போருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”
ஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.
திடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன? ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.
பனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.
நம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.
இந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே? என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.
பனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது? யாரை விலக்குவது?
மண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.
அதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.
உட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.
நமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.
கானா பிரபா
14.10.2018
0 comments:
Post a Comment