இந்த நாவலுக்குள் மூழ்கி ஒரு வாரம் கடந்த பின்னரும் அந்தச் சிந்தாரிப்பேட்டையும், கோசலையுமாகச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். படித்து முடித்த பின்னர் அந்த அட்டைப் படத்தைப் பார்த்த போது அந்தக் கோசலை உயிர்பெற்று பால்கனியில் அமர்ந்த மேகங்களை வேடிக்கை பார்ப்பது போலிருக்கிறது.
பால்யகால வாசிப்பில் என் அம்மாவின் தேர்ந்தெடுத்த புத்தகக் கட்டுக்குள் இருந்தும் என்பதால், லஷ்மி, சிவசங்கரி உள்ளிடவர்கள் நாவல்களும் அப்போது எனக்குத் தீனி கொடுத்தன.
கோசலை பாத்திரத்தின் வடிவமைப்பும், குணாதிசியமும் ஒரு யாதார்த்தபூர்வமான பெண்ணின் வார்ப்பாக இருந்ததால் கதையோட்டத்தை முன் சொன்ன எழுத்தாளர்களின் பெண் பாத்திரங்களோடு ஒப்பிட்டு நகர்த்த முடிந்தது.
ஆனால் இதன் திசை ஒரு கட்டத்தில் சமூக விடுதலை நோக்கிய சிந்தனையும், அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்ணின் சிந்தனையோட்டத்தின் விரிவாக்கலுமாக இந்த நாவல் இன்னொரு திசை நோக்கி நகர்கின்றது. இந்த நூலைப் படிக்கும் வாசகர், குறிப்பாகப் பெண்கள் தன்னெழுச்சி பெறும் அளவுக்கு, கோசலை வலிகளின் வழியே தான் தேடும் இலட்சியப் பயணம் காட்டப்படுகிறது.
கோசலை அன்புவைத்தவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவளின் அன்பு திருப்பிக் கொடுக்க முடியாத விலை மதிப்பானது. அதனால் தான் அவளின் நேசம் தான் சார்ந்த சமூகத்தையே உயர்த்த வேண்டும் என்று பரந்து விரிந்தது.
கோசலையின் இழப்புகள் பெரிது, தான் கொடுத்த அன்புக்காகக் கொடுத்த ஆகப் பெரும் விலை அது.
உன்னைத் தண்டித்த உன்னைச் சூழவிருக்கும் சமூகத்துக்கு நீ கொடுக்க கூடிய ஆகப்பெரிய தண்டனை உன்னை நீ உயர்த்திக் கொள்வது தான் என்பதை நினைப்பூட்டுமாற்போலச் சம்பவ அடுக்குகளின் பலாபலன்கள்.
ஒவ்வொரு பாத்திரங்களையும் உரையாடல்களின் வழியே செதுக்கிய விதமும், ஒவ்வொருவரின் பின்னணியில் இருந்தும் அவரவருக்கு நியாயம் கற்பிக்கும் ஓட்டமுமாக இருக்கிறது. இங்கே காண்பிக்கப்படும் மனிதர்கள் போலித்தனமற்ற நிஜவாழ்வின் பிரதிபிம்பங்கள், அதனால் தான் கோபமும், அனுதாபமும், பச்சாதாபமும் என்று எல்லாமே அவர்கள் மீது கொள்ள வைக்கிறது.
வசன ஒட்டத்தில் ஆங்காங்கே மொழிக்குழப்பம் இருப்பது போலத் தொனிக்கிறது. அதாவது இலக்கண நடையில் இருந்து தாவி சாதாரண மொழி நடைக்கும் கதை பயணிக்கும் போது ஒரு நெருடல் எழுகின்றது.
கோசலை வழியாக நூலகத்தின் பெறுமதியை மீட்டெடுத்துக் காட்டுகிறார் எழுத்தாளர். இன்றைய யதார்த்த உலகில் வாசிப்புப் பழக்கம் அருகிப் போனதைச் சம்பவங்களினூடு கோடிட்டுக் காட்டுகிறார்.
இந்த நாவலைப் படிக்கும் போது கோசலை போன்றவொரு பெண்ணுக்கு ஒரு தன்னம்பிக்கையும், பெண் விடுதலைச் சிந்தனையும் விதைக்கும் அளவுக்கு யதார்த்தபூர்வமாகப் பாடமெடுக்கிறது.
கோசலையை அப்படியே ஒரு நீள் படமாக்கும் அளவுக்கு கனதியான செய்திகளைக் கொண்டிருக்கிறாள்.
அவ்வளவு தூரம் கடந்து போக முடியாததொரு படைப்பு இது.
கானா பிரபா
06.03.2023
0 comments:
Post a Comment