இன்றைய எனது நாளை இனிதாக்கியிருக்கிறது அன்பு உள்ளம் சரஸ்வதி சுவாமிநாதன் தொண்டைநாடு இந்த நூலை முழு மூச்சாகப் படித்து விட்டு வழங்கியிருக்கும் பகிர்வு
கானா பிரபா
அவரின் பகிர்வு இதோ
'வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும்' என்பது ஒரு ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் ஸ்லோகன். ஆனால் 'SPB பாடகன் சங்கதி' என்ற நூலின் ஆசிரியர் கானா பிரபா பல கலைஞர்களை அவர்கள் வாழும் போதே கொண்டாடியவர் என்பது இந்த நூலை வாசிக்கையில் பல கட்டுரைகளின் இறுதியில் கொடுக்கப்பட்ட குறிப்புகளின் மூலம் அறிய முடிந்தது. அது மிகவும் பாராட்டிற்குரியது.
எந்தவொரு கலைஞனனும் பிறரை மகிழ்விக்க தன்னையே ஆஹூதியாக்கி கொள்வான். SPB எனும் கலைஞன், பாடகன் தனது குரலால் என்னைப்போன்று 1975 ல் பிறந்த பலருக்கு அருமருந்தாக இருந்திருக்கிறார் ஆனால் அவைகளை எழுத்தாக்க கானா பிரபா போன்றவர்களுக்கே வாய்த்திருக்கிறது.
எனது அம்மாவோடு நடந்த ஒரு முரணில் ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற எனது முட்டாள்தனத்தை,'ஏழைஜாதி' என்ற திரைப்படத்தில் வரும் இந்த வீடும் உனக்கு சொந்தமில்லை என்று இளையராஜா பாடிய பாடல்வரிகள் மாற்றின. மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் வீட்டின் வெள்ளிக்கிழமை ஒளியும், ஒலியும் அம்முடிவை மாற்றியது என்பதே நிஜம். ( அதனை நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம் ) அந்தப் பாடலை https://www.youtube.com/watch?v=qN6MIqGE5yw இந்த நூல் ஓரிடத்தில் அலசுவது என்னைப் பொருத்தவரை நெகிழ வைத்தது. இதுபோல் பலருக்கும் பலவித அனுபவங்களை இந்த நூல் தரும் என்பது எனது நம்பிக்கை.
இசை இறைவனை அடையும் ஒரு மகத்தான வழி. சினிமா இயல், இசை, நாடகம் மற்றும் பிற கலைகளின் கலவை. அத்தகைய திரைப்படத்துறையிலும், பல தனிப்பாடல்களிலும் கோலோச்சிய கலைஞன் ( குறிப்பாய் கிருஷ்ண கானம் பற்றி நூல் விவரிப்பது மார்கழி குளிர் போன்ற இனிமை ) SPB க்கு மிக உன்னதமான, ஆத்மார்த்தமான அஞ்சலியாக இந்த நூலைப் பார்க்கிறேன்.
இதற்குமுன், 'கானா பிரபா' என்பவரைப் பற்றி அறியாத எனக்கு இந்த நூல் அவரது பிற நூல்களை தேடவும் வழிவகுத்திருக்கிறது. மேலும் எனது நூல்களின் வெளியீட்டில் முக்கிய பங்களிப்பைத் தரும் அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்கள் எந்தெந்த இடங்களில் இந்த நூலை மேம்படுத்தியிருக்கிறார் என்பதை அவரோடு எனக்கிருக்கும் அன்பு, நட்பு, தொடர்பானது பல வரிகளில் / இடங்களில் எனக்கு உணர்த்தியது.
இந்த நூல் ஒரு 360 டிகிரியில் SPB யை தரிசிக்க / உணர உதவுகிறது. கலைடாஸ்கோப் எப்படி ஒவ்வொரு சுழற்சியிலும் பலவிதமான வர்ணஜாலங்களை காட்டுமோ அத்தகைய ஜாலங்களை இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் காட்டுகிறது.
பொதுவாக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் எனில் 500 பக்கத்திற்கு 500 ரூபாய் என்று ஒரு புத்தகத்தை பலர் பக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடுவர். ஆனால் SPB உடன் நாம் மேற்கொண்ட இசைப் பயணத்திற்கும், கானா பிரபா பல பாடலை உள்வாங்கி நமக்கு அதன் பின்பிலத்தை விளக்குவதற்கும், நம்மை அந்தந்த காலக்கட்டத்தின் டைம் மிஷினில் பயணிக்க வைத்தமைக்கும், கடந்த இரு நாட்களாக எனது Wifi இணைய அளவை முழுமையாக பயன்படுத்தி பாடல்களை தேடி, பார்க்க, கேட்க, உணர வைத்து எங்களது 7 நாட்கள் கோவிட் தனிமைப்படுத்தலின் 2 நாட்களை இனிமையாய் கடக்க வைத்தமைக்கு விலையே இல்லை என்பதே நிஜம்.
SPB யை அவரது குரல் மட்டுமன்றி் அவரது பிற தனிப்பட்ட எண்ணம், சொல், செயல்களுக்காகவும் நான் அதிகம் நேசித்ததுண்டு. அவைகளில் ஒன்று அவரது மனம் நிறைந்த ஆசிர்வாதங்களைத் தரும் அவரது குரலும், உடல்மொழியும் அவர் விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பல சிறு பிள்ளைகளை ஆசிர்வதிக்கும் போதும் அந்த ஆசிர்வாதம் என்னையும் ஏனோ சிலிர்ப்பூட்ட வைக்கும் அது Make belief, Myth என்று கூட சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால் பல இடங்களில், :கானா பிரபா' சில வரிகளில் SPB யைப்பற்றி எழுதியவைகள் அதே சிலிர்ப்பை எனக்கு தந்தது எனில் அது பூரணம் / சத்தியம் போன்றவைகளை எவர் உணர்ந்தாலும், எவர் எழுதினாலும் அது பூரணம் / சத்தியமாகவே இருக்கும் என எனக்கு உணர்த்தியது. அத்தகைய வரிகளை இங்கு விளக்குவதைவிட அவைகளை நீங்களே தேடி, "யுரேகா...யுரேகா..." என கூவினால் சிறப்பு என்பதே எனது விருப்பம்.
Detailing, Facts & Figures, Presentation, Interpretation, Conclusion, Sum-up போன்றவையே ஒரு கட்டுரையை அழகுறவும்,தனித்துவமாகவும் காட்டும். பலரை வசீகரிக்கும். அத்தகைய வசீகரத்தை இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் காண முடிகிறது.
இந்த நூலைப் பெற்றவுடன் T. ராஜேந்தர் - SPB என்ற கூட்டணியை இந்த நூல் தொட்டிருக்குமெனில் அது முழுமையானது என ( எனது பால்யவயது நினைவுகளினால் ) நினைத்தேன் அதனை நூலின் உள்ளடக்கத்தின் வரிசையில் கண்டதும் ( 38 வது கட்டுரையாக ) அதனை முதலில் படித்த பின்பே நூலை முதலில் இருந்து தொடர்ந்தேன். இப்படி பலருடைய ரசனைக்கும், தேர்வுக்கும் பலவிதமான Fuel இந்த நூலில் உள்ளது.
Maestro Music போல SPB music என ஒரு app ஒன்று இத்தகைய SPB ஆர்வலர்களோடு கைகோர்த்து எதிர்வரும் காலத்தில் ஒன்று வருமெனில் அது காற்றில் கலந்து பல்லாண்டு நிலைத்திருக்கும். எனது கனவு மெய்ப்பட , பெரிய கடவுள் துணைபுரியட்டும்.
நிறைவு,
திருப்தி,
போன்ற வார்த்தைகளே இந்த நூலுக்கான பொருத்தமான விமர்சனமாக இருக்கும்.
ஆசிரியர் கானா பிரபா அடுத்து புரட்சி கலைஞர் விஜயகாந்த் குறித்து எழுதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதுவும் பலரை அடைந்து அவருக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கட்டும் என்று எனது சத்குருநாதனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்கள் கானா பிரபா.
என்றென்றும் அன்புடன்,
தந்தையின் பணியில்,
சரஸ்வதி சுவாமிநாதன்.
9710572504
tnswamynathan@gmail.com
குறிப்பு :
இந்த நூலின் அத்தியாயங்கள் 52 என்பதால் இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு கட்டுரையாக மீள் வாசிப்போடு, பாடல்களை தேடி கேட்டால், 2022 இனிமையாக எனக்கு நகரும் என்றே தோன்றுகிறது.
சரஸ்வதி சுவாமிநாதன் தொண்டைநாடு
1 comments:
தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நன்றிகள் பல.்
Post a Comment