Monday, December 04, 2006
வலைப்பதிவில் ஒரு வருஷம்
தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது.
இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நான் படைக்கும் "கருத்துக்களம்" நிகழ்ச்சியில் அவ்வப்போது பயனுள்ள தமிழ் தளங்களைப் பற்றிய அறிமுகங்களை அவ்வப்போது வழங்கியபோது கண்ணிற்பட்டது தமிழ்மணம் என்ற வலைப்பதிவுகளின் திரட்டி.
ஆரம்பத்தில் தமிழ் மணம் என்பது ஒரு நண்பர் குழுமத்தின் படைப்பு என்ற வகையிலேயே என் நினைப்பிருந்தது. புளொக்கரில் என் கணக்கை ஆரம்பித்து முதற் இடுகை போட்டதும் கனக்ஸ் (சிறீ அண்ணா) " பிரபா நீங்கள் இன்னும் தமிழ்மணத்தில் சேரவில்லையா" என்று கேட்டபோது தான் தமிழ்மணத்தின் பயன்பாட்டைக் கொஞ்சம் அறிந்துகொண்டேன்.
மதி கந்தசாமி என்ற ஒருவர், என் இரண்டாவது இடுகையை வாசித்து ''மதி கந்தசாமி (Mathy) said...
படிச்சு முடிக்கேக்க சரியான கஷ்டமா இருந்தது...//
என்று பின்னூட்டியதும், பின்னர் என் இரண்டு இடுகையோடே தமிழ்மணத்தில் சேர முயன்று,
மீண்டும் மதி கந்தசாமியின் மடல் " நீங்கள் தமிழ்மணத்தில் சேரக் குறைந்தது மூன்று இடுகைகளாவது இடவேண்டும்" என்று வந்தது.
"இதென்னடா யாரோ மதி கந்தசாமி என்ற மனுஷன் ( ஒரு அம்பது வயசு யாழ்ப்பாணத்துக் கனடாவாசி என்ற நினைப்பில்) இப்படிப் படுத்துறாரே" என்று மனசுக்குள் நினைத்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மூன்றாவது இடுகையும் போட்டுத் தமிழ்மணத்தில் நுழைந்துகொண்டேன்.
ஆரம்பத்தில் என் வலைப்பதிவுலகில் ஆனா.. எழுத ஆரம்பித்த நாளில் பேருதவி புரிந்த சிறீ அண்ணாவையும்(கனக்ஸ்), மதியையும் நன்றியோடு நினைப்பில் வைத்திருக்கின்றேன். புதிய வலைப்பதிவரைத் தட்டிக்கொடுத்து எழுதத் தூண்டும் பண்பை மதியிடமிருந்து தான் கற்றேன் என்பதையும் இங்கே சொல்லவேண்டும். (கனடாவில வின்ரறாம்)
1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் பல்கலைக்கழகத்தின் கணினியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளத்தில் "ஈழம் செய்திகள்" (தமிழில் ரைப் செய்து ஸ்கான் செய்யப்படிருந்தது) வலையில் வந்த நாளில் அதைப் பிரதியெடுத்து இணையத்தில் என் தாய்மொழி வந்திருக்கின்றதே இன்ப அதிர்ச்சியோடு எனக்கு நானே புழகாங்கிதப்பட்டதும், பின் தமிழ்பதிவுகளே என் வாழ்க்கையின் அங்கமாகியதும் "நம்தமிழ்.கொம்" என்ற இணையத்தைக் கொஞ்சக்காலம் நடத்தியதும் கழிந்த நிகழ்வுகள்.
சொந்த நாட்டிலிருந்து திசைமாறிய பறவைகளாகத் திக்கொன்றாய்ப் போன உறவுகளாக நாம் இப்போது.....
பல ஆண்டுகள் புலம்பெயர்வாழ்வில் இருந்த தாய்நாடு மீதான ஏக்கம் என் பதிவுகளுக்கு வடிகாலாய் மாறி என் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டியது. அதேவேளை ஒத்த சிந்தனையுள்ள பல நண்பர்களைக் கடந்த ஒருவருஷத்தில் தமிழ்மணத்தின் உறவுப்பாலம் தேடித்தந்துவிட்டது.
ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?
எல்லா நண்பர்களின் உற்சாகப்படுத்தலுக்கும், பின்னூட்டல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
இன்னும்….தனிப்பட்ட முறையில் பல நல்ல உள்ளங்களை நண்பர்களாகச் சம்பாதித்ததும் 13 வருஷங்களுக்கு மேல் தொலைத்துவிட்ட நண்பன் இங்கிலாந்திலிருந்து என்னை மீண்டும் இனம் கண்டுகொண்டதும் கூட இந்தப் பதிவுலகாலும் தமிழ்மணத்தாலும் நான் சம்பாதித்தவை.
பெங்களூரில் ராகவனுடன் ஏப்ரல் 06 இலும், செந்தழல் ரவியுடன் மே 06 இலும், நெல்லைக்கிறுக்கனுடன் ஆகஸ்ட் 06 இலும்(கூடவே மழை ஷ்ரேயா, கஸ்தூரிப்பெண், கார்திக் வேலு), துளசிம்மாவுடன் செப்டம்பர் 06 இலுமாக (கூடவே மழை ஷ்ரேயா, பொட் டீ கடை, கஸ்தூரிப்பெண், சிறீ அண்ணா) வலைப்பதிவாளர் சந்திப்புக்களும் அமைந்துவிட்டது.
எனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றிப் பேசவும் மட்டுமல்ல, எழுதவும் இயன்றவரை விரும்புபவதில்லை. அதனால் தான் என் பதிவுப் பங்களிப்பும் மிகக்குறைவு. ஆனால் பிடித்த விஷயத்தைப் பற்றி நேரக்கணக்கில் பேச, எழுதப் பிடிக்கும். அதனால் தான் என் பதிவில் நீட்சி அதிகம். பதிவு எவ்வளவு சிறப்பாக வரவேண்டும் என்று ஆசைபடும் அதே கணம் பதிவின் தலைப்பிலும் பொருத்தமான படத் தேர்விலும் இருக்கவேண்டும் என்பதிலும் அதி கூடிய முனைப்பிருக்கிறது.
கடந்த மே மாதத்திலிருந்து உலாத்தல் என்ற என் சக பதிவுத்தளமும் வந்துவிட்டது. வாரியார் தளத்தின் பதிவரில் ஒருவராக வலைப்பதிவு நண்பர் கோபி இணைத்துள்ளார்.
தனியான ஒலித்தளம் நடத்தவேண்டும் என்பதும் (கூல்டவுண் சின்னக்குட்டி:-))) புளெக்கரை நம்பாமல் புதிய தளத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதும் என் அடுத்த சுற்றில் அமுற்படுத்த வேண்டும் என்ற முனைப்பான ஆசைகள்.
இந்த வருஷம் ஏபரல், 2006 ஊருக்குப் போனபோது நான் எடுத்த படங்களின் பின்னே சொல்லப்படாத சோகங்கள் பதிவுகளாக வேண்டும். இப்படி நிறையக் கனவிருக்கிறது. எம் சமுதாயம் கழிந்த நிகழ்வுகளோடும் கழியாத நினைவுகளோடும் தானே நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
என் பதின்ம வயதுகளில் மடத்துவாசல் பிள்ளையரடியில் தோழர்களோடு வாழ்ந்து தொலைத்த நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
கடந்த ஒரு வருஷத்தில் பிரத்தியோக அறிவித்தல்கள் தவிர்ந்த என் இடுகைகள் இதோ:
தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு
2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.
தேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.
அதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.
" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.
பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்
முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.
எங்க ஊரு காவல்காரங்கள்
இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.
வெடி கொளுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்
பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார். பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்
ஃபீனிக்ஸ் தேசத்தில் நான்
" அப்பா! ஜப்பான்காரன்கள் ஓய்வொழிச்சல் இல்லாம நல்லா வேலை செய்வான்கள்"
இது நான்.
" ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்"
இது என்ர அப்பா.
சுக்குபக்கு சுக்குபக்கு கூ......!
ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது.
" சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி கடுகதி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ"
வீடும்.... வீடுகளும் !
எங்கட நாட்டில உப்பிடி வாயையும் வயித்தையும் கட்டிக் கட்டின எத்தின வீடுகள் இண்டைக்கு காடுகளாகக் கிடக்குது. ஆமி ஊரைப் பிடிக்கேக்க ஓடு ஒளிவதும் பிறகு வீடு பாக்க வரும் போது ஆமியின்ற சூடு பட்டு சாகிறது, மிதிவெடியில அகப்பட்டுக் கால் போறது எண்டு எத்தினை அவலம்.
வீடு ஒரு சடப்பொருள் எண்டாலும் எங்கட ஆக்களுக்கு அதில் இருக்கிற ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் தான், இப்பிடி எங்கோ இடம்பெயர்ந்து இருந்தாலும் தன் வீட்டைத் தேடி ஓடிப் போகச் செய்கிறது.
சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்
என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது.
கடலினக்கரை போனோரே.....
" கடலினக்கரை போனோரே" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய " கடலலையே கொஞ்சம் நில்லு" பாடலையும் சாந்தன் பாடிய "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.
யாழ்ப்பாணத்து வருசப்பிறபபு
வருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.
புதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.
சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
"நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.
பாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,
கண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.
நான் உங்கள் ரசிகன்
என் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே!
தங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான், உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்
நான் உங்கள் ரசிகன்.
எங்களூர் வாசிகசாலைகள்
இந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்களனாக இருந்திருக்கின்றன . ஒவ்வொரு காலகட்டத்திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும். யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிகசாலைகள் . ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்.
கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு
(எழுத்து: சோழியான்)
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
இரை தேடும் இயந்திரக் கழுகுகள்
"ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.
ஆகாச வாணியும் விவித் பாரதியும்....!
நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சித் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை.
ஈழம் வந்த வாரியார்
80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது.
அந்த நவராத்திரி நாட்கள்
விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்).
ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை
ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். " அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ" என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.
"எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது" ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.
ஏ.ஜே.கனகரத்னா நினைவுப்பகிர்வு
ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.
வடக்கும் நாதன்
“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது.
என் இனிய மாம்பழமே....!
உயரே மாமரக் கொப்புக்களூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடும் வெம்பல் மாங்காய்களாய் எம் சமூகம்.
தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் என் பதிவுகள்
வாழைமரக்காலம்
நன்றாக உழுது பண்படுத்தி பாத்தி கட்டி, வாழை மரங்கள் லைனுக்கு நிக்கினம். என்ர கண்கள் தோட்டத்தை வெறித்தவாறே நிலைகுத்தி நிற்கின்றன.இந்த வாழைக்குட்டிகளுக்கு உரமாகிப் போனவை தேவராசா அண்ணை,அவர் மனைவி, மூண்டு பிள்ளையள்.கொஞ்ச நாள் அமைதி, பிறகு சண்டை, ஹெலியும், பொம்மரும் குண்டு போடும், தேவராசா அண்ணை குடும்பம் போலை சில குடும்பங்கள் அழியும், தென்னிலங்கைப் பேப்பர்களில இவர்கள் பயங்கரவாதிகள் போலவும் , பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது போலவும் செய்திவரும்.
திரையில் புகுந்த கதைகள்
"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ரச தந்திரம் – திரைப்பார்வை
படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.
வாடைக்காற்று
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு.
மறக்கமுடியாத மலரக்கா
வீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.அன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்..
பிஞ்சுமனம் – குறும்படப்பார்வை
சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள்.
தேரடியில் தேசிகனைக் கண்டேன்!
செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து". இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.
அடைக்கலம்
யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது.
காழ்ச்சா - அன்பின் விளிம்பில்
பவன் என்ற அநாதைக்கு வாழ்வளிக்க ஒரு குடும்பம் தயாராக இருந்தும், அரசின் இந்தச்சிவப்பு நாடாமுறை (Red tapism) இந்த அன்புப் பாலத்திற்குக் கத்தரி போடுகின்றது. மம்முட்டி மறுவாழ்வு முகாமில் வைத்து பவனுக்கு பிற்ஸ் வரும் என்று கரிசனையோடு சொல்லிவிட்டு, தன் விலாசத்தைக் கொடுத்து " பவனின் உறவுகள் கிடைக்காத பட்சத்தில் அவனை அனுப்புங்கள்" என்று இரந்து கேட்டுவிட்டு நம்பிக்கையோடு நகர்வதும்,பவன் கைகாட்டி வழியனுப்புவதும், சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்தப் புனர்வாழ்வு முகாம் அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.
100 comments:
ஒவ்வொன்றும் செறிவான பகிர்வு. தவற விட்டதை நினைவூட்டும் விதமாக இட்டதற்கு நன்றிகள்.
& வாழ்த்துகள் : )
//
உயரே மாமரக் கொப்புக்களூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடும் வெம்பல் மாங்காய்களாய் எம் சமூகம்.
///
கண்ணீரை வரைவழைக்கும் வரிகள்..உங்கள் பதிவுகளில் நான் தவறவிட்டதை எல்லாம் படிக்குமுகத்தான் இந்த பதிவு அமைந்திருக்கு...
வணக்கம் பாஸ்டன் பாலா
வலையுலகில் நீண்ட பயணத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் கருத்து எனக்கு உற்சாகமளிக்கின்றது, நன்றிகள்.
கானா பிரபா,
இன்னும் பதிவைப் படிக்கேல்லை. தலைப்பைப் பார்த்துவிட்டு வாழ்த்துச் சொல்லுறேன். ஓராண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள். ஈழத்துப் பதிவாளர்களில் மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பதிவர் நீங்கள். தொடர்ந்தும் இன்னும் பல ஆண்டுகள் எழுதி எம்மை மகிழ்விக்க உங்களின் குல தெய்வம் எல்லாம் வல்ல கொக்குவில் மடத்துவாசல் பிள்ளையார் அருள்புரிவாராக.
நன்றி.
அன்புடன்
வெற்றி
அருமையான தொகுப்பு..விடுபட்டவற்றை படிக்க ஆரம்பிக்கிறேன்.
வாழ்த்துகள் பிரபா! சந்தோசமாயிருக்கு. இன்னும் பற்பல பதிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன். கடைசி பந்தியில் சொன்னதைச் சீக்கிரம் செய்யுங்க. :)
ம்ம்.. நடத்துங்க. நடத்துங்க! அங்க கொஞ்சப்பேருக்கு அன்ரி/அக்கா/ஆத்தா - இங்க 50 வயசுக்காறன். நல்லா இருங்கடே! :P
பிரபா, நீர் இப்படி ஐஸ்மழையா வைக்கப்போறீர் எண்டு இங்க தெரிஞ்சிற்றுதுபோல. இண்டைக்குத்தான் முறையான பனிக்காலம் தொடங்கியிருக்கு. 5-6செ.மி. பனி. ப்ர்ர்ர்ர்ர்.....
:))
-மதி
இந்த வீடுகள் எத்தனையோ குடும்பங்களின் கதை சொல்லும், தன்னுடைய வாழ்விடமும், நிலபுலமும் இழந்து ஓடி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு குடும்பத்தின் கதை சொல்லும் ஒரு வீடு, ஷெல் விழுந்து தன்வீட்டுகுள்ளேயே சமாதியான இன்னொரு குடும்பத்தின் கதை சொல்லும் இன்னொரு வீடு. இப்படி எத்தனை...எத்தனை... கதைகள்..//
தினசரி அலுவல்களுக்கிடையில் நேரமின்மைக் காரணமாக பல பதிவாளர்களின் படைப்புகளைப் படிக்க முடியாமல் விட்டிருக்கிறேன்.. அதில் உங்களுடைய படைப்புகளும்..
ஆனால் இன்று உங்களுடைய ஒரு வருட நிறைவுப் பதிவின் மூலம் விடுபட்டவைகளில் சிலவற்றை படிக்க முடிந்தது.. அதில் சில வரிகள்.. மாதிரிக்கு மேலே.. என் உள்ளத்தை தொட்டன பிரபா..
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..
வணக்கம் ரவி
உங்கள் பதிவு கண்டு உண்மையில் மெய் சிலிர்த்துப் போனேன்.
உங்கள் முதல் இடையில் " என் சித்தியின் மகனல்லவா நீங்கள் என்றீர்கள்"
எனக்கு அது புரியவில்லை. "என் தாய் தமிழகத்தின் தங்கை ஈழத்தின் புதல்வரல்லவா நீங்கள்" என்று அன்று விளக்கம் சொல்லி என் நெஞ்சில் நிறைந்தீர்கள்.
உங்களின் அன்புக்கு என்றும் நன்றி உடையவன் நான்.
.உலாத்தல் எழுதும் உவரா இவர் என்று வெள்ளமென மகிழ்ச்சி...மாதவன் மாதிரி பளபளவென இருந்தார்..
அவுஸ்ரேலியாவில summer ஆம்
வாழ்த்துக்கள் பிரபா.
//இதென்னடா யாரோ மதி கந்தசாமி என்ற மனுஷன் ( ஒரு அம்பது வயசு யாழ்ப்பாணத்துக் கனடாவாசி என்ற நினைப்பில்)இப்படிப் படுத்துறாரே" //
:)))))))))))))
பிரபா, மதியைக் கலாய்க்க எனக்கும் ஒரு நண்பர் கிடைச்சாச்சு... :))
ஆரம்பத்தில் மதி எனக்கு மடல் அனுப்பியபோது "யாரிந்த கந்தசாமி?! கனடாவில் இருந்து கொண்டு அமெரிக்கா வந்த பெண்ணிற்கு உதவி ஏதும் வேண்டுமா என்று கேட்கிறாரே.. " என்று எனக்கும் இதே 'படுத்தறாரே' நினைப்பு தான் :)
ஆண்டுநிறைவுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளில் பலதும் படிக்கவில்லை.. நல்ல தொகுப்பாகக் கொடுத்திருக்கிறது ஒரு வசதி.. விட்டுப் போனவையெல்லாம் படித்து முடிக்கணும் :)
கானா இப்பிடியே மேல எழுதிப் போங்க போனா
வாசகர்க்கு என்ன குறைவரும் தானா!
மேலும் மேலும் எழுதங்கோ! வாழ்த்துக்கள்!
அது சரி தமிழகத்து ரவிக்கு நீங்க சித்தி மகனெண்டா ஈழத்து இந்த சுந்தரிக்கு சோதரன்தானே!
வளர்க சோதரா! நன்கு வாழ்க சோதரா!
சுந்தரி
ஒரு வருடம் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதிவை தொகுத்து அளித்ததற்கு நன்றிகள்.
உங்களுடைய நட்சத்திர வாரத்திற்கு பிறகு உங்களுடைய படைப்புகளை தொடந்து படிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போய் விட்டது. உங்களுடைய தொகுப்பு அதற்கு உதவும் அதற்கு நன்றி.
எண்ணிக்கையில் விட எழுத்தில் செறிவான இடுகைகள். அவற்றை மீண்டும் தொகுத்தது மிக நன்றாகப் போயிற்று, எங்களைப் போன்றவர்களுக்கு.
வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேற சுயநலத்துடன் வாழ்த்துக்கள்!!
//வெற்றி said...
தொடர்ந்தும் இன்னும் பல ஆண்டுகள் எழுதி எம்மை மகிழ்விக்க உங்களின் குல தெய்வம் எல்லாம் வல்ல கொக்குவில் மடத்துவாசல் பிள்ளையார் அருள்புரிவாராக.//
தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றிகள் வெற்றி, மடத்துவாசல் பிள்ளையாரடி இருப்பது இணுவிலில்.
//ஜோ / Joe said...
அருமையான தொகுப்பு..விடுபட்டவற்றை படிக்க ஆரம்பிக்கிறேன். //
வருகைக்கு நன்றிகள் ஜோ, முடிந்தால் வாசித்த பதிவுகளில் உங்கள் கருத்தைத் தாருங்கள்
//மதி கந்தசாமி (Mathy) said...
ம்ம்.. நடத்துங்க. நடத்துங்க! அங்க கொஞ்சப்பேருக்கு அன்ரி/அக்கா/ஆத்தா - இங்க 50 வயசுக்காறன். நல்லா இருங்கடே! :P
பிரபா, நீர் இப்படி ஐஸ்மழையா வைக்கப்போறீர் எண்டு இங்க தெரிஞ்சிற்றுதுபோல.//
மூத்த (?) வலைப்பதிவாளரை அடுத்த சந்ததி சீண்டிப்பார்க்குது கண்டுக்காதேங்கோ:-))
தங்கள் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு என் நன்றிகள்
//tbr.joseph said...
ஆனால் இன்று உங்களுடைய ஒரு வருட நிறைவுப் பதிவின் மூலம் விடுபட்டவைகளில் சிலவற்றை படிக்க முடிந்தது.. அதில் சில வரிகள்.. மாதிரிக்கு மேலே.. என் உள்ளத்தை தொட்டன பிரபா..
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்//
வணக்கம் ஜோசப் சார்
வயதாலும் அனுபவத்தாலும் நிரம்பப் பெற்ற உங்கள் வாழ்த்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
//கொழுவி said...
.உலாத்தல் எழுதும் உவரா இவர் என்று வெள்ளமென மகிழ்ச்சி...மாதவன் மாதிரி பளபளவென இருந்தார்..
அவுஸ்ரேலியாவில summer ஆம் //
இஞ்ச பாரும் கொழுவி,
சும்மா சும்மா என்னோட கொழுவினீர் எண்டால் வல்லவன் DVD
உமக்கு அனுப்பி வச்சுப்
பழி வாங்குவன் நான்:-))
வாழ்த்துக்களும் வணக்கங்களும்
கானா பிரபா..
எல்லாமே அருமையான பதிவுகள்தான்.
தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொடுத்திருக்கிறது உங்கள் தொகுப்பு.
வாழ்த்துக்கள் கானா.
மடத்துவாசலின் ஆண்டுமலர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் செறிவான பதிவுகளைத் தர சிட்னி முருகனை வேண்டுகிறேன்.
//இலவசக்கொத்தனார் said...
வாழ்த்துக்கள் பிரபா.//
மிக்க நன்றிகள் இலவசக்கொத்தனார்
//பொன்ஸ் said...
ஆண்டுநிறைவுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளில் பலதும் படிக்கவில்லை.. நல்ல தொகுப்பாகக் கொடுத்திருக்கிறது ஒரு வசதி.. விட்டுப் போனவையெல்லாம் படித்து முடிக்கணும் :)//
எல்லாப் பதிவும் போட்டாச்சு, ம்ம்ம்மாட்டிக்கினீங்க:-)
நீங்களும் மதி யாரென்று குழம்பிய ஆளா, ஆஹா..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பொன்ஸ்
//சுந்தரி said...
கானா இப்பிடியே மேல எழுதிப் போங்க போனா
வாசகர்க்கு என்ன குறைவரும் தானா!//
:-)))
சுந்தரி
என்பதிவைப் பார்த்து
எந்திரிச்சுப் போகாம வந்தீங்க
ரொம்ப நன்றிகள் சகோதரி
//செந்தில் குமரன் said...
ஒரு வருடம் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.//
வணக்கம் செந்தில்குமரன்
என் நட்சத்திர வாரத்தில் நீங்கள் எனக்களித்த ஊக்குவிப்பை என்றும் மறவேன், நன்றிகள்.
// மணியன் said...
எண்ணிக்கையில் விட எழுத்தில் செறிவான இடுகைகள்.//
வணக்கம் மணியன்
சமீபத்தில் ஆண்டு நிறைவு கண்ட உங்கள் வாழ்த்துக் கண்டு மகிழ்கின்றேன்
// G Gowtham said...
வாழ்த்துக்களும் வணக்கங்களும்
கானா பிரபா..
எல்லாமே அருமையான பதிவுகள்தான்.//
வணக்கம் கெளதம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்
//விடாதுகருப்பு said...
வாழ்த்துக்கள் கானா. //
மிக்க நன்றிகள் விடாதுகறுப்பு
//Kanags said...
மடத்துவாசலின் ஆண்டுமலர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் செறிவான பதிவுகளைத் தர சிட்னி முருகனை வேண்டுகிறேன். //
Kanags said...
மடத்துவாசலின் ஆண்டுமலர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் செறிவான பதிவுகளைத் தர சிட்னி முருகனை வேண்டுகிறேன்.
//Kanags said...
மடத்துவாசலின் ஆண்டுமலர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் செறிவான பதிவுகளைத் தர சிட்னி முருகனை வேண்டுகிறேன். //
வணக்கம் சிறீ அண்ணா
அன்று முதல் இன்று வரை தங்கள் வாழ்த்தையும் ஆசியையும் தருவதை என்றும் மறவேன்.
வணக்கம் ..சாரே.... .....
நான் blog எழுதுவதற்கு நீங்களும் ஒரு காரணம் . இந்த ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தூரோணருக்கு இந்த ஏகலைவன் மீண்டும் குதூகலித்து அன்புடன் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்..
//பெங்களூரில் ராகவனுடன் ஏப்ரல் 06 இலும், செந்தழல் ரவியுடன் மே 06 இலும், நெல்லைக்கிறுக்கனுடன் ஆகஸ்ட் 06 இலும்(கூடவே மழை ஷ்ரேயா, கஸ்தூரிப்பெண், கார்திக் வேலு), துளசிம்மாவுடன் செப்டம்பர் 06 இலுமாக (கூடவே மழை ஷ்ரேயா, பொட் டீ கடை, கஸ்தூரிப்பெண், சிறீ அண்ணா) வலைப்பதிவாளர் சந்திப்புக்களும் அமைந்துவிட்டது//
இத்தனை சந்திப்புகள் நடந்திருக்கு ..பதிவு ஆக ஆக்கியிருந்தால்..நாம பாத்திருப்பமல்லா..
//இதென்னடா யாரோ மதி கந்தசாமி என்ற மனுஷன் ( ஒரு அம்பது வயசு யாழ்ப்பாணத்துக் கனடாவாசி என்ற நினைப்பில்) இப்படிப் படுத்துறாரே" என்று மனசுக்குள் நினைத்தாலும்//
ஹிஹி.....பிரபா..நான் கூட முதலில் அப்படித்தான் நினைச்சன்
வணக்கம் சின்னக்குட்டியர்
துரோணர் அது இதுவென்று பெரிய வார்த்தை சொல்லாதேங்கோ:-))
வலைப்பதிவாளர்களின் சந்திப்பு குறித்து இந்த ஆண்டு முடிவுக்குள் ஒரு பதிவைத் தருக்கின்றேன் (பெண் வலைப்பதிவர்களின் அனுமதி பெற்றுப் படங்களுடன்).
இண்டைக்கு மதிக்குக் கஷ்டகாலம் போல:-))
தொடர்ந்த உங்கள் நேசத்திற்கு என் நன்றிகள்
வாழ்த்துக்கள் பிரபா...
நேர்மையான பதிவாளர்களில் நீங்களும் ஒருவர் எம்பது என் எண்ணம்...
தொடர்ந்து எங்களுக்கு இது போல பதிவுகளை படிக்க வாய்ப்பளியுங்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் பிரபா அண்ணா. மிக நல்ல பதிவுகள் நான் எழுத முதலு (புளொக்கரில்)உங்கள் பதிகள் என்னை ஈர்த்தன அதுவும் கூட நான் புளொக்கிற்கு வரகாரணம்.
நன்றிகளோடு
தம்பி
த.அகிலன்
பலர் தங்கட ஐம்பதாவது பதிவு, நூறாவது பதிவு எண்டு சொல்லிப் பதிவுபோடுறதைப் பாத்தபிறகும் எனக்கு அப்பிடியொரு பதிவு போடத் தோன்றினதில்லை. வருச நிறைவுக்கும் பதிவுபோட நினைத்ததில்லை.
இப்ப உம்மட பதிவைப் பாத்தபிறகுதான் எனக்கும் அந்த ஆசைவந்திட்டுது.
வாறகிழமை ரெண்டாவது வருச நிறைவுக்குப் பதிவுபோட வேணுமெண்டு நினைக்கிறன்.
பாப்பம்.
ஒருவருச நிறைவுக்கு வாழ்த்து.
வாழ்த்துக்கள் பிரபா....
//மங்கை said...
வாழ்த்துக்கள் பிரபா...
நேர்மையான பதிவாளர்களில் நீங்களும் ஒருவர் எம்பது என் எண்ணம்...
தொடர்ந்து எங்களுக்கு இது போல பதிவுகளை படிக்க வாய்ப்பளியுங்கள்...//
வணக்கம் மங்கை
நட்சத்திர வாரத்தில் அன்போடு நீங்கள் தந்த சிந்தனைப் பின்னூட்டம் வந்த நாளில் இருந்து அவ்வப்போது என் பதிவுகளில் நல்ல சிந்தனைகளை விதைப்பீர்கள், மிக்க நன்றிகள் எல்லாவற்றிற்கும்.
பிரபா!
முதலில் வாழ்த்துக்கள்.
மடத்துவாசல் பிள்ளையாரடியை முதலில் இணையத்தில் கண்ணடபோது, யார் இந்தப்பிரபா என்ற கேள்வி இருந்தது. என் கண்முன் சிறுவனாய் நின்றவன்தான் இந்தச் சிறப்புக்குரியவன் என்பதை நீண்டகாலத்தின் பின் முதல் முறை உம்மோடு பேசியவேளை தெரிந்து பெற்ற அதே மகிழ்ச்சி இன்றும்...
பிரபா இன்னும் நிறைய எழுதுங்கள்!
//த.அகிலன் said...
வாழ்த்துக்கள் பிரபா அண்ணா. மிக நல்ல பதிவுகள் நான் எழுத முதலு (புளொக்கரில்)உங்கள் பதிகள் என்னை ஈர்த்தன அதுவும் கூட நான் புளொக்கிற்கு வரகாரணம். //
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அகிலன்
//வசந்தன்(Vasanthan) said...
வருச நிறைவுக்கும் பதிவுபோட நினைத்ததில்லை.
இப்ப உம்மட பதிவைப் பாத்தபிறகுதான் எனக்கும் அந்த ஆசைவந்திட்டுது.
வாறகிழமை ரெண்டாவது வருச நிறைவுக்குப் பதிவுபோட வேணுமெண்டு நினைக்கிறன்.
பாப்பம்.//
முன் கூட்டியே என் வாழ்த்துக்கள்,
சிறப்புப் பதிவைப் போடும் வாசிக்க ஆவலாய் இருக்கிறன்
well done,keep it up.chelvy.
very good information
thileepan-- from inuvil
வாழ்த்துக்கள் பிரபா.
ஒரு வருடமாக வலைப்பூவில் தடம் பதித்து நம்ம நாட்டின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிவிட்டீர்கள். இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். உங்கள் யாழ் அனுபங்கள் எனக்கு பழைய நினைவுகளை மீளக்கொண்டுவந்தது.
மீண்டும் வாழ்த்துக்கள்.
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்
//Anonymous said...
வாழ்த்துக்கள் பிரபா.... //
பாராட்டுக்கு நன்றிகள் நண்பரே
//மலைநாடான் said...
பிரபா!
முதலில் வாழ்த்துக்கள்.
மடத்துவாசல் பிள்ளையாரடியை முதலில் இணையத்தில் கண்ணடபோது, யார் இந்தப்பிரபா என்ற கேள்வி இருந்தது.//
வணக்கம் மலைநாடான்
வலைப்பதிவாளராக முதலில் நீங்கள் எனக்கு அறிமுகமாகிப் பின் எங்கள் ஊரில் என் இளமைக் காலத்தில் சந்தித்தவராகத் தெரிந்தது கூட இவ்வலைப்பதிவின் கைங்கரியமே. உங்கள் நட்புக் கிடைத்தது குறித்து இன்றும் பெருமையடைகின்றேன்.
//டிசே தமிழன் said...
பிரபா இன்னும் நிறைய எழுதுங்கள்! //
கட்டாயம் டி சே, கடக்கவேண்டியது நீண்ட தூரம் அல்லவா:-)
//Anonymous said...
well done,keep it up.chelvy.
December 05, 2006 2:38 PM //
வணக்கம் செல்வி
தங்கள் வாழ்த்துக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகள்
முயற்சி எடுத்து பல விதயங்களை எழுதுகிறீர்கள். மொத்தமாக நன்றாக இருக்கிறது என்று சொல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்.
வாழ்த்துகள்
அருள்
//thileepan said...
very good information
thileepan-- from inuvil //
வணக்கம் திலீபன்
எங்களூர்க்காரரைக் காணும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி, நீங்கள் இங்கிலாந்தில் இருக்கும் எனக்குத் தெரிந்த திலீபனா?
//ஒரு அம்பது வயசு யாழ்ப்பாணத்துக் கனடாவாசி //
இப்பிடிச் சொல்லிப்போட்டினம் எண்டதுக்காக 'அம்மம்மா' போஸ்ட்டுக்கெல்லாம் ஆசப்படக்கூடாது. அது ஏற்கனவே ஜேர்மனியில ஒரு ஆளுக்கு குடுத்தாச்சுது:))
பிரபா,
முதலில் நான் பார்த்தது "அந்த நவராத்திரி நாட்கள்". உங்கள் எழுத்து நடை என்னை ஈர்த்தது.பின்னர் "உலாத்தல்" பார்த்தேன்.அது என்னை வெகுவாகக் கவர்ந்தது.அன்று முதல் தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் பார்த்து வருகிறேன்.
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன் வாழ்த்துகின்றேன்
வணக்கம் கானா பிரபா,
நான் பல தடவை உங்கள் வலைப்பூ பக்கம் வந்து பலதையும் வாசித்து சென்றேன். பின்னூட்டம் பல தடவை போட்ட போதும் அதைப் போட முடியவில்லை. உங்கள் நட்சத்திர வாரத்தின் போதும் வந்து எல்லாவற்றையும் வாசித்தேன். மலரக்கா பற்றி வாசித்து விட்டு புன்னூட்டம் போட்டேன். அப்போதும் முடியவில்லை. ஏன் அதை போட முடியவில்லை என்று தெரியவில்லை.
இன்று ஓராண்டுப் பூர்த்திக்கும் வந்துள்ளேன். இன்றாவது போட முடிந்தால் சந்தோசம்தான்.
உங்கள் ஓராண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள்!
//தமிழன் said...
வாழ்த்துக்கள் பிரபா.
ஒரு வருடமாக வலைப்பூவில் தடம் பதித்து நம்ம நாட்டின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.//
வணக்கம் வந்தியத்தேவன்
உங்கள் வாழ்த்த்துக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகள், நீங்கள் தந்த கறுத்தக்கொழும்பானை மறக்கமாட்டேன்:-))
வாழ்த்துக்கள் கானா ப்ரபா..
// அருள் செல்வன் க said...
முயற்சி எடுத்து பல விதயங்களை எழுதுகிறீர்கள். மொத்தமாக நன்றாக இருக்கிறது என்று சொல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்.
வாழ்த்துகள்/
வணக்கம் அருள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
//பஹீமா ஜகான் said...
பிரபா,
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன் வாழ்த்துகின்றேன்//
வணக்கம் பஹீமா ஜகான்
தங்களைப் போன்றவர்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது, நன்றிகள் பல
//சத்தியா said...
வணக்கம் கானா பிரபா,
நான் பல தடவை உங்கள் வலைப்பூ பக்கம் வந்து பலதையும் வாசித்து சென்றேன். பின்னூட்டம் பல தடவை போட்ட போதும் அதைப் போட முடியவில்லை. //
வணக்கம் சத்தியா
முதலில் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.
உங்கள் முன்னய பின்னூட்டங்கள் எனக்கும் கிடைக்கவில்லை, இப்போது தெரிவது குறித்து வருத்தமாக இருக்கின்றது. முடிந்தால் மலரக்கா பதிவு பற்றிய உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் தாருங்களேன்.
பிரபா!
ஒரு வருடமாச்சா??, தங்கள் றீகல் தியட்டர் பற்றிய கட்டுரையே!!நான் முதல் படித்துப் பின்னூட்டமிட்டது; அது முதல் யாவும் படித்துள்ளேன்.
நேர்த்தியை நேசிப்பதால் பதிவுகள் "குஞ்சரக் கன்றே"....கருவில் இருக்குல் காலமும் கூட ;அளவுவிலும் பெரிது; பயனுமிக்கதே!!
எங்கள் நாட்டின் அருமை பெருமைகளை வெளிக் கொண்டுவந்து; தமிழகச் சகோதரர்களுக்குக் காட்டியதில் பெரும் பங்கு வகுத்துள்ளீர்கள்.
உங்களுக்குப் பின்னூட்டுவதானால் எனக்கு ஓர் அலாதியான குசி வந்துவிடும்; பின்னூட்டத்துக்கும் தகவல்கள் தரும் பாங்கு!!!அத்துடன் நான் அறிந்த விடயங்களாகவும் ;நம் மண்ணின் மகிமையாகவும் இருப்பது.
தங்கள் "சிதம்பரத்தில் ஓர் அப்பாவி சாமி" அந்தத் தலைப்பு...அனுபவப்பட்டவன் எனும் வகையில் ;அந்த படம் வந்த காலத்துக் கேற்ற பொருத்தமான தலைப்பு.
சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் மணத்தில் சிக்கலில் சிக்காமல் எழுதுபவர்களில் ஒருவர்.
இந்த பதிவுலகம் எனக்குத் தந்த "நல்ல தம்பி" களில் ஒருவர்...;
தொடர்ந்து...நீங்கள் சரக்குடன் எழுதுவீர்கள்.....என்பதில் ஐயம் இல்லை.
நான் இனிமேல் எழுதச் சாத்தியக் கூறு இல்லை.
படிப்பேன்...பின்னூட்டுவேன்.
என் கடன் பணி பின்னூட்டுவதே!!!!; பீட்டா பிளக்கர் தீர்மானித்து விட்டது. அல்லாட அறிவுமில்லை;வயதுமில்லை....
அன்புடன்
யோகன் பாரிஸ்
//தொடர்ந்து...நீங்கள் சரக்குடன் எழுதுவீர்கள்.....என்பதில் ஐயம் இல்லை.
//
அடப்பாவி!!!
இதுவேற நடக்குதா?
வசந்தன்!
நீங்க எங்கோ போறீங்க!! ஒரு சொல்லையும் பாவிக்க விடமாட்டிங்க போல கிடக்கு!
யோகன் பாரிஸ்
நன்றி கானா பிரபா. நல்ல நினைவூட்டல்கள். தவறவிட்டைவைகளை வாசிப்பதற்கு தொடங்கியுள்ளேன்.
அது சரி மதி கந்தசாமி அப்பயிருந்தே இப்பிடித்தானா. இல்ல எனக்கும் மடலிட்டிருந்தாங்க.
(சிரிப்புக்காக மதிகந்தசாமி உங்கள் மடல்கண்டு நிச்சயமாய் மகிழ்ந்தவன் நான்)
அன்புள்ள கானாபிரபா,
எல்லாரும் சொல்லிவிட்டார்கள், புதியதாய் என்ன சொல்ல என்று யோசிக்கும்பொழுது, இட்லிவடையின்
டாப் ஐந்து, தேர்வில் முதல் ஐந்தில் உங்கள் பதிவையும் என் விருப்பப்பட்டியலில் சேர்த்திருந்தேன்.
காரணம், மிக சிக்கலான பிரச்சனைகளையும் நீங்கள் அணுகும்முறை, பதிவர்கள் பலரும் கற்க வேண்டிய பாடம் (என்னையும் சேர்த்து) உதாரணமாய் சிதம்பரத்தில் அப்பாவி சாமி.
மேலும் வார்த்தைகளில் பண்பும், நளினமும் இருக்கும் அதே வேளையில் சுவைக்குன்றாமல் தரும் பக்குவமும் உங்களுக்கு தெரிந்துள்ளது. உங்களின் அனைத்து பதிவையும் போட்ட உடன் படிப்பவள் என்பதால் இந்த மதிப்புரை. என்றுமே பழைய கதைகள் கேட்பதில் எனக்கு விருப்பம் அதிகம். இன்னும் சுவையான பதிவுகள் போடுங்கள்.
படிக்க காத்திருக்கும்,
உஷா
வாழ்த்துக்கள் பிரபா
//மு.கார்த்திகேயன் said...
வாழ்த்துக்கள் கானா ப்ரபா.. //
வணக்கம் கார்த்திகேயன்
சமீபகாலமாக உங்கள் எழுத்து நடையில் கவரப்பட்டு வரும் எனக்கு உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது.
//Johan-Paris said...
பிரபா!
ஒரு வருடமாச்சா??, தங்கள் றீகல் தியட்டர் பற்றிய கட்டுரையே!!நான் முதல் படித்துப் பின்னூட்டமிட்டது; அது முதல் யாவும் படித்துள்ளேன். //
வணக்கம் யோகன் அண்ணா
சில பதிவுகளை எழுதும் போது நான் எதிர்பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர், காரணம் உங்களிடமிருந்து வரும் ஆழ்ந்த விசய தானம். எத்தனையோ தடவை உங்கள் பின்னூட்டத்தில் கிடைத்த மேலதிக தகவல்கள் என் பதிவுகளை மெருகேற்றியிருக்கின்றது. புது புளெக்கர் கணக்கைத் தொடங்கியாவது நீங்கள் எப்படியும் பதிவுலகுக்கு வரவேண்டும் என்பது என் மெய்யான எதிர்பார்ப்பு.
//பகீ said...
நன்றி கானா பிரபா. நல்ல நினைவூட்டல்கள். தவறவிட்டைவைகளை வாசிப்பதற்கு தொடங்கியுள்ளேன். //
வணக்கம் பகீ
என் நினைவூட்டலில் பல இப்போது தாயகத்தில் உங்கள் நிஜங்கள். என்றும் உங்களுக்காக என் பிரார்த்தனை இருக்கும்.
//மலைநாடான் said...
இப்பிடிச் சொல்லிப்போட்டினம் எண்டதுக்காக 'அம்மம்மா' போஸ்ட்டுக்கெல்லாம் ஆசப்படக்கூடாது.//
மலைநாடன் அண்ணை
ஏற்கனவே அக்கா/அன்ரி/முதியோர் எண்டு அடி மேல் அடி, நீங்க வேற :-)
//வசந்தன்(Vasanthan) said...
//தொடர்ந்து...நீங்கள் சரக்குடன் எழுதுவீர்கள்.....என்பதில் ஐயம் இல்லை.
//
அடப்பாவி!!!
இதுவேற நடக்குதா?
வசந்தன்//
கனகாலம் தமிழ் வாத்தி வேலையை நீர் செய்யேல்லை எண்டு யோசித்தனான்.
// ramachandranusha said...
அன்புள்ள கானாபிரபா,
எல்லாரும் சொல்லிவிட்டார்கள், புதியதாய் என்ன சொல்ல என்று யோசிக்கும்பொழுது, இட்லிவடையின்
டாப் ஐந்து, தேர்வில் முதல் ஐந்தில் உங்கள் பதிவையும் என் விருப்பப்பட்டியலில் சேர்த்திருந்தேன்.//
வணக்கம் உஷா
தங்கள் எழுத்து வீச்சினால் கலைமகள் உட்படப் பல அங்கீகாரம் கிடைத்த உங்கள் பாராட்டும் பரிந்துரையும் உண்மையில் எனக்குப் பெருமிதத்தை ஏற்படுத்துகின்றது. தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பின் மூலம் என் எண்ணப்பதிவுகளைத் தொடர்ந்தும் தருகின்றேன்.
மிக்க நன்றிகள்
//விருபா / Viruba said...
வாழ்த்துக்கள் பிரபா//
வணக்கம் விருபா
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள். அடைக்கலம் பதிவுக்கான படம் உங்கள் பதிவிலிருந்து கிடைத்த பயனையும் மறவேன்.
பிரபா ஓராண்டாயிற்றா! பாருங்கள் பொழுதோடியதே தெரியவில்லை. உங்கள் பதிவுகளில் பெரும்பான்மையானவற்றைப் படித்திருக்கிறேன். ஒன்றிரண்டு விடுபட்டும் விட்டன. அவைகளையும் படிக்கிறேன். உங்கள் எழுத்தையும் அதில் எது வலு சேர்க்கிறது என்பதையும் நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பல சிறப்பான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்த்து வாழ்த்துகிறேன். வாழ்க வளர்க. நம்முடைய கனவு நினைவில் இருக்கிறதுதானே? ;-) அது நினைவாகும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் நான். ஆண்டவனை வேண்டியபடி.
பின்னேரத்தில், தண்ணீர் தெளித்து கூட்டிய முற்றத்திலே
கிரீப்பர் பந்தலின் கீழே கதிரைகளைக்
கொண்டு வந்து போட்டு, அப்பா, சகோதரங்கள்,
பக்கது வீட்டுகிளியக்கா, ஆச்சி எல்லொருடனும்
இருந்து தேத்தண்ணிகுடித்து கதைத்துக்
கொண்டிருந்த காலத்துக்கு அனுப்பி
விட்டீர்கள். எப்போ அந்தக்காலம்
திரும்புமோ? கடவுள் கெதியில் கண்
திறக்க வேண்டும்.
1 வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
hello prabha...
idhu ennudaiya mudhal visit to ur blogs...porumaiyaga ovundrayum ini padithu comment seiyaren..nan ippo than vandhirukiran...
meendum ungalin matha blogayum padikaren..
வணக்கம் ராகவன்
பின்னூட்டமிடும் போது சில சுவையான தகவல்களையும் அவ்வப்போது தந்து வலுச் சேர்த்ததற்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
//நம்முடைய கனவு நினைவில் இருக்கிறதுதானே? ;-)//
உண்மைதான்:-)
//Anonymous said...
பின்னேரத்தில், தண்ணீர் தெளித்து கூட்டிய முற்றத்திலே
கிரீப்பர் பந்தலின் கீழே கதிரைகளைக்
கொண்டு வந்து போட்டு, அப்பா, சகோதரங்கள்,
பக்கது வீட்டுகிளியக்கா, ஆச்சி எல்லொருடனும்
இருந்து தேத்தண்ணிகுடித்து கதைத்துக்
கொண்டிருந்த காலத்துக்கு அனுப்பி
விட்டீர்கள். எப்போ அந்தக்காலம்
திரும்புமோ? கடவுள் கெதியில் கண்
திறக்க வேண்டும்.//
நண்பரே
உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும் போது மீண்டும் அந்த நாட்களுக்கு போய்ப் பெருமூச்சாய் வெடித்தது. அந்த நாளும வந்திடாதோ....
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
//one among u said...
hello prabha...
இது என்னுடைய முதல் உங்க புலொக்கிற்கு...பொறுமையாக ஒவ்வொன்றையும் இனி படித்து பின்னுட்டம் செய்கிறேன்...னான் இப்பொ தான் வந்திருக்கிறன்...
மீண்டும் உங்களின் மற்ற புலொக்கையும் படிக்கறேன்..//
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். பதிவுகளுக்கான உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.
உங்களின் புளொக்கையும் பார்த்தேன், வலையுலகிற்கும் புதிதாக வந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
அண்ணா,
பதிவுகள் அனைத்தும் அருமை.முன்னர் படிக்க தவறியவற்றையும் படிக்க முடிந்தது. நன்றி.பாராட்டுக்கள்:)
நான் இப்பத்தான் ஒரு வாரம் முடிச்சிருக்கேன்.
அடேங்கப்பா! ஒரு வருஷமா?
வாழ்த்துக்கள் கானா பிரபா!
தூ//யா said...
அண்ணா,
பதிவுகள் அனைத்தும் அருமை.முன்னர் படிக்க தவறியவற்றையும் படிக்க முடிந்தது. நன்றி.பாராட்டுக்கள்:)//
மிக்க நன்றிகள் தூயா, நீங்களும் வலையுலகிற்குப் புதிதாய் வந்துள்ளீர்கள், நிறைய எதிர்பார்க்கின்றேன்.
//ஜி said...
நான் இப்பத்தான் ஒரு வாரம் முடிச்சிருக்கேன்.
அடேங்கப்பா! ஒரு வருஷமா?//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ஜி. வலையுலகில் நீங்களும் பதிவு பல படைக்க வாழ்த்துக்கள்,
வணக்கம் சோமிதரன்
முதற் தடவை வந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். தூர இருந்தால் தான் அதன் அருமை தெரியும் என்பார்கள், நாம் தாயகத்தின் நினைவுகளைத் தூர இருந்து தரிசிக்கும் துரதிஷ்டசாலிகள். இந்த வலைக்குழுமத்தின் மூலமாக ஆவது நமது ஆற்றாமையைத் தீர்க்க முயல்கின்றோம்.
வணக்கம் பிரபாண்ணெ..
வைராசால் வர லேட்டயிட்டுது !!
வாழ்த்துகள் !!!!
தொகுத்துதந்ததுக்கு நன்றி.
வாடைகாற்று ::
எனது வாசிப்பை ஈழத்து எழுத்து நொக்கி திருப்பியது.
எல்லாத்தையும் வாசிகோணும்
நன்றி
திலகன்
வாழ்த்துக்கள் பிரபா... யார் மனதையும் புண்படுத்தாம, நெஞ்சைத் தொடுகிற உங்களோட பதிவுகளுக்கு ஈடு கிடயாது.
எழுத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் பண்பில் சிறந்த மனிதரய்யா நீர்...
//Saba Thilan said...
வணக்கம் பிரபாண்ணெ..
வைராசால் வர லேட்டயிட்டுது !!
வாழ்த்துகள் !!!!
தொகுத்துதந்ததுக்கு நன்றி.//
வணக்கம் தம்பி திலகன்
வைரஸ் கொம்பியூட்டருக்குத் தான் வந்தது என்று நினைக்கிறேன், உங்கள் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம், மிக்க நன்றிகள்.
//நெல்லைகிறுக்கன் said...
வாழ்த்துக்கள் பிரபா... யார் மனதையும் புண்படுத்தாம, நெஞ்சைத் தொடுகிற உங்களோட பதிவுகளுக்கு ஈடு கிடயாது.//
வணக்கம் நெல்லைகிறுக்கன்
வலைப்பதிவு மூலம் கண்டு சந்தித்த நல்ல நண்பர்களில் நீங்களும் ஒருவர், மிக்க நன்றிகள்.
ஒவ்வொருவர் எழுத்து வளர்ச்சிக்கும் மற்றையவரின் பின்னூட்டமென்பது மிக முக்கியமாக துணைசெய்கின்றது என்பது வாஸ்தவமே! தங்கள் ஆக்கங்கள் சுவை செறிந்தவை. இச்சுவை என்றும் குன்றாமல் தொடர்ந்துகொண்டிருக்க எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் "வானம்பாடி" கலீஸ்
அன்பின் கானபிரபா
வெகு தூரம் நடந்திருக்கிறீர்கள்
நடையில் பார்த்ததை
எமக்கு சொல்லியிருக்கிறீர்கள்.
தொடர்ந்தும் நீங்கள்
நடக்க வேண்டும்!
இறையருள் வேண்டி உங்கள்
அஜீவன்
நத்தார் வாழ்த்துக்கள்
அன்பின் அஜீவன்
தங்கள் வாழ்த்திற்கும் ஆசிக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்
//சுந்த்ரி said...
நத்தார் வாழ்த்துக்கள்
December 25, 2006 1:39 PM //
வணக்கம் சுந்தரி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்
வணக்கம் அண்ணெ..
//வணக்கம் தம்பி திலகன்
வைரஸ் கொம்பியூட்டருக்குத் தான் வந்தது என்று நினைக்கிறேன், உங்கள் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம், மிக்க நன்றிகள்.//
வைரஸ் நமக்குதான் ரெண்டாந்தரமும் உலுப்பி எடுத்துட்டுது.
-comments போட வேண்டுமென்பது நீண்ட நாள் குறிகொள் (ஓரு ரண்டு மாதம் !!) உங்கட பதிவுகள் எல்லாம் வாசிடன்.
ஏல்லாம் நல்லாயிருக்குது & ரசித்தேன்.
ஏனெண்டால்?
எங்க தொடன்கினலும் யாழ்பாதிலிருக்கிற யாரொ ஓரு சுப்பர கொல்லயிக்கில போய் முடியும்.
நான் ரசித்த TP 3:
1. என் இனிய மாம்பழமே....!
-- நான் செய்த செயல்கலை பாத்து எழுதினமாதிரி கிடக்கு :)
2.சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
-- -- சமய பாட புத்தகதால் கிடைத்த பிம்பக்கள் உடைந்து பொட்டுது.
3.நான் உங்கள் ரசிகன்
-- அருமையான எழுத்து நடை .வாடைகாற்று தான் முதலில் அறிமுகமனது. இவருடைய சமூககல்விபாட வாழிகாட்டி நூல்கள் பெருதவிபுரிந்தவை.
தொடர்ந்து நல்லா எழுதுங்கொ !!!!
இருந்த அடுத்தவரிசம் இப்பிடி யொருபதிவு பொடயிக்க வந்து comments பொடுரன்.
-திலகன்
happy new year
வணக்கம் திலகன்
என் எண்ணங்களை எழுத்தில் தரும் போது உங்களைப் போன்றவர்கள் அதை வாசித்துச் சிலாகித்துப் பேசுவது தான் அடுத்த பதிவுக்கான உற்சாக மூட்டலாக அமைகின்றது. அந்த வகையில் என் பதிவுகளை வாசித்து உங்கள் கருத்தைத் தந்தமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றேன்.
பிறக்கும் 2007 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லாண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.
உங்கள் அன்புக்கு நன்றி,
அடுத்த வாரம் முதல் செங்கை ஆழியன்
அவர்கள் வீரகெசரியில் "மீண்டும் வருவேன்" என்ற தொடர்கதை எழுதுகிறார்.
அத்துடன் இன்றயதினம் (31- 12) அவருக்கு பாரட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில்
இடம் பெறுகிறது.
உங்களுடன் பகிர வேண்டும் என் நினைத்தேன் .
நட்புடன்,
திலகன்
வணக்கம் திலகன்
என் கணினிக்கு வைரஸ் காய்ச்சல் கண்டதால் உடன் பதில்போட முடியவில்லை. செங்கை ஆழியானுக்குப் பாராட்டு விழா கண்டு மகிழ்கின்றேன். இந்த வார இறுதிப் பத்திரிகை வாங்க வேணும்.
I was looking for information on Pongal and tread on your writings on Pongal in Eelam. It touched my heart to see people like you keeping the memorry of events in our mother land alive and passing it to others to learn and enjoy at the same time. Keep up the good work as long as you can.
Eliza Mann
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பா
எம் தாயக நினைவுப்பதிவை முயன்றவரை தருவது தான் என் ஆசையும் கூட.
பிரபு அண்ணை,
உங்கன்ர பதிவு ஒவ்வொன்றா படிக்கிறன்...
எல்லாமே நல்லா இருக்குது...
மேலும் எழுதுங்கோ... வாழ்த்துக்கள்..
--பிரசாந்த்
மிக்க நன்றிகள் பிரசாந்த். 100 வது பின்னூட்டமாக வந்திருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் நன்றிகள்
Post a Comment