பாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடித்து விட்டுச் சந்தோசக் கூக்குரல் எழுப்புவார் இருந்த இடத்தில் இருந்து.
சைக்கிளை ஸ்ராண்டில் வளைய விட்டு ஆச்சி வீட்டுத் திண்ணையில் நாலு படி ஏற வேண்டும். பழங்காலத்துச் சுண்ணாம்புக் காறல் திண்ணை வீடு அது. ஒரேயொரு அறை தான், அதுவே சாமி அறை, பண்டக சாலை, நகை நட்டு, உடு பிடவை வைக்கும்இடம் எல்லாமுமே. வெளித் திண்ணையில் தான் ஆச்சியின் சீவியம் முழுக்க. கூடவே பெரிய மாமியும். பிரிந்திருக்கும் தனியே ஒரு மண் குடிசைக்குள் தான் சமையல், சாப்பாடு எல்லாம்.
அந்தச் சின்னத் திண்ணை வீட்டின் அத்திவாரமே ஒரு மனிசர் அளவு உயரம். படிகளில் ஏறும் போதே மேலேயிருந்து ஆச்சி இரண்டு கைகளையும் விரல்களை உள்ளிளுத்து அந்தரப்பட்டு நீட்டுவார் கெதியாக வரச் சொல்லி.
ஒரு கிழுவந்தடிக்குச் சீலை சுத்தியது போலத் தான் ஆச்சியின் உருவம். கூன் முதுகு. பொன்மனச் செல்வியின் கதையைச் சமய பாடத்தில் படித்த போது அது என்ரை ஆச்சி என்றே நினைவில் பதித்திருந்தேன்.
ஆச்சியின் காது தோடுகளால் ஈய்ந்து போய் பெரிய ஓட்டை போட்டிருக்கும். அதில் தொங்கியிருக்கும் கல்லு வச்ச தோட்டைத் தொடும் சாக்கில் ஆச்சியின் காதை நைசாகப் பிழிந்து பார்த்தால் என்ன என்று ஆசை வரும். பச்சைச் சீத்தைச் சேலையும் வெள்ளை ப்ளவுசும் தான் ஆச்சியின் சீருடை.
“என்ரை அப்பு வந்துட்டானோ” என்று வாஞ்சையாக அழைந்து என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பார். அவரின் தோல் நைந்த பொலித்தீன் பை போல இருக்கும். பழுப்புப் பச்சையாய் வீங்கிப் புடைத்த நரம்புகள் அந்தத் தோலை மீறிக் கோடாய் இருக்கும்.
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார்.
நான் ஆச்சிக்கேற்ற கதைகளை மட்டும் வடித்துச் சொல்வேன். ஆசையாகக் கேட்பார்.
கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும்
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார். அவவுக்கு நான் சொல்லும் கதையில் ஆர்வமில்லை என்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சொன்ன கதையைச் சொல்லுவேன். புதிதாய்க் கேட்பது போலக் கேட்பார் திரும்பவும்.
ஆச்சியின் குச்சிக் கைகள் வலிமையாக என் கைகளைக் களையாதவாறு இறுகிப் பிடித்தபடி இருக்கும். கதை கேட்டுக் கொண்டிருப்பவர் கண்ணிரண்டிலும் பொல பொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தோடும்.
“என்ரை பத்திரகாளி ஆச்சி என்ரை பிள்ளையைக் கவனமாப் பாத்துக் கொள்” என்று தாவடிப் பத்திரகாளி அம்மன் கோயில் பக்கம் பார்த்துச் சொல்லி விட்டு என் கைகளைக் களைந்து அந்தப் பக்கம் கை கூப்பித் தொழுவார். சேலைத் தலைப்பில் கண்ணிரண்டையும் ஒற்றுவார். பிறகு என்ரை கையைப் பிடிச்சுக் கொஞ்சுவார். புறங்கையை எடுத்து மணந்து கொஞ்சி விட்டு மீண்டும் கையை இறுக்கிப் பிடித்திருப்பார்.
குழந்தைப் பிள்ளையின் கையில் அகப்பட்ட பாவைப் பிள்ளை போல நான். மேல் வகுப்புப் படிக்கும் வயதிலும் இதே கதை தான்.
“ஏன் குஞ்சு மெலிஞ்சு போனாய் கொம்மாட்டைச் சொல்லி முட்டை அடிச்சுக் குடி” ஆச்சியிடம் நான் போகும் போதெல்லாம் என் எடை குறைந்து விடும்.
அம்மாவின் பக்கம் இணுவில், அப்பாவின் பக்கம் தாவடி.
இரண்டுமே பதினைந்து இருபது நிமிடச் சைக்கிள் ஓட்டத்தில் இருக்கும் பக்கத்துப் பக்கத்து ஊர்.
இணுவில்காறர் “தவமணி ரீச்சரின் மேன் எல்லோ” என்று கேட்பார்கள். தாவடிக்கார் “திருப்பதி ஆச்சியின்ர பேரனெல்லோ” என்பார்கள். ஆச்சியின் முகவெட்டாம் எனக்கு. அப்பா தன் தாயை ஆச்சி என்று கூப்பிடுவது போல அவரே எங்களுக்கும் ஆச்சி. ஆச்சி தன் கணவரை அப்பு என்பார். அப்பாவும் அப்பு என்றே கூப்பிடுவார். ஆச்சிக்கு நாங்களெல்லாம் “அப்பு”
அப்பு செத்துப் போறதுக்கு நாலு வருஷம் முன்பே நான் பிறந்து விட்டாலும் ஆச்சி நினைத்துக் கொண்டிருக்கிறா அப்பு தான் திரும்பவும் பிறந்திருக்கிறார் என்று.
அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். வெவ்வேறு பாடசாலைகள். அப்பா தன்னுடன் என்னைக் கூட்டிக் கொண்டு வந்து ஆச்சி வீட்டில் விடுவார். பக்கத்து வீடு கனகமாமி அப்பாவின் இன்னொரு சகோதரி. ஆச்சி வீட்டில் தான் என் குழந்தைப் பராயம் கழிந்தது.
அதனால் ஆச்சிக்குத் தான் வளர்த்த பிள்ளை நான்
என்ற பெருமை.
“பிரபு! ஆச்சி செத்துப் போனாவாம்”
ரவுணில் உள்ள ரியூஷன் சென்ரருக்குப் போய் வந்து சைக்கிளை நிறுத்த முன்பே பக்கத்து வீட்டு அன்ரியின் குரல். வீடு பூட்டியிருந்தது அப்பா, அம்மா போயிருப்பினம். அப்படியே ஆச்சி வீட்டுக்குச் சைக்கிளை மிதித்தேன். படலைக்குப் பக்கமாக “ஆச்சீ ஆச்சீ” என்று அழுகுரல்கள் தான் கேக்குது. என்னை ஆசையாக அழைக்கும் ஆச்சி மூச்சுப் பேச்சில்லாமல் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறா. ஆச்சியோட தினமும் மல்லாடும் பெரிய மாமி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறா. ஏன் ஆச்சி என்னை விட்டுப் போனனீ?
“பேரப் பிள்ளையள் வரிசையா வாங்கோ” பூபாலசிங்கம் மாமா கூப்பிடுகிறார். மாமிமாரின் பிள்ளைகள் போகினம். நானோ ஒளிக்க இடம் தேடினேன். குணம் மாமி கண்டு விட்டார்.
“இஞ்சை வா அப்பன் நீ ஆச்சி ஆசையா வளத்த பேரனெல்லே” போய் நெய்ப் பந்தம் பிடி ராசா”
“இல்லை எனக்கு ஆச்சியைப் பாக்கப் பயமா இருக்கு மாமி”
குணம் மாமி கொற இழுவையில் இழுத்துக் கொண்டு போய் ஆச்சியின் தலைப் பக்கம் நிறுத்தினார்.
ஆச்சியைக் குளிப்பாட்டிப் புதுச் சீலை எல்லாம் போட்டுக் கதிரையில் இருத்தியிருக்கு. நெய்ப் பந்தத்தை என் கையில் திணிக்கிறார்கள். ஆச்சியைச் சுத்திக் கொண்டு வரும் போது அவவோட ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியது தான் ஞாபகத்துக்கு வருகுது.
ஆச்சியைக் கடைக் கண்ணால் பார்த்தேன் கண்ணை இறுக மூடியிருந்தா.
ஆச்சி செத்து இருபத்தஞ்சு வருசம் கழிச்சு ஆச்சி சாகேக்கை வராத அழுகை நேற்று வந்தது. ஆச்சியை நினைத்து அழுதேன். அதற்குக் காரணம் நேற்றுத்தான் பேஸ்புக் பட்டியலில் கண்ணுற்று நண்பர் ஆக்கிய அன்பு உறவு மகிவனியின் இந்தக் கவிதை.
1 comments:
மேவிடும் எண்ணங்கள்
மொத்தமாய் கொட்டிட
வாத்தைகள் தெரியவில்லை!
பானை சோற்றின்
பருக்கையொன்றாய்
ஒரு சொல்லெனில்
உன்னத உணர்வின்
இறவா பக்கமாய்
ஜீவகீதமிசைக்கும்
அற்புத ஆக்கம்,
கவிதையும்...
கட்டுரையும்!!
Post a Comment