பெருமதிப்புக்குரிய பொன்.குலேந்திரன் அவர்களது எழுத்துகளுக்கும் எனக்குமான பந்தம் ஒரு தசாப்தம்கடந்தது. கனடாவை மையப்படுத்தி வெளி வந்த குவியம் இணைய மாத சஞ்சிகையின் தீவிர வாசகனாகஅப்போது இருந்தேன். இணைய எழுத்துகள் என்றால் நுனிப் புல் மேய்தல், பிறர் ஆக்கங்கங்களைப் பிரதிபண்ணுதல் போன்ற மோசமான இலக்கணங்கள் பதிந்திருந்த சூழலில் குவியம் இணையப் பத்திரிகையின்அறிவியல் தளமும், அதன் சுயமும் அப்போது என்னுள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதன் வழியாகஅறிமுகமானவர் தான் திரு பொன்.குலேந்திரன் அவர்கள். அறிவியல், ஆன்மிகம், அரசியல் என்று பல்துறைநோக்கில் கட்டுரைகள் தொட்டு கதைகள் வரை எழுதும் பன்முகப் படைப்பாளி.
குவியம் தவிர இவரது “விசித்திர உறவு” (குவியம் இதழில் வந்த சிறுகதைகள்), மற்றும் கோபுர தரிசனம்கோடி புண்ணியக் ஆகிய நூல்களையும் அப்போது பெற்று வாசித்திருந்தேன்.
ஈழத்துக் கோயில்கள் குறித்த கனதியானதொரு தொகுப்பான “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்றநூல் அப்போது நான் தொகுத்தளித்த “ஈழத்து முற்றம்” என்ற வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சிக்குஉசாத்துணையாக, முதன்மை நூலாகவும் அமைந்து சிறப்பித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொன்.குலேந்திரன் அவர்களது தொடர்பும், அதன் வழியே அவரது“யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
இதில் மொத்தம் 23 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
பொன் குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது அரை நூற்றாண்டுக்கு முன்னதான, ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களது சிறுகதைகளைப் படிக்கும் பாங்கில் தான் பயணித்தேன். அவ்வளவுதூரம் இயல்பாகவும், வார்த்தைகளில் நவீனம் படியாத ஊர்ப் பேச்சு அழகியலையும் அனுபவித்தேன். அதற்கு இன்னொரு காரணம் ஒவ்வொரு சிறுகதைகளின் பின்புலமும் கூட.
யாழ்ப்பாணத்தில் நிலவிய வழமைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்தைப் பற்றிஇந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது எதேச்சையாக அமைந்ததோ தெரியவில்லை. இந்தச்சிறுகதைத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதைகளின் அடிநாதத்திலும் இந்தத் தேச வழமை ஒட்டிக்கொண்டிருக்கிறது.
கதைகளினூடு அந்தந்தப் பிரதேசங்களின் புவியியல், வரலாற்றுப் பின்புலன்களையும் கொடுப்பதைப்படிப்பதும் புதுமையானதொரு அனுபவம். யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கையோ, நடைமுறை வாழ்வில்கொள்ளும் சொல்லாடலையோ தன் கதைகளில் கொண்டு வரும் போது இயன்றவரை அவற்றுக்கானவிளக்கக் குறிப்புகளையும் பகிர்கிறார்.
சில இடங்களில் அப்படியே விடுகிறார், காரணம் அதை அப்படியே வாசகன் உள்வாங்கிப் புரியக் கூடியமொழி நடை என்ற உய்த்துணர்வில்.
இந்த மாதிரியான பின்னணியோடு சிறுகதைகள் எழுதுவது மரபை உடைத்தல் என்று விமர்சக ரீதியில் பார்த்தாலும் இந்தத் தொகுப்பினைப் படிக்கும் போது எழுத்தாளரின் வாழ்வியல் அனுபவங்கள், நிஜங்களின் தரிசனங்களே பதிவாகியிருப்பது போன்றதொரு உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவே இதுவொரு சுயவரலாற்றின் கூறாகக் கூட இருக்க முடியும்.
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அண்மையில் இருபது வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணத்து இளைஞனோடு பேசிக் கொண்டிருக்கும் போது நாம் அங்கு சகஜமாகப் புழங்கும் ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டேன். அதற்கு அர்த்தம் தெரியாது அந்த இளைஞன் யோசித்தார். அப்போது தான் எங்கள் பேச்சு வழக்கும் அதன் தனித்துவமும் தென்னிந்திய சினிமாக்களின் ஊடுருவலால் சிதைக்கப்படும் அபாயம் கண்டு உள்ளூரக் கவலையும் எழுந்தது. ஏனெனில் அந்த யாழ்ப்பாணத்து இளைஞனின் பேச்சில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொல்லாடல் தான் மிகுதியாக இருந்தது.
பொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. நாம் எத்தனை அரிய, எம் மண்ணுக்கே உரித்தான கலைச் சொற்களை, மருவிப் போன தூய தமிழ்ச் சொற்களை நம் அன்றாடப் பேச்சில் தொலைத்து விட்டோம். இந்த உணர்வெல்லாம் “யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியைப் படித்த போது எழுந்தது.
‘புதுச் சுருட்டு” கதையின் களம் எங்கள் இணுவில் மண்ணை ஞாபகப்படுத்தியது, ஊரெல்லாம் சுருட்டுக் கொட்டிலும், புகையிலைத் தோட்டமுமாக விளைந்த நம் ஊரின் பண்பின் மறு பக்கத்தில் அது எவ்வளவு தூரம் ஆட்கொல்லி நோயாக இருக்கிறது என்ற செய்தியோடு கதையைச் சுருட்டியிருக்கிறார்.
யுத்தம் முடிந்த காலத்துக்குப் பின்னரும் ஏன் இந்தத் தொழில் நுட்பம் விளைந்த காலத்திலும் வேலிச் சண்டையோடு நிற்கும் யாழ்ப்பாணத்தாரைத் தினசரிப் பத்திரிகைகளில் படித்து வருகிறோம். “வேலி” சிறுகதை இம்மாதிரியானதொரு கதையோட்டம் கொண்டது. ஆளில்லா ஊரில் இனி எங்கே வேலிச் சண்டை என்ற யதார்த்தமும் எழுந்து மெல்ல வலியெழுப்பியது.
கல்வித் தரப்படுத்தல், போன்ற ஈழத்துச் சமூகம் எதிர் நோக்கும் சவால்களையும், சகுனம் பார்த்தல், கோயில்களில் நேர்த்திக் கடன் கழிக்கும் உயிர்ப்பலி கொடுக்கும் பண்பு, புலம் பெயர் சூழலிலும் கூடவே கொண்டு வந்திருக்கும் சீட்டுக் கட்டும் மரபு, சீதனப் பிரச்சனை போன்ற நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கதைகளில் காவும் ஆசிரியர் தீண்டாமைக் கொடுமையால் எழுந்த ஆலயப் பிரவேச மறுப்பையும் கையில் எடுத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் “இப்படியும் நடக்கிறது” என்றொரு பகுதி வரும். இப்படியும் நடந்திருக்கிறதா என்று எண்ண வைக்கும் பல கதைகளின் யதார்த்தங்களோடு வாழ்ந்து பழகிய யாழ்ப்பாணத்தாருக்கு இவை பழகிப் போனவை. ஆச்சரியம் என்னவெனில் ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு சமுதாயச் சிக்கல்களைக் கையிலெடுத்துக் கதைகளாகச் சமைத்த ஆசிரியர் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் முழுமையான பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றார். “யாழ்ப்பாணத்தான்” வெறும் சிறுகதைகள் அல்ல இவை நம் வாழ்வியலின் கோலங்கள்.
யாழ்ப்பாணத்தான் சிறுகதைத் தொகுதி ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல் பூபாலசிங்கத்தில் விற்பனைக்குக் கிட்டுகிறது.
கானா பிரபா
சிட்னி
அவுஸ்திரேலியா
பிற்குறிப்பு
எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைத் தொகுதிக்கான அணிந்துரையை எழுதுவதற்கு பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னைப் பரிந்துரைத்திருந்தார். இந்த மாதிரியானதொரு கொடுப்பினைக்கும் மிக்க நன்றி.
0 comments:
Post a Comment