ஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டின் தவிர்க்க முடியாத அங்கத்தினர்களில் ஒருவராக விளங்கியவர் எங்கள் அன்புக்குரிய அப்புக்குட்டி ராஜகோபால் அண்ணர். மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் திரைப்பட நடிகராக, வானொலிக் கலைஞராகத் தன்னுடைய நடிப்பின் முத்திரையை அகல விரித்த அவர் அதிகம் நெருக்கமானது என்னவோ வானொலிப் பெட்டி வழியாகத் தான்.
ஈழத்துப் பிரதேச மொழி வழக்கின் பொற்காலமாக எழுபதுகளில் செழித்தோங்கிய நகைச்சுவை இயக்கத்தில் மரிக்கார் ராம்தாஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், உபாலி செல்வசேகரன், கே.ஏ.ஜவாஹர், டிங்கிரி (கனகரட்ணம்) - சிவகுரு (சிவபாலன்), முகத்தார் எஸ்.யேசுரட்ணம், “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா, கே.சந்திரசேகரன் என்று நீண்டு தொடரும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தம் தனித்துவமான நடிப்பால் மட்டுமன்றி ஈழத்து மொழி வழக்கைப் பிரயோகப்படுத்திய வகையில் தனித்துவம் கண்டவர்கள். இவர்களோடு முன்னுறுத்தக் கூடிய அற்புத ஆற்றல் மிகு கலைஞர் நம் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர். இங்கே பகிரப்பட்ட கலைஞர்களைத் தாண்டி இன்னும் பல ஈழத்து நாடக, நாட்டுக்கூத்து ஜாம்பவான்கள் சம காலத்தில் இயங்கியிருந்தாலும் நகை நடிப்பு, ஈழத்துப் பிரதேச வழக்கைக் கையாண்ட. நுட்பத்திலும் இந்த வட்டத்தைக் குறுகிக் கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்துத் திரைப்பட வசனங்களுக்கு நிகராக அல்லது அதற்கு மேலாக ஈழத்து நாடக, மேடைக் கலைஞர்களின் படைப்புகள் ஒலி நாடாக்களிலும் வெளிவந்து றெக்கோர்டிங் பார் எங்கும் களை கட்டிய காலமது.
அந்தக் கால கட்டத்தில் இந்திய நகைச்சுவை நடிகர்களைத் தாண்டிய ஒரு ரசனையை ஈழத்து ரசிகர்கள் விரும்பக் காரணம் ஈழத்து நடிகர்களின் பிரதேச வழக்கு சார்ந்த மொழிப் பிரயோகம்.
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்போடு
நாற்பதைக் கடந்த ஒரு கண்டிப்பான அப்பா, கறாரான மேலதிகாரி, அல்லது சிடுமூஞ்சித் தனமாக பக்கத்து வீட்டுக்காரர் இப்படியானதொரு யாழ் மண்ணின்
பாத்திரத்தைக் கற்பனை செய்ய முடிந்தால் அதில் முன் நிற்பவர் நம் ராஜகோபால் அவர்கள்.
கவுண்டமணி காலத்துக்கு முன்பே ராஜகோபால் அண்ணரின் எள்ளல் மிகு நடிப்பை ரசித்திருக்கிறோம் நாமெல்லாம். அதெல்லாம் விரசமில்லாது ரசிக்க வைத்தவை. “அப்புக்குட்டி” என்ற பாத்திரத்தில் அக்காலத்தில் நிகழ் மனிதர்களையும் காணுமளவுக்குத் தத்துரூபமான நடிகர்.
இலங்கை வானொலி நாடகப் படைப்புகள்,
கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் தயாரித்த நாடக ஒலிப்பேழை, கோமாளிகள், ஏமாளிகள் திரைப்படங்கள் போன்றவை இன்னமும் அப்புக்குட்டி ராஜகோபால் பெயர் சொல்லும்.
கோமாளிகள் திரைப்படம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினியில் துண்டுப் படமாகப் பலர் பார்த்திருக்கக் கூடும். அந்தப் படம் இப்போது முழுமையாக YouTube இல் மரிக்கார் ராம்தாஸ் இன் புதல்வரால் வலையேற்றப்பட்டுள்ளது.
தொண்ணூறுகளில் கொழும்பு கிறீன்லண்ட்ஸ்
ஹோட்டலுக்குப் போனால் ஈழத்துப் பிரபலங்களைத் தரிசிக்க முடியுமென்று அடிக்கடி செல்வேன். அப்படியாக மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோரைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் இவரின் நடிப்புலக அனுபவத்தைப் பதிவாக்க வேண்டுமென்ற தீரா ஆசை இன்னமுண்டு.
இன்று அகவை எழுபத்தைந்து காணும் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர் பொன் விழா கடந்த ஈழத்துக் கலைஞர். ஐபிசி தமிழா 2017 இல் வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டவர்.
அவர் குறித்த முழுமையானதொரு ஆவணத் திரைப்படத்தை இன்று ஈழத்தமிழருக்கென இயங்கும் ஈழத்து, புலம் பெயர் தொலைக்காட்சிகள் இயக்க முன் வர வேண்டும். அதில் அவர் பகிரும் தன் கலையுலக அனுபவங்கள் வழி ஈழத்து நாடக மரபின் ஒரு பகுதி வரலாறு பதியப்பட வாய்ப்புக் கிட்டும்.
0 comments:
Post a Comment