skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Tuesday, December 26, 2006

வரதரின் படைப்புலகம்

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன்.

முழுப்பெயர்: தியாகர் சண்முகம் வரதராசன்
பிறந்த திகதி: 1924-07-01
தொழில்: அச்சக முகாமையாளர், நூல் வெளியீட்டாளர்
புனை பெயர்கள்: வரதர், வரன்

முதலில் அச்சில் வெளிவந்த கட்டுரை: 1939, ஈழகேசரி - மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்

முதலில் அச்சில் வந்த சிறுகதை: கல்யாணியின் காதல், ஈழகேசரி ஆண்டு மலர் 1940


படைத்த சிறுகதைகள்:

ஈழகேசரி
1. கல்யாணியின் காதல் (1940)
2. விரும்பிய விதமே (1941)
3. கல்யாணமும் கலாதியும் (1941)
4. குதிரைக்கொம்பன் (1941)
5. தந்தையின் உள்ளம் (1941)
6. ஆறாந்தேதி முகூர்த்தம் (1941)
7. கிழட்டு நினைவுகள் (1941)
8. விபசாரி (1943)

மறுமலர்ச்சி
9. இன்பத்திற்கு ஓர் எல்லை (1946)
10. வென்றுவிட்டாயடி ரத்னா (1946)
11. ஜோடி (1947)
12. அவள் தியாகம் (1948)
13. வேள்விப் பலி (1948)

சுதந்திரன்
14. மாதுளம்பழம்

ஆனந்தன்
15. கயமை மயக்கம்
16. உள்ளுறவு
17. வாத்தியார் அழுதார்

தினகரன்
18. பிள்ளையார் கொடுத்தார்
19. வீரம்
20. ஒரு கணம்

வரதர் புத்தாண்டு மலர்
21. உள்ளும் புறமும்

கலைச்செல்வி
22. புதுயுகப் பெண்

தமிழ் எழுத்தாளர் சங்கக் கதையரங்கு
23. வெறி

மத்திய தீபம்
24. கற்பு

புதினம்
25. இன்று நீ வாழ்ந்திருந்தால்.....
26. ஓ இந்தக் காதல்!

மல்லிகை
27. பொய்மையும் வாய்மையிடத்து
28. தமிழ்மொழி தேய்கிறதா
29. உடம்போடு உயிரிடை நட்பு
29. தென்றலும் புயலும் (1976)

படைத்த குறுநாவல்கள்
1. வென்றுவிட்டாயடி இரத்தினா
2. உணர்ச்சி ஓட்டம்
3. தையலம்மா (மறுமலர்ச்சி)

படைத்த கவிதைகள்
1. ஒர் இரவிலே (ஈழகேசரி)
2. அம்மன் மகள் (மறுமலர்ச்சி)
3. யாழ்ப்பாணத்தார் கண்ணீர் - குறுங்காவியம் (வீரகேசரி)

நூல்களாக வெளிவந்த ஆக்கங்கள்
1. நாவலர்
2. வாழ்க நீ சங்கிலி மன்ன!
3. கயமை மயக்கம் - (மறுபதிப்பு "வரதர் கதைகள்")
4. மலரும் நினைவுகள் (வரலாற்றுத் தரிசனம்)
5. பாரதக்கதை
6. சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புக்கள்

நடத்திய சஞ்சிகைகள்
1. மறுமலர்ச்சி (1946)
2. வரதர் புத்தாண்டு மலர் (1949)
3. ஆனந்தன் (1952)
4. தேன்மொழி (1955)
5. வெள்ளி (1957)
6. புதினம் (1961)
7. அறிவுக்களஞ்சியம் (1992)

வெளியிட்ட நூல்கள்:
1. இலக்கிய வழி (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை)
2. வள்ளி (மஹாகவி)
3. கயமை மயக்கம் (வரதர்)
4. தெய்வப் பாவை (சொக்கன்)
5. மூன்றாவது கண் (கனக செந்தில்நாதன்)
6. பிரபந்தப்பூங்கா (கனக செந்தில்நாதன்)
7. இசை இலக்கணம் ( சங்கீத பூஷணம், சந்திரசேகரம்)
8. தமிழ் மரபு ( வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
9. சிலம்பின் சிறப்பு (வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
10. இலக்கியமும் திறனாய்வும் ( பேராசிரியர் கைலாசபதி)
11. கோபுர வாசல் (முருகையன்)
12. 24 மணிநேரம் (நீலவண்ணன்)
13. 12 மணிநேரம் (நீலவண்ணன்)
14. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (நீலவண்ணன்)
15. யானை (செங்கை ஆழியான்)
16 மழையில் நனைந்து (செங்கை ஆழியான்)
17. விடிவெள்ளி பூத்தது (சோமகாந்தன்)
18. ஒட்டுமா (சாந்தன்)
19. சிலம்பொலி (நாவற்குழியூர் நடராசன்)
20. அமிர்தலிங்கம் (சாமிஜி)
21. "நாம் தமிழராகிடுவோம்" (வி.பொன்னம்பலம்)
22. திருக்குறள் பொழிப்புரை (தி,ச,வரதராசன்)
23. ஆங்கிலத் தமிழகராதி ( கொக்கூர் கிழார்)
24. வரதரின் பலகுறிப்பு
25. திருக்குறள் - 100
26. பாதை மாறியபோது - (கலாநிதி,காரை,செ.சுந்தரம்பிள்ளை)
27. அவன் பெரியவன் (நாகராசன்)
28. சுதந்திரமாய்ப் பாடுவேன் (திருச்செந்தூரன்)
29. இராமன் கதை ( சம்பந்தன்)
30. போக்கிரி முயலாரின் சகாசங்கள் (சொக்கன்)
31. வேப்பமரத்தடிப் பேய் (சி.சிவதாசன்)
32. திருமலைக் கொடுமைகள் (கா.யோகநாதன்)
33. ஈழத்துச் சிறுகதை வரலாறு ( கலாநிதி.க.குணராசா)

இன்னுஞ்சில....


இப்பதிவில் வரதரின் "கற்பு" மற்றும், "வாத்தியார் எழுதார்" ஆகிய இரண்டு சிறுகதைகளைத் தருகின்றேன். இச்சிறுகதைகளைத் தட்டச்சி வலையேற்ற உதவியவர் நண்பர் கோபி (ஈழத்து நூலகம் மூலப்பதிவு)

கற்பு - வரதர்

(வரதர் எழுதிய கற்பு பரவலான கவனம் பெற்ற சிறுகதைகளில் ஒன்று.
அச்சிறுகதையும் அதுபற்றிய கா. சிவத்தம்பி, க. குணராசா ஆகியோரது குறிப்புக்களும்.)


மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

"மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?" என்று கேட்டார் ஐயர்.

"ஓமோம், ஆரம்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படிக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விஷேசம்?"

"கலைச்செல்வி' பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை..."

"யார் எழுதியது?"

"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக்கெண்டேயிருக்கிறது."

"சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?"

"மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல்வீடு'ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கின்றான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடையத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?"

"என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்."

"நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் 'கருத்தை'ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்."

"எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?"

"ஓமோம், அதையேதான்."

"ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அத்ல்தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?"

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, "நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷ நேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

"மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு 'கற்பு' பிரச்சினையைப்பற்றிப் பேசுவோம்.

* * *

போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். "நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். ந்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். "ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா" என்று சொல்லி விட்டு பேபி நோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. 'ஐயா, ஐயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்...

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன சில்வா, இந்தப் பக்கம்?" என்று சிரிக்க முயன்றேன்.

"சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்" என்றான்.

"முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

"அதுசரி அயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?"

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே."

'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறியது. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

"தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!"

மற்றவன் கேட்டான்: "சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"என்னடா பேசாமல் நிற்கிறாய்?"

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை! ........

நான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்ல மாட்டாய்? ... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி!..... வாடா!" என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

"நில்லுங்கள்! நில்லுங்கள்!" என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

"அவரை விட்டு விடுங்கள்!" என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு......

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நாதான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கி விட்டேனோ!

மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருபதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடியில் வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி......

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருத்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; ...... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யோரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம் -

என் மனத்தில் எழுந்த ருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டமெல்லாம் மட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்.......

* * *

"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா? ..... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா? ..... சொல்ல்ங்கள் மாஸ்டர்!..."

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்..... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதையை இன்றைக்குக் கண்டு பிடித்துவிட்டேன்" என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றியது மூர்த்தி மாஸ்டருக்கு.

("கற்பு" முதலில் மத்தியதீபம் இதழில் வெளியானது. வரதரின் கயமை மயக்கம் (1960) இல் இடம்பெற்றுள்ளது. செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள் (1973) நூலில் வரதர் பற்றிய குறிப்போடு வெளிவந்தது.)


கா. சிவத்தம்பி - மலரும் நினைவுகள் (1996) நூல் முன்னுரையில்,

இவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம்பெறும் "கற்பு" எனும் சிறுகதை. 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக் கொள்ளும் கோயிற் பூசகரின் மனத்திண்மை பேசப்படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் முதல் சமூகவியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.


செங்கை ஆழியான் க. குணராசா - ஈழத்துச் சிறுகதை வரலாறு (2001) நூலில்,

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கற்பு, வீரம் என்றிரு சிறுகதைகளை வரதர் எழுதியுள்ளார். கற்பு வரதருக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எனலாம். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணுடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுவதில்லை என்ற கருத்தினைக் கூறக் கற்பு உருவாகியது.

புரட்சிகரமான சமூகக் கருத்தொன்றினைப் பேசுகின்ற கற்புச் சிறுகதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்த சிறுகதையாகப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சமூகத்தில் தற்கொலை செய்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். இச்சமூகம் அதை விரும்புவது போலப்படுகின்றது. கணபதி ஐயரின் வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் அவரைக் கட்டிவைத்து விட்டு அவர் மனைவியைப் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். நன்கு பழகிய சில்வாவே முன்னின்று இந்த ஈனச் செயலைச் செய்கிறான்.

'செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? ம்னம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால்.....' பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதை மனைவியை எதுவித மனக்காயமுமின்றி கணபதி ஐயர் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் கற்பு சிறுகதை. இச்சிறுகதை கூறுகின்ற சமூகச்செய்தி இன்று மட்டுமல்ல, என்னும் நமது யுத்தச் சூழலில் வாழ்கின்ற சமூகத்திற்கு தேவையென்பேன். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையில் சந்தர்ப்பச் சதியால் அகல்யை இந்திரனால் மானமிழக்கிறாள். 'சதர்ப்பம் செய்த சதிக்கு பேதை நீ என்ன செய்வாய்?' என்கிறார் கௌதமர். அது அவள் கல்லாகிச் சாபவிமோசனமடைந்ததன் பிறகு. ஆனா, கற்பில் கணபதி ஐயர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவளைக் கடியவில்லை. சாபமிடவில்லை. வாழ்க்கையில் எதுவுமே சகசமாக்கிக் கொள்கிறார். கௌதமரிலும் பார்க்க வரதரின் கணபதி ஐயர் ஒருபடி உயர்வான பாத்திரம்.


வாத்தியார் அழுதார் - வரதர்


பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய 'ஆட்டுப்புழுக்கைப்' பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் 'வண்டி' வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த 'தாமோரி'யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய 'ஆர்ட்டிஸ்ற் றோய்ங்' கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? "போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்" என்றான்.

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, "வாத்தியார்!" என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து "என்னது?" என்றார்.

"வாத்தியார், இங்கே சுந்தரம்....... எச்சிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!"

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

"இங்கே வா சுந்தரம்!" என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

"நீ எச்சில் தொட்டு அழித்தாயா?"

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, "நான் பார்த்தேன் வாத்தியார்!" என்றான்.

"நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?" என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. "இங்கே வா, சுந்தரம்" என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். "நீ எச்சில் போட்டாயா?" என்றார்.

"என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!" என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.

"றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது..." என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; "கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?"

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. "ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!" என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து "அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா?" என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, "வாத்தியார்.... அது... அது... கொஞ்சப் பாண்!" என்றான்.

"ஏன், நீ சாப்பிடவில்லையா?.... பசிக்கவில்லையா?"

"கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்...."

'நீ போ சுந்தரம்' என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. 'அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது!' சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்! ..... உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!

(இச்சிறுகதை முதலில் ஆனந்தன் இதழில் பிரசுரமானது. வரதரின் கயமை மயக்கம் (1960) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.)
Posted by கானா பிரபா at 9:26 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

25 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் பிரபா... வரதர் அவர்களை பற்றிய சகல விபரங்களை அடங்கிய இந்த பதிவிற்க்கு நன்றிகள்

December 26, 2006 11:19 PM
-/பெயரிலி. said...

பட்டியல் உள்ளிட்ட இக்கட்டுரை மிகவும் பயனான ஆவணப்படுத்துதல். நன்றி

December 26, 2006 11:24 PM
Anonymous said...

பிரபா, வரதரின் முழுமையான விபரங்களை தந்தமைக்கு நன்றிகள். கதைகள் இரண்டும் கண்ணீரை வரவழைத்து விட்டன.

December 26, 2006 11:45 PM
கானா பிரபா said...

//சின்னக்குட்டி said...
வணக்கம் பிரபா... வரதர் அவர்களை பற்றிய சகல விபரங்களை அடங்கிய இந்த பதிவிற்க்கு நன்றிகள்//


வணக்கம் சின்னக்குட்டியர்

யாழ்ப்பாணத்தார் கண்ணீர் என்ற வரதரின் குறுங்காவியத்தை விரைவில் முழுமையாகத் தருகின்றேன்

December 26, 2006 11:47 PM
Anonymous said...

பிரபா!
வரதர், விபரம் பதிப்பில் சாதனைதான் ;அத்துடன் அருமையான இரு கதைகள்!!
பதிவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

December 27, 2006 12:01 AM
விருபா - Viruba said...

கானா பிரபா,

வெளிநாடொன்றில் இருந்து கொண்டு எல்லாத் தகவல்களையும் எடுத்து, சீரான முறையில் ஆவணப்படுத்தும் உங்கள் பெரு முயற்சியை பாராட்டுகிறோம்.

December 27, 2006 12:06 AM
கானா பிரபா said...

//-/பெயரிலி. said...
பட்டியல் உள்ளிட்ட இக்கட்டுரை மிகவும் பயனான ஆவணப்படுத்துதல். நன்றி //


தன் இறுதி மூச்சு வரை இலக்கியமே கதி என்று வாழ்ந்தவருக்கு செய்த சிறு நன்றிக்கடன் இது

December 27, 2006 12:28 AM
கானா பிரபா said...

//Kanags said...
பிரபா, வரதரின் முழுமையான விபரங்களை தந்தமைக்கு நன்றிகள். கதைகள் இரண்டும் கண்ணீரை வரவழைத்து விட்டன.//

வணக்கம் சிறீ அண்ணா

வரதரின் சிறுகதைகள் உண்மையில் அற்புதம் தான். எளிமை அவற்ரின் சிறப்பு. இரண்டு நாட்களாகத் தகுந்த ஓவியத்தை அச்சிறுகதைகளுக்குப் பயன்படுத்தத் தேடினேன் முடியவில்லை.

December 27, 2006 12:30 AM
Kanags said...

இன்றைய தினக்குரலில் வந்திருந்த செய்தியொன்று உங்கள் பார்வைக்கு:

ஈழத்து எழுத்துலக முன்னோடியான `வரதர்' எண்பது வயதைத் தாண்டியபோதும் இளைஞராகவே வாழ்ந்தவர். இவ்வயதிலும் சளைக்காது பணியாற்றியிருந்தமையை எண்ணும்போது நமக்கெல்லாம் பெருமைதான். நேற்று அவரை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கம்பீரமாக நடந்து சென்றதைக் கண்டவர்கள் `சிக்குன் குனியா' கொடுமை நல்ல மனிதர்களை காவு கொள்ள வேண்டுமா என வேதனைப்படுவதுண்டு.

December 27, 2006 1:24 AM
tamil said...

வரதர் என்ற தி.ச.வரதராசனையும், அவர் தந்த படைப்புக்கள் பற்றி அறியத்தந்தமைக்கும் நன்றிகள்.
அவரது ஆக்கங்களை மேலும் வாசிக்க ஆவல்.

December 27, 2006 2:12 AM
ஃபஹீமாஜஹான் said...

நல்லதொரு ஆவணப் பதிவு பிரபா.
வரதர் மீது நீங்கள் வைத்திருந்த பெருமதிப்பையும் இதன்மூலம் உணரமுடிகிறது.
நன்றியும் பாராட்டுக்களும்

December 27, 2006 3:16 AM
கானா பிரபா said...

//johan -paris said...
பிரபா!
வரதர், விபரம் பதிப்பில் சாதனைதான் ;அத்துடன் அருமையான இரு கதைகள்!!//


வரதரின் எழுத்துலகச் சாதனை பற்றியும் , அவரது எழுத்து வன்மை பற்றியும் அறியாதவர்களுக்கும் ஒரு அறிமுகத்தைக் கொடுக்க இது உதவும் என்று நினைக்கிறேன் அண்ணா.

December 27, 2006 8:06 AM
கானா பிரபா said...

// Kanags said...
இன்றைய தினக்குரலில் வந்திருந்த செய்தியொன்று உங்கள் பார்வைக்கு://


வரதர் இறந்த போது இயற்கை மரணம் என்று தான் இரு நாட்களாக நினைத்திருந்தேன், சிக்கன் குன்யாவின் அகோரப்பிடி என்று தெரிந்தபோது இன்னும் கவலையாக இருக்கின்றது. உண்மைதான் அவர் என் முதற்பதிவிற் சொன்னது போல 82 வயதில் எனக்கொரு ஆச்சரியமான இளைஞராக இருந்தார்.

December 27, 2006 8:09 AM
மலைநாடான் said...

பிரபா!

வரதருக் நல்லதொரு நினைவாஞ்சலி.
உங்கள் எண்ணத்துக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி!

December 27, 2006 8:10 AM
கானா பிரபா said...

விருபா, ஷண்முகி,பஹீமா ஜகான், மலைநாடான்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்

December 27, 2006 9:04 PM
பகீ said...

நல்ல தகவல்கள் நன்றி கானா பிரபா.

ஊரோடி பகீ

December 27, 2006 9:54 PM
Anonymous said...

1956 இனக் கலவரத்தை ஒட்டிய "கற்பு" என்ற கதை அருமை. 1983,84,87ம் ஆண்டுகளில் அரசாங்க கூலிப் பட்டாளத்தினாலுனம், IPKF னாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருகிறார்கள்.கட்டிய மனைவி தன் கண்முன்னே வன்முறைக்குள்ளாவதை கணவன் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தான்; பெற்ற பிள்ளை வன்முறைக்குள்ளாவதைக் கண்டு குமுறினார்கள். சனக் கூட்டத்தின் முன்னே அவமான்ப் படுத்தப் பட்ட எத்தனை! இப்படிப்பட்ட கசப்பான நினைவுகளைக் கொண்டு வந்த்து இந்தக் கதை

December 27, 2006 11:19 PM
வசந்தன்(Vasanthan) said...

மிக முக்கியமான ஆவணப்பதிவு.
நன்றி.
'கற்பு' ஏற்கனவே வாசித்தது. வன்னியில் ஈழநாதத்தில் (அல்லது வெளிச்சத்ததில்) மீள் பிரசுரிக்கப்பட்டது.

December 28, 2006 10:27 AM
கானா பிரபா said...

// பகீ said...
நல்ல தகவல்கள் நன்றி கானா பிரபா.//

வரதர் பற்றி விடுபட்ட தகவல்களேதும் இருப்பின் உங்களிடமிருந்து பதிவு மூலம் அறிய ஆவல்

December 28, 2006 11:39 AM
theevu said...

வரதர் எழுபதுகளில் சுந்தரி என்று இரு வாரத்திற்கு ஒருமுறை வரும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டதாக ஞாபகம்.கிட்டத்தட்ட கல்கண்டு சைஸில் இருக்கும்.
ஒரு 4 அல்லது 5 சஞ்சிகைதான் வெளிவந்திருக்கவேண்டும்.பின்னர் இந்திய சஞ்சிகைகளின் போட்டி காரணமாக அதுவும் நின்றுவிட்டது.

ஒரு இலக்கியவாதியின் தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ளீர்கள் .

சிக்குன் குனியாவில் அந்த இளைஞர் (முடி கூட கொட்டவில்லை என்பது பொறாமை கலந்த வியப்பு) இறந்தது
மிக சோகமே..

பதிவிற்கு நன்றி

December 29, 2006 12:35 AM
Anonymous said...

//வரதர் எழுபதுகளில் சுந்தரி என்று இரு வாரத்திற்கு ஒருமுறை வரும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டதாக ஞாபகம்//

70களின் ஆரம்பத்தில் கல்கண்டு மாதிரியில் வெளிவந்த சுந்தரி கொழும்பிலிருந்து எம். டி. குணசேனவின் தினபதி பத்திரிகைக்காரர்களினால் வெளியிடப்பட்டது. இந்த சுந்தரிக்கும் வரதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.

December 29, 2006 9:44 AM
கானா பிரபா said...

வணக்கம் தீவு

சிறீ அண்ணர் குறிப்பிட்டது போன்று சுந்தரி இதழ் வரதரின் வெளியீடாக வர வாய்ப்பில்லை, காரணம் அவரின் முழுமையான சஞ்சிகை முயற்சிகளில் அதன் பெயர் இல்லை

December 29, 2006 11:22 AM
மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

December 29, 2006 2:24 PM
கானா பிரபா said...

வணக்கம் அன்பிற்குரிய கார்த்திக்

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். வலையுலகில் பல சுவையான பதிவுகள் மூலம் என்போன்றவர்களுக்கு வாசிப்புத் தீனி போட்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசி கிடைக்கப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

December 29, 2006 2:30 PM
Mohan Madwachar said...

என் வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி பிரபா.

December 30, 2006 12:45 AM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ▼  2006 (35)
    • ▼  December 2006 (3)
      • வரதரின் படைப்புலகம்
      • வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது
      • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes