இப்படியும் ஒரு காலமிருந்தது - சி.மெளனகுரு
நூல் நயப்பு : கானா பிரபா
“இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி!”
இந்த நூலின் அடி நாதமும் அதுதான். ஈழத்து, தமிழக எழுத்தாளர் பலரது நனவிடைதோய்தல்களைப் படித்த அனுபவத்தில், வித்தியாசமானதோர் வாழ்வியல் பயணத்தைப் படித்த திருப்தியோடு பெருமூச்சும் எழுகின்றது.
ஒரு காலகட்டம் வரை தமிழ் என்ற ஒரே குடைக்குள் வாழ்ந்த இருவேறுபட்ட மதத்தவர்களின் பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்கள் எவ்விதம் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன என்பதைத் தன் அனுபவப் பகிர்வுகளினூடாகக் காட்டுகிறார் பேராசிரியர் சி.மெளனகுரு.
மொத்தமாகப் பதினைந்து கதைகள் என்ற தலைப்புகளில் அமையும் ஒவ்வொரு அங்கங்களிலும் தன்னோடு வாழ்ந்தவர்கள், தன்னை வளப்படுத்தியவர்கள், என்று பயணித்து தனக்கு உயிர் கொடுத்தவரோடு நிறைவு செய்கிறார். அத்துணை பேரும் முஸ்லீம் சமூகத்தினர், அப்படியானதொரு இனப் பாகுபாடு பாலர் வகுப்பில் புகுத்தப்பட்டதைக் கூட விசனத்தோடு பதிவு செய்கிறார்.,
ஆகவே இவை கதைகள் அல்ல, மெளனகுரு அவர்களின் சுயசரிதையின் ஒரு பாதி எனலாம்.
மொழி பதிப்பகத்தினூடாக மே 2025 இல் வெளிவந்திருக்கும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் அரங்கம் வாராந்த சஞ்சிகையில் வெளிவந்தவை.
இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும், உயர் ரக அச்சுப் பொதியும் நயக்கத்தக்கது. அத்தோடு ரக்க்ஷானா ஷரிபுத்தீன் கொடுத்த ஓவிய வரைவும், கோபிஹரினின் கூட்டுப் பங்களிப்பும் நூலின் பாங்கை எடுத்த எடுப்பிலேயே காட்டி நிற்பது ஒரு தேர்ந்த நூல் வடிவமைப்புக்கான சான்று. இங்கேயும் இரு இனங்களின் இணைவு அமைந்திருப்பது எதேச்சையானதோ?
தனக்கு இருதய சிகிச்சை கொடுத்து மறுவாழ்வு தந்த டாக்டர் லாஹி அவர்கட்கு நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
மட்டக்களப்பின் அமிர்தகளியில் தொடங்கி மட்டக்களப்பு நகரம், வந்தாறுமூலை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெளிச் சமூகம் என்பவற்றில் தான் கண்ட மனிதர்கள், வாழ்க்கை முறைகள், மனித உணர்வுகளையும் உறவின் ஆழத்தினையும் ஆவணப்படுத்தியிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த வாழ்வியல் வரலாற்று ஆவணம் இரு இனங்களுக்கிடையிலேயான பிரிவினையற்ற தூய நட்பும், நேசமும் அவர் சந்தித்த மனிதர்களை வைத்து அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தோட்டமாக, குறிப்பாக இஸ்லாமியச் சகோதர்களை முன்வைத்தே எழுதப்பட்டிருந்தாலும் பிரச்சார அல்லது போதனை நொடியற்ற உணர்வுகளின் பரிமாறலாகவே அமைந்திருக்கின்றது. அதனாலோ என்னமோ ஒவ்வொரு அங்கங்களையும் படித்து முடித்து விட்டு அதை நினைத்து மனதில் சிலாகித்து ஆசுவாசப்படுத்திவிட்டே நகர முடிகின்றது.
பொதுவாகத் தமிழர்கள் தம் வாய்க்குள் நுழையும் பெயரையே தக்க வைத்துக் கொள்ளும் பண்பை மம்மது கடையும், கச்சிக் காக்காவும் இன்னும் சிலரும் என்ற பதிவில் தொடக்கி, கச்சிக் காக்கா எவ்வளவு தூரம் தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்ததைக் காட்டுகிறார்.
அவரைப் போலவே பாய்க் கார கிறீன் காக்காவும், இப்படி சமூகத்தின் எளிய மனிதர்களைத் தன் வீட்டுக்காரராகப் பிணைத்து வாழ்ந்த காலத்தை நினைத்தால் வியப்பாக இருக்கின்றது.
வினாசிப் பரிசாரியாரின் தலைமுறை இன்று எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து முடிக்கும் பதிவில் ஈசிப்பாசியாரின் (யூசுப் ஹாஜியார்) கை வைத்தியத்தையும் காட்டி எவ்விதம் இவ்விரு வைத்தியர்களும் முஸ்லீம், தமிழர் என்ற திரைகளைக் கடந்து வைத்திய சேவையாற்றினார்கள் என்பதைக் காட்டுகிறார்.
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் “குந்தவை நாச்சியாராக” நடித்த கதை, அர்ச்சுனனாக வேடம் பூண்ட அமீர் அலி, புத்த பிக்குவாகத் தோன்றிய மூதூர் ஹயாத்து முமீன் போன்றோர் நடித்த வெவ்வேறு நாடகங்களின் பின்னணி வரலாற்று அனுபவங்களையும் பதிந்திருக்கிறார்.
1956 ஆம் ஆண்டு இனக்கலவரத்துக்கு முந்திய காலத்து “கல்லுப்பிள்ளையார் கோயிலடியும் மாதா சொரூபத்தை வரவேற்ற மூவின மக்களும்” பதிவிலே மூவின மக்களைப் பிரித்தது இனக் கலவரம் என்ற ஈனக் கலவரத்தை வேதனையோடு பகிர்கின்றார்.
முஸ்லீம் எழுத்தாளர் சமூகத்தின் மிக முக்கியமான கிழக்கிலங்கை ஆளுமைகளோடு அவருக்கிருந்த நட்பும், அந்த ஆளுமைகளின் பள்ளிக் காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்ப் பாட நெறியிலேயே அதி திறமைச் சித்தி பெற்ற பான்மையும் பதிவாகியிருகின்றது.
அவ்விதமே இப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட வாசகத்தைச் சொன்ன பதிவில் சுபைர் இளங்கீரனையும், எச்.எம்.பி.முகைதீனையும் காட்டுகிறார்.
இவர் அடையாளப்படுத்தும் மனிதர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் எங்கிருக்கிறார்கள், உயிரோடு தான் இருக்கிறார்களா என்ற நப்பாசையில் அவ்வப்போது கூகிளிட்டும் பார்த்தேன்.
அவ்விதமாக அறிந்து கொண்ட ஒரு ஆளுமை, சிங்கள மேடை இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான சரத் சந்திரா. அவரின் ஆற்றுகைக்கு அழைத்துச் சென்று தனக்கு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த கொக்கிறாவை மீரா சாஹிப் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டதை எழுதும் போது அவ்வுணர்வை நமக்கும் கடத்துகிறார்.
75 ஆண்டுகளுக்கு முந்திய தன் வரலாற்றுப் பதிவுகளை அச்சொட்டாகப் பெயர்களை ஞாபகம் வைத்து, தன் மாணாக்கர் உட்பட எழுதுவது என்பது பெரு வியப்புக்குரிய செயல் அதை பேராசிரியர் வெகு இயல்பாகக் கடத்துகிறார் அதனால் தான் அவர் வெகுஜனங்களில் ஒன்றாக இன்று வரை கொண்டாடப்படும் ஆளுமை.
“இந்த நாட்டின் கல்வித் திட்டமும், இனவாதமும், மதவாதமும், அரசியலும் இவர்களைப் பிரித்தே விட்டன. ஒன்றாக வாழ்ந்தவர்கள் பிரிந்த சோகக் கதை அது!”
என்றொரு பதிவில் பேராசிரியர் சி.மெளனகுரு குறிப்பிடுவதை எல்லாப் பதிவுகளின் முடிவிலும் பொருத்திப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடிகின்றது.
கானா பிரபா
23.07.2025
0 comments:
Post a Comment