான் மாட்டுவண்டியில் கன முறை எம் ஊரில் போயிருக்கிறேன். நீங்கள் சவாரி எண்டதும் ஓட்டப் போட்டியைச் சொல்கிறீர்கள் என நினைத்தேன். மற்றும் படி சவாரிகள் எம்மூரில் விசேட தினங்களில் நடந்ததாம். அவற்றை நான் பார்த்ததில்லை.
வணக்கம் ராகவன்
மாட்டுவண்டி நாட்களில் நாம் சந்தித்த அனுபவங்கள் பல இருக்கின்றன, தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.
வணக்கம் வெற்றி
சவாரி என்பது போட்டி என்ற கருத்திலும் இருந்தாலும் பதிவில் குறித்தது போன்று நம் மாட்டுவண்டிப் பயணத்தைத் தான் குறிப்பிட்டிருந்தேன். உங்களைப் போலத் தான் எனக்கும் இந்த மாட்டுவண்டிப் போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.
நிதர்சன ரசிப்புப் பதிவு, மாம்பழ்ப்பதிவு போல் இதுவும் சுவையாக இருந்தது!
வணக்கம் பிரபாண்ணா!
காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
நான் நினைக்கிறன் கடைசியாக அந்த நவராத்திரி நாட்கள் வாசிக்க மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு வந்திருக்கிறன் அதுக்குப் பிறகு இன்றுதான். என்ன தலைப்பை எடுத்தாலும் அசராம பல தகவல்களைச் சேகரித்து எழுதுறதுக்கு நிகர் நீங்கள்தான். மாட்டுவண்டியில் சவாரி செய்த அனுபவம் எனக்கில்லை. ஆனால் அப்பப்பா முந்தி ஒரு மாட்டு வண்டில் வச்சிருந்தவராம்.எங்கட காலத்தில லான்ட்மாஸ்டர் ட்றக்ரர் தான்.
'\\சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன்\\
பிள்ளைகளை விட மாடுகளுக்குத்தான் அதிக கவனிப்பாம்.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நிதர்சன ரசிப்புப் பதிவு, மாம்பழ்ப்பதிவு போல் இதுவும் சுவையாக இருந்தது! //
வணக்கம் ஜீவா
தங்களைப் போன்ற வலையுலக நண்பர்கள் இப்படியான பதிவை வாசிப்பதோடு நின்றுவிடாது கருத்தளிப்பது மென்மேலும் என்னை எழுதத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்.
வண்டில் சவாரி எண்டால் எனக்கு அது போட்டியைத்தான் குறிக்கும்.
மாவிட்டபுரத்தில் சின்னவயசில் ஒரு சவாரி பார்த்த ஞாபகம். பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் அளவெட்டிப் பக்கம் ஒரு சவாரி பார்க்கப்போய் இடையில சைக்கிள் விபத்தில மாட்டுப்பட்டு பார்க்காமலே திரும்பி வந்தாச்சு. வளர்ந்த பிறகு நல்லதொரு சவாரி பார்க்காதது இண்டைவரைக்கும் பெரிய குறைதான்.
மாரீசன்கூடலில 'புலியர்' எண்டு சொல்லி நல்ல பிரபலமான சவாரிக்காரர் இருந்தார். மாடு வளர்க்கிறேல, வண்டில் ஓட்டுறதுமட்டும்தான் வேலை. அனேகமா மாடு வளர்க்கிறவர் வேற ஆக்கள், வண்டில் ஓட்டுறது வேற ஆக்களாத்தான் இருப்பினம்.
யாழ்ப்பாணத்தில தொன்னூறுகளில் பிரபலமான வெற்றிச்சோடி 'பொம்பர் சோடி'. பேர் ஞாபகம் இருக்கோ? ஒரேயொருமுறை ஆனைக்கோட்டையில அந்த ரெண்டு மாட்டையும் பார்த்திருக்கிறேன்.
வெற்றியின்ர ஊரில இருக்கிற தரிசுநிலம் முந்தி பயிர்ச்செய்கைக்குப் பாவிச்சதுதான். பிறகு ஒருக்கா கடல்பெருக்கெடுத்து கரைதாண்டி வந்திட்டுது. கடற்கரையை அண்டின வயலில நிண்ட கடல்தண்ணி வத்திப்போகவே ஒருவருசம் எடுத்ததாம். அதோடதான் அந்த நிலங்கள் தரிசானது.
அங்க மாட்டுவண்டில் சவாரி நடந்ததாக நானும் கேள்விப்பட்டிருக்கிறன்.
//சினேகிதி said...
எங்கட காலத்தில லான்ட்மாஸ்டர் ட்றக்ரர் தான்.//
வணக்கம் சினேகிதி
நீங்கள் லேற்றா வந்தாலும் லேற்றஸ்ற் ஆகத் தான் வந்திருக்கிறியள் ;-)
உங்கள் அனுபவங்களைச் சேர்ததும் நன்று. உண்மைதான் மாடு வண்டி என்பது 90 களில் அதிகம் புழங்காமல் போய்விட்ட ஒன்று.
எங்கள் வீட்டிலிருந்த ஆடுகளுக்கு என் அப்பா தனிபிரியம் காட்டுவார். பேசாமல் ஆடாகவே பிறந்திருக்கலாம் :-)))
//வசந்தன்(Vasanthan) said...
வண்டில் சவாரி எண்டால் எனக்கு அது போட்டியைத்தான் குறிக்கும்.//
வணக்கம் வசந்தன்
சவாரி என்பது போட்டியைக் குறிக்கும் பொதுவழக்காக இருந்தாலும், எங்கள் ஊரில் சைக்கிளில் ஊர் சுற்றி விட்டு வீடு வரும் போது " எங்க சவாரி போட்டு வந்தனீ?" எண்டு வீட்டுக்காரர் கேட்பினம். தமிழ் நாட்டிலும் "ஆட்டோ சவாரி வருமா?" என்பதும் பந்தயத்தைக் குறிப்பதல்ல.
அத்தோடு மாட்டுவண்டிப் பயணங்கள் எனக்கு நல்ல சவாரிகளாக இருந்திருக்கின்றன.
ஆனைக்கோட்டைப் பக்கம் அதிகம் வந்ததில்லை, எனவே பொம்பர் சோடியை நான் அறிந்திருக்கவில்லை. வெற்றி எந்த ஊர் என்று சொல்லவேயில்லையே?
வழக்கம்போல நிறைவானதொரு பதிவு, அதே நேரம் அருமையான ரெண்டு பாட்டு...
கலக்கல்ஸ் ஆப் ஈழம் !!!!!!
வணக்கம் ரவி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்
//வெற்றி எந்த ஊர் என்று சொல்லவேயில்லையே?//
பிரபா!
வெற்றி, நுனசை முருகன் கோயில் படம் போட்டுக் காட்டின பிறகும், எந்த ஊரெண்டு கண்டுபிடிக்கேல்லையென்டா..? :))
ஓ நான் அந்தப் பதிவைக் கவனிக்கவில்லைப் போலும், வயசு போட்டுதெல்லோ ;-)
Post a Comment