கே.கே.எஸ் றோட்டில, கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் தாண்டினாப் பிறகு வருவது தான் மக்கள் முன்னேற்றக்கழகம் . நல்ல பெயர் வைச்சுத் தொடங்கின இந்த வாசிகசாலை வெறும் பேப்பர் படிக்கும் இடமாகத் தான் கனகாலம் இருந்தது. ரீ.வீயும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க (அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்கு) இந்த வாசிகசாலைகள் தான் மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை. 80 களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடியவிடியப் படம் காட்டினவை . தலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன்.
ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே .கே.எஸ் றோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணி, ட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளைவாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட்டவை.
போட்ட படங்களில "அண்ணன் ஒரு கோயில்" மட்டும் ஞாபகத்தில இருக்கு. அந்தப் படத்தில வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்தது. அந்தப் பாட்டுக்கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த "ஏன் உவன் சிவாசியும், சுயாதாவும் பத்தைகளுக்குள்ளால ஓடி ஒளியினம்?" என்று எனக்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது . எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப்படம் காட்டினதுதான்
உத விட இன்னுமொரு விளையாட்டும் நடந்தது. பெரிய ஸ்கிறீனைக் கொண்டு வந்து வாசிகசாலை முகப்பில வச்சு படறீல் பெட்டியால மலேரியா, வாந்திபேதி வகையறா சுகாதார விழிப்புணர்வுப் படங்கள் போடுவினம். செக்ஸ் படம் ஓடுதடா எண்டு பெடியள் சொல்லுவாங்கள். சனத்துக்கு விழிப்புணர்வு வருகுதோ இல்லையோ விடுப்புப் பாக்கிறதுக்கு எண்டு ஊர்முழுக்க இருந்து வந்து குந்தி இருப்பினம்.
அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் பின்னேரம் போல வந்து பார்க்கோணும் நீங்கள்,
பற்மின்ரன் ஆடுற பெடியள் ஒருபக்கம், குமுதம், பேசும் படத்தில நடிகை ராதாவைத் தேடுறவை ஒருபக்கம்,
"உவன் சே யார். செயவர்த்தனா என்ன சொல்லுறான்" என்ற முனைப்போட கொடுக்குக்குள்ள சுருட்டை வச்சுக் கக்கினபடி தினபதிப் பேப்பரை நோட்டம் போடுற வயசாளியள் ஒருபக்கம், ஸ்ரைலுக்காக சண் ஆங்கிலப் பேப்பர் பார்க்கிற லோங்க்ஸ் போட்ட மாமாமார் ஒருபக்கம் எண்டு வாசிகசாலையே நிறைஞ்சிருக்கும். ஒரு தினப்பத்திரிகையின்ர ஒவ்வொரு பக்கமும், தனித்தனியா ஒவ்வொரு ஆளிட்ட இருக்கும். ஆக்களின்ர முகங்களைப் பேப்பர் தான் மறைச்சிருக்கும். வாசிகசாலைச் சுவரில மில்க்வைற் அச்சடிச்ச "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்" எண்ட வாசகமும் அமைதி பேணவும் எண்ட அன்புக்கட்டளையும் இருக்கும்.
80 களின் ஆரம்பத்தில் என்ர அண்ணரும் கூட்டாளிமாரும் உறுப்பினராக உந்த வாசிகசாலையில் இருந்தவை. 83 இல தின்னவேலிச்சந்தியிலை வச்சுப் பொலிஸ்காரருக்கு விழுந்த அடியோட, அவங்களும் சுடுதண்ணி குடிச்ச நாயள் போல கண்ட நிண்ட பெடியளையும் றோட்டில கண்டா அடிக்கிறதும், மறியலுக்குக் கொண்டுபோவதுமாக மாறிவிட்டது எங்கட யாழ்ப்பாணம். ஒருநாள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின்ர முகப்பில அண்ணராக்கள் நிற்கேக்க ஜீப்பில இருந்து பொலிஸ்காரன்கள் துவக்கால சுட்டுக்கொண்டுவந்தவன்கள். அதோட சரி, அண்ணரும் கூட்டாளிமாரும், மெதுமெதுவாக வெளிநாட்டுக்குப் பறந்துவிட மக்கள் முன்னேற்றக்கழகமும் கவனிப்பார் இன்றிப் போனது.
பிறகு அடுத்த தலைமுறை இளவட்டங்கள் வந்து மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியைப் பிடிச்சினம். சரஸ்வதி பூசை நேரங்களில அவல், சுண்டல் படைக்கிறதும் , காளிகோயில் சுவாமி கே.கே.எஸ் றோட்டால வரேக்க பொங்கல் பொங்கிப் படைக்கிறதும், ஈழநாடு , ஈழமுரசு பேப்பர் போடுவதுமாகத் தங்கட பங்கையும் செய்தினம்.
கிட்டத்தட்ட இதே மாதிரித் தான் தாவடி பரமானந்த வாசிகசாலையும் இருந்தது. என்ர அப்பாவின்ர ஊர் எண்ட உரிமையில அடிக்கடி அந்த வாசிகசாலைக்கும் நான் செல்வதுண்டு. பரமானந்த வாசிகசாலை, தாவடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில இருந்த பிரமாண்டமான வாசிகசாலை. அந்த வாசிகசாலைப் பெடியள் நல்ல முனைப்பாக இருந்து அந்த வாசிகசாலையில் ஒரு நூல் நிலையத்தையும் , முகப்பில இருந்த கோவில் வீதியில வச்சு ஒரு பற்மின்ரன் கோட் ஐயும் வச்சுப் பராமரிச்சவை. வாசிகசாலைக்குப் பக்கத்தில ஒரு பெரிய கலையரங்கும் இருக்கிறது . முந்தி நடிகவேள் வைரமுத்துவின்ர சத்தியவான் சாவித்திரி நாடகம் ஒருமுறை தாவடிப் பிள்ளையார் பூங்காவன நாளில நடந்தது ஞாபகமிருக்குது.
இணுவில் சந்திக்குப் பக்கத்தால கந்தசாமி கோயில் போற வழியில, வெங்காயச் சங்கம் இருந்தது. அதுக்குப் பின் வளவில ஒரு சின்ன வாசிகசாலை இருந்தது . 1987 ஆம் ஆண்டு அந்த வாசிகசாலையில இருந்த பெடியள் ஒருநூலகத்தை ஆரம்பிச்சினம். 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிச் சண்டை நடக்கிறதுக்கு முதல் கிழமை தான் ஒரு புத்தகத்தை இரவல் எடுத்திருந்தன்.மகாத்மா காந்தியின்ர வாழ்க்கையில நடந்த நிகழ்வுகளைப் போட்டோக்களோட வெளியிட்ட பெரிய ஒரு புத்தகம் அது.இந்தியன் ஆமிச் சண்டைக்காலத்தில கோயில் அகதிமுகாமில் இருக்கேக்கையும் வச்சிருந்து அதை வாசிச்சனான்.
ஒருமாதிரி இந்தியன் ஆமிச் சண்டை ஓய்ஞ்சுபோன நேரத்தில அந்த நூலகம் நடத்தின பெடியனைக் கண்டுபிடிச்சுப் புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு மாதிரி வியப்போட பார்த்துவிட்டு வாங்கித் தன் சைக்கிள் கரியரில் வச்சுக்கொண்டு போனான். என்னவோ தெரியேல்ல எங்கட ஊர்களுக்கும் நூலகத்துக்கும் வெகுதூரம் போல. அந்தச் சின்ன நூலகமும் பாதியில செத்துப்போனது.
ஏ.எல் பரீட்சைக்குப் படிக்கிற காலத்தில தொந்தரவில்லாமல் படிக்க நான் தேர்ந்தெடுத்தது சுன்னாகம் நூலகம். எங்கட ஊர்களுக்குள்ளேயே பெரிய நூலகம் அது . அங்கிருந்து படிப்பவர்களுக்குத் தனியாகவும், தினப்பத்திரிகை பார்ப்போருக்குத் தனியாகவும், நூல்களுக்குத் தனிக் களஞ்சியமாகவும் எண்டு வெள்ளைச்சுண்ணாம்பு நிறத்தில அடுக்குமாடிக் கட்டிடத்தில இருந்த அரசாங்க நூலகம் அது . எங்கட கிராமத்து வாசிகசாலைகள் எதோ ஏழை போலவும், தான் பெரிய பணக்காரன் போல சுன்னாகம் நூலகம் பாவனை பிடிப்பது போலத் தோன்றும் . தினத் தந்தி, ஜீனியர் போஸ்ட் போன்ற இந்தியப் பத்திரிகைகளும் வருவதுண்டு. படிக்கப் போற சாட்டில செம்பருத்தி படத்தில பிரசாந்துக்கு யார் ஜோடி எண்டு தேடினதுதான் மிச்சம் .
கொக்குவிலில் வளர்மதி சனசமூக நிலையம் எண்டு ஒண்டிருக்கு. அந்த வாசிகசாலை இளைஞர்கள் "உள்ளம்" எண்ட சஞ்சிகையையும் வெளியிட்டவை . நல்ல தரமான கதை, கட்டுரைகளையும், நல்ல முகப்போவியங்களை அட்டைப் படமாகவும் கொண்டு அந்தக் காலத்தில அழகாக வந்துகொண்டிருந்தது உள்ளம் . அதுக்கும் பின்னாளிலை இருதய நோய் கண்டுவிட்டது.
மருதனார் மடச்சந்தியில இருந்த வாசிகசாலை உள்ளூராட்சி சபைக்குச் சொந்தமானது. சந்தைக்குப் பக்கத்தில இருந்த இந்த வாசிகசாலையில ஒப்புக்குச் சில பத்திரிகைகளும் , சந்தையில் நைய்ந்து போன கறிச்சாமான் போல சில நாவல்களும் இருந்தன. எனக்கு வேற வழி கிடைக்காத நேரத்தில இந்த வாசிகசாலைக்கும் போவதுண்டு .
வாசிகசாலைகள் தவிர இருக்கும் நூலகங்கள் இளைஞர்களின்ர மேற்பார்வையில்லாம, அரசாங்கச் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் ஊழியரைக்கொண்டவை. அப்பிடிருந்த நல்லூர் நூலகத்துக்கும் , நாச்சிமார் கோயிலடி நூலகத்துக்கும் நான் அடிக்கடி போவதுண்டு. ஆனால் பிரச்சனை என்னவெண்டால், புத்தகம் இரவல் தரமாட்டினம் . அந்த நூலகங்கள் அந்தப் பிரதேசமக்களுக்கு மட்டும் சொந்தமானவையாம். வெளியாட்கள் எண்டால் அதிக பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவேணுமாம் .
இணுவில் சிவகாமி அம்மன் கோயிலுக்குப் பின்னால சிவகாமசுந்தரி சனசமூகநிலையம் எண்டு ஒரு வாசிகசாலை இருக்குது. புறாக்கூடு போல சரியான சின்னன் அது. 93 ஆம் ஆண்டு கோயில் திருவிழாக் காலத்தில அந்த வாசிகசாலைக்குப் பொறுப்பா இருந்த பெடியள் ஆரம்பவகுப்புப் படிக்கிற பிள்ளையளுக்கு ஒரு சைவசமயப் பரீட்சையை வச்சுப் பரிசெல்லாம் கொடுத்தாங்கள் .
மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் பக்கத்தில இருந்த சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகப்பு அறையில கொஞ்சநாள் ஒரு வாசிகசாலை இருந்தது. இந்தியன் ஆமிச் சண்டைக்குப் பிறகு அதுவும் போட்டுது . பொறுப்பா இருந்த தயா அண்ணை கனடாவிலையாம்.90 ஆம் ஆண்டு வாக்கில எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடிப் பெடியளும் கோயில் முகப்புப் பக்கமா உள்ள டிஸ்பென்சறிக்கு அருகில இருந்த கடையில ஒண்டைத் திருத்திப், புத்தகம் எல்லாம் போட்டு இணுவில் பொதுநூலகம் எண்டு தொடங்கினவை.கலாநிதி சபா ஜெயராசா, செங்கை ஆழியான் உட்படப் பல பிரபலங்கள் வந்து அந்த நூலகத்தைத் திறந்தது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்கிது. அதுவும் 95 ஆம் ஆண்டு சந்திரிகாவின்ர சண்டை தொடங்கினாப் பிறகு மூடுவிழாக் கண்டது.
போனவருஷம் ஊருக்குப் போனபோது இணுவில் பொது நூலகம் இப்ப டிஸ்பென்சறியா இருந்த கட்டிடத்தில இயங்குது. நூலகம், சின்னப் பிள்ளையளுக்குப் பூங்கா, பிள்ளைப் பராமரிப்பு, சைவ சமயப் போட்டிகள் என்று இந்த வாசிகசாலை நிறையவே செய்யுது. வெளிநாட்டுக்காரரும் நல்லா உதவி செய்யினமாம்.
தட்டாதெருச் சந்தியில ஒரு வாசிகசாலை இருந்தது. நல்லூர்த் திருவிழா நேரத்தில கே.கே.எஸ் றோட்டை மேவி ஒரு பெரிய தண்ணீர்ப் பந்தல் வச்சு கலாதியா இருக்கும் அது . இந்த வருஷம் நான் ஊருக்குப் போனபோது பார்த்தேன், வாசிகசாலை இடிபாடுகளுக்குள்ள புதர் மண்டிக்கிடக்குது. பக்கத்தில ஆமிகாறன் சென்றி போட்டிருக்கிறான் .
இண்டைக்கு ஒரு அறைக்குள்ள இருந்து இன்ரநெற் பார்த்துத் புதினம் அறிவது எண்டு உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் இந்த வாசிகசாலைகளின் செயற்பாடுகள் பரந்துபட்டவை . ஒரு ஊருக்குத் தேவையான அறிவுக்கண்ணாக அவை இருப்பதோடு காலத்தின் தேவை கருதிச் செயற்படும் ஒரு சமூக முன்னேற்ற அமைப்பாகவும் அவை இருக்கின்றன . ஆனாலும் இந்த ஈழத்தமிழினத்தின் நிச்சயமற்ற வாழ்க்கை முறை தான் எங்களூர் வாசிகசாலைகளுக்கும் வாய்த்திருக்கின்றது.இந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்களனாக இருந்திருக்கின்றன . ஒவ்வொரு காலகட்டத்திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும். யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிகசாலைகள் . ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்.
26 comments:
///இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்///
இந்த நம்பிக்கைதான் பலருக்கு சுவாசமாக இருக்கிறது...அழுத்தமான பதிவு..
/தினபதிப் பேப்பரை நேட்டம் //
நல்லதொரு ஊர் நினைவுகளை கிளறி விடுகிற பதிவு
ஓ இந்த தினபதி ,சிந்தாமணி, சன், தவசகுறூப் பத்திரிகைகள் இனத்துவேச அடிப்படையில இயங்கி எழுதினவை
தினபதி ஆசிரியராய் இரு்ந்தவர் தனிப்பட்ட பகையை வைச்சு அப்போதைய தமிழ்க்கட்சிகளை தமிழர் போராட்டத்தையும் தி்ட்டி தீர்த்தவர்.
தங்கள் வருகைக்கு நன்றிகள் ரவி. மேல்நாட்டுப் பயணம் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
வணக்கம் சின்னக்குட்டியர்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
தினபதியின்ர வேலையை இப்ப தினகரன் தொடர்ந்து செய்யுது.
தாவடியிலதான் பிறகு த.வி.புலிகளின் மாணவர் அமைப்பு பெரியதொரு வாசகசாலை வைச்சிருந்தது. (அதை வாசகசாலை எண்டு சொல்லாம் தானே?) எல்லாப் பள்ளிக்கூடத்திலயிருந்தும் சுழற்சிமுறையில வந்து போவினம். நல்ல பிரியோசினமான முயற்சியது.
யாழ்ப்பாணத்தில ஒருகட்டத்தில செய்தித்தாள் அச்சிடுறதுக்கு தாள் தட்டுப்பாடு வந்தது. மாட்டுத்தாள் பேப்பரிலகூட பத்திரிகை வந்தது ஞாபகமிருக்கும். அப்ப ஊர்களுக்கான பத்திரிகைத தொகை சரியாக் குறைஞ்சுது. கிட்டத்தட்ட ஒரு கிழமையா எங்கட ஊருக்கு பத்திலொரு பகுதி பத்திரிகைதான் வந்தது. அந்தநேரம் விழிப்புக்குழு ஒரு நடைமுறை கொண்டந்தது. காலம ஒருத்தர் எங்கட வாசகசாலையில பெலத்த சத்தமா எல்லாச் செய்தியளையும் வாசிக்கிறதெண்டு. முக்கியமான இடங்களில இப்பிடியொரு ஒழுங்கை நடைமுறைப்படுத்திறதெண்டு திட்டம்.
ஆனா ரெண்டோ மூண்டோ நாளில வழமைபோல தேவையான தொகையில பத்திரிகைகள் கிடைக்கத் தொடங்கீட்டுது.
சனசமூக நிலையம் vs வாசிகசாலை
Is there any difference?
சனசமூக நிலையம் offers more comprehensive services, right?
You forgot to mention, Comics, Ambulimama etc...:-)
வசந்தன்(Vasanthan) said...
தாவடியிலதான் பிறகு த.வி.புலிகளின் மாணவர் அமைப்பு பெரியதொரு வாசகசாலை வைச்சிருந்தது. (அதை வாசகசாலை எண்டு சொல்லாம் தானே?)
நீங்கள் சொன்னாச் சரி:-)))
தாவடியில் எந்தப் பகுதியில் இது இருந்தது என்று சொல்ல முடியுமா?
ஏனென்றால் கோண்டாவிலில் மாவீரர் படிப்பகம் இருந்தது, என்ர உயர்தர வகுப்பு வாழ்க்கையில படிப்புக்குத் தேர்ந்தெடுத்த இடங்களில் அதுவும் ஒன்று. மின்சாரமும் நல்ல வசதியும் இருந்தது.
மாட்டுத்தாள் பேப்பர் காலமும், றூல் போட்ட பேப்பர் காலமும் இன்னமும் நினைவில் இருக்கு.
நற்கீரன் said...
சனசமூக நிலையம் vs வாசிகசாலை
Is there any difference?
வணக்கம் நற்கீரன்
நீங்கள் சொல்வது போல சனசமூக நிலையம் என்பதன் செயற்பாடுகள் பரந்தவை. ஆனால் சில சனசமூக நிலையங்கள் பேப்பர் போடுவதோடு மட்டும் நின்றுவிட்டன.
அம்புலிமாமா, பாலமித்ரா காலம் பற்றி நிறையப் பேச இருக்கு, எனவே அவற்றை இங்கு சேர்க்கவில்லை:-)
அட்டகாசமான பதிவு.
அருமையா விளக்கி இருக்கீங்க இந்த வாசகசாலைகளை.
ஆமாம், அங்கே உங்கட ஊர்லேயும்
ஒரு தின்னவேலி இருக்கோ?
'சுடுதண்ணி குடிச்ச நாய்'
எனக்கு ரொம்பப் பிடிச்சது:-)
ரொம்ப நன்றி துளசியம்மா:-)
ஆமாம், எங்கள் நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள், தமிழகத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்டிருக்கின்றன.
யோவ், நான் சொன்னதும் நீர் சொன்ன கோண்டாவில் மாவீரர் படிப்பகமும் ஒண்டுதான். சுதுமலைப்பக்கத்தால வந்து ஏறி இடப்பக்கம் திரும்பிப் போக வேணும். றோட்டுக்கரையோட கிடக்கு. எல்லாம் குழம்பிப்போச்சு.
உவங்கள் கூப்பிடு தூரத்துக்கொரு ஊர்ப்பேரை வைச்சுக்கொண்டு.... பெரிய கரைச்சலப்பா.
//வசந்தன்(Vasanthan) said...
யோவ், நான் சொன்னதும் நீர் சொன்ன கோண்டாவில் மாவீரர் படிப்பகமும் ஒண்டுதான்.//
அப்ப ஏன்காணும் தாவடி எண்டு சொன்னனீர்?:-)
போன வருஷம் ஊருக்குப் போனபோது மாவீரர் படிப்பகம் இருந்த இடம் ஆமி காம்ப் ஆக இருந்தது. இந்தவருஷம் போனபோது அந்த காம்ப் இல்லாம ஒரு குடும்பம் குடியிருக்குது. பக்கத்துவீடு இன்னமும் காம்ப் ஆக இருக்குது.
பிரபா,
நீங்கள் சுற்றித்திரிந்த அதிக நூலகங்களிலும் நானும் சுற்றித்திரிந்திருக்கின்றேன். சுன்னாகம் நூலகத்தில்தான் அதிகம் நேரம் செலவழித்திருக்கின்றேன்.
/படிக்கப் போற சாட்டில செம்பருத்தி படத்தில பிரசாந்துக்கு யார் ஜோடி எண்டு தேடினதுதான் மிச்சம் ./
உங்களை மாதிரித்தான், 'ரோஜாவின் தாய்க்குலம்' என்பதை நான் ரோஜாவின் தாயின்ரை பெயர்தான் குலம் என்று நீண்டநாளாய் நினைத்துக்கொண்டிருக்க, இல்லையடா நடிகைகளின்ரை தாய்மாரை பொதுவாய்-தாய்க்குலம் என்று- சொல்லுவினம் எண்டு பெரிய பெடியங்கள் எனக்கு சினிமா கிசுகிசு எல்லாம் எப்படி வாசிப்பது எண்டு (இன்னும் பொதுவில் சொல்லமுடியாத வேறு விடயங்களும் :-) ) எல்லாம் கற்றுத்தந்தவங்கள். இப்ப அசின் மாதிரி அப்ப எனக்குப் பிடித்த நடிகை ரோஜாவாக்கும்.
....
/நான் சொன்னதும் நீர் சொன்ன கோண்டாவில் மாவீரர் படிப்பகமும் ஒண்டுதான். /
நீங்களும் வசந்தனும் சண்டைப்பிடிக்கின்ற உந்த படிப்பகமும் நினைவில் இருக்கிறது. வயது குறைவாய் இருந்தபடியால், உள்ளே போகாவிட்டாலும் (ஓலெவல் படிக்கிற ஆக்களும் மேலே படிக்கிற ஆக்களுந்தான் அப்ப அனுமதி இருந்தது)வீதியால் கடந்து போகும்போது -அதுவும் மாலைப்பொழுதில்- நல்ல வெண்மணல் பரந்து கிடக்க, ரீயுப் லைட்டுடன் படிக்கும் சனங்களைப் படிக்கும்போது... கெதியாய் ஒலெவலுக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.
....
நல்ல பதிவு பிரபா. ஏதோ இப்படியாவது நினைவுகளை மீட்ட முடிகின்றது என்பது இதந்தருகின்ற விடயந்தான்.
//டிசே தமிழன் said...
இப்ப அசின் மாதிரி அப்ப எனக்குப் பிடித்த நடிகை ரோஜாவாக்கும்//
ஆகா, என்னைப் போல பிஞ்சில பழுத்தது ஒண்டும் இருக்குது:-)
டி சே, இந்த நினைவுஎச்சங்கள் தானே எங்களின் நல்ல நண்பன் இப்போது.
பிரபா!
மழைக்குப் பள்ளிக்கூடமொதுங்காதவனும்;வாசிகசாலை எனும் சனசமூகநிலையம் ஒதுங்காமல் விடமாட்டான். அதுகும் ஒரு பள்ளிக்கூடமே!!!இது எமது வேலிக்கலாச்சாரம் போன்றது; தான்.வாசித்தலுடன்;வானொலி,விளையாட்டு;;பின் தொலைக்காட்சி வசதியுடன் கூட இவை இயங்கியதால்; அதன் மரியாதை தனியே! நூலகமென்று கூறினாலும்;"யாழ்-நூலகம்" எனக்கு வாசிகசாலையே!!!!" சிரித்திரன்" -புட்டுக்குழல் பகிடி வாசித்துச் குலுங்கிச்சிரிக்க; அவ்விடம் கண்காணிப்புக்கு நின்ற அண்ணன் ,சிரிக்கக்கூடாதெனக் கூறிவிட்டு; நான் பார்த்துச் சிரித்த பகிடியை பார்த்துவிட்டு;கொடுப்புக்க சிரிச்சுக்கொண்டு;போனது. இன்றும் மறக்க முடியவில்லை.நாச்சிமார் கோவிலடி,பொற்பதி,சீனியர் ஒழுங்கை;
தின்னவேலி சந்தி(திருநெல்வேலி)என ஒருகாலம்;வாசிப்புக்குக் தேடி அலைந்து,பின் முல்லைத்தீவு;ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியது.அடுத்த கட்டம் நீர்கொழும்பு;வெளிநாடு புறப்படுமுன் பதுளை- அங்கே தமிழர்கள் பலர் வசதியாயிருந்ததாலும்;வியாபாரிகளான தாலும்;வாசிகசாலை வரமாட்டார்கள். விரல் விட்டெண்ணக்கூடியவர்களுக்காக பல தமிழ்ப் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வாங்கப்படும்; அந்த நூலகர்;எனது வாசிக்குமார்வத்தைப் பார்த்து; இரவு வீட்டுக்குக் கொண்டு சென்று படித்து விட்டுக் காலையில் வேலைக்குச் செல்லும் போது கொணர்ந்து;தரும்படி சலுகை செய்தார். அவர் ஓர் சிங்கள அன்பர்.அது ஒரு காலம்
பாரிஸ் வந்து இங்குள்ள; CENTRE GORGES pompeudu நூலகம்;கதிரவேற்பிள்ளை தமிழ் அகராதி பார்க்கச் சென்றதுண்டு. இப்போ சந்தேகங்கள் இணையத்தால் ,தீர்க்கின்றோம். அன்று நன்கு உதவியது.
இவை இலகுவாக மறக்கக்கூடிய விடயங்களில்லை. இதைத் தாண்டாமல் எவருமே வந்திருக்க முடியாது. நினைவை மீட்க வைத்ததற்கு நன்றி
யோகன் பாரிஸ்
வணக்கம் யோகன் அண்ணா
வழக்கம் போன என் நினைவுத் தூண்டிலைப் போட்டு உங்கள் சுவையான அனுபவங்களையும் எடுத்துவிட்டேன். நீங்கள் சொல்லுவது போல வாசிகசாலை என்பது எங்கள் வாழ்வில் வந்துபோன ஒரு உறவு.
அருமையான படைப்பு என்றும் எங்கள் யாழ்ப்பாண மண்வாசனையை மறக்கமுடியாது.
மறக்கவும் கூடாது....
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள் மயூரேசன்
//சே யார். செயவர்த்தனா என்ன சொல்லுறான்" என்ற முனைப்போட கொடுக்குக்குள்ள சுருட்டை வச்சுக் கக்கினபடி..//
வாழ்த்துக்கள்! சிறு திருத்தம் ஒன்று.. கொடுப்புக்குள்ள சுருட்டை வச்சு... :)
பிரபா!
தாவடி வாசிகசாலை இளைஞர்கள் சிலரை ஒரு காலகட்டத்தில் எனக்கும் தெரியும். மிகத்திறமைசாலிகள். எந்தவொரு பொது உதவியும் கிடைக்காத காலத்தில், தொலைக்காட்சிப் படம் காட்டி, பெற்ற வருமானத்தில் மிகச்சிறப்பாக நடத்தினவர்கள். அச்சந்தர்ப்பத்தில் நானும் முடிந்தவரை அவர்களுக்கு உதவியுள்ளேன் என்பதை இப்போது நினைக்கையில் ஒரு ஆத்மதிருப்தி.
வணக்கம் சோழியன்
எழுத்துப் பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். இப்போது திருத்திவிட்டேன்.
வணக்கம் மலைநாடான்
தாவடி வாசிகசாலையின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
இந்த இடுகை சுட்டியை தந்ததிற்க்கு நன்றி பிரபா..வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் வித்தையை கொஞ்சம் சொல்லித்தாங்களேன்
:)
வணக்கம் அய்யனார்
வருகைக்கு நன்றி, கவிஞரே என்னிடம் ஆலோசனை கேட்கலாமா ;-)
2007 ஆம் ஆண்டு பதிவை 2010 ம் ஆண்டில் படிக்கிறேன். அனுபவங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்திறதுக்கும் ஒரு திறமை வேணும். வாழ்த்துக்கள் கானா.
மிக்க நன்றி பிரகாஷ்,
Post a Comment