குரல் தான் என் வழிகாட்டி
அது சொன்ன வழியில் தான்
என் வாழ்க்கை அமைந்தது,
ஆனால்.....
2022 ஆம் ஆண்டில் பாடகி Céline Dion தன் உலகச் சுற்றுலாவுக்குத் தயாரான வேளை அவருக்கு Stiff Person Syndrome (SPS) என்ற நோய்க்கூறு பீடிக்கப்பட்டதை அடையாளம் காண்கிறார்.
கணவன் René-Charles Angélil ஐ 2016 இழந்த மன உளைச்சலில் ஒரு புறம்,
பால்ய வாழ்வில் இருக்கும் மூன்று பிள்ளைகள் ஒருபுறம்,
இன்னொரு புறம் நோயோடு போராடுதல்.
இவற்றோடு தன்னுடைய குரலை மெல்ல மெல்ல இழந்து சூனியமாகிப் போய் கொண்டிருக்கும் ஒரு உலகப் புகழ் பூத்த பாடகி என்ற பெரும் உச்சத்தில் இருந்து சரிந்து விழும் மன உறுதி
என்று அவரின் வாழ்க்கையே கடந்த 2 வருடத்தில் புரட்டிப் போடுகிறது இந்த நோய்.
“நான் வாழ் நாள் முழுக்கப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்”
இது பதின்ம வயது செலின் டியானின் வாக்குமூலம்.
அப்படியே இந்த ஆவணப் படத்தில் தொடங்கும் அது,
“எனக்கு இந்தச் சவாலைக் கடக்க முடிவது கடினம் என்று தெரியும்
ஆனாலும் போராடுவேன்,
மீண்டும் பாடுவதற்காகப் போராடிக் கொண்டே இருப்பேன்”
அப்படியே முடிகிறது.
“என்னால் நடக்க முடியவில்லை”
“என்னால் ஓட முடியவில்லை”
“என்னால் துள்ளிக் குதிக்க முடியவில்லை”
ஒரு காலத்தில் துள்ளிக் குதித்து, மேடையில் ஆர்ப்பரித்த அந்த ஸ்ப்ரிங் உடம்பா இப்படி இறுகிப் போய்க் கிடக்கிறது?
அப்படியே காட்சிகள் மாறி மாறி செலினின் பழைய உலகத்துக்கும் புது உலகத்தும் பாய்ந்து பாய்ந்து பயணிக்கிறது.
“ஒரு இசைக் கச்சேரியை ரத்துச் செய்வதன் வலியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா?”
“பாடுவது ஒரு உள்ளார்ந்த இன்பம் என்றால்
மேடைக் கச்சேரி என்பது அந்த இன்ப ஆர்ப்பரிப்பின் உச்சம்
என்பேன்”
பாட்டுக் கச்சேரியில் பாடகர் பாட்டு வரிகளை மறந்தாலும் பரவாயில்லை அதுதான் இருக்கவே இருக்கிறார்களே
கூடி நின்று ஆர்ப்பரித்துக் கூடவே பாட இருக்கும் ரசிகர்கள்
அவர்கள் கை கொடுப்பார்களே?
இப்படியாக செலின் தன் பழைய வாழ்வின் அற்புதத் தருணங்களை நினைத்துப் பூரிக்கிறார்.
ஒலிவாங்கியை நீட்டி அந்தப் பல்லாயிரம் ரசிகர்களைப் பாட வைத்து அழகு பார்க்கிறார்.
தான் ஒவ்வொரு பாட்டுக் கச்சேரிகளிலும் போட்டு அழகு பார்த்த பாதணிகள், உடைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்து ஆசை பார்க்கிறார்.
"உலகமெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன் ஆனால் இசை மேடைகளைத் தவிர எதையுமே பார்த்ததில்லை"
பழைய செலின் போலப் பாடிப் பார்க்கப் பார்த்து உடைந்து போய் விழும் அந்த ஒலி நயத்தை வேதனையோடு பிரதிபலிக்கிறார்.
உலகத்தில் எத்தனை உச்சபட்ச விருதுகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் ஒருமுறையல்ல பலமுறை சுவீகரித்த பாடகி.
மேடையில் அவரின் குரல் ஜாலம் என்பது ஒரு இசைக்கருவியின் பல்பரிமாணம் போல மிளிர்கிறது. அதையும் காட்சி பகிர்கின்றது.
ஈட்டியால் குத்தித் துளைப்பது போல வலியால் துவண்டு மரண வேதனையோடு தன் சிகிச்சைக்கு முகம் கொடுக்கிறார் செலின்
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி;
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”
கவியரசு கண்ணதாசனின் வரிகள் வெறும் வார்த்தை ஜாலமல்ல.
அனுபவ முத்திரைகள்.
நமக்குக் கிடைத்த இந்த நிமிடம் கூட ஆசீர்வதிக்கப்பட்டது.
அதை நாம் முழுமனதோடு அனுபவிக்க வேண்டும்.
I Am: Celine Dion ஆவணப் படத்தைப் பார்த்த பின்னர் நள்ளிரவு தொடும் அந்தச் சூழலில் இந்த ஜீவனுக்காக ஒவ்வொரு உயிர் அணுக்களும் அழுவது போல உணர்கிறேன்.
ஏனெனில்
என் புலம்பெயர் வாழ்வில் தாயகத்தின் இனிமைத் தொலைத்த அந்தத் தனிமையிலே, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்து கொண்டே படித்த காலத்தில், அந்த வேலைத்தளத்தின் குட்டி வானொலி நள்ளிரவு கடந்து ஏதோவொரு பண்பலை அலைவரிசை வழியாக அந்த விடிகாலைக் குளிரின் கதகதப்போடு
கொண்டு வரும்
My Heart Will Go On
https://www.youtube.com/watch?v=9bFHsd3o1w0
செலினுக்காக மனசுக்குள் அழுதேன், இப்போதும் கூட.
I Am: Celine Dion தற்போது Prime Video வில் வெளியாகியிருக்கிறது.
கானா பிரபா
12.07.2024
0 comments:
Post a Comment