நம் தமிழ்சமூகத்தில் காலாகாலமாகப் பேணப்பட்ட வாழ்வியலின் மீறல்களை நாவல் இலக்கியம் அளவுக்குத் திரை இலக்கியம் அதிகம் அரவணைக்கவில்லை. மாறாக மலையாளத் திரைச் சித்திரங்களில் இவ்விதமான கட்டுடைப்புகளை சீரியஸான படைப்புகளாகவோ அல்லது நகைச்சுவை கூட்டிக் கொடுத்தவையாகவோ வந்திருக்கின்றன.
தமிழில் அவ்வப்போது “விடுகதை” படம் போல உருவாக்கப்பட்ட முழு நீள சீரியஸ் சினிமாக்களின் வர்த்தகத் தோல்விகளும் இப்படியான முயற்சிகளுக்கு முடிவு கட்டி விட்டன.
“யாதும் யாவரும்" படத்தைப் பொறுத்தவரை நாம் காணும் உலகில் நிகழும் உறவுச் சிக்கல்கள், ஒற்றைப் பெற்றோரின் மன உணர்வுகள் போன்றவற்றை மிகவும் யதார்த்தமாகப் படைத்திருக்கிறது எனலாம்.
படத்தின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெவ்வேறு விதமான நேசிப்புத்தனம் மிக்கவர்களாக, அவர்களை நியாயபடுத்தக்கூடிய அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களில் அந்த “விக்ரமின் அம்மா” கூட விதிவிலக்கு அல்ல.
“யாதும் யாவரும்” காட்சி முடிந்து பல மணி நேரம் கடந்தும் அந்தந்தப் பாத்திரங்கள், அவர்களின் உறவுமுறைகளை இப்போது நினைத்தாலும் ஏதோ நாம் நேரில் சந்தித்துப் பழகிய மனிதர்களைச் சந்தித்து விட்டு வந்தது போல மனப்பிராந்தி எழுகின்றது.
தாய், மகள், அவர்களின் நண்பி என்று நீண்டு விக்ரமின் குடும்பம் வரை அது தொட்டு நிற்கின்றது.
இவ்வளவுக்கும் இந்தப் படத்தில் நடித்த ஒரு சிலர் தவிர மீதிப் பேர் மரபு வழி வந்த நடிகர்கள் அல்ல, இதுதான் அவர்களுக்கு முதல் திரை அனுபவம். ஆனால் அந்தக் குறையே இல்லாத அளவுக்கு நேர்த்தியான, யதார்த்தபூர்வமான நடிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார்கள். வசன அமைப்பிலும் ஒவ்வொருவரின் குணாதிசியம் வெளிப்படும் வண்ணம் நடிப்பு மிளிர்கின்றது.
திடீரென்று வரும் விக்ரமின் குடும்பம் அதுவரை படத்தின் ஓட்டத்துக்கு மாறுபாடான காட்சி மற்றும் வசன அமைப்பில் வந்தாலும், நாடகத்தன்மை இல்லாத திரைமொழிக்கேற்ப அந்தக் காட்சி அமைக்கப்பட்டதால் தான் பார்வையாளர் மத்தியில் வெடிச்சிரிப்புகள் எழுந்தன. அது எப்படி இந்தப் படத்தில் இணைந்து கொண்ட எல்லோருமே நிறைவாக, ஒருமித்துப் பங்களித்திருக்கிறார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகின்றது.
ஒவ்வொரு பாத்திரங்களின் நுண்ணிய உணர்வுகளுக்கு அனுதாபம் தேடும் காட்சி அமைப்போ வசனங்களோ இல்லாது நடைமுறை வாழ்வியல் இந்த மாதிரியான சிக்கல்களை எவ்வாறு நாம் கையாள்வோமோ அவற்றைக் கச்சிதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பல்லின கலாச்சாரச் சூழலில் சந்திக்கும் உறவுத் தேடல்களின் பிரதிபலிப்பாகக் கேரள சமூகமும் இந்தப் படைப்பில் இணைந்து புலம்பெயர் வாழ்வியலின் கண்ணாடியாகக் காட்டுவது ஒருபுறமென்றால், இந்தப் படத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட இளைய சமுதாயம் தேர்ந்தெடுக்கும் ஒரு பாலின உரிமை குறித்த பார்வையை மிகுந்த பொறுப்புணர்வோடு கையாண்டிருக்கின்றார் இயக்குநர்.
தொடக்கத்திலே வரும் “நீ தாயா” https://www.youtube.com/watch?v=mmhpCNWrPSQ பாடல் விரியும் போதே சிலிர்த்து விட்டது, இந்தமாதிரி உணர்வைப் நம்மவர் படங்களில் காண்பதே புது அனுபவம். போதாக்குறைக்கு அரங்கத்தில் இருந்த இள வட்டங்களில் இருந்து பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்கார் எல்லோருமே ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவைக்குப் பலமாகச் சிரித்தும், காட்சிகளில் பட்டென்று தெறிக்கும் வசனங்களுக்குக் கைதட்டி மகிழ்ந்தும் பார்த்ததை உணர்வதும் கூட உள்ளூர மகிழ்வை எழுப்பியது.
“யாதும் யாவரும்” படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் இடம், பொருள், ஏவல் கொண்டு கச்சிதமாக ஒட்டிக் கொண்டது மட்டுமல்ல, அவை மூன்றும் மூன்று பரிமாணங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்குப் படத்தின் முடிவிலும் எழுந்து போக முடியாமல் இரண்டு வகையான பாடல்களின் கோவை அமைந்ததும் சிறப்பு.
பின்னணி இசை காட்சிகளோடு பின்னிப் பிணைந்து வலுவூட்டுகிறது. சில இடங்களில் அமைதி காத்து, ஓய்வெடுத்து வெளிப்பட்டிருக்கலாம். அப்போது காட்சியின் வீரியத்தையும், ஒலியமைப்பின் ஆளுமையையும் உய்த்துணர இன்னும் வசதியாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவில் உள்ளரங்கக் காட்சிகளோடு போட்டி போடும் வெளிப்புறப் படப்பிடிப்பில் சிட்னியின் அழகைத் திரட்டித் திரையில் பார்ப்பதே இன்பகரமானதொரு அனுபவம்.
படத்தின் ஆரம்பத்தில் அமைந்த காட்சி மற்றும் உடையலங்காரப் போட்டியோடு அமைந்த காட்சி இவற்றுக்குப் பயன்பட்ட Green mat தொழில்நுட்பத்தை இன்னும் நுட்பமாகக் கவனித்திருக்கலாம்.
ஆரம்பத்தில் ஒரு கதையோடே தட்டையாகப் போகப் போகிறதோ என்ற உணர்வு எழுந்த நிலையில் அந்த ஒரு கதை பல கதைகளின் திறவுகோலாய் அமைந்து, ஒரு எதிர்பாராத திருப்பத்தையும் கொடுத்ததை நிச்சயமாக அதிகம் பேர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அங்கே தேர்ந்த திரைமொழிக்கான உழைப்புத் தெரிகின்றது.
“பொய்மான்” திரைப்படம் எப்படி ஒரு முழு நீளத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கான தயார்படுத்தலைத் தந்ததோ அதற்கு அடுத்த படைப்பு “யாதும் யாவரும்” அந்தத் தயார்படுத்தலுக்குப் பரிபூரணமான தீனி கொடுத்திருக்கிறது.
தன் முந்திய படைப்போடு போட்டி போட்டு இன்னொரு பரிமாணத்தில் மிளிர்ந்திருக்கும் படைப்பாளி Dr ஜெயமோகன் மற்றும் குழுவினருக்கு படம் பார்த்த பார்வையாளர் மன உணர்வில் இருந்து சொல்ல வேண்டுமென்றால் “சபாஷ்”.
“யாதும் யாவரும்” புலம்பெயர் தேசத்தின் பேசாப்பொருளைப் பேசத்துணிந்த நேர்த்தியான படைப்பு.
கானா பிரபா.
12.1.2023
0 comments:
Post a Comment