தமிழ்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது
தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் தமிழ் மீது கொண்ட காதலும், அதன் பால் அவருக்கிருக்கும் ஆழ்ந்த புலமையும் தமிழுலகு அறியும்.
வரும் சனிக்கிழமை 19 ஆம் திகதி சிட்னியில்
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கியச் சந்திப்புக்காக முதல் தடவையாக ஆஸி மண்ணை மிதிக்கவிருக்கிறார்.
நெல்லை கண்ணன் அவர்களின் உரைகளைக் கேட்கும் போது பல நூறு புத்தகங்களை ஒரு சேரப் படித்த திருப்தியும், ஞானமும் கிட்டுவதை உணர்ந்திருக்கிறேன்.
அவர் சின்னத்திரை வழியே "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற களம் வழியாக ஏராளம் இளையோரைத் தமிழைப் பிழையறவும், நெறிபடவும் பேச வழிகாட்டிச் சிறப்பித்திருக்கிறார். ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு நிகரான வெற்றியை இந்த நிகழ்ச்சி கொடுத்ததே பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் அவர் வீற்றிருப்பதைப் பறை சாற்றியது.
நெல்லை கண்ணன் அவர்களை ஒரு தடவை சந்தித்துப் பேசினாலேயே போதும் என்றிருந்த எனக்கு அவரோடு சிறப்புப் பேட்டி எடுக்கும் பேறு கிட்டியது. சிட்னியில் நிகழவிருக்கும் இலக்கியச் சந்திப்புக்கான வரவேற்புப் பேட்டியை நெல்லை கண்ணன் ஐயா குறித்த வாழ்வியல் பின்புலம் சார்ந்த பேட்டியாக அமைத்துக் கொண்டேன். இருபது வருடத்தைத் தொடும் வானொலி ஊடகப் பணியில் மிகவும் மனம் விட்டுப் பேசக் கூடிய ஒரு ஆளுமையோடு இயல்பாக அமைந்த பேட்டியாக விளங்கியது சிறப்பு.
இந்தப் பேட்டியில் நெல்லைக் கண்ணனுக்குத் தமிழைப் போதித்த நல்லாசான், பேச்சு மன்றத்தில் வல்லமையோடு பேச வைத்த வழிகாட்டி பற்றியும்,
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி, பாதுகாப்பை மையப்படுத்தி எடுத்த முயற்சி குறித்தும்,
இன்று ஊடக உலகில் எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் கடை விரித்திருக்கிறதோ அவ்வளவுக்கு மொழிச் சிதைவும் ஆங்கிலக் கலப்பும் மேவியிருக்கிறது அந்தப் போக்கைப் பற்றியும்,
சின்னத்திரை ஊடகத்தில் அவருக்குக் கிட்டிய வாய்ப்பு, தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ள முடியாமல் எதிர் நோக்கிய சவால் குறித்தும்,
நெல்லை கண்ணன் அவர்களின் இலக்கியப் பணொ குறித்தும், குறிப்பாக அவருடைய மகன் சுகாவின் "தாயார் சந்நிதி" நூலுக்கு முன்னோடியாக அமைந்த "குறுக்குத்துறை ரகசியங்கள்" , திரு நாவுக்கரசரின் தேவாரங்களில் விடிகாலை வரை மூழ்கி அதன் வழி எழுந்த "திக்கனைத்தும் சடை வீசி", "வடிவுடைக் காந்திமதியே", கவிஞர் பழநி பாரதியின் வேண்டுகோளின் நிமித்தம் எழுதிய "பழம் பாடல் புதுக் கவிதை நூல்" கவிஞர் காசி ஆனந்தனின் "நறுக்குகள்" போன்றதொரு பாணியில் எழுதிய நூல் பற்றியும், கம்பனை முன்னுறித்தி எழுதப்ப போகும் நூல் குறித்தும்,
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி இயங்கும் அவர் சைவ சமயத்துக்கு நிகழ்ந்த இழிகேட்டை எதிர்த்து மதுரை ஆதீனத்துக்கு எதிராகக் களத்தில் போராடிய அனுபவம்,
இங்கே ஆஸ்திரேலியாவில் பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட்சை வரை தமிழை ஒரு பாடமாக எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளே ஆர்வத்தோடு தமிழைக் கற்று வருகிறார்கள். அவர்களுக்கு நெல்லைக் கண்ணன் வழங்கிய அறிவுரை
இப்படியாக இந்தப் பேட்டி அமைந்திருந்தது.
நெல்லை கண்ணன் அவர்கள் இந்தப் பேட்டியின் வழியாகத் திருக்குறளையும், திருவாசகத்தையும் தமிழர்களது முக்கியமான நூல்களாகப் போற்றிக் கற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறார்.
சிட்னி வாழ் தமிழர்களே!
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் நிகழ்வில் நெல்லை கண்ணன் அவர்களது வருகையைச் சிறப்பிக்க நீங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் வழியாக இங்கு வாழும் தமிழர்கள் புலம் பெயர் சூழலிலும் தமிழின் பால் எவ்வளவு தூரம் பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட வழி செய்யும். இளையோர் முதல் முதியோர் வரை நெல்லை கண்ணன் வழங்கும் தமிழ் இன்பம் சுவைக்கத் திரள்வோம்.
நெல்லை கண்ணன் அவர்களின் பேட்டியைக் கேட்க
http://radio.kanapraba.com/interview/NellaiKannan.mp3
1 comments:
GREAT SERVICE TO TAMIL WORLD! GOD BLESS ALL!GREETINGS TO NELLAI KANNAN FROM NORWAY!
Post a Comment