கேசவராஜன் அண்ணர் மறைந்து விட்டார் என்ற செய்தியை சகோதரி ஷாலினி வழியாக அறிந்த போது என் உடம்பெல்லாம் ஒரு கணம் குளிர் அடித்தது போல உறைந்து போனேன்.
ஈழத்துத் திரைத்துறை இயக்கத்தில் மறக்கமுடியாத ஆளுமை. தொண்ணூறுகளில் அவரின் போர்க்காலக் கதைகள் பேசிய திரைப்படங்களுக்கு ஆரிய குளம் சந்தியில் கட் அவுட் வைத்தது வரை ஈழத்துச் சினிமாவின் முக்கியமான காலகட்டத்தில் இயக்கம் பெற்றவர்.
2010 ஆம் ஆண்டு வல்வெட்டித் துறை நோக்கிய என் உலாத்தலில், நெல்லியடி மகாத்மா தியேட்டரைக் கண்டு என் ஒளிப்படக் கமராவில் சிறைப்பிடிக்க எண்ணி அங்கு போனால், ந.கேசவராஜனின் படைப்புக்கான சுவர் விளம்பரம் இன்னும் அழியாத தொண்ணூறுகளின் காலத்தை நினைப்பூட்டியது.
2016 ஆம் ஆண்டு ஜனவரியில் நான் தாயகம் போன போது சகோதரி ஷாலினி சார்ள்ஸ் யாழ் கலை ஊடகம் சார்பில் ஒருங்கமைத்த இலக்கியச் சந்திப்பில் முதன் முறையாக ந.கேசவராஜன் அண்ணரைச் சந்தித்தது இன்ப அதிர்ச்சி. நிறையப் பேசினோம். அவரின் திரைப் பணி ஆவணப்படுத்தப்பட வேண்டியது.
எத்தனை எத்தனை படைப்புலகக் கனவுகளோடு இருந்தவர். “பிரபா எனக்கொரு கனவுண்டு” என்று தொடங்குவார்.
ஈழத்துச் சினிமாவின் அடையாளம் தனித்துவமானது என்று தனியனாக அவர் போட்ட சண்டைகளே அவர் ஒரு நேர்மையான படைப்பாளி என்பதைக் காலம் எழுதி வைக்கும்.
தன்னுடைய பழைய படங்கள் என் சேகரத்தில் இருப்பது கண்டு மகிழ்ச்சியோடு அவற்றை எப்படியாவது தனக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்.
சமீப காலத்தில் எஸ்பிபி கட்டுரைகளை எழுதும் போது நூலாக்கினால் முன்னுரை தருவேன் என்று உரிமையோடு சொல்லிக் கொண்டிருந்தவர்.
அதற்கெல்லாம் மேலாக என்னுடைய தந்தை இறந்த போது அந்த நேரம் வெளியூரில் இருந்தவர் தன்னுடைய மனைவி அந்த நேரம் காலில் அடிபட்டுச் சிகிச்சை எடுத்ததையும் பாராமல் “பிரபா வீட்டுக்குப் போங்கோ” என்று அனுப்பி வைத்தவர். அந்த ஒரு செயலை நினைத்து நினைத்து அடிக்கடி சிலிர்ப்பேன்.
0 comments:
Post a Comment