வானொலி ஊடகவியலாளரின் கலைப்பயணம்
எழுத்தாக்கம் : திரு. லெ.முருகபூபதி
ஒலி வடிவம் : கானா பிரபா
“ நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் (Threeroses) என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து அனுபவித்து, ஆ…ஆ… என்று வெளிவிட்டு விளம்பரப்படுத்தும் விளம்பரத்திற்கு நான் குரல் கொடுத்திருந்தேன். மிகப்பிரபலமாக அது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் மேடையில் தோன்றும் முதல் கட்டம் வந்தது. முன்வரிசையில் சில பாடசாலை மாணவர்கள். அவர்கள் மத்தியிலிருந்து ” ஆ… திரீ ரோஸஸ் ” விளம்பரம் வெளிப்பட்டது. என்னை அடையாளம் கண்டுகொண்டதை வெளிக்காட்டவோ அல்லது பரிகாசம் செய்வதாகவோ அவர்கள் அப்படிச்செய்திருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்ட சுவாரஸ்யமான தகவலை தமது சுயசரிதையில், முக்கியமாக இலங்கை வானொலி லண்டன் B.B.C முதலான ஊடகங்களில் முன்னர் பணியாற்றிய அனுபவத்தை எழுதியிருப்பவர் வீ. சுந்தரலிங்கம் அவர்கள்.
இலங்கையில் வடபுலத்தில் தென்மராட்சியில் 05 -11 – 1930 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தா அவர்கள், கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி சிட்னியில் மறைந்தார். என்றும் எமது மனதில் சஞ்சரித்து வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.
இலங்கைப் நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். ” அப்பல்லோ சுந்தா” எனவும் அழைக்கப்பட்டவரான வீ. சுந்தரலிங்கம் அவர்கள் 1999 இல் எழுதியிருக்கும் மனஓசை நூலில் மேலும் பல சுவாரஸ்யங்களை காணமுடியும்.
சுந்தா அவர்கள் வானெலி ஊடகத்துறையிலும் நாடகம் மற்றும் கலை இலக்கியத்துறையிலும் நிறைய நண்பர்களைச் சம்பாதித்தவர்.
நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். நண்பர்களுடனான நேசம் நீடித்திருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள். இலங்கை, இந்தியா,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா எங்கும் அவரை ஆழமாக நேசித்த நண்பர்கள் அவரை இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்.
நட்பைப்பேணும் அவருடைய நல்லியல்பு குறித்து பேராசிரியர் கா. சிவத்தம்பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ நீ ஒரு Prism போன்றவன். உனக்குள் உன்னிடத்துப் பல திறன்கள் பல பண்புகள் ஒன்று திரண்டு ஒவ்வொன்றும் தத்தம் தனித்துவத்துடனும், அதேவேளையில் ஓர் ஒருங்கிணைவுடனும் உள்ளன. அதனால் உன் மீது (மற்றவர்களின்) ஒளிபட, நீ உன்னுள் இருக்கும் கதிர்களை வீசி ஜொலிக்கிறாய். வேண்டுவோர் வேண்டுவதே ஈயும் தன்மை உன்னுடைய அடிப்படைப்பண்பு. எவரையும் நண்பனாக வைக்கும் திறனும், ஒருமுறை நண்பன் ஆனவனைச் சீவியகால நண்பனாக வைத்திருக்கும் சால்பும் உன்னுடையவை. இதனால் உண்மையான நீ யார்…? என்று நாங்கள் சர்ச்சித்ததுண்டு.”-
பேராசிரியரின் கூற்றில் உள்ள உண்மைத்தொனியை சுந்தாவுடன் நெருங்கிப்பழகியவர்களினால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும்.
ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்து ( 20 ஜூலை 1969) அரைநூற்றாண்டு காலமாகிவிட்டது. பல தசாப்தங்களுக்கு முன்னர் மகாகவி பாரதியார் ” சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று தீர்க்கதரிசனமாகப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த மாபெரும் சாதனையை தமது மதுரக்குரலினால் வான்அலைகளில் பரப்பியவர்தான் ‘சுந்தா’ சுந்தரலிங்கம்.
அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட கலை, இலக்கிய, ஊடகத்துறை ஆளுமைகள் பற்றிய நினைவலைகளின் வரிசையில், சுந்தாவைப்பற்றியும் வாசகர்களிடத்தில் பகிர விரும்புகின்றோம்.
போர்க்காலத்தில் குண்டுகளின் மழையினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட சாவகச்சேரியின் பசுமையையும், சோழகக் காற்று பரந்த வயல்வெளிகளையும் தாண்டி பவனிவரும்போது புழுதியையும் அள்ளிவந்து கொட்டியதனால் இயற்கையாகவே தோன்றிய மணல்பிட்டியின் கதையையும் – ஒரு ஆக்க இலக்கிய கர்த்தாவின் கலை நேர்த்தியுடன் சித்திரித்து தனது பிறந்த ஊரை தமது ‘மனஓசை’ யில் பதிவு செய்தவர் சுந்தா.
ஓவ்வொருவருக்கும் தாய் மண்ணில் மங்காத பற்றிருப்பது இயல்பு. அந்தப்பற்றை மிகுந்த யதார்த்தப்பண்புடன் இயல்பாகவே சொன்னவர்.
அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இவரின் மதுரக்குரல் வான் அலைகளில் பரவியதற்கு அடிப்படையாக இருந்தது வானொலி மீது அவருக்கிருந்த அடங்காத பற்றுதலே.
12 வயதுச்சிறுவனாக – சாவகச்சேரியில் துள்ளித்திரிந்துகொண்டிருந்தபொழுது இவரது கனவு முற்றிலும் மாறுபட்டுப்போனதற்கே வானொலிதான் காரணம்.
வளரிளம் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கனவுகள் தோன்றும், பதியும். ஆனால், அவற்றில் எத்தனை நனவுகளாயின எத்தனை கனவுகளாகவே கரைந்து போயின என்பது அவரவர்க்கே வெளிச்சம்.
மகாத்மா காந்தியின் மறைவையும் – அண்ணலின் இறுதியாத்திரையையும் நேர்முக வர்ணனையுடன் அகில இந்திய வானொலி ஒலிபரப்பியபொழுது சுந்தா பள்ளிச்சிறுவன். இந்த வர்ணனையே அவரை வானொலிக்கலையின்பால் பெரிதும் ஈர்க்கவைத்திருக்கிறது.
காந்திஜியின் இறுதியாத்திரை நேர்முகவர்ணனையைக் கேட்டு கண்ணீர் வடித்த சுந்தா, அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.
” காந்தியின் மறைவு ஒரு துயரம்தான். ஆனால், அந்தத்துயரத்திலும் அந்த இறுதி யாத்திரையை தரிசிக்க வாய்ப்பில்லாத மக்களுக்கு வானொலி மூலம் நேர்முகவர்ணனையூடாக நேயர்களை அழைத்து பங்குகொள்ளவைப்பது மகத்தான பணி. அதனை ஒரு சிறந்த வானொலி அறிவிப்பாளரால்தான் செம்மையாக செய்யமுடியும்.
வானொலியை செவிமடுப்பவர்களுடன் அருகே இருந்து தனித்தனியாக உரையாடுவதுபோன்று பேசி, நேயர்களை தம்வசம் ஈர்த்துக்கொள்ளும் பண்பே ஒலிபரப்புக்கலையின் முதலாவது பாடம்.
இந்தப்பாடத்தை சின்னஞ்சிறு வயதில் கற்றுக்கொண்ட சுந்தா கற்றபடி வாழ்ந்து காட்டியவர். அந்தத்தொழில்மீது அவருக்கிருந்த அடங்காத பக்தியினால்தான், அந்திம காலத்துக்கு முன்பாகவும் அவுஸ்திரேலியா-சிட்னியில் சக்கரநாற்காலியில் முடங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையிலும் பி.பி.சி. தமிழோசைக்கும் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிக்கும் அவர் குரல் கொடுத்தார்.
மக்கள் தொடர்பியலில் – பொதுசன ஊடக சாதனம் வலிமையானது. அவர் வெறுமனே ஒலிபரப்பாளனாக மாத்திரம் தனது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஒளிப்படக்கலை, மேடைநாடகம், மேடைநிர்வாகம், மொழிபெயர்ப்பு, விளம்பரக்கலை முதலான துறைகளிலும் அகலக்கால் பதித்து மிளிர்ந்தவர்.
மிகுந்த நகைச்சுவையுணர்வுகொண்ட சுந்தா, இலங்கை வானொலியில் மூத்த கலைஞர்.
எந்தவிதமான சிபாரிசுகளுமின்றி, சுயதிறமையால் சிறந்த குரல் வளத்தினால் அங்கு அறிவிப்பாளனாக பிரவேசித்து பயிற்சிபெற்று நேயர்களையும் நிர்வாகத்தையும் கவர்ந்தார்.
தொலைக்காட்சியே இல்லாத ஒரு காலகட்டத்தில், பல தசாப்தங்களாக அரூபமாய் நேயர்களுடன் உறவாடியவர்.
இலங்கை வானொலி, இங்கிலாந்து பி.பி.சி. தமிழோசை முதலான ஒலிபரப்புச்சேவைகளில் சுந்தாவின் குரலைக் கேட்டதனால் மாத்திரம் அவரது ஆற்றலை அறிந்துகொண்டோம் எனச்சொல்லமுடியாது.
வெளிஉலகத்திற்குத்தெரியாத பன்முக ஆற்றலும் கொண்டவர் அவர்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர். அதனால்தான் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தவரின் சேவையை இலங்கைப்பாராளுமன்றமும் எதிர்பார்த்தது. அங்கே அவர் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.
இந்தத்துறையிலும் அவருக்கு நல்ல தேர்ச்சியிருந்தமையாற்தான், அமெரிக்கா அப்பல்லோ விண்கலத்தில் முதல்தடவையாக மனிதனை சந்திர மண்டலத்தில் கால்பதிக்க அனுப்பியபோது வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவுக்கே சுந்தாவின் சேவை தேவைப்பட்டது.
ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வொய்ஸ் ஒ.ஃப் அமெரிக்காவின் நேர்முகவர்ணனையை ‘இயர்போன்’ மூலம் செவிமடுத்து அதனை உடனுக்குடன் மொழிபெயர்த்து தமிழ் நேயர்களுக்கு வழங்கியவர் இந்த மதுரக்குரல் மன்னன். அச்சமயம் நான் பாடசாலை மாணவன். விடுமுறை காலத்தில் பலாங்கொடையில் தேயிலைத்தோட்டமொன்றில் தனது கணவருடன் வசித்துக்கொண்டிருந்த அக்காவின் வீட்டிலிருந்தேன்.
வானொலிக்கருகிலேயே அமர்ந்து சுந்தாவின் வர்ணனையைக்கேட்டு குறிப்பெடுத்தேன். பாடசாலை படிப்புக்குத் தேவைப்பட்டது. ஆனால் அச்சமயம் கனவிலும் நினைக்கவில்லை, காலப்போக்கில் நானும் ஒரு எழுத்தாளனாக கொழும்பில் பாமன்கடை லேனில் அவரது வீட்டில் அவர் அருகே அமர்ந்து இலக்கியம் பேசுவேனென்று.
மனிதனின் விண்வெளி யாத்திரையென்பது உலகத்தின் மகத்தான சாதனை. அச்சாதனை புரிபவர்களின் நடவடிக்கைகளை, பயணத்தை விண்கலத்தில் இயங்கும் நுட்பமான கருவிகளை இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தும் விஞ்ஞானச்சொற்களை மணிப்பிரவாள தமிழ் நடையில் நேயர்களுக்கு நேர்முகவர்ணனையாக சொல்வது என்பது ஒலிபரப்புக்கலையில் சாதனைதான்.
இச்சாதனையையும் செம்மையாக நிறைவேற்றி வெற்றிகண்டவர் இந்த அமைதியான மனிதர். செவிமடுத்த ஆயிரக்கணக்கான நேயர்கள் எழுதிய வாழ்த்துக்கடிதங்கள் இலங்கை வானொலிக்கலையகத்தில் வந்து குவிந்தன. இவ்வாறு இலங்கை அரசையும் வானொலி நிர்வாகத்தையும் வானொலிச்சேவை வரலாற்றையும் வியக்கவைத்தவர் ‘சுந்தா’ சுந்தரலிங்கம்.
அதனால், ‘அப்பல்லோ சுந்தா’ எனவும் அழைக்கப்பட்டவர்.
இச்செய்தியை அறிந்த அன்றைய அமெரிக்க ஜனாதிபதி , தமது கைப்பட வாழ்த்துக்கடிதம் எழுதி சுந்தாவுக்கு அனுப்பினார் என்பது ஒரு வானொலிக்கலைஞனுக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது எனலாம்.
இந்த விருதுகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுவது அவரது குரல் மீது நேயர்களுக்கிருந்த ஈடுபாடு.
சுந்தா ஒரு பத்திரிகையாளனோ இலக்கியப்படைப்பாளியோ அல்ல. எனினும் அவர் எழுதி எமக்கெல்லாம் அளித்துள்ள அவரது மனஓசை நூல் வானொலி மற்றும் பொதுசனஊடகத்துறை சார்ந்த அனைவருக்குமே ஒரு பாடப்புத்தகமாகும். இந்த நூலை தனது இனிய நண்பன் ‘பரா’ என்னும் பாடல் கலைஞன் பரராஜசிங்கத்திற்கு சமர்ப்பித்து, இவ்வாறு எழுதியிருக்கிறார்:-
” நண்பர்களுக்குக் கலைகளின்
சுவையைக் காட்டிய நீ
வாழ்க்கையின் சுகங்களை
அனுபவிக்காமலேயே போய்விட்டாயே
இறைவா
சங்கீத ‘சதஸ்’ ஒன்றை – உன்
திருவடிகளுக்கு அழைத்துவிட்டாய்
அதன் ‘சுநாத’ நினைவுகளை
எங்களிடமிருந்து பிடுங்கிவிடாதே “
சிட்னியில் சுந்தாவை பார்க்கச்செல்லும்போது கடந்த காலத்தையே நினைவு படுத்திப் பேசிக்கொண்டிருப்பேன். அவரது பாமன் கடை லேனில் அமைந்த வீட்டை கலை, இலக்கிய இல்லம் எனவும் அழைக்கலாம். அந்த இல்லம் பற்றி நானும் நண்பர் மௌனகுருவும் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்திருக்கின்றோம்.
அந்த மாடி இல்லத்தின் ஒரு பகுதியில் மௌனகுரு-சித்திரலேகா தம்பதியர் இருந்தனர். பக்கத்து வீட்டில் கவிஞர் சிவானந்தன் ஆகியோரும் வசித்தனர். சிவானந்தனின் அண்ணன் கவிஞர் முருகையனும் அங்கே வருவார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி சுந்தா வீட்டில் நடக்கும். நண்பர் சோமகாந்தன் சுந்தாவை அண்ணா அண்ணா என்று சொல்லிக்கொண்டே வலம் வருவார்.
சுந்தாவின் மனைவி பராசக்தி அக்கா அலுப்பு சலிப்பின்றி கலை, இலக்கியவாதிகளை உபசரித்துக்கொண்டேயிருப்பார். மல்லிகை ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து மாதாமாதம் மல்லிகை இதழ் பிரதிகளுடன் கொழும்பு வரும்பொழுதிலெல்லாம் சுந்தா இல்லத்துக்கும் போய்வருவதற்குத் தவறுவதில்லை.
அத்துடன் நில்லாமல், காலிமுகத்திடலில் அப்பொழுது அமைந்திருந்த நாடாளுமன்றத்திற்கும் சென்று சுந்தாவுக்கு அலுப்புக்கொடுக்கத்தவறமாட்டார். சுந்தா இன்முகத்துடனும் அங்கதச்சுவையுடனும் பேசி சூழலை கலகலப்பாக்குவார்.
1990 இல் சென்னை அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக சந்திப்புக்கூட்டத்தில் சுந்தாவை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சந்தித்தேன்.
இலங்கையில் இனச்சங்காரம் நடந்ததைத்தொடர்ந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்திருந்தார். இலங்கையை விட்டுச்சென்ற சோகம் அவரது முகத்தில் படிந்திருந்தது.
சிட்னிக்கு வந்த பின்னர் என்னுடன் தொலைபேசி, கடிதத் தொடர்புகளைப் பேணியவர். அவரது சுகவீனம் அறிந்து கவிஞர் அம்பியுடன் சென்று பார்த்தேன். அவரது மருமகன் சஞ்சயன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். எங்கள் மூவரையும் அமரச்செய்து சில கோணங்களில் படங்கள் எடுத்து அன்று மாலையே தந்தார். இன்றும் சுந்தாவின் நினைவுகளுடன் அந்தப்படங்கள் என்வசம் இருக்கின்றன.
சுந்தா இறந்த செய்திகேட்டு மிகுந்த கவலையடைந்தேன். வேலைக்குச்செல்லவும் மனமின்றி துக்கம் அனுட்டித்தேன். எனது மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு பயணிக்கமுடியாத ஒரு நிர்ப்பந்த சூழலில் நான் தவித்தேன். வீட்டிலிருந்த அந்தப்பொழுதில் சுந்தாவுக்காக அஞ்சலிக்கட்டுரை எழுதி மெல்பன் 3 CR தமிழ்க்குரல் வானொலிக்கு அனுப்பினேன். எனினும் வானொலிக்கலையகத்துக்கு நேரில் சென்று அந்த அஞ்சலி உரையை நிகழ்த்துவதற்குத் தயங்கினேன். அவரது மறைவு நெஞ்சில் பாரமாக அழுத்தியதனால் அழுது புலம்பிவிடுவேனோ என்ற தயக்கம் வந்தது.
வானொலி நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான நண்பர் சபேசனுக்கு எனது தயக்கத்தைத் தெரிவித்தேன். பின்னர் குறிப்பிட்ட அஞ்சலி உரையை எனக்காக நண்பர் கலாநிதி பா.விக்னேஸ்வரன் வானொலியில் நிகழ்த்தினார். அந்த உரையை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கு அனுப்பினேன். 31-10-2001 ஆம் திகதி சிட்னியில் சுந்தாவின் இல்லத்தில் நடந்த அஞ்சலிப்பிரார்த்தனையில் நண்பர் கலாநிதி கலாமணி அதனை வாசித்தார்.
சுந்தா எனக்கு எழுதிய கடிதமும் எனது கடிதங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் , அந்த நூலைப்பார்க்காமலேயே சுந்தா கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டுவிட்டார்.
சிட்னியிலும் மெல்பனிலும் நடந்த எனது நூல்களின் வெளியீட்டு விழாக்களை சுந்தா அரங்கு எனப்பெயரிட்டே நடத்தினேன். சுந்தா குறித்த அஞ்சலி உரைகளை நண்பர்களைக்கொண்டு நிகழ்த்தச்செய்தேன்.
அந்த நிகழ்வுகளில் சுந்தாவின் வானொலி உரைகளை ஒலிபரப்புவதற்கு சுந்தாவின் மருமகன் நண்பர் சஞ்சயன் தந்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. சிட்னி நிகழ்வில் ஓவியர் ‘ஞானம் ‘ ஞானசேகரம் வரைந்து எடுத்துவந்திருந்த சுந்தாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்.
2003 இல் வெளியான அம்பி வாழ்வும் பணியும் நூலை சுந்தாவுக்கே சமர்ப்பித்திருக்கிறேன்.
லண்டன் B. B. C. தமிழோசையில் பணியாற்றிய சங்கரமூர்த்தி, மகாதேவன், சம்பத்குமார், ஆனந்தி, மைத்ரேயி, விமல் சொக்கநாதன், மணிவண்ணன், தாசீஸியஸ், இலங்கையில் மானிப்பாய் எம்.பி. வி. தருமலிங்கம், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி, கவிஞர் முருகையன், சோமகாந்தன், தமிழ்நாட்டில் இந்து பத்திரிகை ஆர். நடராஜன், பூர்ணம் விஸ்வநாதன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா, பாலுமகேந்திரா, மாலன், வாஸந்தி, வெ.ராஜாமணி முதலான பலருடன் நட்புறவுகொண்டிருந்தவர்.
இந்த இடத்தில்தான் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை வாசகர்கள், மீண்டும் இந்த ஆக்கத்தின் ஆரம்பத்திற்குச் சென்று பார்க்கவேண்டும்.
இவரது மறைவின் பின்னர் லண்டனிலிருக்கும் ஊடகவியலாளரும் நாழிகை ஆசிரியருமான ‘மாலி’ மகாலிங்க சிவம் தொகுத்து வெளியிட்ட நினைவுமலருக்கு ” வணக்கம் கூறி விடைபெறுவது சுந்தா சுந்தரலிங்கம்” என்ற பெயரையே அவர் மிகவும் பொருத்தமாகச்சூட்டியிருந்தார். இதில் இருபத்தியைந்திற்கும் மேற்பட்டவர்கள் சுந்தாவின் வாழ்வையும் பணிகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விதந்து பாராட்டியுள்ளனர்.
எவரையும் நண்பனாக வைத்திருக்கும் திறன் கைவரப்பெற்றவர் எங்கள் சுந்தா சுந்தரலிங்கம்.
எம்மிடம் எஞ்சியிருப்பது அவருடைய நினைவுகள்தான்.
0 comments:
Post a Comment