அப்போது அம்மா படிப்பித்த, நான் படித்த இணுவில் அமெரிக்கன் மிஷன் பாடசாலைக்கு மலையகத்தில் இருந்து இடம் மாறினார்கள் ஞானசேகரம் மாஸ்ரரும் அவரின் மனைவியும். மூன்றாம் வகுப்பு கணிதப் புத்தகத்துக்கெல்லாம் உறை போட்டுத் தருவார் திருமதி.ஞானசேகரம் ரீச்சர்.
ஞானசேகரம் மாஸ்ரர் தான் ஒழுக்கத்தை எனக்கு முதலில் பாடமெடுத்தது. அவர் எங்கள் வகுப்பாசிரியர் ஆனதும் ஒழுக்கம் தான் முதல் பாடம். ஒருமுறை "வாத்திமார்" என்று வாய் தவறிச் சொல்லி விட்டேன் என்று என்னை இழுத்துப் பிடித்து என் கையாலேயே என் கன்னங்களில் அடிக்க வைத்துத் தண்டித்தார். ஆனால் "என்ர பிள்ளையள்" என்று தன் வகுப்புப் பிள்ளைகளை விட்டுக் கொடார். ஒருமுறை அவர் என்னக் கோலியாத் ஆக நடிக்கச் சொல்லி தாவீது (நடித்தவன் சுதா) கல்லெறிய அது என் நெற்றியில் பட்டு விழ வேண்டும் என்று நடிப்புச் சொல்லிக் கொடுக்க நான் அந்தக்காலத்து வில்லன் சத்தியராஜ் நடிப்பெல்லாம் போட்டு அவரிடம் கை தட்டு வாங்கியிருக்கிறேன்.
அப்பாவின் இறுதி நிகழ்வு வீட்டுக்கிருத்தியத்துக்காக அவரை வெகு காலத்துக்குப் பின் சந்தித்தேன். கைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஆசையாகப் பேசினார்.
“எனக்கு நீர் தான் சாப்பாடு
போட்டுத் தர வேணும்”
என்று குழந்தைப் பிள்ளை போலச் சொன்னார்.
அன்று நிகழ்வு அமளியில் அவரே சாப்பாடு போட்டுச் சாப்பிட்டுட்டு வந்து
“எனக்கு நீர் போட்டுத் தரேல்லை”
என்று சிரித்தார்.
இம்முறை தாயகப் பயணத்தில் நானும், அம்மாவுமாக ஞானசேகரம் மாஸ்டர் , ரீச்சரைப் பார்க்க நெட்டிலிப்பாய் பிள்ளையாரடிப் பின் பக்க வீதிக்குப் போனோம். அவர்களின் வீடு கூட மறந்தது போலிருந்தது. அயலில் இருந்தவர்களிடம் விசாரித்தோம்.
“அவையள் இப்ப இங்க இல்லையே”
என்றார்கள். ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
இன்று ஞானசேகரம் மாஸ்டர் லண்டனில் காலமான செய்தி கிடைத்திருக்கிறது.
போய் வாருங்கள் மாஸ்டர். 🙏
0 comments:
Post a Comment