skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, October 14, 2020

‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் - எழுத்தாளர் லெ.முருகபூபதி



காலமும் கணங்களும் : 

 ‘அதிசயங்கள்’   நிகழ்த்திய   பல்கலைவேந்தன் 
  சில்லையூர்  செல்வராசன் ( 1933 – 1995 )  
ஒக்டோபர் 14 நினைவு தினம் !!

                                                                   எழுத்தாளர் லெ.முருகபூபதி

ஒலி வடிவில் 

https://www.youtube.com/watch?v=wmIpTNy6CeU


 “ தேனாகப்    பொன்நிலவு     திகழ்கின்ற     ஓரிரவில்
 தெய்வத்துள்      தெய்வம்    என் தாயானாள்     எம் மனைமுற்ற        மணல்திருத்தி      அன்பொடு   தன் அருகணைத் தென் விரலைப்பற்றி  ‘ஆனா’ என்றோரெழுத்தை
அழித்தழித்தம்   மணல்   மீது   அன்றெழுதப்    பயிற்ற
 இன்றோ   பேனாதனைப்    பிடித்தெழுதும்    உரையெழுத்தும்  கவியெழுத்தும்
தலையெழுத்தாய்ப்    பிழைப்பாய்க்    கொண்டென்
நானான    போதும்    தம்நாளாந்தச்    சோற்றுக்கும்                        ஆடைக்கும்
நலிவோர்க்காய்ப்    பொருத   என்   வாளானாளே
தமிழ்   என்றிங்கன்ப ரெல்லாம்    போற்றுகின்ற
ஆச்சி  உனை    முதலில்    அடிபணிந்தேன்   போற்றி “ 

பல்கலைவேந்தன்    சில்லையூர்   செல்வராசன் மேடையில்   தோன்றினால்  முதலில்  இந்தப்பாடலை  ராகத்துடன்  பாடிய     பின்னரே  தமது  பேச்சை  தொடங்குவார்.  அவர்  கவியரங்கு களுக்கு   தலைமையேற்றாலும்   தப்பாமல்   பாடுவார்                இக்கவிதையை.

கணீரென்ற  கம்பீரமான  குரல்  அவருக்குக்  கிடைத்த  வரம்.
அடிக்கடி   உறக்கத்தில்   கனவு   காணும்  எனக்கு 1980 களில்  ஒரு  நாள் வந்த  கனவில்  நண்பர்  சில்லையூர்  இறந்துவிட்டார்.                               திடுக்கிட்டு  எழுந்து  நேரத்தைப்பார்க்கின்றேன்.  அதிகாலை   மூன்றுமணியும்  கடந்துவிட்டது.  அதன்பிறகு  உறக்கம்                  நழுவிப்போய்விட்டது.
காலை  எழுந்து  வேலைக்குப்புறப்படும்பொழுது  அம்மாவிடம்   நான்  கண்ட  கனவு  பற்றிச்சொல்லிக்கவலைப்பட்டேன்.                      எனது  அம்மாவுக்கு  சில்லையூரை  நேரில்  தெரியாது. ஆனால்  அவர்களுக்கு  சில்லையூரின்  குரல்  நல்ல  பரிச்சியம்.

வானொலியில்   சில  நிகழ்ச்சிகளில்  சில்லையூரின்                            மதுரமான  குரலை  ரசிப்பார்கள்.   அவர்   எனது  நண்பர்   என்ற  தகவல்  தெரிந்து  மகிழ்ச்சியடைந்தார்கள். தொலைக்காட்சியின்  அறிமுகம்  இல்லாத  அந்தக்காலத்தில்  இலங்கை  வானொலியின் தமிழ்   தேசிய  சேவையும்  வர்த்தகசேவையும்  இலங்கையில்  மட்டுமல்ல  தமிழகத்திலும்  நன்கு  பிரபல்யம்                                              அடைந்திருந்தது.  மயில்வாகனம் -    செந்திமதி மயில்வாகனம்   சில்லையூர்,   கே.எஸ்.ராஜா,   அப்துல்ஹமீட்,   ராஜேஸ்வரி  சண்முகம்,   சற்சொரூபவதி  நாதன்,    ‘சுந்தா ‘ சுந்தரலிங்கம்,  புவனலோஜினி  வேலுப்பிள்ளை,  சரா இம்மானுவேல்,  ஜோக்கிம்  பெர்ணான்டோ,   ராஜகுரு சேனாதிபதி   கனகரத்தினம், ஜோர்ஜ்   சந்திரசேகரன்,  வி. என். மதியழகன், நடராஜசிவம்   முதலான  பலரது  குரல்   நாடெங்கும்  பிரசித்தம். 
 இவர்கள்  தமிழ்வானொலி   நேயர்களை   வானொலியின்                     அருகே  அழைத்து  கட்டிப்போட்டவர்கள்    என்று   சொல்வது கூட  மிகையான  கூற்று  அல்ல.

இக்காலத்தில்   தொலைக்காட்சி  நாடகங்களை  அலுப்புச் சலிப்பின்றி   பார்த்து  ரசிக்கும்    எண்ணிறந்த    மக்களைப் போன்று  அந்நாட்களில்   தமது  ரஸனைக்கு  விருப்பமான  தொடர்   நிகழ்ச்சிகள்,    நாடகங்கள்    இலங்கை   வானொலி யில்   ஒலிபரப்பாகும்   வேளைகளில்    தமது  அன்றாடக்கடமைகளையும்    ஒருபுறம்  வைத்துவிட்டு   வானொலிக்கருகே   வந்துவிடுவார்கள்.

அல்லது.   குறிப்பிட்ட  நிகழ்ச்சிகளை   செவிமடுப்பதற்கு  ஏற்றவாறு  தமது   வீட்டுப்பணிகளுக்கு   நேரவரையறை   செய்துகொள்வார்கள்.

மக்கள்  வங்கி  விளம்பரத்தில்                                                                                    “அத்தானே   அத்தானே   எந்தன்  ஆசை  அத்தானே…  கேள்வி  ஒன்று  கேட்கலாமா…  உனைத்தானே…  என்ற                                   சில்லையூர் - கமலினி  இணைந்து  பாடிய  பாடலை  மிகவும்  ரசித்துக்கேட்ட   வானொலி  ரசிகர்கள்  ஏராளம்.

“எங்கள்  சில்லையூர்  இறந்துவிட்டதாக  கனவு  கண்டேன்              அம்மா.  மிகவும்  கவலையாக இருக்கிறது” என்று   சொன்னதும்,  “   இதிலென்ன  கவலைப்பட  இருக்கிறது.  நல்ல  கனவுதான்.                 அவருக்கு  நீண்ட  ஆரோக்கியம்  இருக்கும்.  உனக்கு  கவலையாக   இருந்தால்   அவரைப்போய்  பார். அல்லது  வேலைக்குப்போனதும்  அவருக்கு  தொலைபேசி                எடுத்து  சுகத்தை  விசாரித்துக்கொள்”   என்று  அம்மா  எனக்கு    ஆறுதல்     சொன்னார்.

அம்மா     சொன்னவாறு    சில்லையூரை  தொலைபேசியில்   தொடர்புகொண்டு  சுகம்  விசாரித்தேன்.
அவர்  மறுமுனையிலிருந்து    பெருங்குரலெடுத்து    சிரித்தார்.
“  என்   மீதான  அக்கறைக்கு  மிக்க  நன்றி  நண்பரே.   உமது                அம்மா  சொன்னவாறு    நல்ல  கனவுதான்.  நான்   நன்றாக             இருக்கிறேன்.  பிறகு  சந்திப்போம்.”  என்றார்.   
இச்சம்பவம்  நடந்து  சுமார்   15  ஆண்டுகளின்  பின்னர்தான் 1995  இல்  இதே ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி   சில்லையூர்  மறைந்தார்.   
அப்பொழுது    நான்  அருகிலும்   இல்லை.  கனவும்                          காணவில்லை.

நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்   கொழும்பு  பொரளையில்             கனத்தை  மயானத்தில் அமைந்துள்ள   சில்லையூரின்   நினைவுக்கல்லறையையும்                அவரது  கவிதைத்தொகுப்பின்    முதலாவது     பாகத்தையும் தான்   பார்த்தேன்.

தாயின்   கரத்தால்  மண்ணிலே  எழுதப்பழகி   கவிஞனாக               உயர்ந்து  பல்கலைவேந்தனாக   வலம்வந்து    தனது    பூர்வீக   ஊரை  இலக்கிய உலகத்தில்  நிரந்தரமாக   பதிவுசெய்துவிட்டு   நினைவுகளை   தந்து  மறைந்துவிட்ட   சில்லையூர்   செல்வராசன்   என்னால் மறக்கமுடியாத                           சுவாரஸ்யமான   நண்பர்.
தமிழகத்தில்   வாத்தியார்    என்றால்   அது                                                மக்கள்திலகத்தையே   குறிக்கும்.   இலங்கையில்     வானொலி   வட்டாரத்தில்   வாத்தியார்   என்றால்   அது   எங்கள்                          சில்லையூர்   செல்வராசனையே   குறிக்கும்.

வானொலி   ஊடகத்தின்   நுட்பங்கள்   பலவற்றை    குறிப்பாக   விளம்பரம்,   நாடகம்,   ஒலிச்சித்திரம்   முதலான   துறைகளில்    அவர்   பலருக்கு   அங்கு  வாத்தியாராகவே   திகழ்ந்தார்.                காரணம்   அவருக்கு நல்ல   குரல்வளம்,   நடிப்பாற்றல்,                   அதற்கும்   அப்பால்   படைப்பாளுமையும்    கற்பனைத்திறனுமுள்ள     கவிஞர்.

எழுத்தை   முழுநேரத்தொழிலாககொண்டிருந்து  வாழ்ந்தவர் களை  பார்த்திருக்கின்றோம்.  சில்லையூர்  தனது  குரலையே  மூலதனமாக  வைத்து  வாழ்ந்தவர்.  அவர்  இருக்கும்  இடம்             எப்பொழுதும்  கலகலப்பானதுதான்.  அவருக்கு  அருகில்              பாடும்  ஆற்றல்  உள்ள  ஒருவர்  இருந்தால்,   உடனுக்குடன்              பாடல்  புனைந்துகொடுத்து  பாடவைத்துவிடுவார். 
 இதுபற்றி     பிரான்ஸில்  வதியும்    நண்பர்  இளங்கோவனின்  பதிவொன்றையும்  கண்ணுற்றேன்.
பாரதி   நூற்றாண்டு   காலத்தில்   எங்கள்  ஊரில்  நாம்  
நடத்தியபாரதிவிழாவுக்கு   சில்லையூரை   கவியரங்கிற்கு               அழைத்திருந்தோம்.  அத்துடன்  எம். ஏ. குலசிலநாதனையும்    இசைநிகழ்ச்சி   நடத்துவதற்கு   அழைத்தோம்.
விழா  முடிந்ததும்   மன்றத்தின்  தலைவர்  மயில்வாகனன்                மாமா  இல்லத்தில்  நடு இரவு வரையில்  கச்சேரிதான்.  சில்லையூர்  புதிதாக   பாடல்கள்              இயற்றகுலசீலநாதன்  அதற்கு  மெட்டமைத்துப்பாடினார்.   பொழுது  சென்றதே  தெரியவில்லை. அதன்பிறகு  தமது  மோட்டார்  சைக்கிளில்   சில்லையூர்  தமது  மகனுடன்  கொழும்புக்கு  புறப்பட்டுச்செல்லும்பொழுது    அதிகாலையாகிவிட்டது.

பாரதி  நூற்றாண்டு    காலத்தில்   வீரகேசரி   வாரவெளியீட்டில்    சில்லையூரும்   புதுவை  ரத்தினதுரையும்   நடத்திய                    கவிதைச்சமர்   தொடர்    இலக்கிய  சுவைஞர்களுக்கு   விருந்துபடைத்தவை.      1983   அமளியின்பொழுது    இடப்பெயர்வில்   தொலைத்துவிட்ட     அந்த       அச்சுப்பிரதிகளை                            தேடிக்கொண்டிருக்கின்றேன்.

1980  களில்  மலையகம் தலவாக்கல்லையில்  முழுநாள்  பாரதிவிழாவை  ஒழுங்குசெய்துவிட்டு,என்னையும்  சில்லையூரையும்   அவரது  மனைவி               கமலினியையும்  அழைத்திருந்தார்  நண்பர்                                                இ.தம்பையா.                                                                                                                          ( இவர்  தற்பொழுது  கொழும்பில்  பிரபல  சட்டத்தரணி. மனித உரிமை  செயற்பாட்டாளர், இவரது அரசியல் ஆய்வுகளை  ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள் ) 

இரவு  நானு   ஓயா  எக்ஸ்பிரஸ்  ரயிலில்  புறப்பட்டோம்.                    நண்பர் தம்பையா  சில்லையூர்  தம்பதியருக்கு   முதலாம்  வகுப்பில்   இருக்கைகள்  பதிவுசெய்திருந்தார்.  நானும்  தம்பையாவும்            மூன்றாம்  வகுப்பில்   பயணித்தோம்.
நடு  இரவில்  சில்லையூர்  எழுந்து   எம்மைத்தேடிக்கொண்டு   வந்துவிட்டார்.  எங்கள்  இருவரையும்  மூன்றாம்  வகுப்பில்        விட்டுவிட்டு  தானும்  கமலினியும்  முதல்  வகுப்பில்  சௌகரியமாக  பயணம்  செய்வது  குற்ற  உணர்வாக  இருக்கிறது   என்று  சொல்லி  வருந்தினார்.

 “கமலினி   ஆழ்ந்த  உறக்கம்.  எங்களுடன்                                                             உரையாடிக்கொண்டு  வருவதற்கே விருப்பமாக  இருக்கிறது  “ என்றார்.  அதிகாலை  தலவாக்கல்லையில்  இறங்கும்   “            வரையில்  சில்லையூர்  இலக்கிய  புதினங்களையும்  தனது        வானொலி  திரைப்பட  அனுபவங்களையும்  எம்முடன்                பகிர்ந்துகொண்டிருந்தார்.
தலவாக்கல்லையில்   மலையக அரசியல்  தலைவர்  சந்திரசேகரனின்                                                                   ( பின்னாளில்  மலையக  மக்கள்  முன்னணியை  உருவாக்கிய  முன்னாள்  அமைச்சர்) இல்லத்தில்  சில்லையூர் - கமலினி  தம்பதியர்  தங்கினர்.

நானும்   தம்பையாவும்   ஒரு  நண்பர்  இல்லத்தில்  தங்கினோம்.
 தலவாக்கல்லை  தமிழ்  மகா  வித்தியாலயத்தில்  பாரதிவிழா.  காலை முதல்  இரவு  வரையில்  நிகழ்ச்சிகள்  ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

சில்லையூர்  தலைமையில்  கவியரங்கு.  பங்கேற்ற  கவிஞர்கள்   காதலையும்  இயற்கையையும்தான்   பாடினார்கள்.
சபையிலிருந்த   எனக்கு    ஏமாற்றமும்   சற்றுக்கோபமும்              வந்துவிட்டது.  அக்காலப்பகுதியில்   ஐக்கிய  தேசியக்கட்சி           பதவியில்  இருந்தது.  பிரதமர்  பிரேமதாச  தமது  கிராமோதய  திட்டத்தில்   நாடெங்கும்    பல    மாதிரிக்கிராமங்களை              அமைத்துக்கொண்டிருந்தார்.  ஆனால்,   மலையக  மக்களான  தோட்டத்தொழிலாளர்கள்   தொடர்ந்தும்  மோசமான    லயன்    குடியிருப்புகளில்    வசதிக்குறைபாடுகளுடனேயே  வாழ்ந்துகொண்டிருந்தனர்.  கவியரங்கு  கவிஞர்களின்  கவிதைகளில்   தோட்டத்தொழிலாளரின்  துயரம்  பதிவாகவில்லையே   என்று  சிறுகுறிப்பை   எழுதி    மேடையிலிருந்த   சில்லையூருக்கு                 அனுப்பினேன்.
சில  நிமிடங்களில்  அவரே  தேயிலைத்தோட்டத்தொழிலாளர் களின்  குடியிருப்பு  அவலம்  குறித்த  கவிதையை  எழுதி  பாடினார்.  இதர  கவிஞர்கள்  தவறவிட்ட  அந்தப்பக்கத்தை   அழுத்தமாகச்சுட்டிக்காண்பித்தார்.
தான்தோன்றிக்கவிராயர்   என்ற  புனைபெயரையும்                   கொண்டிருந்த  சில்லையூர்   ஒரு  வரகவிதான்   என்ற                   உண்மையை  அன்றுதான்    தெரிந்துகொண்டேன்.
இரவு  நிகழ்ச்சியில்   நானும்   கமலினி  செல்வராசனும்   சந்திரசேகரனும்   உரையாற்றினோம்.
இந்த   விழாவில்   அமைச்சர்   தொண்டமான்   பிரதம   விருந்தினராக   கலந்துகொண்டார்.

சுதந்திரன்,    வீரகேசரி,   தினகரன்   ஆகிய  பத்திரிகைகளில்         பணியாற்றியபின்னர்   வானொலி -   திரைப்படம் -  விளம்பரம்  முதலான  துறைகளில்  தனது  ஆற்றலை வெளிப்படுத்தி  பிரபல்யமாக  இருந்த  வேளையிலேயே  அவர்   எனது   நண்பரானார்.

1970 களில் ஈழத்துத்  தமிழ்  நாவல்  வளர்ச்சி   பற்றி  அவர்  எழுதிய  நூல்   பின்னாட்களில்   இத்துறை  சார்ந்து  ஆய்வுகளில்  ஈடுபட்டவர்களுக்கு  உசாத்துணையாக  விளங்கியது.
ஞானசவுந்தரி,   சங்கிலியன்,   பண்டாரவன்னியன்   முதலான  கூத்துக்களிலும்  மதியூக  மங்கை   மதமாற்றம்                                           (அ.ந.  கந்தசாமி   எழுதியது)  திறந்த  கல்லறை,  பை  பை  ராஜூ,    நெவர்  மைண்ட்  சில்வா    ஆகிய  நாடகங்களிலும்  நடித்திருக்கிறார்.

தணியாத   தாகம்  திரைப்படச்சுவடியை  அவர்   துரிதகதியில்     எழுதநேர்ந்தமைக்கு   எதிர்பாராதவிதமாக   தாம்  சந்தித்த       கசப்பான  அனுபவங்களே  காரணம்   என்று  அது   வெளிவந்தவேளையில்   என்னிடம்   சொன்னார்.                                                               வி.எஸ்.  துரைராஜா  தயாரித்து  வெளியிட்ட   குத்துவிளக்கு                   படத்தை  ஒரு  நாள் கொழும்பு  கொட்டாஞ்சேனை  செல்லமஹால்  திரையரங்கில்   பார்த்துவிட்டு   எங்கள்  ஊர்   பிரமுகரும்   உறவினருமான              மயில்வாகனன்  மாமாவிடம்  அந்தப்படம்பற்றி  பிரஸ்தாபித்தேன்.
எங்கள்    பாடசாலை   பழையமாணவர்   மன்றம்  ஒரு                          விஞ்ஞான  ஆய்வு  கூடத்தை   அமைப்பதற்காக   நிதிதிரட்டிக்கொண்டிருந்தபொழுது  மயில்வாகனன்   மாமா   ஒரு  நல்ல       ஆலோசனை  சொன்னார்.
“குத்துவிளக்கு    படத்தின்   மூலக்கதை   எங்கள்  சில்லையூருடையது   என்ற  பேச்சு  அடிபடுகிறது.   அவர்   எனக்கும்   உனக்கும்   நண்பர்.  அந்தப்படத்தை   நிதியுதவிக்காட்சிக்கு                     காண்பிப்போம்”   என்றார்   மாமா.
பின்னர்   அவரே   பழைய  மாணவர்  மன்ற   உறுப்பினர்களை   கட்டிடக்கலைஞர்   வி.  எஸ்.  துரைராஜாவிடம்   அழைத்துச்சென்றார்.  நிதியுதவிக்காட்சிக்காக   ஈழத்து  தமிழ்த்திரைப்படத்தை   நாம்   தெரிவுசெய்தது   துணிச்சலான   செயல்   என்று              துரைராஜா   பாராட்டியதுடன்    படத்தை   இலவசமாகவே                தந்து  உதவினார்.   பின்னர்   சிலோன்  தியேட்டர்ஸ்   அதிபர்   செல்லமுத்துவை   அவரது  அலுவலகத்தில்   சந்தித்தோம்.
எமது   பணிக்கு   அவரது  நீர்கொழும்பு  ரீகல்   திரையரங்கை  தந்து  உதவவேண்டும்   என்றோம்.   எமது   நல்ல  நோக்கத்தை  புரிந்துகொண்ட   செல்லமுத்துää    ஒரு  சனிக்கிழமை                 முற்பகல்  காட்சிக்கு  ரீகல்  தியேட்டரை  தந்துதவ  முன்வந்து   எம்முன்னிலையிலேயே  தொலைபேசி  ஊடாக  தியேட்டர்              முகாமையாளருக்கு   பரிந்துரைத்தார்.
திட்டமிட்டவாறு    குத்துவிளக்கு   படம்   நீர்கொழும்பில்  மண்டபம்  நிறைந்த   காட்சியாக   காண்பிக்கப்பட்டது.                                        தயாரிப்பாளர்  துரைராஜா   அவரது  நண்பர்  கண்சிகிச்சை      நிபுணர்  மருத்துவர்  ஆனந்தராஜா  மற்றும்  திரைப்படத்தில்            நடித்த  ராமதாஸ்,   ஜெயகாந்த்  உட்பட  வேறும்  சில  கலைஞர்களும்    வருகைதந்து  இடைவேளையின்பொழுது   அரங்கில்   தோன்றி  உரையாற்றினர்.

இந்தத்தகவல்களைத்தெரிந்திருந்த  சில்லையூரிடம்    ஒரு  நாள்  உரையாடியபொழுது,  தாம்  தமது  தணியாத  தாகம்                  திரைப்படச்சுவடியை   அவசர  அவசரமாக  அச்சிட்டு  வெளியிட்டதன்  பின்னணிக்  காரணங்களைச்சொன்னார்.
தணியாத  தாகம்   கதையே   குத்துவிளக்கு   படம்   என்பது                 சில்லையூரின்  வாதம். ஆனால்,    படம்   வெளியானபொழுது  கதை  துரைராஜா                என்றும்  வசனம்  ஈழத்து  இரத்தினம்   என்றும்  டைட்டிலில்    காண்பிக்கப்பட்டது.
சில்லையூர்    நீதிமன்றம்   வழக்கு    என்று  அலையவில்லை.   மிகவும்  துரிதமாக  தணியாத  தாகம்   திரைப்படச்சுவடியை   வெளியிட்டார்.
தமிழில்   முதல்  முதலில்  அச்சில்  வெளியான  திரைப்படச்  சுவடி  தணியாத  தாகம்தான்   என்ற  புகழையும்   பெருமையையும்   பெற்றது.
கவியரசு  கண்ணதாசன்,   இயக்குநர்   பாலுமகேந்திரா  முதலானோரும்   குறிப்பிட்ட  திரைப்படச்சுவடியை   சிலாகித்துப்பேசியுள்ளனர்.
நானும்   முதல்  முதலில்   தமிழில்   பார்த்த  படித்த                                  திரைப்படச்சுவடி  சில்லையூரின்  தணியாத  தாகம்தான்.                      அதன்பிறகுதான்  ஜெயகாந்தனின்   சிலநேரங்களில்  சில          மனிதர்கள்   முள்ளும்  மலரும்  மகேந்திரன்   எழுதிய  மெல்பன் நண்பர் நடேசனின்  வண்ணாத்திக்குளம்  ஆகிய  தமிழ்த்திரைப்படச் சுவடிகளை  பார்த்திருக்கின்றேன்.
திரைக்கதை    எழுதுவது   எப்படி?   என்று  சுஜாதாவும்   ஒரு         நூலை   எழுதியிருக்கிறார்.
திரைப்படச்சுவடி   எழுதுவதும்   ஒரு  நல்ல  கலை.   அதற்கு            தமிழில்  ஒரு  சிறந்த  முன்னோடி   எங்கள்  சில்லையூர்   செல்வராசன்.
ஊடகம்,  எழுத்து,    நடிப்பு,    திரைப்படம்,   விளம்பரம்,                  விவரண  சித்திரம்   முதலான  துறைகளில்  தனது                         ஆற்றலையும்  ஆளுமையையும்   வெளிப்படுத்தி  தனக்கென    தனித்துவமான   இடத்தை  தக்கவைத்துக்கொண்ட  சில்லையூருக்கு   அவரது  ஊர்மக்கள்   வழங்கிய  பல்கலைவேந்தன்     பட்டம்   சாலவும்  பொருத்தமானதுதான்.

தனது  எழுத்துலகிலும்  தனிப்பட்ட  வாழ்விலும்   அதிசயங்கள்  புரிந்த  சில்லையூருக்கும்  கமலினிக்கும்    பிறந்த   ஆண்குழந்தைக்குப்பெயர்   அதிசயன்.
மகன்  பிறந்த  செய்தியையும்   சூட்டிய   பெயரையும்  சில்லையூர்   சொன்னபொழுது  அவரை  வாழ்த்தியவாறே  “   உங்கள்   புதிய  வாழ்வின்  அதிசயமா?  “ “  என்று  கேட்டேன்.
அவரது   கண்கள்   ஒரு  கணம்  மின்னியது.

வடமாகண  மக்களின்   விவசாயம்  குறித்து  கமம்   என்ற        விவரணப்படத்திற்கும்   வசனமும்    நடிப்பும்  வழங்கிய  சில்லையூர்  தமிழ்,  சிங்கள,   ஆங்கிலத்திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்.
கமம்   விவரணப்படம்   பெர்லின்   திரைப்படவிழாவில்   பாராட்டுப்பத்திரம்   பெற்றது.

தி   அட்வென்ஷர்ஸ்   ஒஃப்   டெனிஸி   பஃக்  (அமெரிக்கா)  த லாஸ்ட் வைஸ் றோய்   லோர்ட்   மவுண்ட்   பேர்ட்டன்    (அவுஸ்திரேலியா)              தஷடோ   ஒஃப்  த  கோப்ரா  (கனடா)  ஆகிய  ஆங்கிலப்படங்களிலும்    நடித்தவர்.
எஸ்.எஸ்.  சந்திரனின்  ஆதரகதாவ   சிங்களப்படத்தில்  தமது   மகன்   ஒருவருடன் தமிழ்த்தந்தை   பாத்திரமேற்று   நடித்துள்ளார்.   இந்தப்படம்      திரைக்குவருமுன்னர்    பத்திரிகையாளருக்கான   பிரத்தியேக   காட்சியை    திரைப்படக்கூட்டுத்தாபன     தரங்கணி                   அரங்கில்   சில்லையூருடன்    இருந்தே   பார்த்து    ரசித்தேன்.
மனைவி  கமலினியுடன்   இணைந்து  நடித்த  படம்                              ராமதாஸின்  கோமாளிகள்.   இந்தப்படங்கள்  வசூலிலும்                  வெற்றிபெற்றவை.
தணியாத  தாகம்   திரைப்படச்சுவடியின்    நாடக   வடிவம்       இலங்கை  வானொலியில்   பல   மாதங்கள்                    ஆயிரக்கணக்கான   நேயர்களினால்  விரும்பிக்கேட்கப்பட்டது.  அதில்  குமார்   என்ற   முக்கிய  பாத்திரத்தில்    நடித்த   கவிஞரும்            வானொலி  ஊடகவியலாளரும்   எனதும்   சில்லையூரினதும்             நண்பரான   சண்முகநாதன்  வாசுதேவன்  அவுஸ்திரேலியா   குவின்ஸ்லாந்தில்   ஒரு   புதுவருடப்பிறப்பு     நாளில்                      தூக்கிட்டு   தற்கொலை  செய்துகொண்ட   செய்தி    அறிந்ததும்     இலங்கைக்கு   நான் முதலில்  தகவல்  தெரிவித்தது   சில்லையூரிடம்தான்.
தணியாத   தாகம்   நாடகத்தில்   சில்லையூர்     வழங்கிய                   பாத்திரத்திற்கு    உயிரூட்டிய    கலைஞன்   வாசுதேவனின்             தற்கொலை   அவரது   நண்பர்களாகிய  எனக்கும்   சில்லையூருக்கும்   அதிர்வூட்டியது.

  தமிழ்நாட்டில்   தஞ்சாவூரில்   டானியல்   மறைந்த   தகவலை   சில்லையூருக்கு   முதலில்   தெரிவித்தார்   டானியலுடன்                  இருந்த   நண்பர்  இளங்கோவன்.    சில்லையூர்   அச்செய்தியை   என்னுடன்  பகிர்ந்துகொண்டதும்    பத்திரிகைகளில்                     செய்தியை   பரவவிட்டேன்.

பின்னர்   எமது   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கமும்   கொழும்பு   வலம்புரி  கவிதா  வட்டமும் (வகவம்)  இணைந்து    24-04-1986  ஆம்  திகதி   ஒரு  போயா  தினத்தன்று  முஸ்லிம்  லீக்             வாலிப   முன்னணி   மண்டபத்தில்    நடத்திய   டானியல்              நினைவுக்கூட்டத்தில்   சில்லையூரும்   உரையாற்றினார்.
அதுவே   நாம்   சந்தித்துக்கொண்ட   இறுதி   நிகழ்ச்சி.
நான் 1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். அதன்பிறகு   
   சில  வருடங்களில்  சில்லையூரும்   மறைந்துவிட்டார்.   அவரது  நண்பர்   கவிஞர்  கங்கைவேணியனின் ( கொழும்பு  மாநகர  சபை முன்னாள்   உறுப்பினர்)   முயற்சியினால்  பொரளை  கனத்தை  மயானத்தில்   அமைக்கப்பட்டுள்ள  நினைவுச்சின்னத்தை    கொழும்பு சென்று           தரிசித்தேன்.    சில்லையூரின்    பெயர்சொல்லும்   அவரது                வாரிசு    அதிசயனை    கம்பன்  விழாவில்   தாயார்   கமலினியுடன்   சந்தித்து அணைத்துக்கொண்டேன். 
மீண்டும்     ஒரு சந்தர்ப்பத்தில்       இலங்கையில்   நின்றபொழுது                                    அதிசயனுடன்    தொலைபேசியில்   உரையாடினேன். தாய்  கமலினி செல்வராசன் மறைந்த செய்திகேட்டதும் புதல்வன் அதிசயனுடன் பேசி ஆறுதல் சொன்னேன்.  கமலினி பற்றியும் ஒரு நினைவுப்பதிகை எழுதினேன். 
சில்லையூரின்  முதல்  மனைவியும்   பிள்ளைகளும்                        கனடாவில்  வசிக்கிறார்கள்.
மனிதர்கள்   வேறுபாடுகளைக்கடந்து   இணையவேண்டும்                  என்ற  சிந்தனையின்  வெளிப்பாடாக    சில்லையூர்  எழுதியிருக்கும்  இருசம   கோடுகள்   இணையும்   என்ற கவிதையுடன்   இந்தப்பத்தியை    நிறைவு   செய்கின்றேன்.

புகைவண்டிப்  பயணம்  புதியதோர் அனுபவம்
தண்டவாளங்கள்   சந்திப்பதில்லையா?
முன்னே  பார்த்தால்  முடியாது  போலத்
தெரிந்தது – ஆனாலோ   திரும்பிப்பார்த்தால்
ஒடுங்கி    ஒடுங்கி    நெருங்கி    நெருங்கி
எங்கோ  ஓர்   முனையில்    இரண்டும்  ஒருமித்தோர்
புள்ளியில   சங்கமம்   புரிதல்    தெரிந்தது
   மனித   இனங்களே    மறுபடி   இணையப்
 பாதையைத்    திரும்பியே    பாரீர்.
கடந்தகாலத்தை    நிகழ்காலத்துடன்
கலந்தெதிர்    காலத்தை     இருகோட்டிணைவாய்ப்
புனைந்திடலாகும்      புதிதாய்
பேதம்     அகற்றிடும்    போதம்     புலர்கவே
இருசம    கோடுகள்     இணையும்.
நினைக்கத் தெரிந்த மனதால் மறக்கவும் முடியாதல்லவா..?
அவ்வாறுதான் எனது நண்பர் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசனையும் அவர் பற்றிய நினைவுகளையும் மறக்க முடியாது. 
---0—
letchumananm@gmail.com

Posted by கானா பிரபா at 3:00 AM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

1 comments:

Paul Jeyaseelan said...

Thanks for remembering and reminding this Great Poet.

October 14, 2020 5:09 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ▼  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ▼  October 2020 (1)
      • ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்ல...
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes