இணையப் பெருவெளியில் பாடலாசிரியர்களை ஆழ்ந்து நேசித்து அவர்தம் பாடல்வரிகளைக் கொண்டாடும் ரசிகர்கள் பலருண்டு. இவர்களில் ஒரு ஆச்சரியக்குறியாகத் தென்படுபவர் அன்புச் சகோதரன் ராவன் தர்ஷன். அவருடையவயதுக்கும், ரசனை எல்லைக்கும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தான் மிகநெருக்கமானவர்.
ஆனால் ராவனை ஒரு “வாலி தாசன்” என்று சொன்னால் மிகையில்லை. அவ்வளவுக்கு கவிஞர் வாலி ஐயா மீது ஆழ்ந்த நேசமும், அவரின் கவி வரிகளில்தீராக் காதலும் கொண்டவர்.
அதனால் தான் இந்த இளையவர் மீது பேராச்சரியம் விழுந்தது.
இத்தனைக்கும் தன் வாலியை மட்டுமே தூக்கித் தலையில் நிறுத்தாமல் எல்லாப்பாடலாசிரியர்களின் தனிச்சிறப்பையும் கொண்டாடி வருபவர். அதனால் தான்“நினைவோ ஒரு பறவை” என்ற இவரின் கன்னி முயற்சி, கவிதைத் தொகுப்புக்கும்கவிஞர் வைரமுத்துவும் விரும்பி வாழ்த்துரை கொடுத்திருக்கிறார்.
“நீங்கள் வாலியின் ரசிகர் என்பது எனக்குக் கூடுதல் அன்பைத் தருகிறது” என்றுசொல்லியிருக்கிறார்.
“குழந்தை மனநிலையே கவிதையும் ஆணிவேர். அந்த மன நிலையோடுஎழுதப்பட்ட உங்கள் கவிதைகளை நான் வெகுவாக ரசித்தேன். “ என்று தன்வாழ்த்துரையில் தட்டிக் கொடுக்கிறார் கவிஞர் வைரமுத்து.
“நினைவோ ஒரு பறவை
அந்தப் பறவையை நாம் நம் கால வேக அவசரங்களுக்காய் மனதுக்குள்ளேயேகூண்டு போட்டுப் பூட்டி வைத்திருக்கிறோம். இந்தப் புத்தகம் நமக்கு அந்தப்பரவையைப் பறக்க விட்டு நம் வாழ்க்கையை ஒரு மூன்றாம் மனிதனாய் நாமேபார்ப்பதற்கு அவகாசம் தரும்”
நீதுஜன் கொடுத்த அணிந்துரையோடு இந்தப் புத்தகத்தில் மூழ்கிக் கரை சேரும்போது அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன ராவனின் எழுத்துகள்.
ஒவ்வொரு கவிதைத் தலைப்பின் கீழும் கவிஞர் வாலி அவர்களின் முத்தாய்ப்பாகஈரடி அமைய, அது தனது குருவை வணங்கிக் கவி படைப்பது போல அமைகின்றது. விதிவிலக்காய் திருநாவுக்கரசரிடமும், ஆங்காங்கே ஆங்கிலேயமெய்யியலார்களுடமும் “கூற்று” எடுக்கிறார்.
இந்தக் கவிதைக் கொத்தை வாசித்த போது ஆச்சரியமே மேலோங்கியது, மிகைப்படுத்தி நான் இதனைச் சொல்லவில்லை என்பதை இதேவாசிப்பனுவத்தைப் பெற்றவர்கள் உணர்வர்.
இந்த வயசில் என்ன பிறக்கும்? காதல் கவிதைகளாகக் கொட்டுவார்கள் அல்லவா?
அதுதான் இங்கில்லை.
சித்தார்த்தனும், யசோதரையும்,
தெஸ்லாவும், எடிசனும், ஹிட்லரும், ஜென்னியும், குருஷேத்திரப் போரும், நேருவும், இந்திராவும், கிருஷ்ணதேவராயரும், அக்பருமென்று இன்னும் பல,
இதிகாச,புராண காலத்தோடும், தத்துவஞானிகள், மெய்யியலாளர்களோடும்கலந்துறவாடுகிறது கவிதைப் பாய்ச்சல்.
ஜெயகாந்தனும், ஹென்றியும் கூடப் பேசிக் கொள்கிறார்கள்.
ஒரே கவிதைக்குள் மாறி மாறி இவ்விதம் கீழைத்தேய, மேலைத்தேய சமூகப்பார்வைகள், தர்க்க வாதங்களை அடுக்குவது எனக்கெல்லாம் வாசிப்பில் புதுஅனுபவம்.
நிறைவில் ஒரு நீள் கவிதைப் பாசுரமாய் “பேரின்ப லகரி” யாக காதல் வாழ்த்துஅமைகின்றது.
அங்கேயும் மாமூலாக இட்டுக் கட்டாத வர்ணனை வளம் கொட்டுகிறது.
ஈழத்துக் கவிதை உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மனதில் பதிகிறார்.
அகண்டதோர் விளையாட்டுலகில் எல்லாவற்றையும் அளைந்து பார்த்துச்சந்தோஷப்படும் ஒரு குழந்தையின் மன நிலையில் எழுதப்பட்டிருக்கும் கவிதைச்சித்திரங்கள் இவை.
“நினைவோ ஒரு பறவை”
ராவன் தர்ஷன் என்ற பறவையின் கட்டற்ற கவிதை உலாத்தல் அனுபவம்.
கானா பிரபா
13.04.2023
0 comments:
Post a Comment