ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் "ஞானம்" என்ற சஞ்சிகையைக் கடந்த 17 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.
வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க
http://radio.kanapraba.com/interview/Gnanasekaran.mp3
தி.ஞானசேகரன் அவர்களின் படைப்புகளை ஈழத்து நூலகம் இணையத்தில் வாசிக்க
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF.
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF.
தி. ஞானசேகரன் பற்றிய குறிப்புகள்
- ஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.
- 1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் - பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.
- யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.
- வைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.
- இதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.
- இவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.
- இவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.
- இவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, 'பரதேசி" என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
- இவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன.
- இவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.
- லயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.
- குருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, தலெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.
- குருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது.
- இவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.
- 2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக 'ஞானம்" என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.
இச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
ஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.
- ஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.
- ஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.
- சர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.
- இலங்கை அரசின் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment